Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நிலைமை என்றாவது தேறுமா?

நிலைமை என்றாவது தேறுமா?

நிலைமை என்றாவது தேறுமா?

உலக சுகாதார நிறுவனமும் அக்கறையுள்ள மற்ற அமைப்புகளும் நோய்களை கண்காணிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான திட்டங்களை கையாண்டு வருகின்றன. பல்வேறு அமைப்புகள், பூச்சிகளால் அதிகமதிகமாக பரவிவரும் நோய்களை கட்டுப்படுத்துவதற்காக நோய் சம்பந்தமான தகவல்களை பரப்புகின்றன, மேலும் புது மருந்துகளையும் புதிய கட்டுப்பாட்டு வழிமுறைகளையும் கண்டுபிடிக்கும்படி ஊக்குவிக்கின்றன. மக்கள் தனிப்பட்ட வகையிலும் சமுதாய அளவிலும் நோய்களைப் பற்றி அதிகம் அறிந்துகொண்டு தங்களைப் பாதுகாக்க அதிகத்தை செய்யலாம். இருந்தாலும் தனிப்பட்டவர்களை பாதுகாப்பது வேறு, உலகளாவிய விதத்தில் நோய்களைக் கட்டுப்படுத்துவது வேறு.

நோய்களைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி காண, பூகோள அளவில் ஒத்துழைப்பும் நம்பிக்கையும் அவசியம் என அநேக நிபுணர்கள் நம்புகின்றனர். “உலகெங்கும் ஜனங்களுக்கும் நாடுகளுக்கும் இடையே செயல்தொடர்புகள் மிகவும் அதிகரித்து வருவதால், மனிதர்கள் எந்தப் பகுதியில் வசித்தாலும் தங்கள் அக்கம்பக்கம், மாவட்டம், நாடு, அல்லது அரைக்கோளம் மட்டுமே தங்கள் சுற்றுப்புறமென நினைக்கக் கூடாது” என்று புலிட்ஸர் விருது வாங்கிய நிருபர் லாரி காரட் எழுதினார். மேலும், “கிருமிகளும் அவற்றை பரப்பும் பூச்சிகளும், மனிதன் எழுப்பியிருக்கும் எந்த செயற்கை எல்லைகளையும் அறிவதில்லை” என்றுகூட வரவிருக்கும் கொள்ளைநோய்​—⁠சமநிலையிழந்த உலகில் புதிதாக தோன்றும் வியாதிகள் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் அவர் எழுதினார். ஏதாவது ஒரு நாட்டில் நோய் பரவ ஆரம்பித்தால், அண்டை நாடுகள் மட்டுமல்ல உலகமே கலக்கமடைகிறது.

சில அரசாங்கங்களும் மக்களும், மற்ற நாடுகள் எந்த விதத்தில் உதவ முன்வந்தாலும், ஏன், நோய்க் கட்டுப்பாட்டு திட்டங்களை வழங்கினாலும் சந்தேகப்படுகின்றனர். அதோடு, அரசாங்கங்களின் குறுகிய கண்ணோட்டமும் செல்வம் குவிப்பதற்கான பேராசையும் ஒன்றுபட்ட சர்வதேச முயற்சிகளுக்கு பெரும்பாலும் தடையாக இருக்கின்றன. மனிதனுக்கும் வியாதிக்கும் இடையிலான போராட்டத்தில் கிருமிகள் ஜெயிக்குமா? ஜெயிக்கும் என நினைக்கும் ஆசிரியர் யூஜின் லின்டன், “இனி நிலைமை மாற வாய்ப்பில்லை, காலம் கடந்துவிட்டது” என்கிறார்.

நம்பிக்கைக்கான காரணம்

நோய்கள் அதிகரிக்கும் வேகத்திற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் ஈடுகொடுக்கவே முடியவில்லை. பூச்சியால் பரவும் நோய் மனிதனின் ஆரோக்கியத்திற்கு வரும் ஆபத்துக்களில் ஒன்றுதான் என்பதும் உண்மை. ஆனால் நம்பிக்கையோடு இருப்பதற்கு காரணம் இருக்கிறது. உயிரினங்களுக்கு இடையிலான சிக்கலான உறவுகளை விஞ்ஞானிகள் இப்போதுதான் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் என்றாலும், சுயமாகவே சீரமைத்துக் கொள்ளும் சக்தி பூமிக்கு இருப்பதை நன்கு அறிந்திருக்கிறார்கள். இயற்கை அமைப்புகளை சமநிலைப்படுத்தும் செயல்முறைகளை இந்தக் கிரகம் தன்னகத்தே பெற்றுள்ளது. உதாரணத்திற்கு, மரங்களெல்லாம் வெட்டப்பட்டு மொட்டையாக்கப்பட்ட நிலங்களில் மறுபடியும் மரங்கள் வளர்ந்து காடுகளாகின்றன. மேலும் அங்கே கிருமிகள், பூச்சிகள், மிருகங்கள் ஆகியவற்றிற்கு இடையிலான உறவுகள் காலப்போக்கில் சமநிலை பெறுகின்றன.

இயற்கையின் சிக்கலான வடிவமைப்பு படைப்பாளர் ஒருவர் இருப்பதற்கு சான்றளிப்பது அதைக் காட்டிலும் முக்கியமான விஷயம்; பூமியிலுள்ள செயல்முறைகளை ஆரம்பத்தில் தோற்றுவித்த அந்த படைப்பாளர் கடவுளே. மனிதனுக்கு அப்பாற்பட்ட புத்திக்கூர்மையைப் பெற்றிருக்கும் ஒருவரே பூமியிலுள்ள அனைத்தையும் படைத்திருக்க வேண்டும் என அநேக விஞ்ஞானிகளே ஒப்புக்கொள்கின்றனர். ஆம், ஆழ்ந்து சிந்திப்பவர்கள் கடவுள் இருப்பதை உண்மையில் மறுக்கவே முடியாது. படைப்பாளராகிய யெகோவா தேவன் சர்வவல்லமையுள்ளவர் என்றும் அன்பே உருவானவர் என்றும் பைபிள் விவரிக்கிறது. நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது உள்ளப்பூர்வ விருப்பம்.

முதல் மனிதன் வேண்டுமென்றே பாவம் செய்ததால் எல்லாரும் அபூரணத்தையும் வியாதியையும் மரணத்தையும் சுதந்தரித்திருப்பதாகவும் பைபிள் விளக்குகிறது. அப்படியென்றால் என்றென்றும் அவஸ்தைப்படுவதுதான் நம் கதியா? இல்லை! இந்தப் பூமியை பூங்காவனம் போன்ற பரதீஸாக மாற்றுவதுதான் கடவுளுடைய நோக்கம்; அங்கே பெரியதும் சிறியதுமான மற்ற உயிரினங்களோடு மனிதர் சுமுகமாக வாழலாம். எவ்வித ஜீவராசிகளுமே​—⁠பெரிய விலங்கும் சரி சின்னஞ்சிறு பூச்சியும் சரி​—⁠மனிதனுக்கு கேடு விளைவிக்காது என பைபிள் முன்னறிவிக்கிறது.​—ஏசாயா 11:6-9.

சமுதாயத்திலும் சுற்றுப்புறத்திலும் அப்படிப்பட்ட நிலைமைகளை காத்துக்கொள்வதில் மனிதன் பங்கு வகிப்பான் என்பதில் சந்தேகமில்லை. பூமியைக் ‘காக்கும்படி’ கடவுள் ஆரம்பத்தில் மனிதனுக்கு கட்டளையிட்டார். (ஆதியாகமம் 2:15) வரவிருக்கும் பரதீஸில் மனிதன் அந்தக் கட்டளையை பரிபூரணமாக நிறைவேற்றுவான். கடவுள் கொடுக்கும் அறிவுரைகளை அப்படியே பின்பற்றுவதன் மூலம் அதை நிறைவேற்றுவான். ஆக, ‘வாழ்பவர் எவரும் “நான் நோயாளி” என்று சொல்லாத’ ஒரு காலத்தை நாம் ஆவலோடு எதிர்பார்க்கலாம்.​—ஏசாயா 33:24, பொது மொழிபெயர்ப்பு. (g03 5/22)