Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆபாசத்தால் வரும் தீமை

ஆபாசத்தால் வரும் தீமை

ஆபாசத்தால் வரும் தீமை

டெலிவிஷன், திரைப்படங்கள், மியூசிக் வீடியோக்கள், இன்டர்நெட் போன்ற சாதனங்கள் வாயிலாக எல்லா வகை பாலியல் தகவல்களும் இன்றைக்கு எளிதில் கிடைக்கின்றன. அநேகர் சொல்கிறபடி, இப்படிப்பட்ட பாலியல் வர்ணனைகளும் படங்களும் நம்மை சதா ஆக்கிரமிப்பதில் எந்தத் தீங்கும் இல்லையா? a

வயதுவந்தோர் மீது ஆபாசத்தின் பாதிப்புகள்

ஆபாசத்தை ஆதரிப்போர் என்ன சொன்னாலும்சரி, பாலுறவு மற்றும் பாலியல் நடத்தை சம்பந்தமாக மக்களுடைய கண்ணோட்டத்தை ஆபாசம் பயங்கரமாக பாதித்திருக்கிறது. “ஆபாசமான படங்களைப் பார்ப்பவர்கள் பாலியல் சம்பந்தமாக வக்கிர புத்தியை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது” என்ற முடிவுக்கு குடும்ப ஆய்வு மற்றும் கல்வி பற்றிய தேசிய நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வந்தனர். அவர்களுடைய அறிக்கையின்படி, “பழக்கமாக ஆபாசமான படங்களைப் பார்க்கும் ஆண்கள் மத்தியில் கற்பழிப்பு கட்டுக்கதை (அதாவது, பெண்களே கற்பழிப்புக்குக் காரணம் மற்றும் அவர்கள் அதை விரும்புகிறார்கள், கற்பழிக்கிறவர்கள் இயல்பானவர்களே என்ற கட்டுக்கதை) மிகவும் பரவலாக காணப்படுகிறது.”

ஆபாசத்தை அடிக்கடி பார்ப்பது இயல்பான தாம்பத்திய உறவை அனுபவிப்பதையும் அதில் ஈடுபடுவதையும் தடை செய்கிறது என ஆராய்ச்சியாளர்கள் சிலர் கூறுகின்றனர். ஆபாச படங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு அந்தப் பழக்கம் படிப்படியாக வளருவதை பாலியல் அடிமைகளுக்கு சிகிச்சை தருவதில் நிபுணராகிய டாக்டர் விக்டர் கிளைன் கவனித்திருக்கிறார். இதைக் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால், தற்செயலாக ஆபாசமான படங்களைப் பார்க்க ஆரம்பித்தவர் கடைசியில் அப்பட்டமான, இயல்புக்கு மாறான பாலியல் படங்களைப் பார்க்க ஆரம்பித்துவிடலாம். இது, நெறிமுறையற்ற பாலியல் பழக்கங்களுக்கு கொண்டுபோய் விடும் என அவர் அடித்துக் கூறுகிறார். நடத்தை சம்பந்தமான அறிவியலாளர்கள் இதை ஒத்துக்கொள்கின்றனர். “நெறிமுறையற்ற எந்தவித பாலியல் பழக்கமும் இப்படித்தான் ஆரம்பமாகிறது, . . . பயங்கர குற்றவுணர்வாலும்கூட இதை ஒழித்துவிட முடியாது” என டாக்டர் கிளைன் அறிவிக்கிறார். கடைசியில், ஆபாசமான படங்களில் பார்க்கும் ஒழுக்கங்கெட்ட கற்பனையையே ஒருவர் நிஜத்தில் செய்து பார்க்க ஆரம்பித்துவிடலாம், அதனால் பெரும்பாலும் பயங்கர விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன.

இத்தகைய பழக்கத்தால் வரும் பிரச்சினை படிப்படியாகவும் மறைமுகமாகவும் தோன்றலாம் என்கிறார் கிளைன். அவர் கூறுகிறார்: “புற்றுநோயைப் போலவே, அது தொடர்ந்து வளருகிறது, பரவுகிறது. அது நின்றுவிடுவது அபூர்வமே. அதோடு இதற்கு சிகிச்சை அளிப்பதும் குணப்படுத்துவதும் மிகவும் கடினம். இதற்கு அடிமையாகும் ஆண்கள் இதனால் வரும் பிரச்சினையை ஏற்றுக்கொள்ளவும் எதிர்ப்படவும் மறுப்பதை சாதாரணமாக எதிர்பார்க்கலாம். இது கிட்டத்தட்ட எல்லா சந்தர்ப்பத்திலும் தாம்பத்திய பிரச்சினைகளுக்கும், சிலசமயங்களில் மணவிலக்கிற்கும், சிலசமயங்களில் மற்ற நெருங்கிய உறவுகள் முறிவடைவதற்கும் வழிநடத்துகிறது.”

இளைஞருக்கு ஏற்படுத்தும் பாதிப்பு

ஆபாசத்தைப் பார்ப்பவர்கள் முக்கியமாக 12-⁠க்கும் 17-⁠க்கும் இடைப்பட்ட வயதுடைய பையன்களே என புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சொல்லப்போனால், பெரும்பாலோருக்கு ஆபாசமே பாலியல் கல்விக்கு முக்கியமான மூலமாக விளங்குகிறது. இதனால் அதிர்ச்சியூட்டும் விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. “பருவ வயதில் கருத்தரிப்பு, எய்ட்ஸ் போன்ற பாலியல் வியாதிகள் ஆகியவை ஒருபோதும் ஆபாச புத்தகத்தில் எடுத்துக் காட்டப்படுவதில்லை. ஆகவே அதில் வர்ணிக்கப்படும் நடத்தைகளால் எந்தவித மோசமான பாதிப்புகளும் ஏற்படாது என்ற தவறான நம்பிக்கையையே கொடுக்கிறது” என ஓர் அறிக்கை கூறுகிறது.

ஆபாசத்தைப் பார்ப்பது ஒரு பிள்ளையின் இயல்பான மூளை வளர்ச்சியை பாதிக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் கூறுகின்றனர். செய்தித் துறை கல்வி நிறுவனத்தின் முதல்வர் டாக்டர் ஜூடித் ரைஸ்மன் இந்த முடிவுக்கு வருகிறார்: “ஆபாசத்தைப் பார்ப்பது உயிரியல் ரீதியான மாற்றங்களை மூளையில் ஏற்படுத்துகிறது, அதாவது ஒன்றை புரிந்துகொண்ட பிறகு அதை ஏற்றுக்கொள்ளும் இயல்பான செயல்பாட்டை தடுத்துவிடுகிறது​—⁠இது பிள்ளைகளின் ‘பிளாஸ்டிக்’ [உருப்படுத்தக்கூடிய] மூளைகளுக்கு தீங்கானது; ஏனென்றால் இது நிஜத்தைப் புரிந்துகொள்ளும் அவர்களுடைய திறனை குலைத்துப் போடுகிறது, இவ்வாறு அவர்களுடைய மனோ ரீதியிலான, சரீர ரீதியிலான ஆரோக்கியத்தையும், நலனையும், மகிழ்ச்சிக்கான நாட்டத்தையும் பாதிக்கிறது என்பதை ஆபாச காட்சிகளுக்கும் ஒலிகளுக்குமான மூளையின் இயல்பான பிரதிபலிப்பு சம்பந்தமாக கண்டறியப்பட்ட, நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தைப் பற்றிய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.”

உறவுகள் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள்

ஆபாசம் ஒருவருடைய மனோபாவத்தை உருப்படுத்துகிறது, நடத்தையின் மீது செல்வாக்கு செலுத்துகிறது. அதன் செய்திகள் கவர்ச்சியூட்டுகின்றன, ஏனென்றால் அவை கற்பனையானவை, இதனால் நிஜத்தைவிட அதிக கிளர்ச்சியூட்டும் ஒன்றாக வழங்கப்படுகின்றன. (“எந்த செய்தியை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்?” என்ற பெட்டியை காண்க.) “ஆபாசத்தைப் பார்ப்பவர்கள், உறவுகளை பாதிப்பதற்கு வழிநடத்துகிற நியாயமற்ற எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்கிறார்கள்” என ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது.

ஆபாசம் நம்பிக்கையையும் நேர்மையையும் அழிக்கிறது, இவை மண வாழ்க்கைக்கு இன்றியமையா குணங்கள். ஆபாசத்தை முக்கியமாய் இரகசியமாக பார்ப்பதால், இது பெரும்பாலும் வஞ்சிப்பதற்கும் பொய் பேசுவதற்கும் வழிநடத்துகிறது. மணத் துணைகள் ஏமாற்றப்பட்டதாக உணருகிறார்கள். அவர்களுடைய துணைவர் ஏன் அவர்கள் மீது ஆசைப்படுவதில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.

ஆன்மீக தீங்கு

ஆபாசத்தைப் பார்ப்பது ஆன்மீக ரீதியில் பயங்கரமான பாதிப்பை உண்டாக்குகிறது. கடவுளுடன் நெருங்கிய உறவை நாடுகிற ஒருவருக்கு இது உண்மையிலேயே பெருந்தடையாக ஆகலாம். b பாலியல் வேட்கையை பேராசையுடனும் விக்கிரகாராதனையுடனும் பைபிள் இணைத்துப் பேசுகிறது. (கொலோசெயர் 3:5, NW) பேராசைக்காரர் ஒன்றை அடைய அந்தளவுக்கு விரும்புவதால் அது அவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகி, மற்றெல்லாவற்றிற்கும் அவருடைய கண்ணை மூடிவிடுகிறது. சொல்லப்போனால், ஆபாசத்திற்கு அடிமையானவர்கள் பாலியல் ஆசையை கடவுளுக்கும் மேலாக வைக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் அதை ஒரு விக்கிரகமாக்கிவிடுகிறார்கள். யெகோவா தேவனுடைய கட்டளை இவ்வாறு கூறுகிறது: “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.”​—யாத்திராகமம் 20:3.

ஆபாசம் அன்பான உறவுகளை சீரழித்துவிடுகிறது. கிறிஸ்தவ கணவன்மார்கள் தங்களுடைய மனைவிகளை கனப்படுத்தும்படி மணமான அப்போஸ்தலன் பேதுரு தாமே அவர்களை உந்துவித்தார். அப்படி செய்ய தவறுகிற ஒரு கணவன் தன்னுடைய ஜெபங்கள் தடைப்படுவதை காண்பார். (1 பேதுரு 3:7) பெண்களை மோசமாக வர்ணித்துக் காட்டும் படங்களை இரகசியமாக பார்ப்பது மனைவியை கனப்படுத்துவதாக இருக்குமா? இதைப் பற்றி அறியவந்தால் அவள் எப்படி உணருவாள்? “ஒவ்வொரு கிரியையும் . . . நியாயத்திலே” கொண்டுவருகிறவரும் “உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிற”வருமாகிய கடவுள் இதைப் பற்றி என்ன நினைப்பார்? (பிரசங்கி 12:14; நீதிமொழிகள் 16:2, பொது மொழிபெயர்ப்பு) ஆபாசத்தைப் பார்க்கிற ஒருவர் தன்னுடைய ஜெபங்களை கடவுள் கேட்பார் என எதிர்பார்க்க முடியுமா?

எது வந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தோடு சுயநலத்துடன் ஆசையை திருப்தி செய்துகொள்வதில் விடாப்பிடியாக இருப்பது ஆபாசத்தைப் பார்க்கிறவர்களில் காணப்படும் ஒரு முக்கியமான குணமாகும். ஆகவே, ஆபாசத்தைப் பார்ப்பது அன்பற்ற செயல். கடவுளுக்கு முன்பாக கற்பையும் சுத்தமான ஒழுக்கத்தையும் காத்துக்கொள்வதற்கு ஒரு கிறிஸ்தவன் மேற்கொள்ளும் போராட்டத்தை இது பலவீனப்படுத்துகிறது. “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, . . . உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்க வேண்டும்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.​—1 தெசலோனிக்கேயர் 4:3-7.

ஆபாசம் முக்கியமாக பெண்களையும் பிள்ளைகளையும் துஷ்பிரயோகம் செய்கிறது. அது அவர்களை இழிவுபடுத்துகிறது, அவர்களுடைய கண்ணியத்தையும் உரிமைகளையும் பறிக்கிறது. ஆபாசத்தைப் பார்க்கிற ஒருவர் இதற்கு உடந்தையாக இருந்து அத்தகைய துஷ்பிரயோகத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார். “ஒரு மனிதன் தான் எவ்வளவு நல்லவன் என நினைத்தாலும், ஆபாசத்தை மௌனமாக அங்கீகரிப்பது நல்ல சூழ்நிலைமைகளிலும் அவனை [புத்திகெட்டவனாக] ஆக்குகிறது, மோசமான சூழ்நிலைமைகளில் பெண்கள் மீது அவநம்பிக்கையுடைவராக, தான் கவனித்துக் காப்பாற்றுவதாக சொல்லிக்கொள்ளும் பெண்ணின் மீதே அவநம்பிக்கையுடையவராக ஆக்குகிறது” என ஆராய்ச்சியாளர்களாகிய ஸ்டீவன் ஹில்லும் நைனா சில்வரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்தை விட்டொழித்தல்

ஆபாசத்திற்கு அடிமையாகி அந்தப் பழக்கத்துடன் போராடிக் கொண்டிருக்கும் ஒருவராக நீங்கள் இருந்தால் என்ன செய்வது? அதிலிருந்து விடுபட ஏதாவது செய்ய முடியுமா? பைபிள் நம்பிக்கை அளிக்கிறது! கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்வதற்கு முன்பு, பூர்வ கிறிஸ்தவர்களில் சிலர் வேசித்தனம் செய்தவர்களாகவும் விபச்சாரக்காரர்களாகவும் பேராசைமிக்கவர்களாகவும் இருந்தார்கள். ‘ஆயினும் . . . நீங்கள் கழுவப்பட்டீர்கள்’ என பவுல் குறிப்பிட்டார். அது எப்படி சாத்தியமானது? ‘நமது தேவனுடைய ஆவியினால் பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்’ என அவர் பதிலளித்தார்.​—1 கொரிந்தியர் 6:9-11.

கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வல்லமையை ஒருபோதும் குறைவாக மதிப்பிடாதீர்கள். ‘தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடுக்க மாட்டார்’ என பைபிள் கூறுகிறது. உண்மையில், அதிலிருந்து தப்பிப்பதற்கான வழியையும் உண்டாக்குவார். (1 கொரிந்தியர் 10:13) உங்களுடைய பிரச்சினையை கடவுளிடம் திட்டவட்டமாக குறிப்பிட்டு, ஊக்கமாய் ஜெபிப்பது பலனளிக்கும். அவருடைய வார்த்தை இவ்வாறு நம்மை உந்துவிக்கிறது: “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்.”​—சங்கீதம் 55:⁠22.

ஆனால் உங்களுடைய ஜெபங்களுக்கு இசைவாக நீங்கள் செயல்பட வேண்டும். ஆபாசத்தைப் பார்ப்பதை விட்டொழிப்பதற்கு நீங்கள் திட்டவட்டமான, இருதயப்பூர்வமான தீர்மானம் எடுக்க வேண்டும். நம்பிக்கைக்குரிய ஒரு நண்பரோ அல்லது குடும்ப அங்கத்தினரோ உங்களுடைய தீர்மானத்தில் உறுதியுடனிருக்கத் தேவையான ஆதரவையும் உற்சாகத்தையும் கொடுத்து மதிப்புமிக்க உதவியளிக்க முடியும். (“உதவி பெறுதல்” என்ற பெட்டியை காண்க.) இத்தகைய நடவடிக்கை எடுப்பது கடவுளைப் பிரியப்படுத்தும் என்பதை நினைவில் வைப்பது உங்களுடைய தீர்மானத்தில் நிலைத்திருக்கவும் உதவி செய்யும். (நீதிமொழிகள் 27:11) அதோடு, நீங்கள் ஆபாசமான படங்களைப் பார்ப்பது கடவுளுடைய மனதைப் புண்படுத்துகிறது என்பதை அறிந்திருப்பதும் அந்தப் பழக்கத்தை விட்டுவிடுவதற்குத் தேவையான கூடுதல் உந்துவிப்பை உங்களுக்குக் கொடுக்கும். (ஆதியாகமம் 6:5, 6) இது ஒரு சுலபமான போராட்டம் அல்ல, ஆனால் அதில் வெற்றிபெற முடியும். ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்தை விட்டொழிக்க முடியும்!

ஆபாசத்தைப் பார்ப்பதால் வரும் ஆபத்துக்கள் நிஜமானவை. ஆபாசம் தீங்கானது, அழிவுக்கேதுவானது. அதை தயாரிக்கிறவர்களையும் அதைப் பார்க்கிறவர்களையும் கறைப்படுத்துகிறது. ஆண்களையும் பெண்களையும் கொச்சைப்படுத்துகிறது, பிள்ளைகளுக்கு ஆபத்தளிக்கிறது, அது விட்டொழிக்கப்பட வேண்டிய ஒரு தீய பழக்கம். (g03 7/22)

[அடிக்குறிப்புகள்]

a இன்டர்நெட் ஆபாசத்தின் பயங்கர ஆபத்துக்களைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்வதற்கு ஜூன் 8, 2000, விழித்தெழு! 3-10 பக்கங்களில் வெளிவந்த “இன்டர்நெட்டில் ஆபாசம்​—⁠என்ன ஆபத்து?” என்ற தொடர் கட்டுரைகளைப் பார்க்கவும்.

b ஆபாசத்தைப் பற்றி பைபிளின் நோக்குநிலையை அறிந்துகொள்வதற்கு, தயவுசெய்து ஜூலை 8, 2002 விழித்தெழு! இதழில் 19-21 பக்கங்களைக் காண்க.

[பக்கம் 10-ன் பெட்டி/படம்]

உதவி பெறுதல்

ஆபாசத்தைப் பார்ப்பதை விட்டொழிப்பதற்கு எடுக்கும் முயற்சிகளை குறைவாக மதிப்பிட்டு விடக்கூடாது; அது கஷ்டமான ஒரு போராட்டமாக இருக்கலாம். செக்ஸுக்கு அடிமையான நூற்றுக்கணக்கானோருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் விக்டர் கிளைன் இவ்வாறு கூறுகிறார்: “சத்தியம் செய்வது மட்டுமே போதாது. அதுபோல வெறும் நல்லெண்ணங்களும் உதவாது. [செக்ஸுக்கு அடிமையானவரே] சுயமாக இந்தப் பழக்கத்தை நிறுத்த முடியாது.” வெற்றிகரமான சிகிச்சைக்கு முக்கியமான ஒன்று, அந்த நபர் மணமானவராக இருந்தால், துணையையும் உட்படுத்துவதாகும். “உதவி செய்வதில் இருவரும் ஈடுபட்டால் சிகிச்சை வேகமாக பலனளிக்கும்” என அவர் கூறுகிறார். “இருவருமே புண்பட்டிருக்கிறார்கள். இருவருக்கும் உதவி தேவை.”

அந்த நபர் மணமாகாதவராக இருந்தால், நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பரோ குடும்ப அங்கத்தினரோ உறுதுணையாக விளங்கலாம். இந்த சிகிச்சையில் யார் ஈடுபட்டாலும்சரி, மாற்றமுடியாத ஒரு விதியை கிளைன் கூறுகிறார்: இந்தப் பிரச்சினையைக் குறித்தும், ஏதாவது பின்வாங்கல்கள் ஏற்பட்டால் அவற்றை குறித்தும் வெளிப்படையாக பேசுங்கள். “இரகசியமாக வைத்திருப்பது உங்களைக் கொல்லுகிறது. அவை வெட்கவுணர்வையும் குற்றவுணர்வையும் உருவாக்குகின்றன” என அவர் கூறுகிறார்.

[பக்கம் 9-ன் அட்டவணை]

எந்த செய்தியை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்?

ஆபாசத்தின் செய்தி பைபிளின் செய்தி

◼ எவருடனும் எந்தச் சமயத்திலும் எந்தச் ◼ “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும்,

சூழ்நிலைமையிலும் எந்த விதத்திலும் விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக;

பாலுறவு கொள்வது சரி, அதனால் வேசிக்கள்ளரையும் தேவன்

மோசமான எந்த விபசாரக்காரரையும் நியாயந்தீர்ப்பார்.”

விளைவுகளும் இல்லை. ​—எபிரெயர் 13:⁠4.

“வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுய

சரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.”

​—1 கொரிந்தியர் 6:18;

இதையும் காண்க ரோமர் 1:26, 27.

◼ பாலுறவை முழுமையாக அனுபவிப்பதற்கு ◼ “உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.

திருமணம் ஒரு தடையாக இருக்கிறது. . . . அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும்

மயங்கியிருப்பாயாக.”​—⁠நீதிமொழிகள் 5:18, 19;

இதையும் காண்க ஆதியாகமம் 1:28; 2:24;

1 கொரிந்தியர் 7:⁠3.

◼ பெண்கள் ஒரேவொரு நோக்கத்திற்கே, ◼ “தேவனாகிய கர்த்தர்: ஏற்ற துணையை

அதாவது ஆண்களுடைய பாலின்பத்தைப் அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.”

பூர்த்தி செய்வதற்கே இருக்கிறார்கள். ​—⁠ஆதியாகமம் 2:18;

இதையும் காண்க எபேசியர் 5:⁠28.

◼ ஆண்களும் பெண்களும் தங்களுடைய ◼ “ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம்,

பாலுறவு தூண்டுதல்களுக்கு அடிமைகளாய் துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை

இருக்கிறார்கள். ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற

உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்

[“மரத்துப்போகச் செய்யுங்கள்,”NW].”

​—⁠கொலோசெயர் 3:⁠5.

“உங்களில் அவனவன் தன்தன் சரீர

பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும்

ஆண்டுகொள்[வானாக].”

​—⁠1 தெசலோனிக்கேயர் 4:⁠4.

“முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்

போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக்

கற்புடன் சகோதரிகளைப் போலவும்

பாவி[யுங்கள்].”

​—⁠1 தீமோத்தேயு 5:1, 2;

இதையும் காண்க 1 கொரிந்தியர் 9:⁠27.

[பக்கம் 7-ன் படம்]

ஆபாசத்தைப் பார்ப்பது ஒரு பிள்ளையின் இயல்பான மூளை வளர்ச்சியை பாதிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சிலர் கூறுகின்றனர்

[பக்கம் 8-ன் படம்]

ஆபாசம் தம்பதிகளுக்கிடையே நம்பிக்கையை குலைக்கிறது, மனம்விட்டுப் பேசுவதை தடை செய்கிறது

[பக்கம் 10-ன் படம்]

ஊக்கமாய் ஜெபிப்பது நல்ல பலன்களைத் தரும்