“யெகோவாவே என் ஆறுதல்”
“யெகோவாவே என் ஆறுதல்”
ஸ்வீடன் நாட்டு அரசராகிய ஒன்பதாம் சார்ல்ஸின் ராஜரீக பொன்மொழியின் மொழிபெயர்ப்பே இது. லத்தீனில் இது இவ்வாறு வாசிக்கிறது: “யெஹோவா ஸோலாட்டியம் மியும்.” 1560 முதல் 1697 வரை ஸ்வீடனை ஆண்ட ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர்களில் ஒருவரே இந்த அரசர். இந்தப் பரம்பரையினர் கடவுளுடைய பெயரை நாணயங்களிலும் பதக்கங்களிலும் எபிரெயு அல்லது லத்தீன் எழுத்துக்களில் பொறித்து கெளரவித்தனர் அல்லது தனிப்பட்ட பொன்மொழிகளில் சிறப்பித்துக் காட்டினர். யெகோவாவின் பெயரில் ஒன்பதாம் சார்ல்ஸ் ஓர் அரசு ஸ்தாபனத்தையும் நிறுவினார். 1607-ம் ஆண்டில் அவர் முடிசூட்டப்பட்ட நாளில், யெகோவா சங்கிலி என அழைக்கப்பட்ட நெக்லஸை சார்ல்ஸ் அணிந்து கொண்டார்.
இந்த அரசர்கள் இத்தகைய பழக்கங்களை ஏன் கடைப்பிடித்தனர்? அந்தச் சமயத்தில் ஐரோப்பாவில் இருந்த கால்வினிஸ்ட் இயக்கமும் பைபிள் மீதிருந்த மரியாதையும் அவர்கள் மீது செல்வாக்கு செலுத்தியதாக அறிஞர்கள் நம்புகின்றனர். மறுமலர்ச்சி காலத்தைச் சேர்ந்த நன்கு கல்விகற்ற அரசர்களாக அவர்கள் விளங்கியதால், கடவுளுடைய சிறப்புப் பெயராகிய யெகோவா என்ற பெயரைக் கொண்ட லத்தீன் மொழிபெயர்ப்புடன் பரிச்சயமானவர்களாக இருந்தார்கள். இப்பெயர் மூல எபிரெயு பைபிளில் ஆயிரக்கணக்கான தடவை காணப்பட்டதை அறிந்திருந்தனர் என்பதிலும் சந்தேகமில்லை.
பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில், யெகோவா என்ற பெயர் நாணயங்களிலும் பதக்கங்களிலும் பொதுக் கட்டடங்களிலும் சர்ச்சுகளிலும் பொறிக்கப்பட்டிருந்ததற்கு ஏராளமான அத்தாட்சிகள் உள்ளன. ‘யெகோவா [என்பதே] . . . தலைமுறை தலைமுறைதோறும் என் நாமம்’ என யாத்திராகமம் 3:15-ல் (திருத்திய மொழிபெயர்ப்பு) மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ள கடவுளுடைய கூற்றே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்பட்டது என தெளிவாக தெரிகிறது. (g03 6/22)
[பக்கம் 13-ன் படங்கள்]
1606-ல் யெகோவாவின் பெயரில் நிறுவப்பட்ட அரசு ஸ்தாபன சங்கிலியும் பதக்கமும், தங்கம், இனாமல், படிகக் கல், சிகப்பு மணிக்கல் ஆகியவற்றால் ஆனவை
அரசர் பதினான்காம் ஏரிக் 1560-68
அரசர் ஒன்பதாம் சார்ல்ஸ் 1599-1611 (பதினான்காம் ஏரிக்கின் சகோதரர்)
அரசர் இரண்டாம் கஸ்டாவுஸ் அடல்ஃப் 1611-32 (ஒன்பதாம் சார்ல்ஸின் மகன்)
அரசி கிறிஸ்டீனா 1644-54 (இரண்டாம் கஸ்டாவுஸ் அடல்ஃபின் மகள்)
[படங்களுக்கான நன்றி]
சங்கிலி: Livrustkammaren, Stockholm Sverige; நாணயங்கள்: Kungl. Myntkabinettet, Sveriges Ekonomiska Museum