புண்படுத்தும் பேச்சை தவிருங்கள்
பைபிளின் கருத்து
புண்படுத்தும் பேச்சை தவிருங்கள்
“துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.”—யாக்கோபு 3:10.
பே ச்சுத் திறமை—மிருகங்களிலிருந்து நம்மை பிரித்துக்காட்டும் தனிச்சிறப்புமிக்க ஒரு பண்பு. ஆனால் சிலர் இந்தப் பரிசை துஷ்பிரயோகம் செய்வது வருந்தத்தக்கது. அவமதிக்கும் பேச்சு, அசிங்கமான பேச்சு, இழிவான பேச்சு, புனிதமில்லாத பேச்சு, ஆபாசமான பேச்சு, கொச்சையான பேச்சு ஆகியவை மனதை புண்படுத்திவிடலாம்—இதனால் ஏற்படும் வலி, உடல் புண்படுகையில் ஏற்படும் வலியைவிட சிலசமயங்களில் அதிகமாக இருக்கும். “பட்டயக்குத்துகள் போல் பேசுகிறவர்களும் உண்டு” என பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 12:18.
அசிங்கமான பேச்சு இன்று அதிகளவில் ஒரு பழக்கமாகி வருகிறது. பிள்ளைகள் ஆபாசமான பேச்சுக்களைப் பேசுவதும் அதிகரித்து வருவதாக பள்ளிகள் அறிக்கை செய்கின்றன. ஆனால் புண்படுத்தும் பேச்சை உணர்ச்சிகளுக்கு வடிகாலாக பயன்படுத்துவது பிரயோஜனமாக இருக்கும் என சிலர் சொல்லிக் கொள்கின்றனர். சமுக அறிவியல் படிக்கும் மாணவன் ஒருவன் இவ்வாறு எழுதினான்: “நம்முடைய உணர்ச்சிகளின் ஆழத்தைத் தெரியப்படுத்துவதற்கு ஏற்ற வார்த்தைகள் இல்லாதபோது, கீழ்த்தரமான பேச்சை வலிமைமிக்க ஏதுவாக பயன்படுத்தியே தீர வேண்டும்.” புண்படுத்துகிற பேச்சைக்
குறித்ததில் உலக மக்களைப் போலவே கிறிஸ்தவர்களும் “இதிலென்ன இருக்கிறது” என நினைப்பது சரியா? இதைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார்?அசிங்கமான பேச்சை அறவே வெறுத்திடுங்கள்
அசிங்கமான பேச்சு நவீன காலத்தில் தோன்றிய பழக்கமல்ல. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே அப்போஸ்தலருடைய காலத்தில் அசிங்கமான பேச்சை மக்கள் பேசினார்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக தொனிக்கிறதா? உதாரணமாக, கொலோசெய சபையிலிருந்த சிலர் கோபப்பட்டபோது அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள் என தெரிகிறது. ஒருவேளை பதிலுக்குப் பதில் மற்றவர்களை வேண்டுமென்றே தாக்குவதற்கு அல்லது புண்படுத்துவதற்கு இப்படி அவர்கள் பேசியிருக்கலாம். அது போலவே, இன்றைக்கும் அநேகர் கோபப்படும்போது அசிங்கமாக பேசிவிடுகிறார்கள். ஆகவே, கொலோசெயருக்குப் பவுல் எழுதிய கடிதம் இன்றைக்கு நமக்கும் பொருந்துகிறது. பவுல் இவ்வாறு எழுதினார்: “இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.” (கொலோசெயர் 3:8) கோபத்தையும் பெரும்பாலும் கோபத்தோடு சேர்ந்து வரும் அசிங்கமான பேச்சையும் கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டுமென புத்திமதி கூறப்படுவது தெளிவாக இருக்கிறது.
பிறரை தாக்க வேண்டும் அல்லது புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அசிங்கமான வார்த்தைகளை பலர் பேசுவதில்லை என்பது உண்மைதான். ஒருவேளை அப்படிப்பட்டவர்களுக்கு, அசிங்கமான பேச்சை யோசனையின்றி பேசுவது பழக்கமாக இருக்கலாம்; இதனால் அன்றாட பேச்சில் தரக்குறைவான வார்த்தைகள் அந்தளவு ஊறிப்போயிருக்கின்றன. சிலரால் கெட்ட வார்த்தைகளை உபயோகிக்காமல் பேசவே முடியாது. சிலசமயங்களில், மற்றவர்களை சிரிக்க வைப்பதற்காகவும்கூட இத்தகைய அசிங்கமான பேச்சு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இத்தகைய அசிங்கமான பேச்சு அவ்வளவு பெரிய குற்றம் இல்லை என்றும் பொறுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று என்றும் நினைக்கலாமா? பின்வரும் விஷயத்தை கவனியுங்கள்.
மற்றவர்களின் வேடிக்கைக்காக மிகவும் அநாகரிகமாக பேசுவதே அசிங்கமான பேச்சாகும். இன்று அசிங்கமான பேச்சு என்பது பெரும்பாலும் செக்ஸ் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. கண்ணியமானவர்களாய் தங்களை கருதுபவர்களில் அநேகர் ஆபாச வார்த்தைகளை ஒரு ஜாலிக்காக பயன்படுத்துகின்றனர். (ரோமர் 1:28-32) ஆகவேதான் பிரபல நகைச்சுவை கலைஞர்கள் பலர், இயல்பான மற்றும் இயல்பு மீறிய பாலியல் பழக்கங்கள் சம்பந்தப்பட்ட நகைச்சுவைகளையே அளிக்கின்றனர். அசிங்கமான பேச்சுக்கள் அநேக திரைப்படங்களிலும் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளிலும் சிறப்பித்துக் காட்டப்படுகின்றன.
அசிங்கமான பேச்சைக் குறித்து பைபிள் மௌனமாக இருப்பதில்லை. எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் [“அசிங்கமான பேச்சும்,” NW] தகாதவைகள்.” (எபேசியர் 5:3, 4) என்ன நோக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டாலும்சரி, அசிங்கமான பேச்சு கடவுளுக்கு விரோதமானது என்பது தெளிவாக தெரிகிறது. அது கெட்ட பழக்கம். அது புண்படுத்தும் பேச்சு.
கடவுளுக்குப் பிடிக்காத புண்படுத்தும் வார்த்தைகள்
புண்படுத்தும் பேச்சு நிச்சயமாகவே அசிங்கமான பேச்சைக் காட்டிலும் அதிகத்தை குறிக்கிறது. வசைமொழிகள், குத்தலான பேச்சு, கேலிப் பேச்சு, கடுமையாக விமர்சிப்பது ஆகியவை பிறரை ஆழமாக புண்படுத்திவிடும். முக்கியமாக குத்தல் பேச்சும் புறங்கூறுதலும் மலிந்துள்ள சூழலில் வாழ்வதால் நாம் எல்லாரும் நாவினால் பாவம் செய்கிறோம் என்பது உண்மைதான். (யாக்கோபு 3:2) இருந்தாலும், தூஷணமான பேச்சைக் குறித்ததில் மெய் கிறிஸ்தவர்கள் ஏனோதானோவென்ற மனோபாவத்தை காட்டக்கூடாது. புண்படுத்துகிற எல்லா பேச்சையும் யெகோவா தேவன் கண்டனம் செய்கிறார் என பைபிள் தெள்ளத் தெளிவாக உரைக்கிறது.
உதாரணமாக, பைபிளிலுள்ள இரண்டு இராஜாக்கள் புத்தகத்தில், எலிசா தீர்க்கதரிசியை பையன்களின் கும்பல் ஒன்று கேலி செய்ததை படிக்கிறோம். அவரை “நிந்தித்தார்கள்” என்றும், “மொட்டைத் தலையா ஏறிப்போ, மொட்டைத் தலையா ஏறிப்போ” என்று “தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார்கள்” என்றும் பதிவு சொல்கிறது. இந்தச் சிறுவர்களுடைய இருதயத்தை அறிந்துகொள்ளும் திறமை படைத்த யெகோவா, அவர்களுடைய தீய எண்ணத்தைக் கண்டபோது அவர்களுடைய கேலியை பெருங்குற்றமாக கருதினார். தூஷணமாக பேசியதால் அந்த 42 பையன்களையும் சாகடித்தார் என பதிவு சொல்கிறது.—2 இராஜாக்கள் 2:23, 24; NW.
இஸ்ரவேல் ஜனங்கள் “தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம் பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டை செய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.” (2 நாளாகமம் 36:16) அந்த ஜனங்களுடைய விக்கிரகாராதனையும் கீழ்ப்படியாத போக்கும்தான் கடவுளுடைய கோபம் மூண்டதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன என்றாலும், அவர்கள் கடவுளுடைய தீர்க்கதரிசிகளை பரியாசம் செய்ததைப் பற்றியும் பைபிள் குறிப்பாக தெரிவிக்கிறது. இத்தகைய நடத்தையை கடவுள் அப்பட்டமாக கண்டனம் செய்கிறார் என்பதையே இது சிறப்பித்துக் காட்டுகிறது.
ஆகவே, கிறிஸ்தவர்களுக்கு பைபிள் இவ்வாறு புத்திமதி கூறுகிறது: ‘முதிர்வயதுள்ளவனை [மோசமாக] கடிந்துகொள்ளாதே.’ (1 தீமோத்தேயு 5:1) ஒவ்வொருவரையும் நாம் நடத்தும் விதத்திற்கும் இந்த நியமத்தைப் பொருத்தலாம். ‘ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கும்படி’ பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது.—தீத்து 3:2.
நம் நாவை அடக்குதல்
சிலசமயங்களில், சிலரை நாவினால் தாக்க வேண்டுமென்ற தூண்டுதலை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கலாம். தவறு செய்யும்போது அந்த நபரை கடுமையான, கொடூரமான வார்த்தைகளால் தண்டிப்பது—அவரது முகத்திற்கு நேராகவோ அல்லது புறம்பாகவோ தண்டிப்பது—நியாயமென ஒருவர் நினைக்கலாம். ஆனால் கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட தூண்டுதலுக்கு அணைபோட வேண்டும். நீதிமொழிகள் 10:19 இவ்வாறு கூறுகிறது: “சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.”
தேவதூதர்கள் சிறந்த முன்மாதிரியாய் திகழ்கிறார்கள். மனிதர்கள் இழைக்கும் எல்லா தவறுகளையும் அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். பலத்திலும் அதிகாரத்திலும் மனிதரைவிட பெரியவர்களாக இருந்தாலும், ‘யெகோவா மீதுள்ள மரியாதையின் நிமித்தமாக’ மனிதரை தூஷணமான வார்த்தைகளால் குற்றப்படுத்துவதில்லை. (2 பேதுரு 2:11) எல்லாருடைய தவறையும் கடவுள் நன்கு அறிவார் என்பதையும், காரியங்களை சரிப்படுத்துவதற்கு முழு திறமையுடையவராக இருக்கிறார் என்பதையும் உணர்ந்து தேவதூதர்கள் தங்களுடைய நாவை அடக்கிக்கொள்கிறார்கள். தூதர்களில் பிரதானமானவராகிய மிகாவேல், பிசாசுக்கு எதிராகவும்கூட தூஷணமாக பேசவில்லை.—யூதா 9.
கிறிஸ்தவர்கள் தேவதூதர்களைப் பின்பற்றுவதற்கு கடுமையாக முயற்சி செய்கிறார்கள். பின்வரும் பைபிள் புத்திமதியை அவர்கள் பின்பற்றுகிறார்கள்: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.”—ரோமர் 12:17-19.
நம்முடைய தொனி மற்றும் சத்தத்தின் அளவும்கூட நாம் சொல்வதை புண்படுத்தும் ஒன்றாக மாற்றிவிடலாம் என்பது அக்கறைக்குரிய விஷயம். கணவன்மாரும் மனைவிமாரும் கத்தி கூச்சல் போட்டு ஒருவரையொருவர் புண்படுத்துவது சகஜமாக இருக்கலாம். அநேக பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகள் மீது வள்வள்ளென்று விழுகிறார்கள். ஆனால் நாம் உணர்ச்சிகளை வெளிக்காட்ட கூச்சல் போட வேண்டிய அவசியமே இல்லை. பைபிள் இவ்வாறு உந்துவிக்கிறது: ‘சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.’ (எபேசியர் 4:31) ‘கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை பண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனாக . . . இருக்க வேண்டும்’ என்றும் பைபிள் சொல்கிறது.—2 தீமோத்தேயு 2:24.
குணப்படுத்தும் வார்த்தைகள்
திட்டுவதும் அசிங்கமாக பேசுவதும் இன்றைக்கு சர்வ சாதாரணமாக எங்கும் காணப்படுவதால், இத்தகைய தீங்கிழைக்கும் செல்வாக்கை எதிர்த்து நிற்பதற்கு கிறிஸ்தவர்கள் ஒரு சூத்திரத்தை மனதில் வைத்திருக்க வேண்டும். அது என்னவென்று பைபிள் நமக்கு சொல்கிறது, அதாவது அயலகத்தாரை நேசிக்க வேண்டும் என்கிறது. (மத்தேயு 7:12; லூக்கா 10:27) நாம் எப்பொழுதும் குணப்படுத்துகிற வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு அயலார் மீதுள்ள உள்ளப்பூர்வமான அன்பும் அக்கறையும் நம்மை உந்துவிக்கும். “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்” என பைபிள் கூறுகிறது.—எபேசியர் 4:29.
அதோடு, கடவுளுடைய வார்த்தையை நம்முடைய மனதில் ஆழமாக பதிய வைப்பது புண்படுத்தும் பேச்சை தவிர்க்க நமக்கு உதவி செய்கிறது. பைபிளை வாசித்து தியானிப்பது ‘எல்லாவித அழுக்கையும் ஒழிப்பதற்கு’ நமக்கு உதவும். (யாக்கோபு 1:21) ஆம், கடவுளுடைய வார்த்தை நம்முடைய மனக்காயங்களை ஆற்றும் அருமருந்தாய் செயல்படும் வல்லமை படைத்தது. (g03 6/8)