Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முயன்றேன்

இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முயன்றேன்

இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முயன்றேன்

கென் பேண் கூறியது

நான் பிறந்தது, 1938-⁠ல்; வளர்ந்தது, அ.ஐ.மா. நியு மெக்சிகோவில் இருந்த என் தாத்தாவின் கால்நடை வளர்ப்பு பண்ணையில். 24,000 ஏக்கர் பரப்பளவிலிருந்த அந்தப் பண்ணையில் நீரோடைகள் ஓடின; கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பசேலென்ற புல்வெளிகள் காணப்பட்டன; பின்னணியில் மலைகள் கம்பீரமாய் நின்றன. ஆடு, மாடு, குதிரைகளின் சத்தமும், கௌபாய்களின் ஷூவிலிருந்த குதிமுள்ளின் ஓசையும் என் காதுகளில் இப்போதும் ஒலிக்கின்றன. புல்லின் மீது வீசும் தென்றலின் இனிய ஓசையையும், அதேசமயத்தில் தண்ணீர் தொட்டியை சுற்றியிருந்த கில்டீர் குருவிகளின் கீச் ஒலியையும் கேட்டிருக்கிறேன்; இவ்விரு ஓசைகளுக்கிடையேதான் எத்தனை வித்தியாசமென வியந்திருக்கிறேன்.

வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் நடக்கும் காரியங்கள் ஒருவருடைய மனதில் ஆழ்ந்த, அழியாத ஒரு முத்திரையை பதித்து விடலாம். சிறுவயதில் தாத்தாவோடு நான் பல மணிநேரம் செலவிட்டேன். ஐக்கிய மாகாணங்களின் மேற்குப் பகுதிகளில் நடந்த அந்தக் காலத்துக் கதைகளையெல்லாம் சொல்வதில் அவர் கெட்டிக்காரர்; இளைய பில்லீ என்றழைக்கப்பட்ட சட்டவிரோதியான ஒரு வாலிபனின் கூட்டாளிகளைக்கூட அவர் தெரிந்து வைத்திருந்தார்; அந்த பில்லீ என்பவன் ஒரு கொள்ளைக்காரன், அடுத்தடுத்து பல கொலைகளை செய்ததால் பிரபலமடைந்திருந்தான்; 1881-⁠ம் வருடம், 21 வயதில் அவன் சாகும் வரை கொலைகள் செய்வதை நிறுத்தவேயில்லையாம்.

என் அப்பா அம்மா யெகோவாவின் சாட்சிகளாக இருந்தார்கள்; கிறிஸ்தவ ஊழியம் செய்யும்போது, ஒதுக்குப்புறமான பண்ணைகளுக்கும், ஹான்டோ பள்ளத்தாக்கின் மேலும் கீழுமிருந்த சாதாரண செங்கல் வீடுகளுக்கும் என்னை கூட்டிக்கொண்டு போனார்கள். பெரும்பாலும் அவர்கள் ஃபோனோகிராஃபை உபயோகித்தார்கள், அதில் சகோதரர் ஜே. எஃப். ரதர்ஃபோர்டின் பைபிள் பேச்சுகளை போட்டுக் காண்பித்தார்கள்; அந்தப் பேச்சுகள் அப்படியே என் மனதில் ஆழமாக பதிந்து விட்டன. a பண்ணையாட்கள், மெக்சிக விவசாயிகள், அப்பெச்சீ மற்றும் ப்யூப்லோ போன்ற பூர்வ அமெரிக்க இந்தியர்கள் என எல்லா வகைப்பட்ட மக்களுக்கும் இதைப் போட்டுக் காண்பித்தோம். தெருக்களில் நின்றுகொண்டு, வருவோர் போவோரிடம் பத்திரிகைகளை கொடுப்பது எனக்கு ரொம்பவும் பிடித்த வேலையாக இருந்தது; ஒரு குட்டிப் பையன் இப்படி பத்திரிகைகளை கொடுப்பதைப் பார்த்த அநேகர் யுத்த காலத்தில்கூட அந்தப் பத்திரிகைகளை பெற்றுக் கொண்டனர்.

ஆம், எனக்கு சிறந்த ஆன்மீக அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது. ஆனாலும், “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது” என்ற இயேசுவின் எச்சரிக்கைக்கு நான் செவி கொடுக்காமல் போய்விட்டேன். (மத்தேயு 6:24) நான் முழுநேர ஊழியத்தை அனுபவிக்காமல் போய்விட்டேனே என்று ஆதங்கமாக உள்ளது. நான் மூன்று வயதாக இருந்த சமயத்திலிருந்தே இன்னொரு “எஜமான்” என் மீது செல்வாக்கு செலுத்தி, முழுநேர ஊழியம் என்ற பாதையிலிருந்து என்னை திசைதிருப்பி விட்டான். என்ன நடந்தது?

விமானம் ஓட்டுவது என் தீரா ஆசையானது

1941-⁠ம் ஆண்டு, பைப்பர் கப் என்ற விமானம், பண்ணையிலிருந்த களஞ்சியத்திற்கு பக்கத்தில் வந்து இறங்கியது. எங்கள் ஆடுகளை அடித்துத் தின்ற ஓநாய்களை வேட்டையாடுவதற்காக அந்த விமானம் பயன்படுத்தப்பட்டது. அதைப் பார்த்ததுமே, நான் ஒரு பைலட் ஆக வேண்டுமென்று அந்த மூன்று வயதிலேயே தீர்மானித்துவிட்டேன். நான் பெரியவனானதும், 17 வயதில் வீட்டை விட்டுவிட்டு நியு மெக்சிகோவுக்குப் போனேன். அங்கே ஹாப்ஸ் என்ற இடத்திலிருந்த ஒரு விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடங்களை பெருக்கி சுத்தம் செய்யும் வேலை எனக்கு கிடைத்தது; விமானங்களுக்குள்ளேயும் வேலை செய்து சம்பளத்திற்கு பதிலாக விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றேன். என் வாழ்க்கையில் கிறிஸ்தவ ஊழியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துபோனது.

18 வயதில் திருமணம் செய்து கொண்டேன்; காலப்போக்கில் எங்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர். பிழைப்புக்காக என்ன செய்தேன்? பூச்சிமருந்துகளை தூவும் விமானங்களையும், தனியார் விமானங்களையும், மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட விமானங்களையும் ஓட்டுவதன் மூலமும், விமானம் ஓட்டுவதற்கான பயிற்சிகளைக் கொடுப்பதன் மூலமும் குடும்பத்தை ‘ஓட்டினேன்.’ இப்படியே ஆறு வருடங்கள் கழிந்தன; அதற்கு பிறகு, டெக்ஸஸிலிருந்த டல்லாஸ் என்ற இடத்தில், டெக்ஸஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸில் பைலட்டாக சேர்ந்தேன். அந்த சமயத்தில் என் வாழ்க்கையில் கொஞ்சம் ‘நிமிர்ந்து நிற்க’ முடிந்தது. டென்டன் சபையில் மூப்பராகவும்கூட சேவை செய்தேன். நிறைய பைபிள் படிப்புகளை நடத்தினேன்; ஒரு விமான கேப்டன், அவர் மனைவி மற்றும் அவர்கள் குடும்பத்தாருடன் பைபிள் படிப்பு நடத்தினேன்; அவர்கள் எல்லாரும் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர்.

சுமார் 1970-லிருந்து 1973 வரை, மூன்று ஆண்டுகளுக்கு நான் ஜெட் விமானங்களை ஓட்டினேன்; ஆனால், டிஸி-3 என்ற பயணிகள் விமானம் உபயோகிப்பது நிறுத்தப்பட்டதுமே எனக்கு விமானம் ஓட்டும் ஆசை வெகுவாக குறைய ஆரம்பித்தது. உண்மையைச் சொன்னால், என் மனம் பூராவும் நியு மெக்சிகோவில்தான் இருந்தது. ஆனால், நான் விமானம் ஓட்டுவதை நிறுத்திவிட்டால், வயிற்றுப்பாட்டுக்கு என்ன செய்வது?

கலை என் தீரா ஆசையானது

1961-லிருந்தே என்னுடைய ஓய்வு நேரத்தில் மேற்கு அமெரிக்க படங்களை நான் ஓவியமாக தீட்டினேன்; அந்தப் படங்கள் நல்ல விலைக்கு போயின. அதனால் நான் விமானம் ஓட்டும் வேலையை விட்டுவிட்டு, கண்கவர் நாடு என அழைக்கப்பட்ட நியு மெக்சிகோவுக்கு திரும்பப் போனேன். அங்கேயும் நான் சமநிலையோடு இருக்கவில்லை. கலையிலே அவ்வளவு ஆர்வம் இருந்ததால் அதிலேயே மூழ்கிப்போய் விட்டேன். ஓவியம் தீட்டுதல், சிற்ப வேலை, பகுதிநேர விமானியாக இருப்பது என இவையெல்லாமே என் நேரத்தை விழுங்கின. ஒரு நாளில் 12-லிருந்து 18 மணிநேரம் வரையாக நான் வேலை செய்து கொண்டிருந்தேன். இதனால் என் குடும்பத்திற்காகவும் என் கடவுளுக்காகவும் துளிகூட நேரம் செலவிட முடியாமல் போனது. அடுத்ததாக என்ன நடந்தது?

என் திருமணம் முறிந்து, விவாகரத்தில் முடிவடைந்தது. பிறகு, வடக்கே இருந்த மொன்டானாவுக்கு போனேன்; குடியில் ‘குடிகொள்ள’ ஆரம்பித்தேன். கிறிஸ்தவத்திற்கு பொருந்தாத என் வாழ்க்கை முறை, இயேசு உவமையில் சொன்ன கெட்ட குமாரன் சென்ற அதே முட்டாள்தனமான பாதையிலே என்னைக் கொண்டு போய் விட்டது. (லூக்கா 15:11-32) பிற்பாடுதான் புரிந்தது எனக்கு ஒரு உண்மையான நண்பன்கூட இல்லை என்று. கஷ்டத்திலிருப்பவர்களை நான் சந்திக்கும்போது, அவர்களிடம் இப்படி சொல்வேன்: “யெகோவாவின் சாட்சிகளைப் போய் பாருங்கள். நிச்சயம் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.” சொன்னவுடன் இப்படி மறு கேள்வி வரும்: “அப்படியானால் நீ ஏன் ஒரு யெகோவாவின் சாட்சியாக இல்லை?” இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டு யெகோவாவின் சாட்சியாக இருக்க முடியாது என்பதை அப்போது நான் ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

கடைசியாக, 1978-⁠ல், நியு மெக்சிகோவுக்கு திரும்பினேன்; எனக்கு பரிச்சயமான யெகோவாவின் சாட்சிகள் இருந்த சபைக்கு போனேன். பல வருஷங்களுக்கு பிறகு முதல் தடவையாக ராஜ்ய மன்றத்திற்குள் காலடி எடுத்து வைத்தேன்; அழுகையை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. யெகோவா என்மீது எவ்வளவு இரக்கம் காண்பித்தார்! சபையிலிருந்த நண்பர்கள் ரொம்பவும் பாசமாக இருந்தார்கள்; யெகோவாவின் வழிகளுக்கு நான் திரும்பி வருவதற்கு அவர்கள் எனக்கு உதவினார்கள்.

புதிய மணத்துணை, புதிய ஆரம்பம்

பல வருடங்களாக எனக்கு அறிமுகமான கரன் என்ற அழகான யெகோவாவின் சாட்சியை 1980-⁠ல் மணந்தேன். அவளுடைய முந்தின விவாகத்தின் மூலம் ஜேஸன், ஜானதன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். யெகோவா மீது அவளுக்கிருந்த ஆழ்ந்த அன்பினால் என் வாழ்க்கையையே ஸ்திரப்படுத்தினாள். பென், ஃபிலிப் என்ற இரண்டு அருமையான மகன்கள் எங்களுக்கு பிறந்தனர். ஆனால், பட்டு மெத்தையில் படுக்கும் சொகுசான வாழ்க்கை எங்களுக்கு காத்திருக்கவில்லை, துயரம்தான் காத்திருந்தது.

நான் கலை பயில ஆரம்பித்தேன்; மனித மற்றும் மிருகங்களின்​—⁠முக்கியமாக குதிரைகளின்​—⁠உடற்கூற்றியலைப் பற்றி கற்றுக்கொள்வதில் பல மணிநேரம் செலவழித்தேன். அதோடு, உறுப்புகளின் அமைப்பை பற்றியும், பரிமாணத்தைப் பற்றியும், பரப்புத் தோற்றத்தைப் பற்றியும் கற்றேன். பிறகு, களிமண்ணில் சிற்பங்களை வடிக்க ஆரம்பித்தேன்; விசேஷமாக, பூர்வ மேற்கத்திய உருவங்களை​—⁠குதிரைகள், குதிரைமீது சவாரி செய்யும் இந்தியர்கள், கௌபாய்கள், குதிரைமீது சவாரி செய்யும் பழங்காலத்து வைத்தியர்கள், ஒற்றைக் குதிரை வண்டிகள் ஆகிய அனைத்தையும்⁠—⁠சிற்பங்களாக வடித்தேன். வெற்றி கிடைக்க ஆரம்பித்தது. அதனால், கலைக்கூடம் ஒன்றை திறக்க முடிவு செய்தோம். அதற்கு, மலைத்தொடர் கலைக்கூடம் என பெயர் வைக்கலாம் என்று கரன் கூறினாள்.

1987-⁠ல், அரிசோனா மாகாணத்தை சேர்ந்த சிடோனா என்ற இடத்தில் ஒரு கலைக்கூடத்தை வாங்கினோம்; அதற்கு அந்தப் பெயரையே வைத்தோம். கரன் அந்தக் கலைக்கூடத்திலிருந்து வேலைகளை கவனித்துக் கொண்டாள், நான் வீட்டிலிருந்த ஸ்டுடியோவில் வேலை செய்து கொண்டு, மகன்களையும் பார்த்துக் கொண்டேன். ஆனால், மகன்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனது, விற்பனையும் படுத்துவிட்டது. ஆகவே, நானும் கரனும் இடம் மாற முடிவு செய்தோம்; வீட்டில் கரன் பிள்ளைகளை கவனிக்க வேண்டுமென தீர்மானித்தோம். களிமண்ணை கடைக்கே எடுத்து சென்றேன்; அங்கே வாடிக்கையாளர்களின் கண்ணெதிரிலேயே சிற்பத்தை வடிக்க ஆரம்பித்தேன். அது என் பிசினஸை அமோகமாக்கியது!

நான் செய்துவந்த வெண்கல சிற்பங்களைப் பற்றி நிறைய கேள்விகளை மக்கள் கேட்க ஆரம்பித்தார்கள். என்னுடைய வேலையைப் பற்றி அவர்களுக்கு விளக்கினேன்; என்னுடைய சிற்பங்களுக்கு அடிப்படையாக நான் உபயோகிக்கும் கலைப் பொருட்களைப் பற்றி சொல்கையில் பூர்வ மேற்கத்திய பெயர்களையும், இடங்களையும், நிகழ்ச்சிகளையும் பற்றிய வரலாற்று பாடத்தையே எடுக்க ஆரம்பித்தேன்; எக்கச்சக்கமான புத்தகங்களைப் படித்ததால் அவற்றைப் பற்றி எனக்கு தெரிந்திருந்தது. நான் உருவாக்கிவந்த மாடல்கள்மீது ஜனங்கள் உண்மையிலேயே ஆர்வம் காட்டினார்கள்; சிலர் அது செய்யப்படுவதை பார்க்கும்போதே அதற்கான முன்பணத்தை கொடுக்க விரும்பினார்கள். வெண்கலத்தில் அது வார்க்கப்பட்ட பிறகு அதற்கான மீதி பணத்தை கொடுக்க நினைத்தார்கள். இப்படித்தான் “வார்க்கும் முன்னே விற்பனை” (precast sale) என்ற ஆங்கில சொல் வழக்கு உருவானது. விற்பனை குப்பென்று சூடுபிடிக்கத் தொடங்கியது. என் வியாபாரம் கனஜோராக நடந்ததால் மூன்று கலைக்கூடங்களையும் ஒரு பெரிய பட்டறையையும் திறந்தோம்; 32 ஆட்களை வேலைக்கு அமர்த்தினோம். ஆனால், இவையெல்லாம் என் சக்தி முழுவதையும் உறிஞ்ச ஆரம்பித்தன! இத்தகைய இயந்திரகதியான வாழ்க்கைச் சுழலில் இருந்து எப்படித்தான் தப்புவது என்று தெரியாமல் நானும் கரனும் விழித்தோம். இதைப் பற்றி நாங்கள் ஜெபித்தோம். அந்த சமயத்தில் நான் சபையில் மூப்பராக இருந்தேன்; யெகோவாவுக்கு என்னால் இன்னும் நிறைய செய்ய முடியும் என்பதை அறிந்திருந்தேன்.

முன்பு போல ஒரு எஜமானுக்கே ஊழியம் செய்தல்

1996-⁠ல், எங்கள் சபைக்கு விஜயம் செய்த வட்டார கண்காணி, எங்களை அவரோடு மதிய உணவு சாப்பிட அழைத்தார். சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன்னரே ஒரு பெரிய குண்டை போட்டார்​—⁠சின்லீ என்ற ஊரில் ஒரு புதிய சபையை ஏற்படுத்த உதவுவதற்கு நவஹோ இந்தியர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு எங்களால் போக முடியுமா என சிந்தித்துப் பார்க்கும்படி கேட்டார். எப்பேர்ப்பட்ட சவால்! அந்த இடத்திற்கு நாங்கள் பல முறை போயிருக்கிறோம், தூரமாக இருந்த அந்தப் பிராந்தியத்தின் சில இடங்களில் ஊழியம்கூட செய்திருக்கிறோம்; இது எங்களுக்கு புதியதொரு லட்சியத்தை கொடுத்தது. பொருளாசை என்ற சுழல் இயந்திரத்திலிருந்து விடுபடுவதற்கும், யெகோவாவுக்கும் அவருடைய மக்களுக்கும் அதிக நேரம் அர்ப்பணிப்பதற்கும் இது எங்களுக்கு கிடைத்த பொன்னான ஒரு வாய்ப்பு. மறுபடியுமாக ஒரே எஜமானை சேவிக்கும் வழியில் போக ஆரம்பித்தோம்!

கரஸெட்டஸ் என்ற இன்னொரு மூப்பரும் அவர் குடும்பத்தாரும், இந்தத் துணிகர முயற்சியில் எங்களோடு சேர்ந்துகொள்ள அழைக்கப்பட்டனர்; அவர்கள் எங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இரு குடும்பத்தாரும், சௌகரியமாக இருந்த எங்கள் வீடுகளை விற்றுவிட்டு, நவஹோ இந்தியர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்க வசதியாக இருந்த நடமாடும் வீடுகளை வாங்கினோம். என் கலைக்கூடங்களை விற்றேன்; கடைசியாக, என் பட்டறையையும் விற்றேன். எங்கள் வாழ்க்கையை எளிமையாக்கி விட்டதால் கிறிஸ்தவ ஊழியத்தில் முழுமூச்சாக ஈடுபடுவதற்கு போதிய நேரம் கிடைத்தது.

1996-⁠ம் ஆண்டு அக்டோபர் மாதம், எங்கள் புதிய சின்லீ சபையில் முதன்முதலாக கூட்டம் நடந்தது. அது முதற்கொண்டு, நவஹோ மக்களிடையே பிரசங்க வேலை அதிகளவு நடைபெற்று வருகிறது; நவஹோ மொழி பேசும் சிறந்த நவஹோ பயனியர்கள் எங்கள் சபையில் இருக்கிறார்கள். இந்தக் கஷ்டமான மொழியை மெதுமெதுவாக கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறோம்; நாங்கள் நவஹோக்களாக இல்லாதபோதிலும் ஜனங்கள் எங்களை ஏற்றுக்கொள்வதற்காக அந்த பாஷையை கற்று வருகிறோம். அமெரிக்க இந்திய அதிகாரிகளின் அனுமதியுடன் ஒரு இடத்தை நாங்கள் வாங்கினோம்; அங்கே சின்லீயில் ஒரு ராஜ்ய மன்றத்தை கட்டினோம்; இந்த வருடம் ஜூன் மாதம் அது பிரதிஷ்டை செய்யப்பட்டது.

திடீர் துயரம்!

டிசம்பர் 1996-⁠ல், மகன்களை அழைத்துக்கொண்டு நியு மெக்சிகோவிலுள்ள ரூயிடோஸோ என்ற கிராமத்திற்கு கரன் சுற்றுலா போனாள். நான் சின்லீயிலேயே இருக்க வேண்டியிருந்தது. சுற்றுலா போன இடத்தில் எங்கள் 14 வயது மகன், பென், பனிச்சறுக்கு விளையாட்டின் போது, பெரிய பாறை ஒன்றின்மீது மோதி உயிரிழந்தான். எங்களுக்கு இது எப்படிப்பட்ட அதிர்ச்சியை தந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! எங்கள் எல்லாருக்கும் இது பயங்கரமான சோதனையாக இருந்தது. பைபிள் கொடுக்கும் உயிர்த்தெழுதல் நம்பிக்கைதான் இந்தத் துயரத்தில் துவண்டு விடாதபடிக்கு எங்களை பாதுகாத்திருக்கிறது. அதோடு, கிறிஸ்தவ சகோதரர்களின் ஆதரவும் பெருமளவு எங்களுக்கு உதவியாக இருந்தது. நாங்கள் பல வருடங்கள் வாழ்ந்த சிடோனா என்ற இடத்திலுள்ள ராஜ்ய மன்றத்திலே சவ அடக்க பேச்சு கொடுக்கப்பட்டது; அப்போது, அக்கம்பக்கத்து ஜனங்கள் முன்னொருபோதும் பார்த்திராதளவுக்கு அத்தனை நவஹோ மக்கள் அங்கு வந்திருந்தனர். நவஹோக்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்த சகோதர சகோதரிகள், எங்களுக்கு ஆதரவளிப்பதற்காக தெற்கு நோக்கி 300 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்து வந்திருந்தார்கள்.

பென்னுடைய தம்பி, ஃபிலிப் ஆவிக்குரிய காரியங்களில் முன்னேறுவதைப் பார்ப்பது எங்களுக்கு ஒரு பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறது. அவன் அருமையான ஆவிக்குரிய இலக்குகளை வைத்திருக்கிறான்; எங்கள் மனதையும் சந்தோஷப்படுத்துகிறான். பல வேதப்படிப்புகளை நடத்துகிறான்; ஒரு டீச்சரோடுகூட வேதப்படிப்பை நடத்தினான். யெகோவா வாக்குறுதி அளித்திருக்கும் புதிய உலகில் மறுபடியும் பென்னை பார்ப்பதற்கு நாங்கள் எல்லாரும் ஏங்குகிறோம்.​—யோபு 14:14, 15; யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 21:1-4.

கடவுளுடைய ஆசீர்வாதத்தினால் எங்கள் குடும்பத்தில் அன்பும் ஆதரவும் தவழ்கிறது. என் வளர்ப்பு மகனான ஜானதன் தன் மனைவி கேனாவோடு யெகோவாவை சேவிப்பது போலவே என் முதல் திருமணத்தில் பிறந்த என் கடைசி மகன், க்ரிஸ் தன் மனைவி லாரீயோடு யெகோவாவை சேவிக்கிறான். எங்கள் பேரக்குழந்தைகள், உட்ரோவும் ஜோனாவும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் மாணாக்கர் பேச்சுகளை கொடுக்கிறார்கள். 1987-⁠ல் என் அப்பா காலமாகிவிட்டார், ஆனால் என் அம்மா 84 வயதிலும் யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாக இருக்கிறார்; அவரைப் போலவே என் தம்பி ஜானும் அவன் மனைவி செரீயும் இன்னும் யெகோவாவின் சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இயேசுவின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையென்று என் அனுபவத்திலிருந்து கற்றிருக்கிறேன்: “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது . . . தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது.” இப்போதும்கூட கலை என்பது நேரத்தை உறிஞ்சிக் குடிக்கும் ஒரு எஜமானனாகி விடலாம். அதனால்தான் எனக்கிருக்கும் கலையார்வம் என்னை மீண்டும் ஆட்கொண்டு விடாதபடிக்கு சமநிலையோடும், எச்சரிக்கையோடும் இருப்பதன் முக்கியத்துவத்தை நான் கற்றிருக்கிறேன். மிக முக்கியமாக, அப்போஸ்தலன் பவுலின் அறிவுரைக்கு செவிகொடுப்பதே சாலச்சிறந்தது: “எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும் கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.”​—1 கொரிந்தியர் 15:58.

(g03 7/08)

[அடிக்குறிப்பு]

a சகோதரர் ஜே. எஃப். ரதர்ஃபோர்ட், 1942-⁠ல் சாகும் வரைக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பை தலைமைதாங்கி நடத்தினார்.

[பக்கம் 1415-ன் படம்]

1996-⁠ல், சின்லீயிலிருந்த என் விமானம்

[பக்கம் 15-ன் படம்]

“வெட்டியாய் பொழுதைக் கழிக்க நேரமில்லை” என பெயரிடப்பட்ட வெண்கல சிற்பம்

[பக்கம் 17-ன் படம்]

இப்போது ராஜ்ய மன்றம் கட்டப்பட்டிருக்கும் இடத்தில் பைபிள் படிப்புக்காக கூடிவந்திருத்தல்

[பக்கம் 17-ன் படம்]

என் மனைவி கரனுடன்

[பக்கம் 17-ன் படம்]

நவஹோ வீடு ஒன்றில் பிரசங்கித்தல்