மறு பிரவேசம் ஏன்?
மறு பிரவேசம் ஏன்?
சுமார் 40 வருடங்களுக்கு முன்பு, பூச்சிகளால் பொதுவாக பரவும் மலேரியா, மஞ்சள் காய்ச்சல், டெங்கு போன்ற நோய்கள் பூமியின் பெரும் பகுதிகளில் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டுவிட்டதாக கருதப்பட்டது. ஆனால் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது; பூச்சிகளால் பரவும் நோய்கள் மறுபடியும் தலைகாட்டின.
ஏன்? ஒரு காரணம்: சில பூச்சிகளும் அவை பரப்பும் கிருமிகளும், அவற்றை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளையும் பிற மருந்துகளையும் எதிர்க்கும் சக்தி பெற்றுவிட்டன. இவ்வாறு, சூழ்நிலைக்கு ஏற்ப சமாளித்துக்கொள்ளும் அவற்றின் இயற்கை திறனை முடுக்கி விடும் விதத்தில் பூச்சிக்கொல்லிகள் அளவுக்கதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன; அதுமட்டுமல்ல, மருந்துகள் தவறாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. “ஏழ்மையில் இருக்கும் அநேக குடும்பத்தினர், மருந்தை வாங்கி, அறிகுறிகள் போகும் வரை மட்டும் சாப்பிட்டுவிட்டு, பிறகு மீதமுள்ளதை அடுத்த தடவைக்காக வைத்துக்கொள்கின்றனர்” என கொசு என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது. இவ்வாறு முழுமையாக சுகமடையாததால், பலமிக்க கிருமிகள் உடலிலேயே தங்கி, மருந்துகளுக்கு மசியாத புதிய கிருமிகளை உற்பத்தி செய்யலாம்.
தட்பவெப்ப நிலையில் மாற்றம்
பூச்சிகளால் பரவும் நோய்கள் மறுபடியும் தலைகாட்டியிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், இயற்கையிலும் சமுதாயத்திலும் ஏற்பட்டிருக்கும் மாற்றமே. இதற்குப் பொருத்தமான உதாரணம், பூகோள தட்பவெப்ப மாற்றமாகும். பூமியின் உஷ்ணம் அதிகரிப்பதால், நோயை பரப்பும் பூச்சிகள், தற்போது குளிர் பிரதேசங்களாக இருக்கும் இடங்களிலும் அதிகமாக பிரவேசிக்க ஆரம்பிக்கலாம் என சில விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். இது ஏற்கெனவே நடக்க ஆரம்பித்திருக்கலாம் என்பதற்கு சில அத்தாட்சிகள் உள்ளன. ஹார்வார்டு மருத்துவ கல்லூரியின் சுகாதார மற்றும் பூகோள சுற்றுச்சூழல் மையத்தைச் சேர்ந்த டாக்டர் பால் ஆர். எப்ஸ்டைன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “பூச்சிகளும் சரி அவை பரப்பும் (மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற) நோய்களும் சரி, ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் உள்ள மலைப் பகுதிகளில் இன்று காணப்படுவதாக அறிக்கை செய்யப்படுகிறது.” கோஸ்டா ரிகாவில், மலைகள் இருப்பதன் காரணமாக சமீப காலம் வரை பசிபிக் கரையோரப் பகுதிகளில் மட்டுமே டெங்கு பரவியிருந்தது; இப்போதோ மலைகளையும் தாண்டிச் சென்று முழு தேசத்தையும் அது ஆக்கிரமித்திருக்கிறது.
உஷ்ணமான சீதோஷண நிலை, வேறு மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. சில பகுதிகளில் அது நதிகளை வெறும் குட்டைகளாக்குகிறது; மற்ற பகுதிகளிலோ மழையையும் வெள்ளத்தையும் வருவித்து ஆங்காங்கே குளம் குட்டைகளை உண்டாக்குகிறது. இரண்டு சந்தர்ப்பங்களிலுமே, தேங்கியிருக்கும் நீர் கொசுக்கள் பெருகுவதற்கு மிக வசதியான இடமாகிவிடுகிறது. உஷ்ணமான சீதோஷண நிலை, கொசுக்கள் பெருகும் நேரத்தைக் குறைத்து, இனப்பெருக்க விகிதத்தின் வேகத்தை அதிகரித்து, அவை பலுகிப் பெருகுவதற்கு ஏற்ற பருவகாலத்தை நீட்டிக்கிறது. உஷ்ணமான தட்பவெப்ப நிலையில் கொசுக்கள் படு சுறுசுறுப்பாக இருக்கின்றன. உஷ்ணம் கொசுவின் உடலுக்குள் சென்று, நோயுண்டாக்கும் கிருமிகளின் இனப்பெருக்க விகிதத்தை அதிகரிக்கிறது; இவ்வாறு, ஒரே கடியில் அந்த கொசு தொற்றுநோயை கடத்தும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இருந்தாலும், கவனிக்க வேண்டிய மற்ற விஷயங்களும் உண்டு.
நோய் பரவும் விதத்திற்கு உதாரணம்
பூச்சிகளால் நோய்கள் பரவுவதற்கு, மனித சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களும் காரணமாக இருக்கலாம். இது எப்படியென
புரிந்துகொள்ள, பூச்சிகளின் பங்கைப் பற்றி விவரமாக தெரிந்துகொள்ள வேண்டும். வியாதி கடத்தப்படும் விதத்தை சங்கிலிக்கு ஒப்பிட்டால் அதிலுள்ள பல இணைப்புகளில் ஒன்று மட்டும்தான் பூச்சிகள்; அநேக வியாதிகளை பொறுத்தமட்டில் இதுதான் உண்மை. உதாரணத்திற்கு, ஒரு விலங்கோ பறவையோ பூச்சிகளை உடலில் சுமந்து செல்வதன் மூலம் அல்லது இரத்தத்தில் கிருமிகளுக்கு இடமளிப்பதன் மூலம் வியாதியைப் பரப்பலாம். அந்த விலங்கோ பறவையோ கிருமிகளால் பாதிக்கப்படாமல் இருந்தால் அக்கிருமிகள் அங்கேயே தங்கி பலுகிப் பெருகி நோய் பரவ காரணமாகலாம்.லைம் வியாதியை எடுத்துக்கொள்ளுங்கள். இது 1975-ல் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அ.ஐ.மா., கனெடிகட்டில் உள்ள லைம் என்ற இடத்தில் கண்டறியப்பட்டதால் அதற்கு இந்தப் பெயர். இவ்வியாதிக்கு காரணமான பாக்டீரியா நூறு வருடங்களுக்கு முன்பு வட அமெரிக்காவிற்கு வந்திருக்கலாம்; ஐரோப்பாவிலிருந்து வந்த கப்பல்களிலிருந்த எலிகளும் கால்நடைகளும் அந்த பாக்டீரியாவை சுமந்து வந்திருக்கலாம். சின்னஞ்சிறிய இக்ஸோடஸ் (Ixodes) உண்ணி, பாக்டீரியாவால் தொற்றப்பட்ட மிருகத்தின் ரத்தத்தை குடித்தால், அந்த பாக்டீரியா, உண்ணியின் ஆயுசு முழுவதும் அதன் உடலில் தங்கிவிடும். அந்த உண்ணி வேறொரு மிருகத்தை அல்லது மனிதனை கடிக்கும்போது அவர்களின் ரத்தத்தில் அந்த பாக்டீரியாவை கடத்திவிடும்.
ஐக்கிய மாகாணங்களின் வடகிழக்கில், லைம் வியாதி வெகு காலமாகவே குறிப்பிட்ட பகுதிகளை ஆக்கிரமித்திருக்கிறது. அந்தப் பகுதியில் லைம் வியாதி பாக்டீரியா முக்கியமாக குடிகொண்டிருப்பது வெள்ளைக்கால் சுண்டெலியின் (white-footed mouse) உடலில். இந்த சுண்டெலி உண்ணிகளுக்கும்—முக்கியமாக வளரும் பருவத்திலுள்ள உண்ணிகளுக்கும்—தஞ்சம் அளிக்கிறது. வளர்ந்த உண்ணிகள் பொதுவாக மான்களின் உடலில் குடியிருக்க விரும்புகின்றன; உண்ணவும் இனப்பெருக்கம் செய்யவும் அவற்றின் உடல் வசதியாக இருக்கிறது. ரத்தத்தை வயிறு முட்ட குடித்த பிறகு, வளர்ந்த பெண் உண்ணி தரையில் விழுந்து முட்டைகள் இடுகிறது; விரைவில் அந்த முட்டைகளிலிருந்து லார்வா வெளிவருகிறது, சுழற்சி மறுபடியும் துவங்குகிறது.
சூழ்நிலைகளில் மாற்றம்
கிருமிகள் மனிதருக்கு வியாதி ஏற்படுத்தாமலேயே பல காலமாக மிருகங்களோடும் பூச்சிகளோடும் சேர்ந்து வாழ்ந்திருக்கின்றன. ஆனால் சூழ்நிலை மாறும்போது, குறிப்பிட்ட பகுதியில் அல்லது இனத்தாரில் மட்டும் வழக்கமாக பரவுகிற வியாதி, ஒரேசமயத்தில் ஓரிடத்திலுள்ள பெருவாரியான மக்களிடையே பரவுகிற கொள்ளைநோயாக மாறலாம். லைம் வியாதியைப் பொருத்ததில் என்ன சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டது?
முன்பெல்லாம் மாமிசப்பட்சிணிகள் மான்களை கொன்று தின்று அவற்றின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம், மான் உண்ணிகளுக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர்பை மட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தன. ஆரம்பகால ஐரோப்பிய குடியேறிகள் விவசாயத்திற்காக காடுகளையெல்லாம் அழித்தபோது மான்களின் எண்ணிக்கை மேலும் சரிந்தது. அவற்றைத் தின்ற மாமிசப்பட்சிணிகளும் வேறு இடங்களுக்கு நடையைக் கட்டின.
ஆனால் 1800-களின் மத்திபத்தில் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டுவிட்டு மேற்குப் பகுதிகளில் குடியேறினர். ஆகவே மீண்டும் நிலங்கள் காடுகளாயின. மான்கள் மறுபடியும் பிரவேசித்தன, மாமிசப்பட்சிணிகளோ திரும்பி வரவில்லை. இதனால் மான்களின் எண்ணிக்கை கிடுகிடுவென ஏறியது, உண்ணிகளின் எண்ணிக்கையும் கூடவே அதிகரித்தது.கொஞ்ச காலத்திற்கு பிறகு, லைம் வியாதியை உண்டுபண்ணும் பாக்டீரியா தோன்றி, பல ஆண்டுகளுக்கு மிருகங்களில் குடிகொண்டிருந்தது. அதன் பிறகே மனிதனை அச்சுறுத்த ஆரம்பித்தது. இருந்தாலும் காடுகளைத் தொட்டாற்போல் புறநகரங்கள் உருவாக ஆரம்பித்த போது, பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் எண்ணிக்கையினர் உண்ணிகளின் எல்லைக்குள் நுழைந்தனர். உண்ணிகள் மனிதர்கள்மீது ஒட்டிக்கொள்ளவே, மனிதர்களுக்கு லைம் வியாதி தொற்றியது.
நிலையற்ற உலகில் நோய்
நோய்கள் தோன்றி பரவும் பல வழிகளில் ஒன்றைத்தான் இப்போது சிந்தித்தோம்; நோய் மீண்டும் தலைதூக்குவதில் மனித நடவடிக்கைகள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம்தான். “வலிமைமிக்க கிருமிகளால் புதிதாக தலைகாட்டியிருக்கும் நோய்களில் கிட்டத்தட்ட அனைத்திற்குமே காரணம் மனித தலையீடுதான்” என எதிர்காலத்தை தெளிவாக காணுதல் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் சுற்றுச்சூழல்வாதி யூஜின் லின்டன் எழுதியிருக்கிறார். மனித தலையீட்டிற்கு வேறு சில உதாரணங்கள் இதோ: நவீன கால பயணங்களின் பிரபலத்தாலும் வேகத்தாலும் நோயுண்டாக்கும் கிருமிகளும் அவற்றை கடத்தும் உயிரினங்களும் உலகெங்கும் சுலபமாக பரவுகின்றன. பெரிய, சிறிய உயிரினங்களின் வாழிடங்களை சேதப்படுத்துவது, பூமியிலுள்ள பல்வகைமையை அச்சுறுத்துகிறது. “காற்றும் நீரும் தூய்மைக்கேடு அடைந்திருக்கின்றன, இதனால் மிருகங்களுக்கும் சரி மனிதருக்கும் சரி நோய் எதிர்ப்பு சக்தி
குறைந்துவிட்டது” என லின்டன் குறிப்பிடுகிறார். பிறகு, டாக்டர் எப்ஸ்டைன் சொன்னதை முடிவாக மேற்கோள் காட்டுகிறார்: “சுற்றுச்சூழலை மனிதன் கெடுப்பது பூமியின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, கிருமிகள் பெருகுவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.”அரசியல் ஸ்திரமின்மை போர்களுக்கு வழிநடத்துகிறது; இந்தப் போர்கள் சூழியல் அமைப்புகளை சேதப்படுத்தி, உடல்நல பராமரிப்பிற்கும் உணவு பங்கீட்டிற்கும் உதவும் கட்டமைப்புகளை அழித்துவிடுகின்றன. போதாததற்கு, “ஊட்டச்சத்துக் குறைவினால் பலவீனமாக இருக்கும் அகதிகள் முகாம்களில் தங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது, அங்கே நிலவும் நெரிசலான, துப்புரவற்ற சூழல் பற்பல தொற்றுகள் பரவ காரணமாகிறது” என அமெரிக்கன் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரியின் பையோபுல்லட்டின் சுட்டிக்காட்டுகிறது.
பொருளாதார ஸ்திரமின்மையால் மக்கள் வேறு தேசங்களுக்கோ தங்கள் தேசங்களிலேயே வேறு இடங்களுக்கோ குடிமாறிச் செல்கிறார்கள்; முக்கியமாக ஜனநெரிசலுள்ள நகர் பகுதிகளுக்குச் செல்கிறார்கள். “நோயுண்டாக்கும் கிருமிகள் நெரிசலான இடங்களில் மனம்போல் பெருகுகின்றன” என பையோபுல்லட்டின் விளக்குகிறது. “அடிப்படை கல்வி, ஊட்டச்சத்து, தடுப்பூசி திட்டங்கள் போன்ற பொது சுகாதார பணிகளால்” நகரின் ஜனத்தொகை பெருக்க வேகத்திற்கு “ஈடுகொடுக்க முடிவதில்லை.” ஜனத்தொகை பெருக்கத்தின் காரணமாக தண்ணீர் வசதி, சாக்கடை வசதி, கழிவை அப்புறப்படுத்தும் வசதி ஆகியவற்றிற்கு பற்றாக்குறை ஏற்படுகிறது; இதனால் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் காத்துக்கொள்வது கடினமாகிறது. அதேசமயத்தில் பூச்சிகளும் நோய்களை பரப்பும் மற்ற உயிரினங்களும் பெருகுவதற்கு வசதியான சூழல் உருவாகிறது. இருந்தாலும் நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. ஏன் என்று அடுத்த கட்டுரை விளக்கும். (g03 5/22)
[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]
“வலிமைமிக்க கிருமிகளால் புதிதாக தலைகாட்டியிருக்கும் நோய்களில் கிட்டத்தட்ட அனைத்திற்குமே காரணம் மனித தலையீடுதான்”
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
ஐக்கிய மாகாணங்கள் மீது படையெடுக்கும் வெஸ்ட் நைல் வைரஸ்
வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile virus) முக்கியமாக கொசுக்களால் கடத்தப்படுகிறது. முதன்முதலில் 1937-ல் அது உகாண்டாவில் தலைகாட்டியது. பிற்பாடு மத்திய கிழக்கு, ஆசியா, ஓசியானியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளிலும் காணப்பட்டது. 1999-க்கு முன்பு அந்த வைரஸ் மேற்கத்திய அரைக்கோளத்தில் அறியப்படவே இல்லை. ஆனால் அதன் பிறகோ ஐக்கிய மாகாணங்களில் 3,000 பேருக்கும் அதிகமானவர்களை அந்த வைரஸ் தொற்றியிருப்பதாகவும் 200-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாகவும் அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது.
அந்த வைரஸினால் சிலருக்கு ஃப்ளூ காய்ச்சலைப் போன்ற அறிகுறிகள் தோன்றினாலும் பெரும்பாலானவர்கள் அது தொற்றியிருப்பதையே உணருவதில்லை. வெகு சிலருக்கே, மூளை வீக்கம் (encephalitis), தண்டுவடத்தை சுற்றி வீக்கம் (spinal meningitis) போன்ற பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. வெஸ்ட் நைல் வைரஸை தடுக்க எந்த தடுப்பூசிகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை; அதை குணப்படுத்த மருந்துகளும் இல்லை. வைரஸ் தொற்றப்பட்டவரின் உறுப்புகளை நம் உடலில் பொருத்துவதன் மூலம் அல்லது அவருடைய ரத்தத்தை ஏற்றிக்கொள்வதன் மூலம்கூட வெஸ்ட் நைல் வைரஸ் தொற்ற வாய்ப்புண்டு என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான ஐ.மா. மையம் எச்சரிக்கிறது. “ரத்தத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க தற்போது எந்த வழிமுறையும் இல்லை” என 2002-ல் ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை அறிக்கை செய்தது.
[படத்திற்கான நன்றி]
CDC/James D. Gathany
[பக்கம் 8, 9-ன் பெட்டி/படம்]
உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி? சில ஆலோசனைகள்
ஆரோக்கியத்தோடு இருக்க சில ஆலோசனைகள் சொல்லும்படி, பூச்சிகளால் நோய்கள் பரவியிருக்கும் பகுதிகளிலுள்ள மக்களை விழித்தெழு! கேட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அவர்கள் சொன்ன ஆலோசனைகள் நீங்கள் வசிக்கும் பகுதிக்கும் உதவியாக இருக்கலாம்.
சுத்தம்—சுகாதாரம் தரும்
◼ உங்கள் வீட்டை சுத்தமாக வையுங்கள்
“உணவுப் பொருட்கள் வைக்கும் டப்பாக்களை மூடி வையுங்கள். சமைத்த உணவை, பரிமாறுகிற சமயம் தவிர மற்றபடி நன்கு மூடி வையுங்கள். சாப்பாடு ஏதேனும் சிந்திவிட்டால் உடனடியாக துடையுங்கள். பாத்திரங்களை கழுவாமலேயே ராத்திரி முழுவதும் போட்டு வைக்காதீர்கள். காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து மீதமான உணவை வீட்டிற்கு வெளியில் அப்படியே கொட்டிவிடாதீர்கள்; அதை மூடுங்கள் அல்லது குழிதோண்டி புதையுங்கள். ஏனெனில் பூச்சிகளும் எலிகளும் ராத்திரியில் உணவைத் தேடித் திரிகின்றன. மேலும், மண் தரையின்மீது லேசாக கான்க்ரீட் போடுவது வீட்டை சுத்தமாக வைக்கவும் பூச்சிகளை தவிர்க்கவும் பெரிதும் உதவும்.”—ஆப்பிரிக்கா.
“பழங்களை அல்லது பூச்சிகளை கவரும் வேறு எதையும் வீட்டிற்குள் வைக்காதீர்கள். ஆடுகள், பன்றிகள், கோழிகள் போன்ற கால்நடைகளை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள். திறந்தவெளி கழிப்பிடங்களை மூடி வையுங்கள். ஈக்கள் வராதிருக்க, மிருகங்களின் கழிவுகளை உடனடியாக புதைத்துவிடுங்கள் அல்லது சுண்ணாம்பினால் மூடிவிடுங்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் இதையெல்லாம் செய்யாவிட்டால்கூட நீங்கள் செய்யலாம். அப்போதுதான் ஓரளவுக்காவது பூச்சிகளை தவிர்க்கலாம். அதோடு நீங்கள் சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்கலாம்.”—தென் அமெரிக்கா.
[படம்]
உணவையும் குப்பைகூளத்தையும் மூடாமல் விட்டால், உங்களோடு சேர்ந்து சாப்பிட பூச்சிகளை அழைக்கிறீர்கள்!
◼ உடல் சுத்தம்
“சோப்பு மலிவானதுதான். ஆகவே அடிக்கடி கைகளை கழுவுங்கள், துணிமணிகளை துவையுங்கள். முக்கியமாக மற்றவர்களை அல்லது மிருகங்களை தொட்ட பிறகு கை கழுவ மறக்காதீர்கள். இறந்த மிருகங்களை தொடவே கூடாது. உங்கள் வாயையும் மூக்கையும் கண்களையும் கைகளால் தொடுவதைக்கூட தவிருங்கள். துணிமணிகள் பார்ப்பதற்கு சுத்தமாக தெரிந்தாலும் தவறாமல் துவையுங்கள். அதேசமயம் சில வாசனைகள் பூச்சிகளை ஈர்ப்பதால் வாசனையுள்ள சோப்புகளையும் மற்ற பொருட்களையும் உடலில் பயன்படுத்துவதை தவிருங்கள்.”—ஆப்பிரிக்கா.
தடுப்பு நடவடிக்கைகள்
◼ கொசுக்கள் பெருக இடமளிக்காதீர்கள்
தண்ணீர் தொட்டிகளையும் துவைக்கும் தொட்டிகளையும் (washtubs) மூடி வையுங்கள். மூடியில்லாத எந்த சாமான்களையும் வெளியே வைக்காதீர்கள், அதில் மழை நீர் தேங்கிவிடும். செடிகள் வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளில் தண்ணீர் தேங்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். எந்த இடமாக இருந்தாலும் நான்கு நாட்களுக்கு மேல் தண்ணீர் தேங்கினால் கொசுக்கள் பெருக வசதியாகிவிடும்.—தென்கிழக்கு ஆசியா.
◼ பூச்சிகளிடமிருந்து ஒதுங்கியிருங்கள்
பூச்சிகளுக்கு விருப்பமான இடங்களை தவிருங்கள்; அவை பசிவெறியில் திரியும் நேரங்களையும் அறிந்து ஒதுங்கியிருங்கள். வெப்பமண்டலப் பகுதிகளில் சூரியன் சீக்கிரமாகவே அஸ்தமிக்கிறது; ஆகவே அன்றாட வேலைகள் அநேகம் இருட்டில் நடக்கின்றன. அந்நேரத்தில்தான் அநேக பூச்சிகள் ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கின்றன. பூச்சியால் வியாதி பரவிவரும் சமயத்தில் வெளியே உட்காருவதும் தூங்குவதும் வியாதிப்படும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.—ஆப்பிரிக்கா.
[படம்]
கொசுத் தொல்லையுள்ள நாட்டில் வீட்டிற்கு வெளியே தூங்கினால், உங்களையே சாப்பிட பூச்சிகளை அழைக்கிறீர்கள்!
முக்கியமாக காட்டுப்பகுதியில் இருக்கும்போது, முடிந்தளவு உடலை மூடும் உடைகளை அணியுங்கள். பூச்சிகளை விரட்டும் மருந்துகளை உடைகளுக்கும் சருமத்திற்கும் பயன்படுத்துங்கள். அவற்றின் லேபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை எப்போதும் பின்பற்றுங்கள். வெளியே போய் வந்த பிறகு உங்கள் உடலிலும் பிள்ளைகளின் உடலிலும் உண்ணிகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றனவா என பாருங்கள். செல்லப் பிராணிகளின் உடல்நலத்தை காத்திடுங்கள், அவற்றின் மீது பூச்சிகள் வராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.—வட அமெரிக்கா.
கால்நடைகளை தொடுவதை முடிந்த மட்டும் குறையுங்கள். ஏனெனில் பூச்சிகள் அந்த விலங்குகளிலுள்ள நோயை மனிதருக்கு கடத்திவிடும்.—மத்திய ஆசியா.
குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கொசு வலைகளை பயன்படுத்துங்கள்; பூச்சிக்கொல்லிகள் ஸ்பிரே செய்யப்பட்ட கொசு வலைகள் சிறந்தது. ஜன்னல்களுக்கு வலை பொருத்துங்கள். அவற்றை பழுதுபார்க்க வேண்டியிருந்தால் உடனடியாக அதைச் செய்யுங்கள். கூரை ஓரங்களில் ஏதேனும் ஓட்டைகள் இருந்தாலும் அடைத்துவிடுங்கள்; ஏனெனில் அவற்றின் வழியாக பூச்சிகள் நுழையலாம். இப்படிப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளுக்கு கொஞ்சம் செலவு பிடிக்கும் என்பது உண்மைதான். ஆனால் பிள்ளையை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டியதற்கு இன்னுமதிக செலவு பிடிக்கும்; மிகவும் வியாதிப்பட்டு வேலை செய்ய முடியாமல் போனாலும் இன்னுமதிக நஷ்டம்தான் ஏற்படும்.—ஆப்பிரிக்கா.
[படம்]
பூச்சிக்கொல்லிகள் ஸ்பிரே செய்யப்பட்ட கொசு வலைகள், மருந்தையும் ஆஸ்பத்திரி செலவையும்விட மலிவானவை
பூச்சிகள் ஒளிந்துகொள்வதற்கு வசதியான இடங்கள் உங்கள் வீட்டில் இல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். சுவர்களுக்கும் உட்கூரைக்கும் ப்ளாஸ்டர் பூசுங்கள், விரிசல்களையும் ஓட்டைகளையும் அடையுங்கள். ஓலையால் வேய்ந்த கூரையின் உட்புறத்தை, பூச்சிகள் புகாத துணியால் மூடுங்கள். கத்தை கத்தையான பேப்பர்கள், கந்தல்கள், சுவர்களில் அடுத்தடுத்து தொங்கும் படங்கள் போன்ற கழிசல்களை அகற்றுங்கள். அங்குதான் பூச்சிகள் ஒளியும்.—தென் அமெரிக்கா.
பூச்சிகளையும் எலிகளையும் சிலர் வீட்டில் தங்கும் விருந்தாளிகளாக கருதுகின்றனர். அவை விருந்தாளிகளே அல்ல! அவற்றை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள். பூச்சி விரட்டிகளையும் பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்துங்கள், ஆனால் லேபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரையின்படி மட்டுமே பயன்படுத்துங்கள். ஈக்களை அடிப்பதற்கான அல்லது பிடித்துக் கொல்வதற்கான சாதனங்களை உபயோகியுங்கள். பூச்சிகளை தவிர்க்க புதுப் புது வழிகளை நீங்களே கண்டுபிடியுங்கள்: ஒரு பெண் ஒரு துணியை குழாய்போல் சுருட்டி, அதற்குள் மண்ணை நிரப்பி, கதவுக்கு கீழிருந்த சந்தில் வைத்து அடைத்தாள்; இவ்வாறு பூச்சிகள் நுழையாதிருக்க வழிசெய்தாள்.—ஆப்பிரிக்கா.
[படம்]
பூச்சிகள் நம் வீட்டு விருந்தாளிகளாக இருக்கக்கூடாது. அவற்றை விரட்டுங்கள்!
◼ நோயை தவிர்க்க
சத்துள்ள உணவு, ஓய்வு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை காத்துக்கொள்ளுங்கள். அழுத்தத்தைக் குறையுங்கள்.—ஆப்பிரிக்கா.
பயணிகளுக்கு: பூச்சிகளால் பரவும் நோய்களைப் பற்றி புதிய தகவல்களை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுங்கள். இத்தகவல்களை பொது சுகாதார நிறுவனங்களும் அரசு இன்டர்நெட் சைட்டுகளும் வழங்குகின்றன. பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக, செல்லவிருக்கும் இடத்திற்கு பொருத்தமான தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
சுகவீனமடைந்தால்
◼ உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள்
பெரும்பாலான வியாதிகளை, முன்கூட்டியே கண்டறியும்போது குணப்படுத்துவது சுலபம்.
◼ நோயை கண்டறிவதில் தவறு ஏற்படலாம், ஜாக்கிரதை
பூச்சிகள் பரப்பும் நோய்களைப் பற்றியும், பொருத்தமானால், வெப்பமண்டல நோய்களைப் பற்றியும் நன்கு அறிந்திருக்கும் டாக்டர்களிடம் செல்லுங்கள். எல்லா அறிகுறிகளையும் டாக்டரிடம் சொல்லுங்கள். அதோடு, நீங்கள் பயணம் செய்த இடங்களை குறிப்பிடுங்கள்; முன்பு எப்போதாவது பயணித்திருந்தாலும் குறிப்பிடுவது நல்லது. தேவைப்பட்டால் மட்டுமே ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை சாப்பிடுங்கள், அதுவும் முழுமையாக சாப்பிட்டு முடியுங்கள், நடுவில் நிறுத்திவிடாதீர்கள்.
[படம்]
பூச்சியால் பரவும் நோய்களின் அறிகுறிகள் மற்ற நோய்களைப் போல் தோன்றலாம். ஆகவே டாக்டரிடம் முழு விவரத்தையும் சொல்லுங்கள்
[படத்திற்கான நன்றி]
பூகோளம்: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 10-ன் பெட்டி/படம்]
பூச்சிகள் எச்ஐவி வைரஸை பரப்புகின்றனவா?
பூச்சியியல் வல்லுநர்களும் மருத்துவ விஞ்ஞானிகளும் பத்து வருடங்களுக்கு மேலாக ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் நடத்திய பிறகுகூட, எய்ட்ஸை உண்டாக்கும் எச்ஐவி வைரஸை கொசுக்களோ மற்ற பூச்சிகளோ கடத்துவதற்கு எந்த அத்தாட்சியையும் காணவில்லை.
கொசுவை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். அதன் வாய், ஒரே துவாரத்தை உடைய சிரிஞ்சைப் போன்றது அல்ல. ஆகவே ரத்தத்தை உறிஞ்சவும் பிறகு அதை உமிழவும் ஒரே துவாரத்தை அது பயன்படுத்துவதில்லை. மாறாக, ஒரு துவாரத்தின் வழியாக ரத்தத்தை உறிஞ்சி, வேறொரு துவாரத்தின் வழியாக எச்சிலை உமிழ்கிறது. அதுமட்டுமல்ல, கொசுவின் செரிமான மண்டலம் ரத்தத்தை சிதைத்து, வைரஸை கொன்றுவிடுகிறது என்று தாமஸ் டாமாஸோ விளக்குகிறார்; இவர், ஜாம்பியாவின் மாங்கூவிலுள்ள மாவட்ட சுகாதார நிர்வாகக் குழுவைச் சேர்ந்த எச்ஐவி நிபுணர். பூச்சிகளின் எச்சத்திலும் எச்ஐவி காணப்படுவதில்லை. மேலும் மலேரியாவை உண்டாக்கும் ஒட்டுண்ணிகளைப் போல் எச்ஐவி வைரஸ்கள் கொசுவின் உமிழ்நீர் சுரப்பிகளுக்குள் புகுவதில்லை.
ஒருவர் எச்ஐவியால் பாதிக்கப்பட, பேரளவான வைரஸ்களால் தொற்றப்பட வேண்டும். ஒரு கொசு ஒருவரின் ரத்தத்தை குடித்துக்கொண்டிருக்கும்போது விரட்டப்பட்டு, உடனடியாக அது இன்னொருவரிடம் பறந்து சென்று அவரை கடிக்கும்போது, அதன் வாயில் எவ்வளவுதான் ரத்தம் இருந்தாலும் அது எச்ஐவியை உண்டாக்கும் அளவுக்கு போதுமானதாக இருக்காது. எச்ஐவி வைரஸ் மண்டிய ரத்தத்தை உடைய கொசுவை திறந்த புண்ணின்மேல் அடித்து நசுக்கினால்கூட எச்ஐவி தொற்றாது என நிபுணர்கள் சொல்கின்றனர்.
[படத்திற்கான நன்றி]
CDC/James D. Gathany
[பக்கம் 7-ன் படங்கள்]
மான் உண்ணி (வலதில் பெரியதாக காட்டப்பட்டுள்ளது) லைம் வியாதியை மனிதர்களுக்கு முன்னொருபோதும் இல்லாத அளவில் கடத்துகிறது
இடமிருந்து வலம்: வளர்ந்த பெண், வளர்ந்த ஆண், லார்வா, அனைத்தும் நிஜ சைஸில் காட்டப்பட்டுள்ளது
[படத்திற்கான நன்றி]
All ticks: CDC
[பக்கம் 10, 11-ன் படங்கள்]
வெள்ளம், துப்புரவற்ற நிலைமைகள், மனிதனின் குடிபெயர்ச்சி ஆகியவை பூச்சிகளால் நோய்கள் பரவுவதில் முக்கிய பங்களிக்கின்றன
[படத்திற்கான நன்றி]
FOTO UNACIONES (from U.S. Army)