Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆபாசம் எதிரும்புதிருமான கருத்துகள்

ஆபாசம் எதிரும்புதிருமான கருத்துகள்

ஆபாசம் எதிரும்புதிருமான கருத்துகள்

“அது தகாத ஆசையை உருவாக்குகிறது, ஒருபோதும் திருப்தி செய்யப்படக் கூடாத மோகத்தைத் தூண்டுகிறது.”​—டோனி பார்சன்ஸ், பத்திரிகை எழுத்தாளர்.

‘இன்டர்நெட் செக்ஸுக்கு’ அடிமையாவார் என ஜான் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. a ஏதோ தற்செயலாக ஆபாச காட்சிகளைப் பார்க்க நேரிடுகிற ஆட்களைப் போலத்தான் ஜானும் ஒரு நாள் எதேச்சையாக ‘செக்ஸ் சாட் ரூம்’ தளத்திற்குள் நுழைந்தார். அவ்வளவுதான், அவர் ‘சைபர்செக்ஸுக்குள்’ முழு மூச்சுடன் இறங்கிவிட்டார். “என்னுடைய மனைவி வேலைக்குப் போகும்வரை காத்திருப்பேன், போனவுடனே ‘பெட்’டிலிருந்து எழுந்து மணிக்கணக்காக கம்ப்யூட்டர் முன்னாடியே கிடப்பேன்” என அவர் கூறுகிறார். மணிக்கணக்காக செல்லும் அந்த ‘சாட்’ சமாச்சாரத்தின் போது, அவருக்கு சோறு தண்ணி எதுவும் வேண்டாம். “பசியெடுத்ததாக எனக்கு நினைவே இல்லை” என அவர் சொல்கிறார். அவருடைய இரகசிய பழக்கங்களைப் பற்றி மனைவியிடம் பொய் சொல்ல ஆரம்பித்தார். வேலையில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதும் அவருக்கு கஷ்டமாக ஆனது. மேலும் மேலும் பயம் நிறைந்தவராக ஆனார். அவருடைய தாம்பத்திய வாழ்க்கை தடுமாற ஆரம்பித்தது. கடைசியாக, ‘சைபர்செக்ஸ்’ பார்ட்னர்களில் ஒருவரை நேரில் தரிசிக்க ஏற்பாடு செய்தபோது, விஷயம் அவருடைய மனைவியின் காதுக்கு எட்டியது. இப்பொழுது, ஆபாசத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வருகிறார் ஜான்.

ஆபாசத்தை எதிர்ப்பவர்கள் இதனால் வரும் மோசமான விளைவுகளுக்கு ஆதாரமாக இதுபோன்ற கதைகளை எடுத்துக் காட்டுகின்றனர். ஆபாசம் உறவுகளுக்கு உலை வைக்கிறது, பெண்களை இழிவுபடுத்துகிறது, சிறுபிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்கிறது, பாலியல் பற்றிய நெறிமுறையற்ற, தீங்கான நோக்குநிலையை உருவாக்குகிறது என அவர்கள் அடித்துக் கூறுகின்றனர். மறுபட்சத்தில், ஆபாசத்தை ஆதரிப்பவர்களோ ஆபாசம் என்பது இயல்பாக வெளிப்படும் ஒன்று எனவும், இதை எதிர்ப்பவர்கள் மிதமீறி பயப்படுகிறார்கள் எனவும் வாதாடுகின்றனர். “பாலுறவு கொள்ளும் விருப்பத்தையோ பாலியல் ஆசைகளையோ பற்றி மக்கள் வெட்கப்படக் கூடாது” என அதை ஆதரிக்கும் ஒருவர் எழுதுகிறார். “செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேச ஆரம்பிப்பதற்கும் அத்தகைய பேச்சை தூண்டுவதற்கும் ஆபாசத்தைப் பயன்படுத்தலாம்.” ஆபாசம் அதிகரிப்பது ஒளிவுமறைவற்ற, ஆரோக்கியமான சமுதாயத்திற்கு அங்கீகாரம் வழங்கும் ஒரு முத்திரை என்றும்கூட சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். “ஒருவருக்கொருவர் சம்மதத்துடன் வயதுவந்தோர் பாலுறவு கொள்ளும் அப்பட்டமான காட்சியைப் பார்க்க பழகிக் கொள்வதற்கு ஏற்ற பக்குவமுள்ள ஒரு சமுதாயம், பல்வகை பாலுறவுகளையும் பெண்களின் சமத்துவத்தையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு சமுதாயமாக இருக்கலாம்” என கூறுகிறார் எழுத்தாளர் பிரையன் மெக்நேர்.

சமுதாயத்தில் நிலவும் எதிரும்புதிருமான கருத்துகள் ஆபாசத்தை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக ஆக்குகின்றனவா? அது ஏன் அவ்வளவு பரவலாக காணப்படுகிறது? ஆபாசம் உண்மையிலேயே ஆபத்தான பொழுதுபோக்கா? இந்தக் கேள்விகளைப் பின்வரும் கட்டுரைகள் அலசும். (g03 7/22)

[அடிக்குறிப்பு]

a பெயர்கள் அனைத்தும் கற்பனையே.