Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

துயர சம்பவங்களை நான் எப்படி சமாளிப்பது?

துயர சம்பவங்களை நான் எப்படி சமாளிப்பது?

இளைஞர் கேட்கின்றனர் . . .

துயர சம்பவங்களை நான் எப்படி சமாளிப்பது?

“பயங்கரவாதிங்க என் அம்மாவை ஏன் கொலை செஞ்சாங்க?”​—⁠கெவென். a

“[செப்டம்பர் 11-⁠க்கு முன்பு], சுரங்கப் பாதையில போகறதுன்னாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா இப்போ, சுரங்கப் பாதைன்னாலே அது வெடிகுண்டுகளால் தூள்தூளாக்கப்படற மாதிரியும் நான் அங்கே செத்துப்போற மாதிரியுமே நினைக்கத் தோணுது.”​—⁠பீட்டர்.

நியு யார்க்கிலுள்ள உலக வர்த்தக மையம் செப்டம்பர் 11, 2001 அன்று தாக்கப்பட்டபோது கெவெனின் அம்மா கொல்லப்பட்டார். பீட்டருக்கோ அப்படியொரு பேரிழப்பு நேரிடாவிட்டாலும், அந்த சம்பவங்களால் அவன் பெரிதும் பாதிக்கப்பட்டான்.

ஒரு செய்தி அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “நியு யார்க்கில் உள்ள ஆயிரக்கணக்கான பிள்ளைகள் செப்டம்பர் 11 [அன்று நடந்த தாக்குதல்கள்] காரணமாக இப்போது மனோரீதியான பிரச்சினைகளால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் பெரியவர்களான பிறகும்கூட இந்தப் பிரச்சினைகள் தொடரும். . . . அங்கு நடந்த தாக்குதல்களை கண்கூடாக பார்த்தவர்களுக்குத்தான் [மன அதிர்ச்சி ஏற்பட்டது என்றால்,] அந்தப் பக்கமே தலைகாட்டாத பிள்ளைகளுக்கும் அதேபோன்ற [மன அதிர்ச்சிக்கான] அறிகுறிகள் தென்படுவதுதான் உண்மையில் கவலைக்குரிய விஷயம்.” b

இஸ்ரேலில் நடந்த மனித வெடிகுண்டுகளின் தாக்குதல், மற்ற இடங்களில் நடந்த கண்மூடித்தனமான துப்பாக்கிசூடு போன்ற துயர சம்பவங்களாலும் இது போன்ற மன பாதிப்புகள் ஏற்படலாம். இப்படிப்பட்ட துப்பாக்கிசூடுகளினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி ஆராயும் ஒரு வல்லுனர் இவ்வாறு சொல்கிறார்: “துப்பாக்கிசூடு நடக்கும் இடத்திலிருந்து [பிள்ளைகள்] 2,000 மைல்களுக்கு அப்பால் இருந்தாலும்கூட, இத்தகைய சம்பவங்கள் [அவர்களை] அதிகமாக கவலைப்பட வைக்கின்றன.”

இதற்கு என்ன காரணம்? கோர சம்பவங்கள் நடப்பதை பிள்ளைகள் ஏராளமான மீடியா அறிக்கைகள் மூலம் தெரிந்து கொள்கிறார்கள். பயங்கரவாத தாக்குதல்கள், பள்ளியில் நடக்கும் துப்பாக்கிசூடுகள், இயற்கை பேரழிவுகள் போன்ற குலைநடுங்க வைக்கும் காட்சிகள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்படுகின்றன; விளைவு? அநேக இளைஞர்களால் அந்தக் காட்சிகளை எளிதில் மறக்க முடியாமல் போகிறது. “8,266 பள்ளி மாணவர்களில் 76 சதவீதத்தினர், உலக வர்த்தக மையம் சுக்குநூறாக்கப்பட்டு ஆறு மாதங்களான பிறகும்கூட அந்த பயங்கரவாத தாக்குதலைப் பற்றி அடிக்கடி நினைத்துப் பார்த்தார்கள்” என நியு யார்க் நகரத்தின் கல்வித்துறை சங்கத்திற்காக நடத்தப்பட்ட ஒரு சர்வே காட்டியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

“கொடிய காலங்கள்” என பைபிள் அழைக்கும் ஒரு காலப்பகுதியில்தான் நாம் இப்போது வாழ்ந்து வருகிறோம். (2 தீமோத்தேயு 3:1-5) ஆகவே, கொடிய துயரங்கள் ஏற்படும்போது நீங்கள் எவ்வாறு சமாளிக்கலாம்? c

வேதனையான காரியங்கள் ஏன் நடக்கின்றன

உங்களை துயரக்குழியிலே புதைத்துவிடுவது போன்ற உணர்ச்சிகளிலிருந்து மீள்வதற்கு ஒரு வழியானது உங்கள் “உண்மையான மனதை,” அதாவது “தெளிந்த சிந்தையை” (NW) தூண்டியெழுப்புவதாகும். (2 பேதுரு 3:2) காரியங்களை நியாயப்படுத்தி பார்க்க முயலுங்கள்; அதோடு, கடவுளுடைய நோக்குநிலையிலிருந்தும் பார்க்க முயலுங்கள். உதாரணமாக, அநேக துயரங்களுக்கு ‘சமயமும் எதிர்பாரா சம்பவங்களுமே’ காரணம் என்பதை உங்களுக்கு நீங்களே நினைப்பூட்டிக்கொள்ள வேண்டியிருக்கலாம். (பிரசங்கி 9:11, NW) இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக சீலோவாமிலே கோபுரம் விழுந்ததைப் பற்றி இயேசு கிறிஸ்து சொன்னார். பதினெட்டு பேர் அந்தச் சம்பவத்தின்போது கொல்லப்பட்டார்கள். என்றாலும், அதில் பலியானவர்கள் கடவுளால் தண்டிக்கப்படவில்லை என்பதை இயேசு தெளிவுபடுத்தினார். தவறான இடத்தில், தவறான நேரத்தில் இருந்ததால்தான் அவர்கள் மாண்டு போனார்கள். (லூக்கா 13:1-5) இந்த உண்மையைப் பற்றி தியானிப்பது, பேரழிவுகளை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க உங்களுக்கு உதவலாம்.

தெளிந்த சிந்தை ‘யெகோவாமீது கோபம் கொள்ளாதபடிக்கும்,’ துயர சம்பவங்களுக்காக அவரை குற்றப்படுத்தாதபடிக்கும் உங்களை தடுக்கும். (நீதிமொழிகள் 19:3, NW) யெகோவா நமக்கு துயரங்களை தருபவர் அல்ல, மாறாக அவர் ‘ஆறுதலின் தேவனாக’ இருக்கிறார். (2 கொரிந்தியர் 1:3) துயரப்புயலில் சிக்கியிருக்கும்போது, அவரிடம் நாம் நெருங்கி செல்ல வேண்டுமே ஒழிய கோபித்துக்கொண்டு அவரைவிட்டு தூரமாக போய் விடக்கூடாது. யாக்கோபு 1:13-⁠ல் உள்ள பைபிள் வார்த்தைகளை தியானியுங்கள்: “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.” d

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கில் நடந்த ஒரு துயர நிகழ்ச்சி இந்தக் குறிப்பை நன்றாக விளங்கிக்கொள்ள உதவலாம். அச்சமயத்தில் நடந்த படுமோசமான அந்தப் பேரழிவிலிருந்து ஒரு ஆள் மட்டுமே உயிர் தப்பினான்; தப்பிவந்த அந்த ஆள் இவ்வாறு அறிவித்ததாக பைபிள் கூறுகிறது: “வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது.” (யோபு 1:16) எப்பேர்ப்பட்ட பயங்கரமான அழிவு! பயத்தில் வெலவெலத்துப் போயிருந்த இந்த ஆள் கடவுள்தான் அதற்கு காரணம் என்று நினைத்தான். ஆனால், கடவுள் அதற்கு காரணர் அல்ல. அவர் அந்த அக்கினியை அனுப்பவில்லை, கடவுளுடைய எதிரியான பிசாசாகிய சாத்தானே அதை அனுப்பினான்! யோபு 1:7-12 இந்த உண்மையை வெளிப்படுத்துகிறது.

அது ஒரு பிரத்யேக சூழ்நிலையாக இருந்தது: யோபுவின் உத்தமத்தன்மையை சோதிப்பதற்கு யெகோவா தேவன் சாத்தானுக்கு விசேஷ அனுமதி அளித்திருந்தார். அதற்காக, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சேதங்களுக்கு சாத்தானே நேரடியாக காரணம் என்று உடனே முடிவுகட்டி விடாதீர்கள். e என்றாலும், “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று” பைபிள் சொல்கிறது. (1 யோவான் 5:19) ஆகவே மனிதர்களைப் பயன்படுத்தி, சொல்ல முடியாதளவுக்கு பாழ்க்கடிப்பையும் நாசத்தையும் அவனால் ஏற்படுத்த முடியும்.

ஆனால், நமக்கு எந்த உதவியுமே இல்லையென நினைக்க வேண்டியதில்லை. பைபிளில் 1 சாமுவேல் 22:12-23-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள இன்னொரு சம்பவத்தை சிந்தித்துப் பாருங்கள். விசுவாசமிக்க ஆசாரியர்களும் அவர்கள் குடும்பத்தினரும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி நாம் அதில் தெரிந்து கொள்கிறோம். இந்த மிருகத்தனமான செயலை செய்வதற்கு கெட்ட அரசனான சவுலை தூண்டிவிட்டதில் நிச்சயம் சாத்தானுக்கும் ஒரு பங்கு இருந்ததென்று சொல்லலாம். என்றபோதிலும், பிற்பாடு ராஜாவாக ஆன உண்மையுள்ள தாவீது 52-ஆம் சங்கீதத்தை எழுதியபோது, இந்த பெருந்துயரத்தை உண்டாக்கிய பொல்லாத மனிதர்களை கடவுள் அடியோடு அழித்துப்போடுவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.​—சங்கீதம் 52:5.

அதேபோல இன்றும், பிசாசின் தூண்டுதலினால் நடக்கும் கொலைகளையும் வன்முறைகளையும் கடவுள் என்றென்றுமாக பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார் என்பதில் நீங்கள் நிச்சயமாக இருக்கலாம். ‘பிசாசினுடைய கிரியைகளை அழிப்பதற்காக,’ வெகு சீக்கிரத்தில், தம் குமாரனான இயேசுவை கடவுள் பயன்படுத்துவார் என பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. (1 யோவான் 3:8) காலப்போக்கில், சாத்தான் ஏற்படுத்தியிருக்கும் நாசங்கள் சுவடு தெரியாமல் மறைந்து போகும். துயரமான வன்முறை செயல்களினாலோ பயங்கரவாதத்தினாலோ இறந்தவர்களைக்கூட உயிர்த்தெழுதல் மூலம் கடவுளால் மீண்டும் உயிரடையச் செய்ய முடியும்.​—அப்போஸ்தலர் 24:15.

துயரங்களை சமாளிக்க நடைமுறையான வழிகள்

பைபிள் தரும் இந்த நம்பிக்கை, பயத்திலேயே ஒரேயடியாக மூழ்கிவிடுவதை தவிர்க்க உங்களுக்கு உதவும். எனினும், நீங்கள் தாமே எடுக்க வேண்டிய சில நடைமுறையான வழிகளும் இருக்கின்றன. உதாரணமாக, நீதிமொழிகள் 12:25-⁠ல் உள்ள பைபிள் நியமத்தை கவனியுங்கள். மற்றவர்களிடம் நீங்கள் மனம்விட்டு பேசினால்தான் உற்சாகமளிக்கும் “நல்வார்த்தை” உங்களுக்கு கிடைக்கும். அப்படி மனம்விட்டு பேசும்போதுதான் நீங்கள் மட்டுமே இப்படிப்பட்ட கடுந்துயரத்தை அனுபவிப்பதாக நினைக்க மாட்டீர்கள். ஆகவே, நீங்கள் துயரத்தில் இருக்கும்போது, உங்கள் பெற்றோரிடமோ கிறிஸ்தவ சபையிலிருக்கும் முதிர்ச்சியுள்ளவரிடமோ மனம்திறந்து பேசுவதற்கு முயலுங்கள். f

மற்றொரு ஆலோசனை: மீடியாவில் காட்டப்படும் துயர சம்பவங்களை திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள். அப்படி பார்த்துக்கொண்டே இருந்தால் உங்கள் மனத்திரையிலிருந்து அந்தக் காட்சிகளை அகற்றுவது இன்னும் அதிக கடினமாகிவிடும்.​—சங்கீதம் 119:37.

நீங்கள் ஒரு கிறிஸ்தவரா? அப்படியென்றால், உங்கள் கிறிஸ்தவ நடவடிக்கைகளில் தவறாமல் ஈடுபடுவதைக் குறித்து உறுதியோடு இருங்கள். (பிலிப்பியர் 3:16) சக கிறிஸ்தவர்களோடு சேர்ந்து கூட்டங்களில் கலந்து கொள்வதும், உங்கள் நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதும் அந்த நடவடிக்கைகளில் சில. (எபிரெயர் 10:23-25) வேண்டாத சிந்தனைகளிலே மூழ்கிப் போகாதபடிக்கு இந்தக் காரியங்கள் உங்களுக்கு உதவும். மற்றவர்களை விட்டுப் பிரிந்து தனியாக இருந்தீர்களேயானால் அது உங்களை மனோ ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சேதப்படுத்திவிடும்.​—நீதிமொழிகள் 18:1.

முக்கியமாக, எப்படிப்பட்ட சோர்வான சமயங்களை எதிர்ப்பட்டாலும் தினந்தோறும் பைபிளை வாசிப்பது மிகவும் உதவியளிக்கும். லரேன் என்ற ஒரு இளம் பெண்ணின் தாய் புற்றுநோயால் சாகக் கிடந்தார். இந்தத் துயரமான சூழ்நிலையை லரேன் எப்படி சமாளித்தாள்? அவள் சொல்வதைக் கேளுங்கள்: “அந்த பயங்கர சோதனையின்போது அநேக முறை நான் யோபு புத்தகத்தை வாசிச்சேன். சங்கீத புத்தகத்தை வாசிக்கும்போதுகூட எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. ஆறுதலான அந்த வசனங்களை படிக்கப் படிக்க, யெகோவா என்னை அப்படியே அன்போட அரவணைக்கிற மாதிரி உணர்ந்தேன்.” அவள் தங்கை மிஷெலும் இவ்வாறு சொல்கிறாள்: “நான் எந்த நாளிலாவது பைபிளை படிக்காம விட்டிருந்தேன்னா அந்த பாதிப்பு உடனே எனக்கு தெரிஞ்சுடும். என் மனசு உடனே வேண்டாததையெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுடும். நான் பைபிளை படிச்சதனாலத்தான் ஒவ்வொரு நாளையும் சமாளிக்கிறதுக்கு தேவையான ஆன்மீக போஷாக்கு எனக்கு கிடைச்சுது.”

நீங்கள் எதையாவது இழந்திருந்தால்​—⁠குறிப்பாக அன்பானவர்களை மரணத்தில் இழந்திருந்தால்​—⁠நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் g என்ற சிற்றேட்டை வாசிப்பது மிகவும் ஆறுதலாக இருக்கலாம். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் எல்லா வசனங்களையும் படித்து, தியானிப்பதற்கு நேரம் செலவிடுங்கள். உயிர்த்தெழுதல் நம்பிக்கையை குறித்தும் தியானியுங்கள். “நிஜமாவே எங்க அம்மா உயிரோட திரும்பி வர்ற மாதிரியும், ‘இதோ நான் வந்துட்டேன். ராத்திரிக்கு என்ன சமைச்சிருக்கே?’-ன்னு அவங்க எங்கிட்ட கேட்கிற மாதிரியும் நான் கற்பனை செய்துக்குவேன். அப்படி கற்பனை செய்யும்போது என்னையறியாமலே என் உதட்டில் புன்னகை வரும்” என்று லரேன் சொல்கிறாள்.

ஜெபத்தில் யெகோவாமீது சார்ந்திருந்தால், எந்தவொரு மோசமான துயரத்தையும் சகித்துக்கொள்ள தேவையான பலம் உங்களுக்கு கிடைக்கும். லரேன் சொல்கிறாள்: “எங்க அம்மா சாகும்போது நான் பக்கத்திலதான் இருந்தேன். உடனடியா யெகோவா கிட்ட எனக்கு இந்த சோதனையை சகிச்சுக்கிறதுக்கும் சமாளிக்கிறதுக்கும் சக்தி கொடுங்கன்னு கேட்டேன். கேட்டு முடிச்சதுமே மனசுக்கு தேவசமாதானம் கிடைச்சுது.” யெகோவாவிடம் ஜெபிக்கும்போது உங்களுக்கு என்ன தேவையோ அதைக் குறிப்பாக கேளுங்கள். நீங்கள் எப்படி உணருகிறீர்களோ அதை அப்படியே அவருக்கு தெரியப்படுத்துங்கள். “அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்” என்பதாக சங்கீதக்காரர் ஊக்கப்படுத்துகிறார்.​—சங்கீதம் 62:8.

காலம் செல்லச் செல்ல, துயர சம்பவங்கள் கண்டிப்பாக அதிகரிக்குமென நாம் எதிர்பார்க்கலாம். (2 தீமோத்தேயு 3:13) என்றாலும், பைபிள் இவ்வாறு வாக்குறுதியளிக்கிறது: “பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள் . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:9-11, 29) இந்த நம்பிக்கையை இறுகப் பற்றிக் கொண்டிருந்தால் எந்தத் துயரங்களையும் நீங்கள் வெற்றிகரமாக சமாளிக்க முடியும். (g03 6/22)

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b உணர்ச்சி ரீதியில் மரத்துப்போவது, கொடுங்கனவுகள், தனிமை, அன்றாடம் செய்யும் வேலைகளை நிறுத்திவிடுதல், குற்ற உணர்வு, கோபம் ஆகியவை இப்படிப்பட்ட அறிகுறிகளில் சில என்பதாக மனநல மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

c இந்தக் கட்டுரை முக்கியமாக பெரிய அளவில் ஏற்படும் துயரங்களைப் பற்றி பேசினாலும், இதில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் அன்பானவர்களை மரணத்தில் இழப்பது போன்ற தனிப்பட்ட துயரங்களுக்கும் பொருந்தலாம்.

d கடவுள் ஏன் துன்மார்க்கத்தை அனுமதிக்கிறார் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்திருக்கும், ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் என்ற புத்தகத்தில் 7-வது அதிகாரத்தை பார்க்கவும்.

e டிசம்பர் 1, 1974, காவற்கோபுரம் பத்திரிகையில் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியை காண்க.

f பயங்கரமான மன வேதனையிலோ சோர்விலோ இருப்பவர்களுக்கு மருத்துவ கவனிப்பு ஒருவேளை தேவைப்படலாம்.

g யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 16-ன் படம்]

வேதனையளிக்கும் காட்சிகளை மீடியாவில் பார்ப்பதை குறைப்பது ஞானமானது