“உங்க குடையை எடுக்க மறந்துடாதீங்க!”
“உங்க குடையை எடுக்க மறந்துடாதீங்க!”
பிரிட்டனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
பிரிட்டனில், சாதாரண நாளில்கூட அநேகர் குடையைப் பிடித்துக்கொண்டு போவதை பார்க்கலாம். ஏனென்றால், எந்த நேரத்தில் மழை வரும் என்று சொல்லவே முடியாது. வீட்டை விட்டு வெளியே வரும்போது, “உங்க குடையை எடுக்க மறந்துடாதீங்க” என ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வோம்; ஆனால், பஸ்ஸிலோ, ட்ரெயினிலோ ஏதாவதொரு கடையிலோ அதை ஞாபகமறதியாக ஒருவேளை வைத்துவிடக்கூடும். ஆம், குடைகளை நாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருக்கலாம்; அது தொலைந்து விட்டால்தான் என்ன, இன்னொன்றை நினைத்த நேரத்தில் போய் வாங்கிக் கொள்ளலாமே என்று நினைக்கலாம். ஆனால், முற்காலத்தில் குடைகள் இப்படி அலட்சியமாக கருதப்படவில்லை.
பிரசித்தி பெற்ற சரித்திரம்
ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட குடைகளுக்கும் மழைக்கும் எந்த சம்பந்தமும் இருக்கவில்லை. பதவிக்கும் மதிப்புக்குமுரிய சின்னங்களாகவே அவை திகழ்ந்தன; முக்கிய நபர்கள் மாத்திரமே அவற்றை பயன்படுத்தினர். அரசர்களை வெயிலில் இருந்து பாதுகாப்பதற்காக பணிவிடைக்காரர்கள் அவர்களுக்கு குடைகளைப் பிடித்து நிற்பது போன்ற காட்சிகளை அசீரியா, எகிப்து, பெர்சியா, இந்தியா ஆகிய நாடுகளின் பூர்வ காலத்து சிற்பங்களும் ஓவியங்களும் காண்பிக்கின்றன. அசீரியாவில், ராஜாவைத் தவிர வேறு யாருமே குடையை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.
இதன் சரித்திர பதிவு முழுவதுமாக பார்க்கும்போது, முக்கியமாக ஆசியாவில், குடைகள் அதிகாரத்தையே பிரதிநிதித்துவம் செய்து வந்திருப்பது தெரிய வருகிறது. ஒரு அரசன் எத்தனை குடைகளை வைத்திருந்தானோ அந்தளவுக்கு அவனுடைய அந்தஸ்து உயர்ந்தது; பர்மா நாட்டு ராஜா, இருபத்து
நான்கு குடைகளுடைய சீமான் என அழைக்கப்பட்டதிலிருந்து இது தெரிகிறது. சில சமயங்களில், அந்தக் குடைகளில் எத்தனை அடுக்குகள் இருந்தனவென்பது முக்கியமானதாக கருதப்பட்டது. சீன பேரரசர் வைத்திருந்த குடையில் நான்கு அடுக்குகள் இருந்தன; சியாமின் ராஜா ஏழு அல்லது ஒன்பது அடுக்குகளை உடைய குடையை வைத்திருந்தார். இன்றும்கூட, சில கிழக்கத்திய நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் குடைகள் அதிகாரத்தின் சின்னமாகவே திகழ்கின்றன.மத சார்பான குடைகள்
ஆரம்ப காலத்திலிருந்தே குடைகள் மதத்தோடு பிணைக்கப்படலாயின. நட் என்ற தேவதை தன் உடம்பை ஒரு குடையைப் போல விரித்து இந்த முழு பூமியையும் பாதுகாத்ததாக பூர்வ எகிப்தியர்கள் நினைத்தார்கள். ஆகவே, அவளுடைய பாதுகாப்பை பெறுவதற்காக மக்கள் தங்கள் சொந்த நடமாடும் “கூரைகளுக்கு” அடியில் நடந்து போனார்கள். விரித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு குடை வளைந்த வான்வெளியை பிரதிநிதித்துவம் செய்ததாக இந்தியர்களும் சீனர்களும் நம்பினார்கள். புத்த மதத்தினரும் அதை புத்தரின் சின்னமாக பயன்படுத்தினார்கள், அதோடு, அவர்களுடைய நினைவு மண்டபங்களின் உச்சியில் பெரும்பாலும் ஒரு குடை வைக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம். இந்து மதத்திலும் குடைகள் இடம் பெறுகின்றன.
பொ.ச.மு. 500-க்குள் குடைகள் கிரீஸ் நாட்டிலும் தோன்ற ஆரம்பித்தன; அங்கே மத விழாக்களில் ஆண், பெண் தெய்வங்களின் சிலைகளுக்கு மேல் குடைகள் வைக்கப்பட்டு தூக்கி செல்லப்பட்டன. மேலும், ஆதன்ஸ் நகரத்து பெண்களும் தங்களுக்கு குடைகளை பிடித்து செல்ல வேலைக்காரர்களை வைத்திருந்தார்கள்; ஆண்களோ அப்படிப்பட்ட எதையும் பயன்படுத்தவில்லை. பிற்பாடு, குடை பிடிக்கும் இந்த வழக்கம் கிரீஸிலிருந்து ரோமுக்கு பரவியது.
ரோமன் கத்தோலிக்க சர்ச், குடையை அதன் சடங்காச்சார சின்னங்களில் ஒன்றாக்கியது. சிவப்பு மற்றும் மஞ்சள் வரிகளை உடைய பட்டுக் குடையுடன் போப் காட்சியளிக்கத் தொடங்கினார்; பிஷப்புகளும் கார்டினல்களும் ஊதா அல்லது பச்சை நிறமுள்ள குடையுடன் காட்சியளித்தனர். இன்று வரையாக பேஸிலிக்காக்களில் போப்புக்கு ஒரு ஆசனம்—ஆம்பிரேலோனேவுடன்கூடிய, அதாவது குடையுடன்கூடிய ஒரு ஆசனம்—இருக்கிறது; அந்தக் குடையின் நிறம், மேற்கூறியவாறு சிவப்பும் மஞ்சளும் கலந்தது. ஒரு போப் இறந்து இன்னொரு போப் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான இடைப்பட்ட காலத்தில், சர்ச்சின் தலைவராக செயல்படும் கார்டினலும்கூட ஒரு ஆம்பிரேலோனேவை தன்னுடைய தனிப்பட்ட சின்னமாக வைத்திருப்பார்.
வெயிலில் இருந்தும் மழையிலிருந்தும் பாதுகாப்பு
மழையில் நனையாமல் இருப்பதற்காக காகித குடைகளின் மீது எண்ணெயையும் மெழுகையும் பூச ஆரம்பித்தது சீனர்களாக இருக்கலாம் அல்லது ஒருவேளை பூர்வ ரோமிலிருந்த பெண்களாக இருக்கலாம். என்றாலும், வெயிலிலோ மழையிலோ பாதுகாப்பு கொடுக்க பயன்படுத்தப்பட்ட இந்தக் குடை காலப்போக்கில் ஐரோப்பாவிலிருந்து மறைந்தே போனது. பிற்பாடு, 16-ம் நூற்றாண்டில் இத்தாலியர்களும், பிறகு பிரெஞ்சுக்காரர்களும் அதை மறுபடியும் பயன்படுத்த தொடங்கினார்கள்.
18-ஆம் நூற்றாண்டுக்குள்ளாக, பிரிட்டனில் இருந்த பெண்கள் குடைகளுடன் காட்சியளிக்க ஆரம்பித்தார்கள்; ஆண்களோ அதை பெண்களின் அலங்காரப் பொருளாகவே கருதியதால் அதை தொடக்கூட மறுத்தனர். இதற்கு விதிவிலக்கு காஃபி ஹவுஸ் ஓனர்கள்; தங்கள் கடையிலிருந்து குதிரை வண்டிக்கு செல்லும் வாடிக்கையாளர்களை கடும் சீதோஷ்ண நிலையிலிருந்து பாதுகாக்க குடை ஒன்றை தயாராக வைத்திருப்பது எவ்வளவு பிரயோஜனமானதென்று அவர்கள் அறிந்திருந்தார்கள். கன மழை பெய்கையில் சவ அடக்க பேச்சுகளை சர்ச்சின் கல்லறை வெளியில் நின்று கொண்டு கொடுக்கும்போது குடை எவ்வளவு உபயோகமானது என்று பாதிரிமார்களும் கண்டார்கள்.
இங்கிலாந்தில், குடையின் சரித்திரத்தையே மாற்றி எழுதியவர் ஜோனஸ் ஹான்வே என்பவர்; இவர் நாடு நாடாக பயணித்தவர், மனித மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டவர். லண்டனில், பொது இடங்களில் தைரியமாக குடையை பிடித்து சென்ற முதல் ஆண் இவர்தான் என சொல்லப்படுகிறது. அவர் கடல்கடந்து பயணித்தபோது, வெளிநாடுகளில் ஆண்கள் குடைகளைப் பயன்படுத்துவதை கவனித்ததால் இவரும் குடையை பயன்படுத்த ஆரம்பித்தார்; கோச் டிரைவர்கள் வேண்டுமென்றே வண்டியை வேகமாக ஓட்டி சேற்று நீரை அவர்மீது வாரி இறைத்து கிண்டல் செய்தபோதிலும் தொடர்ந்து குடையை பயன்படுத்தி வந்தார். அடுத்த 30 வருடங்களுக்கு, ஹான்வேயை பொது இடங்களில் பார்த்தவர்கள் அவரை குடையும் கையுமாகத்தான் பார்த்தார்கள். 1786-ல் அவர் இறப்பதற்குள்ளாகவே, ஆண்கள் பெண்கள் என எல்லாருமே சர்வசகஜமாக குடைகளை உபயோகிக்க ஆரம்பித்திருந்தனர்.
அந்தக் காலத்தில் மழைக்கால குடைகளைப் பயன்படுத்துவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அவை பெரிதாகவும், கனமாகவும், பார்ப்பதற்கு கோமாளித்தனமாகவும் இருந்தன. எண்ணெய் பூசப்பட்ட
அவற்றின் பட்டு அல்லது கேன்வாஸ் துணிகளும், பிரம்பு அல்லது சுறா எலும்பினால் ஆன அவற்றின் கம்பிகளும் நீண்ட கைப்பிடிகளும், ஈரமாக இருக்கும்போது அவற்றை திறப்பதை கடினமாக்கின, அது மட்டுமல்ல, அந்தக் குடைகள் ஒழுகவும் செய்தன. என்னதான் குறைபாடுகள் இருந்தாலும், அவை மேலும் மேலும் பிரபலமாகிக் கொண்டே வந்தன; காரணம்? மழைக் காலத்தில் நனையாமல் இருப்பதற்கு ஒரு வண்டியை வாடகைக்கு அமர்த்துவதைவிட ஒரு குடையை வாங்குவது மலிவாக இருந்தது. ஆகவே, குடை தயாரிப்பாளர்களின் எண்ணிக்கையும் குடை விற்கும் கடைகளின் எண்ணிக்கையும் பெருக ஆரம்பித்தன; புதிய கண்டுபிடிப்பாளர்கள் அதன் டிஸைனை மேம்படுத்துவதற்காக முயற்சிகளை எடுத்தனர். 19-ஆம் நூற்றாண்டின் மத்திபத்தில், சாமுவேல் ஃபாக்ஸ் என்பவர் பாரகன் மாடல் குடையின் காப்புரிமையை பெற்றார்; இந்த மாடல் குடைகள் லேசானவையாக இருந்தாலும் அவற்றில் பலமான ஸ்டீல் கம்பிகள் இருந்தன. முன்பு பயன்படுத்தப்பட்ட முரட்டு கேன்வாஸ் துணிகளுக்கு பதிலாக பட்டு, பருத்தி, மெழுகு பூசப்பட்ட லேசான துணிகள் ஆகியவற்றை வைத்து தயாரிக்கப்பட்டன. நவீன குடை பிறந்த கதை இதுதான்.நாகரீக அழகு சாதனம்
இந்தக் குடைகள், எழில் சிந்தும் ஃபேஷன் பொருளாக இங்கிலாந்திலிருந்த ஸ்டைலான மங்கையர் மத்தியில் மிகவும் பிரபலமாகத் தொடங்கின. ஃபேஷன் மாற மாற, அந்த மங்கையரின் சிங்காரக் குடைகளின் அளவும் பெரிதாயின, கண்ணைப் பறிக்கும் கலர் கலரான பட்டு மற்றும் ஸாட்டின் துணிகளாலும் உண்டாக்கப்பட்டன. அவர்கள் போட்டிருந்த உடைக்கு பெரும்பாலும் அந்தக் குடைகள் ‘மாட்ச்’ ஆயின; லேஸ் வைத்து தைக்கப்பட்ட ஓரங்களாலும், ஃபிரில்களாலும், ரிப்பன்களாலும், பூ முடிச்சுகளாலும் (bows) ஏன், சிறகுகளாலும்கூட அவை அழகுபடுத்தப்பட்டிருந்தன. 20-ஆம் நூற்றாண்டு பிற்பகுதியிலிருந்த கண்ணியமான எல்லா மங்கையரும் தங்கள் மிருதுவான சருமத்தை பேணிப் பாதுகாக்க விரும்பினதால் ஒருபோதும் குடையில்லாமல் வெளியே தலை காட்டினதில்லை.
1920-களில், வெயிலில் சருமத்தை கருத்துப் போக வைப்பது ஃபேஷனானது; இதன் காரணமாக குடைகளைப் பார்ப்பதே அபூர்வமானது. பிறகு, பட்டணத்து ஜென்டில்மேன்களின் சகாப்தம் ஆரம்பமானது; இந்த ஜென்டில்மேன்கள் எல்லாரும் ஒரே மாதிரியாக விறைப்பான தொப்பியையும், மடக்கப்பட்ட கருப்பு குடைகளையும் வைத்திருந்தனர்; அந்தக் குடைகளை ஸ்டைலான வாக்கிங் ஸ்டிக் போலவும் உபயோகித்தனர்.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், புதிய தொழில்நுட்பம் காரணமாக டிஸைன் டிஸைனான குடைகள் விற்பனைக்கு வந்தன; உதாரணத்திற்கு, சிறிதாக மடக்கி வைக்க வசதியான டெலஸ்கோப்பிக் மாடல் வந்தது; அதோடு, வாட்டர் ப்ரூஃப் நைலான், பாலியஸ்டர் மற்றும் பிளாஸ்டிக்கினால் உண்டாக்கப்பட்ட குடைகளும் விற்பனைக்கு வந்தன. கைகளால் அருமையாக தைக்கப்பட்ட விலை உயர்ந்த குடைகளை தயாரிக்கும் சில கடைகள் இன்று உள்ளன. ஆனால், எல்லா கலர்களிலும் எல்லா சைஸ்களிலும் எக்கச்சக்கமான குடைகளை கம்பெனிகள் மலிவான விலையில் தற்போது தயாரிக்கின்றன; பெரிய கால்ஃப் குடைகளும், டேபிள்களுக்கு பயன்படுத்தப்படும் மிகப் பெரிய பேஷியோ ஸ்டைல் குடைகளும் இருக்கின்றன, அதே சமயத்தில், ஹான்ட்பேக்கில் மடித்து வைக்க வசதியான வெறும் 15 சென்டிமீட்டர் நீள மாடல்களும் இருக்கின்றன.
ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருளாகவும் அந்தஸ்தின் சின்னமாகவும் கருதப்பட்ட குடை, இப்போது எங்கும் மலிவாக கிடைக்கிறது; ஆனால், அடிக்கடி தொலைந்து போகும் பொருட்களில் இதுவும் முதலிடம் வகிக்கிறது. உலகின் எந்தப் பாகமானாலும் சரி, வானிலையில் ஏற்படும் எந்த மாற்றத்தையும் சமாளிக்க இது மிகவும் உபயோகமான பொருளாக இருக்கிறது; சூரியக் கதிர்களின் அபாயத்தை குறித்த எச்சரிக்கைகள் அதிகமாக கொடுக்கப்பட்டு வருவதால், சில நாடுகளில், வெயிலுக்கு குடை பிடித்துப் போவது மீண்டும் ஃபேஷனுக்கு வந்திருக்கிறது. ஆகையால், இன்று நீங்கள் வீட்டை விட்டு கிளம்பும்போது, “உங்க குடையை எடுக்க மறந்துடாதீங்க!” என்று யாராவது உங்களுக்கு நினைப்பூட்டலாம். (g03 7/22)
[பக்கம் 20-ன் பெட்டி/படம்]
குடையை வாங்குவதும் அதை பராமரிப்பதும்
சௌகரியமான குடை வேண்டுமா அல்லது நீடித்து உழைக்கும் குடை வேண்டுமா என்பது உங்கள் சாய்ஸ். பாக்கெட்டில்கூட நுழையுமளவுக்கு சிறிதாக மடிக்க முடிந்த குடைகள் சீப்பாக இருக்கலாம்; அவற்றில் கம்பிகளும் குறைவாக இருக்கலாம், ஆனால் பலத்த காற்று வீசும்போது அவை தாங்கவே தாங்காது. மறுபட்சத்தில், மடிக்க முடியாத, நீண்ட கைப்பிடிகளை உடைய ‘தாத்தா’ குடைகள், ஒருவேளை விலை அதிகமாக இருக்கலாம், ஆனால் பெரும்பாலும் அவை பலத்த காற்று வீசும்போதும் கனத்த மழை பெய்யும்போதும் நன்றாக தாக்குப்பிடிக்கும், அதோடு நீடித்தும் உழைக்கும். சொல்லப்போனால், ஒரு நல்ல குடை பல வருடங்களுக்குக்கூட நன்கு உழைக்கும். எந்த வகையான குடையை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும், அதை பத்திரமாக காத்திடுங்கள்; ஈரம் முழுவதுமாக உலரும் வரை அதை விரித்தே வையுங்கள்; பின்பு மடித்து வையுங்கள்; இப்படி செய்தால்தான் அதில் பூஞ்சணமும் பிடிக்காது, துருவும் பிடிக்காது. அதனுடைய உரையில் போட்டு வைத்தால் அது சுத்தமாக இருக்கும், தூசி படியாமலும் இருக்கும்.
[பக்கம் 19-ன் படங்கள்]
அசீரிய ராஜாவுக்கு குடை பிடிக்கும் ஒரு வேலைக்காரன்
குடை பிடித்திருக்கும் பூர்வ கிரீஸை சேர்ந்த ஒரு பெண்
[படத்திற்கான நன்றி]
படங்கள்: The Complete Encyclopedia of Illustration/J. G. Heck
[பக்கம் 20-ன் படம்]
சுமார் 1900-ஐச் சேர்ந்த ஒரு குடை
[படத்திற்கான நன்றி]
Culver Pictures