Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

தொட்டிச் செடிகளின் மதிப்பு

“தொட்டிச் செடிகளை வகுப்பறைகளில் வைக்கையில் பள்ளியிலுள்ள ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள்” என ஆராய்ச்சியாளர்கள் சொல்வதாக லண்டனில் வெளியாகும் த டைம்ஸ் அறிக்கை செய்தது. நெரிசலான, போதிய காற்றோட்ட வசதியில்லாத சில வகுப்பறைகளில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு பரிந்துரைக்கப்படும் அளவைவிட 500-⁠க்கும் அதிக சதவீதம் இருக்கிறது என்றும், இது பிள்ளைகளின் கவனத்தைச் சிதறடித்து, அவர்களுடைய முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்றும் ரீடிங் பல்கலைக்கழக பேராசிரியர் டெரிக் க்ளெமன்ஸ்-⁠க்ரூமே கண்டறிந்தார். இதை ஆரோக்கியமற்ற வகுப்பறை நோய் என அவர் விவரித்த பின்பு, இடநெருக்கடியைப் பற்றி சொல்லுகையில் வகுப்பறைகளிலுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை அலுவலக கட்டடங்களில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கையைவிட ஐந்து மடங்கு அதிகம் என சொல்கிறார்; அந்த அலுவலகங்களில் “ஆரோக்கியமற்ற அலுவலக நோய்” வேலையாட்களையும் அவர்கள் செயல்படும் விதத்தையும் பாதிப்பது அறிந்த விஷயம். அறையின் காற்றோட்ட தரத்தை அதிகரிக்க எத்தகைய தாவரங்களை வளர்க்கலாம்? ஐக்கிய மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு, ஸ்பைடர் தாவரங்கள் வெகு பயனுள்ளவை என குறிப்பிட்டது. டிராகன் மரங்கள் (Dragon trees), ஐவி (ivy), ரப்பர் செடிகள், பீஸ் லில்லீஸ் (peace lilies), யூக்காஸ் (yuccas) ஆகியவையும் காற்று தூய்மைக் கேட்டைக் குறைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. கார்பன் டை-ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்றுவதன் மூலம் வீட்டு தாவரங்கள் அதன் அளவைக் குறைக்கின்றன. (g03 6/08)

கொடுங்கோலர் ஆவதற்கு பிஞ்சிலேயே பழக்கிவிடுதல்

“நம் வீட்டை ஆளுவது பிள்ளைகளே!” என்கிறது போலிஷ் வாராந்தரியான விப்ராஸ்ட். “பெரும்பாலும் அவர்களுக்குத்தான் விலையுயர்ந்த துணிமணிகளையும், அழகு சாதனங்களையும், நவீன கருவிகளையும் வாங்கிக் கொடுக்கிறோம். குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களிலும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களிலும், இளைஞர்களுக்காக குடும்ப பட்ஜெட்டில் 80 சதவீதம் வரை செலவிடப்படுகிறது.” பெற்றோர்களுக்கான வார்சா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மௌகார்ஷாடா ரிம்கேவிக் நடத்திய ஆய்வைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், கொடுங்கோலராவதற்கு பிள்ளைகளில் காணப்படும் சில அறிகுறிகளை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. உதாரணமாக, பெற்றோரிடம் நன்றியுள்ளவர்களாக இருப்பதற்கு பதிலாக “அவர்கள் அது வேண்டும், இது வேண்டுமென அடம்பிடிக்கிறார்கள், கிடைக்கும் பொருட்களில் திருப்தியடைவதில்லை, மூர்க்கத்தனமாக நடந்து​கொள்​கிறார்கள், மற்றவர்களைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது.” “சின்னஞ்சிறுசுகள் கேட்பதற்கெல்லாம் பணிந்துபோவதால் பிள்ளை வளர்ப்பில் நாம் மாபெரும் தவறை செய்கிறோம்” என சொல்கிறார் ரிம்கேவிக். “ஒன்று முதல் நான்கு வயதுக்குள் வைக்கப்படும் கட்டுப்பாடுகளின் அடிப்படையில்தான் ஓர் இளைஞன் தன் வரையறைகளை உணருகிறான். . . . இளைஞர்களுடைய எல்லா எதிர்ப்புகளுக்கும் மூர்க்கத்தனங்களுக்கும் விட்டுக்கொடுத்து பணிந்து போவதால் கொடுங்கோலர்களையே உருவாக்குகிறோம்” என்பதை உளவியல் வல்லுநர்களின் போலிஷ் அசோசியேஷன் ஒப்புக்கொள்கிறது. (g03 6/22)

‘சாவின் விளிம்பை தொட்ட’ அனுபவங்கள்​—⁠புதிய தகவல்

ஒரு பெண்ணுக்கு திடீரென காக்காய் வலிப்பு ஏற்பட்டபோது அதற்கான மூல காரணத்தை கண்டுபிடிக்க சுவிட்சர்லாந்தை சேர்ந்த நரம்பியல் வல்லுநர்கள் மின்முனைகளைப் (electrodes) பயன்படுத்தினார்கள்; அப்போது எதிர்பாராமல், சாவின் விளிம்பை தொட்ட அனுபவங்கள் என அழைக்கப்படுபவை அந்த நோயாளிக்கு ஏற்பட்டதாக ஜெர்மன் அறிவியல் செய்தி சேவையான பில்ட் டேர் விசன்ஷாப்ட்-ஆன்லைன் குறிப்பிடுகிறது. மூளையின் வலது மேற்புறத் தோலிலுள்ள (cortex) கூர்முனை கொண்ட மடிப்பு (angular gyrus) ஒவ்வொரு முறை தூண்டப்படும் போதும், தன் உடலை விட்டு வெளியேறி மேலேயிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் போல் உணர்ந்ததாக அந்தப் பெண் சொன்னாள். மூளையின் இந்தப் பகுதி, நம் உடல் எங்கிருக்கிறது என்பதை காணவும் அதேசமயத்தில் உணரவும் உதவுகிறது. “மின்முனைகளின் தூண்டுதல் இந்த செயலில் குறுக்கிடுவதால் அவளுடைய புலனுணர்வு அவளுடைய உடலிலிருந்து விடுபடுவதைப் போல் தோன்றுகிறது” என சொல்கிறது பில்ட் டேர் விசன்ஷாப்ட். சாவின் விளிம்பை தொட்ட அனுபவங்கள் “உடல் வேறு ஆத்துமா வேறு என்ற கருத்தை பரப்புவதற்கு எப்போதும் பயன்படுத்தப்பட்டுள்ளன.” (g03 6/08)

புதுப்பிக்கப்பட்ட ஜெபமாலை

“500 வருடங்களாக பக்திமிக்க ரோமன் கத்தோலிக்கர்கள் ஜெபமாலையில் பரமண்டல ஜெபத்தையும், ‘அச்சிஷ்ட மரியாள்’ ஜெபத்தையும் மந்திரத்தைப் போல திரும்பத் திரும்ப சொல்லி வந்திருக்கிறார்கள்; இயேசு மற்றும் அவருடைய தாயாரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான 15 சம்பவங்களை அல்லது ‘இரகசியங்களை’ தியானிப்பதற்கு வழிசெய்யும் விதத்தில் இவை இருந்ததாக” நியூஸ் வீக் அறிக்கை செய்கிறது. “கடந்த [அக்டோபரில்] போப் இரண்டாம் ஜான் பால் அந்த ஜெபமாலையில் நான்காவது சுற்று ஒன்றை சேர்ப்பது குறித்த தன் கடிதத்தை அனுப்பினார்”; இது ஞானஸ்நானம் முதல் கடைசி இராப் போஜனம் வரையான இயேசுவின் ஊழியத்தை தியானிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது. “ஜெபமாலையே போப்புக்கு ‘பிரியமான’ வழிபாட்டு முறையாக இருந்தது; ஆனால் வாடிகனின் இரண்டாம் ஆலோசனை சபை முதற்கொண்டு அதில் ஜனங்களின் ஆர்வம் தணிந்திருந்தது, ஆகவே அதை மீண்டும் தட்டியெழுப்புவதே அவரது இலட்சியம்” என்றும் அந்தப் பத்திரிகை சொல்கிறது. “கத்தோலிக்கருக்கே உரிய இந்த ஜெபமாலை வழிபாட்டு முறையில் மரியாளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது; ஆகவே மரியாளைப் போலவே கிறிஸ்துவிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்காக போப் ஜெபமாலையை புதுப்பித்தார்.” போப் சொன்னபடி, “கிழக்கத்திய மதங்களின் தியான பழக்கங்கள் கிறிஸ்தவத்தில் செல்வாக்கு செலுத்தும்” இந்த சமயத்தில் இது தியானிக்கும் பழக்கத்தை கத்தோலிக்கரின் மத்தியில் உற்சாகப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது. (g03 6/08)

மண முறிவு நிறுவனங்கள்

மண வாழ்க்கையில் மகிழ்ச்சி காணாத சில ஜப்பானியர்கள் தங்கள் மண வாழ்க்கையை முறிப்பதற்கு நிறுவனங்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என டோக்கியோவில் வெளியாகும் செய்தித்தாளான IHT ஆசாஹி ஷிம்புன் அறிக்கை செய்கிறது. எந்த காரணமும் இல்லாமல் கணவன் தன் மனைவியைத் தலைமுழுக விரும்புகையில் ‘தம்பதியரைப் பிரிக்கும்’ நிறுவனத்தின் உதவியை பணத்தின் மூலம் நாடுகிறான்; அப்போது, அவனுடைய மனைவியை வாட்டசாட்டமான ஒருவன் ஏதோ ‘எதேச்சையாக’ சந்திப்பதுபோல் சந்தித்து, கள்ளக் காதல் கொள்வதற்கு அந்த நிறுவனத்தார் ஏற்பாடு செய்கிறார்கள். சீக்கிரத்திலேயே அந்த மனைவி மணவிலக்கு செய்ய ஒப்புதல் அளிக்கிறாள். பணத்துக்காக கள்ளக் காதலனாக நடித்தவன் தன் வேலை முடிந்தவுடன் காணாமல் போய்விடுகிறான். அதேபோல், மனைவி தன் கணவரை விட்டு விலக விரும்புகையில் அந்த நிறுவனம் ஒரு கவர்ச்சியான இளம் பெண்ணை அனுப்பி வைக்கிறது; விபசாரத்தில் ஈடுபடும்படி அவனுக்கு அவள் வலைவிரிக்கிறாள். “நான் அணுகும் ஆண்கள் பெரும்பாலும் மறுப்புத் தெரிவிப்பதில்லை. இதில் 85 முதல் 90 [முறை] வெற்றி கண்டிருப்பதாக என்னால் சொல்ல முடியும்” என்கிறாள் 24 வயது பெண். இப்படி 5 முறை அனுப்பி மூன்று முறை தோல்வி கண்ட தொழிலாளிகளை இத்தகைய ஒரு நிறுவனத்தின் அதிகாரி வேலை நீக்கம் செய்வதாக அந்த செய்தித்தாள் சொல்கிறது. “அவர்கள் வெற்றி பெற்றே தீர வேண்டும் . . . இது ஒரு வியாபாரம்” என்றார் அவர். (g03 6/22)

தெரு பிள்ளைகள்​—⁠ஏன் இந்த அவல நிலை?

“பிள்ளைகளும் வளரிளமை பருவத்தினரும் வீட்டைவிட்டு வெளியேறி தெருக்களில் காலம் தள்ள முக்கியக் காரணம் வீட்டில் தலைதூக்கும் வன்முறையே” என்கிறது பிரேசிலில் வெளியாகும் செய்தித்தாளான ஆ எஸ்டாடா டா சௌங் பவுலு. 39 சதவீதத்தினர் மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள் அல்லது வீட்டில் சண்டை சச்சரவுகளைப் பார்த்திருக்கிறார்கள் என ரியோ டி ஜெனிரோவிலுள்ள பிள்ளைகளுக்கும் வளரிளமை பருவத்தினருக்குமான நிறுவனத்தில் தஞ்சம் புகுந்திருக்கும் 1,000 தெரு பிள்ளைகளை வைத்து நடத்தப்பட்ட சமீபத்திய சுற்றாய்வு வெளிப்படுத்தியது. “இந்தப் பிள்ளைகள் கண்ணியத்தைத் தேடியலைகிறார்கள், அதைத் தெருவில் கண்டுபிடிக்கலாம் என மனப்பால் குடிக்கிறார்கள்” என்றார் சமூகவியலர் லேனி ஷிமிட்ஸ். அந்த சுற்றாய்வின்படி பிள்ளைகளில் 34 சதவீதத்தினர் கைக்கும் வாய்க்கும் போதாத காசுக்கு வேண்டி உழைப்பதற்காக அல்லது பிச்சையெடுப்பதற்காக தெருவில் வாழ்கிறார்கள், 10 சதவீதத்தினர் போதை பொருள்களை உபயோகிப்பதால் அவ்வாறு வெளியேறியிருக்கிறார்கள், 14 சதவீதத்தினர் ஏதோ தாங்கள் தெருவில் வாழ விரும்பியதால் வெளியேறியதாக சொன்னார்கள். ஆய்வாளர்களின்படி அந்தக் கடைசி காரணம், வீட்டில் நடக்கும் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற மற்ற காரணங்களை பெரும்பாலும் மூடி மறைக்கிறது. சுமார் 71 சதவீதத்தினர் மற்ற தெரு பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ்கிறார்கள், “அவர்களுடன் அண்ணன், தம்பி, மாமா, சித்தப்பா, அப்பா அல்லது அம்மா என்ற புதிய குடும்ப உறவுகளையும் தாங்களாகவே” உருவாக்கிக் கொள்கிறார்கள் என சொன்னார் ஷிமிட்ஸ். (g03 6/22)

பிளாஸ்டிக் பணம்

பிளாஸ்டிக் பணத்தை உபயோகிக்கும் நாடுகளின் வரிசையில் மெக்சிகோவும் அக்டோபர் 2002-⁠ல் சேர்ந்துகொண்டது. மெல்ல மெல்ல ரூபாய் நோட்டுகள் இருந்த இடத்தை பிளாஸ்டிக் பணம் ஆக்கிரமிக்கிறது. எல் யுனிவர்சால் என்ற செய்தித்தாளின்படி, பிளாஸ்டிக் பணம் ஏற்கெனவே ஆஸ்திரேலியா, பிரேசில், நியுஜிலாந்து, ருமேனியா ஆகிய நாடுகளில் புழக்கத்தில் உள்ளது. ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியதற்கு நாம் சீனர்களுக்குக் கடன்பட்டிருக்கிறோம், ஆனால் ஆஸ்திரேலியர்களே பல்படி சேர்மத்திலிருந்து (polymer) புதிய பணத்தைத் தயாரித்திருக்கிறார்கள் என அந்த செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. பிளாஸ்டிக் பணத்தால் நன்மைகள் பல. அவை சுத்தமாக இருப்பதோடு, “ரூபாய் நோட்டுகளைவிட நான்கு மடங்கு நீடித்து உழைப்பவை, பொது புழக்கத்துக்குத் அதிகம் தாக்குப்பிடிப்பவை, . . . கள்ளத்தனம் செய்து ஏமாற்ற முடியாதவை, பயன்படுத்தி பயன்படுத்தி பழையதாகும்போது மீண்டும் புதுப்பிக்க முடிந்தவை.” (g03 6/22)