Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

துண்டிக்கப்படும் சுறா மீன்கள்

உலகெங்கும், பெரியளவில் மீன் பிடி தொழிலில் இறங்கியிருப்பவர்கள் சுறாக்களுக்காக கடல் முழுக்க அலையோ அலையென்று அலைந்து திரிந்து அவற்றை பிடிக்கிறார்கள்; பிறகு, அந்த சுறாக்களின் துடுப்புக்களை (fins) மட்டும் பிய்த்து எடுத்துக்கொண்டு, அவற்றின் உடல்களை கறையிலே தூக்கி வீசிவிடுகிறார்கள். “விலைமிகுந்த [சுறா துடுப்பின்] சூப்புக்கு இருக்கும் ஏகப்பட்ட மவுசுதான் இப்படி கொடூரமாக அவற்றை பிய்த்தெடுப்பதை தூண்டிவிடுகிறது,” என ஸைன்ஸ் நியூஸ் அறிக்கையிடுகிறது. ஆகஸ்ட் 2002-⁠ல், மெக்சிகோவிலிருந்து புறப்பட்டு வந்த ஹவாய் கப்பலில் 32 டன் எடை அளவுக்கு சுறா துடுப்புகள் குவிக்கப்பட்டிருந்ததை ஐ.மா. கடற்கரை காவலர் கண்டுபிடித்து, அதைக் கைப்பற்றினர். சுறாக்களுடைய உடலின் வேறெந்த பாகமும் அந்தக் கப்பலில் காணப்படவில்லை. “குவியல் குவியலாக கிடந்த அந்த சுறா துடுப்புக்களின் கோரமான காட்சி, குறைந்தது 30,000 சுறா மீன்கள் கொல்லப்பட்டிருந்ததையும், சுமார் 5,80,000 கிலோ எடையுள்ள அவற்றின் மாமிசம் குப்பையில் வீசப்பட்டிருந்ததையும் ஊர்ஜிதப்படுத்தியது” என அந்தப் பத்திரிகை சொல்கிறது. “ஒவ்வொரு வருடமும் உலகெங்குமுள்ள மீனவர்கள் 10 கோடி சுறா மீன்களை கொன்று குவிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.” திறந்தவெளி சந்தையில், ஒரு கிலோ சுறா துடுப்பு ரூபாய் 20,000-⁠க்கும் அதிகமாக விலை போவதால் இதற்கு ஏக கிராக்கியாகவே உள்ளது. (g03 7/22)

நேரத்தை ஒழுங்கமைப்பது

“தங்களுக்கு நேரமே கிடைப்பதில்லை என அலுத்துக் கொள்பவர்கள் தங்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள்” என்று சமீபத்தில் நடந்த ஒரு ஆராய்ச்சி காட்டுவதாக தி ஆஸ்ட்ரேலியன் செய்தித்தாள் அறிக்கையிடுகிறது. நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரேலியன் நேஷனல் பல்கலைக்கழகமும் சேர்ந்து நடத்திய ஒரு ஆராய்ச்சியை அந்த செய்தித்தாள் குறிப்பிட்டு, இவ்வாறு அறிவித்தது: “நம்மில் அநேகர், அலுவலகத்திலும் வீட்டிலும் வேலை செய்வதில் தேவையில்லாமல் அதிக நேரத்தை வீணடிக்கிறோம்.” குழந்தைகள் இல்லாத ஒரு தம்பதியினர், வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக எத்தனை மணிநேரம் வேலை பார்க்க வேண்டியிருக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டனர். பிறகு, கணக்கிட்ட அந்த மணிநேரத்தையும் நிஜ வாழ்க்கையில் அப்படிப்பட்ட வேலைகளில் அவர்கள் செலவழிக்கும் மணிநேரத்தையும் ஒப்பிட்டு பார்த்தனர். குழந்தைகள் இல்லாத தம்பதியர் “இருவருமாக சேர்ந்து ஒவ்வொரு வாரமும், அலுவலகத்தில் 79 மணிநேரமும், வீட்டுவேலையில் 37 மணிநேரமும், தங்களைக் கவனித்துக் கொள்வதில் 138 மணிநேரமும் செலவிடுகிறார்கள், ஆனால் ஒவ்வொரு வாரமும் அலுவலகத்தில் வெறும் 20 மணிநேரமும் [ஆளுக்கு 10 மணிநேரம்] வீட்டுவேலையில் 18 மணிநேரமும், தங்களை கவனித்துக் கொள்வதில் [சாப்பிடுவது, தூங்குவது உட்பட] 116 மணிநேரமும் செலவிட்டாலே போதுமானதாய் இருக்கும்” என்பதாக அந்தச் செய்தித்தாள் சொல்கிறது. ஒரு தம்பதியர் தங்கள் வாழ்க்கையை எளிமையாக்க முன்வந்தால், அவர்கள் ஒவ்வொரு வாரமும் ஏறக்குறைய 100 மணிநேர ஃப்ரீ டைமை கூடுதலாக பெறுவார்கள். குழந்தைகள் இல்லாத தம்பதியினர் “மற்றவர்களைவிட தாங்களே அதிக பிஸியானவர்கள் என்பதாக சொல்லிக் கொள்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்களுக்குத்தான் மற்ற எந்த தொகுதியினரைவிட அதிக ஃப்ரீ டைம் இருக்கிறது; குழந்தைகளை உடைய தம்பதியினருக்குத்தான் ஓய்வு நேரமே கிடைப்பதில்லை” என அந்த ஆராய்ச்சி குறிப்பிடுவதாக தி ஆஸ்ட்ரேலியன் சொல்கிறது. (g03 7/22)

யானைகளை துரத்தும் தேனீக்கள்

கென்யாவில் யானைக் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது; இதனால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இங்குமங்கும் சுற்றித் திரியும் யானைகள் மரங்களையும் பயிர்களையும் நாசப்படுத்துகின்றன; அது மட்டுமா, இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சராசரியாக ஒரு நபரை மிதித்துப் போட்டு சாகடிக்கின்றன. ஆனால், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலுள்ள ஃபிரிட்ஸ் வால்ராட் என்ற உயிரியலாளர் யானைகளை துரத்துவதற்கு ஒரு வழியை கண்டுபிடித்திருக்கிறார். ஒரு தேன்கூட்டை யானைகள் கலைத்து விட்டதும், “அந்த யானைகள் ரொம்பவே பயந்து ஓட்டம் பிடிக்கின்றன. பல கிலோமீட்டர்களுக்கு தேனீக்கள் சளைக்காமல் அவற்றின் பின்னாலேயே பறந்து போய் துரத்திவிடுகின்றன” என அவர் குறிப்பிட்டார். அந்த யானைகளின் உடலிலுள்ள மென்மையான பாகங்களில், அதாவது கண்ணைச் சுற்றியும், காதுகளுக்கு பின்புறமும், தும்பிக்கையின் அடியிலும், அடிவயிற்றிலும் மாறி மாறி தேனீக்கள் கொட்டிவிடுகின்றன. ஆகவே, அடிக்கடி யானைகள் விஜயம் செய்யும் காட்டுப் பகுதியிலுள்ள சில மரங்களில் ஆப்பிரிக்க தேனீக்கள் நிறைந்த கூடுகளையும், தேனீக்கள் இல்லாத கூடுகளையும் வால்ராட் தொங்க விட்டார். எந்தெந்த மரங்களில் தேனீக்களுள்ள கூடுகள் இருந்தனவோ அந்த மரங்கள் பக்கத்தில்கூட அந்த யானைகள் போகவில்லை; வெறுங்கூடுகள் இருந்த மரங்களில் மூன்றில் ஒன்றை தவிர்த்தன என்று நியு ஸைன்டிஸ்ட் அறிவிக்கிறது. ஆனால், தேன்கூடுகளே இல்லாத 10 மரங்களில் 9 மரங்களை அவை சின்னாபின்னமாக்கின. ஒலி பெருக்கியில் கோப வெறியிலிருக்கும் தேனீக்களின் சத்தத்தை ஒலிபரப்பியபோது, அந்த சத்தத்தைக்கூட கேட்டு யானைகள் பயந்து ஓடியதை வால்ராட் கண்டுபிடித்தார். (g03 7/08)

வேலை செய்யுமிடத்தில் மன அழுத்தம்

“தற்கொலை செய்யத் தோன்றுமளவுக்கு அத்தனை மன அழுத்தம் தங்களுக்கு இருப்பதாக கனடாவில் வசிப்பவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் சொல்கிறார்கள்” என த க்ளோப் அன்ட் மெயில் அறிவிக்கிறது. இந்த மன அழுத்தத்திற்கு காரணம் என்ன? 1,002 நபர்களிடம் ஒரு சர்வே நடத்தியதில், 43 சதவீதத்தினர் தங்கள் வேலைதான் காரணம் என்று குறிப்பிட்டார்கள். “தற்போதைய அலுவலகங்களில், ஜனங்கள் உடல் ரீதியாகவும், மனோ ரீதியாகவும் பிழிந்தெடுக்கப்படுகிறார்கள்” என தொழில் அமைப்புமுறை சார்ந்த மனோதத்துவ நிபுணரும், மான்ட்ரீல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஷிமோன் டோலென் சொல்கிறார். “வேலையை நன்றாக செய்யும்படி பயங்கரமாக அழுத்தப்படுகிறார்கள், அதே நேரத்தில், நாளைக்கு வேலையில் இருப்போமா அல்லது துரத்திவிடப்படுவோமா என்ற நிச்சயமற்ற நிலையிலும் இருக்கிறார்கள்.” கனடா நாட்டிலிருப்பவர்கள் இப்படிப்பட்ட அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறார்கள்? உடற்பயிற்சி செய்வதே எல்லாரும் அறிந்த வழி என த க்ளோப் சொல்கிறது, “ஒரு புத்தகத்தை வாசிப்பது, ஓய்வுநேரத்தில் விருப்ப வேலைகள் செய்வது, விளையாடுவது, மற்றவர்களை போய் சந்திப்பது, குடும்பத்தோடு பொழுதை கழிப்பது போன்றவை மேலும் சில வழிகளாகும்.” (g03  7/08)

பெற்றோரோடு சேர்ந்து வாசிக்கும் பிள்ளை சமர்த்தாகும்

“சண்டை, திருட்டு, பொய்ப் பித்தலாட்டம் ஆகியவற்றில் ஈடுபடும் முரட்டுப் பிள்ளைகளின் மூர்க்கத்தை பேரளவில் குறைக்க ஒரு வழி, அவர்கள் தவறாமல் பெற்றோரோடு சேர்ந்து வாசிப்பதாகும்” என லண்டன் செய்தித்தாளான த டைம்ஸ் அறிவிக்கிறது. புராதன லண்டனிலிருந்த ஐந்து மற்றும் ஆறரை வயது குழந்தைகள் 100 பேருக்கும் அதிகமானோரை உட்படுத்திய ஒரு ஆய்வை, இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸைக்கியாட்ரி பத்து வாரங்களுக்கு நடத்தியது. அதில் பெற்றோர்கள் “தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து வாசிக்க உட்காருவதற்கு முன், முதலில் அவர்களுடைய மொபைல் போன்களை ஆஃப் செய்ய வேண்டும், படிக்கப்போகும் கதையின் முக்கிய குறிப்புகளை சுருக்கமாக சொல்ல வேண்டும், அதோடு அவசரமில்லாமல் பக்கங்களை திருப்பி அதிலுள்ள படங்களை பார்க்க வேண்டும்” என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. “பெற்றோர்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தி கடைப்பிடிக்கும் எளிதான திட்டங்கள் ஒரு பிள்ளையின் சுபாவத்தை மிகச் சிறிய பிராயத்திலிருந்தே வெகு சிறப்பாக மேம்படுத்தலாம் என இதன் விளைவுகள் தெளிவாக நிரூபிக்கின்றன” என அந்த செய்தித்தாள் குறிப்பிட்டது. “பிள்ளைகளுக்கு முக்கியமாக தேவைப்படுவது கவனிப்பே” என அந்த ஆராய்ச்சியின் தலைவரான டாக்டர் ஸ்டீபன் ஸ்காட் சொன்னார். “பெற்றோரோடு சேர்ந்து வாசிப்பதன் மூலம் அவர்கள் இந்த கவனிப்பை பெற முடியும்.” (g03 7/08)

இந்தியாவில் சர்க்கரை வியாதி அதிகரிப்பு

உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை வியாதியால் கஷ்டப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டிருக்கிறது. இந்த வியாதியால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை இந்தியாவில்தான் மிக அதிகமாக இருக்கிறது​—⁠3.2 கோடி பேர். இந்தத் தொகை 2005-⁠ல், 5.7 கோடியை தாண்டிவிடலாம் என டெக்கன் ஹெரல்ட் செய்தித்தாள் அறிவிக்கிறது. சர்க்கரை வியாதியைப் பற்றி இலங்கையில் நடந்த பன்னாட்டு பேரவை ஒன்றில், உணவுப் பழக்கங்களிலும், வாழ்க்கைப் பாணியிலும் ஏற்படும் மாற்றங்களே இந்த திடீர் அதிகரிப்புக்கு காரணம் என்று வல்லுனர்கள் குறிப்பிட்டார்கள்; மன அழுத்தம், மரபியல் காரணங்கள், பிறக்கும்போது எடை குறைவாக இருப்பது, பச்சைக் குழந்தைகளுக்கு அளவுக்கதிகமாக ஊட்டிவிடுவது போன்றவற்றாலும்கூட இந்நோய் அதிகரிப்பதாக குறிப்பிட்டார்கள். உலகிலேயே, சர்க்கரை வியாதிக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனாலும், இதன் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகளும், மரணமும் அதிகமாவதற்கு இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததும், ஆரம்பத்திலேயே இதைக் கண்டுபிடிக்காமல் இருப்பதும் ஓரளவுக்கு காரணமாக இருக்கலாம். இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களிலிருக்கும் பெரியோர்களில் 12 சதவீதத்தினர் சர்க்கரை வியாதியால் கஷ்டப்படுவதாக ஒரு ஆய்வு காட்டியது; அதோடு 14 சதவீதத்தினர், உடம்பிலுள்ள சர்க்கரையை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள்; இதுவே சர்க்கரை வியாதியில் கொண்டுபோய் விடுகிறதென அந்த ஆய்வு காட்டியது. (g03 7/22)

செக்ஸ் கல்வி இப்போது அதிகம் தேவை

ஜெர்மனியில் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்ட கணக்கின்படி, 1996-லிருந்து 2001 வரைக்கும், 15-17 வயதினர் மத்தியில் கருச்சிதைவு செய்து கொள்வது சுமார் 60 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், 15 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகள் மத்தியில் 90 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் டேர் ஷ்பீகெல் அறிவிக்கிறது. பிள்ளைகள் படு சீக்கிரமாக பாலியல் முதிர்ச்சியை அடைந்து விடுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ‘செக்ஸ் பற்றிய விஷயங்கள் சரியாக சொல்லித் தரப்படுவதில்லை​—⁠முக்கியமாக சீக்கிரமே சொல்லித் தரப்படுவதில்லை,’ என கோப்லின்ஸ்-லான்டவு பல்கலைக்கழகத்தை சேர்ந்த நாபெர்ட் க்லுகெ என்பவர் சொல்கிறார். பிள்ளைகள் பத்து வயதை அடைவதற்கு முன்பே செக்ஸ் பற்றிய உண்மைகளை அவர்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும், ஆனால் அநேக பெற்றோர்கள் அதை சொல்லித் தருவதற்கு வெட்கப்பட்டு அந்தப் பேச்சையே தவிர்த்து விடுகிறார்கள் என க்லுகெ சொல்கிறார். பிள்ளைகளுக்கு செக்ஸ் கல்வி புகட்டும்போது பெற்றோர்கள், உடல் சம்பந்தமான செயல்முறைகளைப் பற்றி மட்டுமே சொல்லித் தராமல், “நேசம், சுமுகமான உறவுமுறைகள்” போன்ற உணர்ச்சி சம்பந்தப்பட்ட கருத்துகளையும் அழுத்திக் காட்டும்படி பான் என்ற இடத்திலுள்ள ஃபெடரல் பேரன்ட்ஸ் கவுன்சிலின் இயக்குனர் பெற்றோர்களுக்கு அறிவுறுத்துவதாக பிர்லீனெர் மார்கென்போஸ்ட் சொல்கிறது. (g03 7/22)

நரம்புகளில் இரு தொகுதியா?

அன்பையும் மென்மையையும் உணர மனிதர்களுக்கு ஒரு விசேஷ நரம்பு மண்டலம் இருப்பதாக ஜெர்மன் விஞ்ஞான பத்திரிகையான பில்ட் டேர் விஸ்ஸென்ஷாஃப்ட் அறிவிக்கிறது. பெண்மணி ஒருவருக்கு உணர்ச்சி செல்கள் மரத்துப் போயிருந்தபோதிலும், மென்மையான ஒரு பெயின்ட் பிரஷ்ஷினால் அவர் மேனி வருடப்பட்டபோது அவர் இதமாக உணர்ந்ததை ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். தோலில் இருக்கும் வேறொரு நரம்பு மண்டலமே​—⁠உணர்வுகளை மெதுவாக கடத்தும் டாக்டைல் சி என்றழைக்கப்படும் நரம்புகளை உடைய மண்டலமே​—⁠இந்த இதமான உணர்ச்சியை எழுப்பி விட்டதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். பூப்போல மிருதுவாக தொடும்போது மட்டுமே இந்த நரம்பு மண்டலம் வேலை செய்கிறது; அந்த சமயத்தில் மூளையில் எந்தப் பகுதிகள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றனவோ அப்பகுதிகளை அது உசுப்பி விடுகிறது. மனிதர்களுக்கு இரண்டு நரம்புத் தொகுதிகள் இருக்கலாம் என்பதற்கான காரணத்தைப் பற்றி குறிப்பு சொல்கையில், இன்டர்னேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் என்ற செய்தித்தாள் சொல்கிறது: “உணர்வுகளை மெதுவாக கடத்தும் நரம்புகள், பிறந்த சில மணிநேரங்களிலேயே, ஒருவேளை கருப்பையில் இருக்கும் போதே, வேலை செய்ய ஆரம்பிக்கின்றன; விரைவாக உணர்வுகளை கடத்தும் நரம்புகளோ பிறந்த பிறகுதான் மெதுமெதுவாக வேலை செய்ய ஆரம்பிக்கின்றன. கைக்குழந்தைகள், தொடுதல் உணர்ச்சியை பெறுவதற்கு முன்பே, பெற்றோரின் தொடுதலில் வெளிப்படும் அன்பை உணரக்கூடும்.” (g03 7/22)