Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

விழித்தெழு! பாராட்டப்படுகிறது விழித்தெழு! பத்திரிகையை பிரசுரிக்கும் அருமையான ஒரு வேலையை செய்து வருகிறீர்கள். மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறீர்கள். என் கணவர் மரித்த சமயத்தில், பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் முதன்முதலாக எனக்கு இரண்டு விழித்தெழு! பத்திரிகைகளை தந்தார். நான் ரொம்பவும் விரக்தியடைந்திருந்ததால் யாரையும் பார்க்க விரும்பவில்லை. ஆனால், உங்கள் பத்திரிகைகளைப் படித்த பிறகு, சற்று அமைதியானேன்; என் வாழ்க்கையே முடிந்து விடவில்லை என்பதை புரிந்துகொண்டேன். பிற்பாடு, என் மகள் இன்னும் இரண்டு விழித்தெழு! இதழ்களை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தாள்; அவள் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது ஒரு நர்ஸ் அந்தப் பத்திரிகைகளை கொடுத்தாராம். அதன் பிறகு, நான் தெருவில் போய்க் கொண்டிருக்கும்போது உள்ளூர் யெகோவாவின் சாட்சிகள் மேலும் சில இதழ்களை கொடுத்தார்கள். நான் நொந்து போயிருக்கும் சமயங்களில் என்னிடமுள்ள ஒரு சில விழித்தெழு! பத்திரிகைகளை மறுபடியும் மறுபடியுமாக வாசிக்கிறேன். ஜனங்களுக்கு நன்மையானது எதுவோ அதை இந்தப் பத்திரிகைகள் கற்பிக்கின்றன; அது மட்டுமல்ல, நம்முடைய நடத்தைக்கான காரணங்களை புரிந்துகொள்வதற்கும் உதவுகின்றன.

ஐ. ஒய். ஏ., ரஷ்யா (g03 6/22)

பலவீனங்கள் “பைபிளின் கருத்து: கடவுள் நம் பலவீனங்களை கண்டும் காணாமல் விட்டுவிடுவாரா?” (ஜனவரி 8, 2003) என்ற கட்டுரையை எழுதியதற்கு நன்றி. உண்மையை சொன்னால், இந்தக் கட்டுரைதான் எனக்கு கிடைத்ததிலேயே மிகச் சிறந்த உதவி என்று சொல்வேன். நம்முடைய பலவீனங்களை கடவுள் எவ்வாறு கருதுகிறார் என்பதை புரிந்துகொண்டது ரொம்பவே உதவியது.

ஈ. சீ., ஐக்கிய மாகாணங்கள் (g03 6/22)

எனக்கிருக்கும் ஒரு பிரச்சினையை சொல்லி யெகோவாவிடத்தில் நான் ஜெபித்துக்கொண்டே இருந்தேன்; அவர் பதிலளிப்பார் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். அந்த சமயத்தில்தான் இந்தக் கட்டுரையை நீங்கள் வெளியிட்டிருந்தீர்கள். இதைப் படித்து முடித்ததுமே ஜெபத்தில் நன்றி தெரிவித்தேன்.

எம். எஸ்., ஜப்பான் (g03 6/22)

கிரேஸி ஹார்ஸ் “கிரேஸி ஹார்ஸ்​—⁠சிகரம் சிற்பமாகிறது” (டிசம்பர் 8, 2002) என்ற கட்டுரைக்காக நன்றி சொல்கிறேன். என் ஸ்கூலில் சூஸ் மற்றும் ஷையன் இனத்தார் பற்றியும் அவர்களுடைய வாழ்க்கை முறை பற்றியும் நான் ஒரு ரிப்போர்ட் எழுத வேண்டிய சரியான நேரத்தில்தான் இந்தக் கட்டுரை வந்தது. நான் எழுதின ரிப்போர்ட்டை என் டீச்சர் பாராட்டினார்! ரொம்ப நன்றி.

எஃப். வி., ஐக்கிய மாகாணங்கள் (g03 6/22)

சந்திப்பு “முப்பது வருடங்களுக்கு பிறகு அற்புத சந்திப்பு” (நவம்பர் 8, 2002) என்ற கட்டுரையை வாசித்து முடித்த கையோடு இதை எழுதுகிறேன். நன்றி, மகிழ்ச்சி, துக்கம் இந்த மூன்றும் கலந்த உணர்ச்சிப் பிழம்பாகி விட்டேன். யெகோவாவின் வழியை தேர்ந்தெடுத்த டெனிஸ் ஷிட்ஸ், மார்க் ரூஜ் ஆகிய இருவரையும் நினைத்தால் சந்தோஷமாய் இருக்கிறது. ஆனால், கிறிஸ்தவ வழியில் என் ஐந்து பிள்ளைகளை நான் வளர்த்த போதிலும், அதில் ஓரிரு பிள்ளைகள் வழிதப்பிப் போய்விட்டார்கள்; அந்த துக்கத்தால் என் நெஞ்சம் கனக்கிறது. அவர்கள் மட்டும் கடவுளுடைய வழிக்கு திரும்பினால், எத்தனையோ மனவேதனைகளை தவிர்க்கலாம்! அப்படி அவர்கள் திரும்ப வேண்டும் என்பதுதான் எப்போதும் என் ஜெபம். இந்தக் கட்டுரைக்கு நன்றி. என்னுடைய உண்மையான தேவையை இது பூர்த்தி செய்தது.

எம். ஓ., ஐக்கிய மாகாணங்கள் (g03 6/22)

மொபைல் ஃபோன்கள் “இளைஞர் கேட்கின்றனர் . . . எனக்கு மொபைல் போன் தேவைதானா?” (நவம்பர் 8, 2002) என்ற கட்டுரை எனக்கு மிகவும் உதவியது. இதைப் படிப்பதற்கு முன்பு, மொபைல் ஃபோனில் வரும் செய்திகளுக்கு பதில் அனுப்பாவிட்டால் எனக்கு தூக்கமே வராது. ஆனால், இதன் நன்மை தீமைகளை புரிந்துகொள்ள இப்போது எனக்கு உதவியிருக்கிறீர்கள்.

சீ. ஏ., பிலிப்பைன்ஸ் (g03 6/08)

என் ஸ்கூலிலிருக்கும் பிள்ளைகளில் முக்கால்வாசி பேரிடம் மொபைல் ஃபோன் இருப்பதால் நானும் ஒன்றை வாங்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். இந்தக் கட்டுரையை இப்போது நான் வாசித்திருப்பதால், எனக்கு இந்த ஃபோன் தேவைதானா, உண்மையிலேயே அதை ஞானமாக உபயோகிப்பேனா என்பதையெல்லாம் கண்டிப்பாக யோசித்துப் பார்ப்பேன். இந்தக் கட்டுரையை யெகோவா எனக்காகவே கொடுத்திருப்பது போல உணருகிறேன்.

எம். எஃப்., ஜப்பான் (g03 6/08)

ஒரு பையனோடு ஈ-மெயிலில் தொடர்பு வைப்பதற்காக என் ஃபோனை பயன்படுத்தினேன். தனிப்பட்ட பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் பேசினோம். மனம் திறந்து பேசுவதற்கு ஒருவர் இருந்ததைக் குறித்து சந்தோஷப்பட்டேன். கொஞ்ச நாள் கழித்து அவன் எனக்கு ஈ-மெயில் அனுப்புவதையே நிறுத்திவிட்டான்; எனக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. ஆனால், ஈ-மெயில் தொடர்பு வைத்திருப்பது ஒரு வகையில் காதல் ஈடுபாடாகிவிடலாம் என்பதை இந்தக் கட்டுரை எனக்கு புரிய வைத்தது. அந்தப் பையனும் இதை புரிந்துகொண்டானோ என்னவோ! இப்போதெல்லாம் என் ஈ-மெயில் அட்ரஸை அவசியமானவர்களுக்கு மட்டுமே கொடுக்கிறேன்.

ஒய். எம்., ஜப்பான் (g03 6/08)