Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏன் எங்கும் ஆபாசம்?

ஏன் எங்கும் ஆபாசம்?

ஏன் எங்கும் ஆபாசம்?

பாலுணர்வுக்குத் தீனிபோடும் படங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிடைத்து வருகின்றன. ஆனால் அந்தக் காலத்தில் ஆபாசமான படங்களைத் தயாரிப்பது கடினமாக இருந்தது, அதனால் மேல்மட்ட வர்க்கத்தினருக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் மட்டுமே அது கிடைத்து வந்தது. அச்சுக் கலையும் புகைப்படக் கலையும் இயங்கு திரைப்படங்களும் கண்டுபிடிக்கப்பட்டதும் எல்லாம் அடியோடு மாறிவிட்டது. ஆபாசப் படங்கள் கீழ்மட்ட வர்க்கத்தினர் கண்களுக்கும் விருந்தளிக்க ஆரம்பித்துவிட்டன.

இப்பொழுது, வீடியோ கேஸட் ரெக்கார்டர் இந்தப் போக்கை இன்னும் எங்கேயோ கொண்டுபோய் விட்டது. வீடியோ கேஸட் என்பது சினிமா படச்சுருள்களையும் பழைய புகைப்படங்களையும் போல் அல்ல, இதை எளிதில் பாதுகாத்து வைக்க முடியும், காப்பி எடுக்க முடியும், விநியோகிக்கவும் முடியும். வீட்டில் இரகசியமாக பார்ப்பதற்கும் இது வழிவகுத்திருக்கிறது. சமீப காலத்தில், கேபிள் டிவியும் இன்டர்நெட்டும் அமோகமாய் வந்துவிட்டதால் ஆபாசப் படங்களுக்குப் பஞ்சமே இல்லாமல் போய்விட்டது. வீடியோ கடையில், ‘ஏ’ படம் இருக்கும் இடத்தில் நிற்பதை பக்கத்து வீட்டுக்காரர் யாராவது பார்த்து விடுவார்களோ என முன்பெல்லாம் ஒருவர் பயப்படலாம், ஆனால் இப்பொழுது “கேபிள் டிவியில் ஒரு பட்டனை அழுத்தினால் போதும், அல்லது நேரடியாக டிவியிலேயே ஆபாசப் படங்களைப் பார்த்துவிடலாம்” என கூறுகிறார் மீடியா ஆய்வாளர் டெனிஸ் மெக்கால்பன். இப்படி சுலபமாக பார்ப்பதற்கு வசதியாக இருப்பதால், “ஏகப்பட்ட பேர் இதை ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாக கருதுகிறார்கள்” என மெக்கால்பன் கூறுகிறார்.

ஆபாசம் சகஜமான ஒன்றாகிறது

இப்பொழுது ஆபாசம் பரவலாக ஊடுருவி விட்டதால் அநேகர் இதைப் பற்றி ஒரே குழப்பமாக இருக்கிறார்கள். “ஆப்பரா, பாலே, தியேட்டர், மியூஸிக், ஃபைன் ஆர்ட் ஆகிய எல்லாவற்றின் மொத்தத்தையும்விட இது ஏற்கெனவே பரந்தளவில் பண்பாட்டின் மீது பலமான செல்வாக்கு செலுத்தி வந்திருக்கிறது” என கூறுகிறார் எழுத்தாளர் ஜர்மேன் கிரிர். பிரபலமானவர்கள் ‘விலைமாதர்களைப் போல’ உடையணிவது, பாலியல் கற்பனைகள் நிறைந்த அப்பட்டமான காட்சிகளை மியூசிக் வீடியோக்களில் காட்டுவது, “ஆபாச கலைநயம்” என்ற போக்கை விளம்பர மீடியாக்கள் ஏற்றிருப்பது ஆகியவை ஆபாசத்தைப் பற்றிய நவீன மனோபாவத்தைப் பிரதிபலிக்கின்றன. மெக்கால்பன் இவ்வாறு முடிக்கிறார்: “எதை ஊட்டி விட்டாலும் அதையெல்லாம் சமுதாயம் ஏற்றுக்கொள்கிறது. . . . இவையெல்லாம் நல்லதே என்ற எண்ணத்தைத்தான் இவை உருவாக்குகின்றன.” இதனால், “மக்கள் அதிர்ச்சி அடைவதாகவே தெரியவில்லை” என புலம்புகிறார் நூலாசிரியர் ஆன்ட்ரேயா டுவார்கன். “அவர்களுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை” என்றும் சொல்கிறார்.

ஆபாசத்திற்கு அடிப்படை காரணிகள்

நூலாசிரியர் டுவார்கன் சொன்னதையே ஓய்வுபெற்ற FBI ஏஜென்ட் ராஜர் யங் என்பவரும் எதிரொலிக்கிறார். “ஆபாசமும் அதனால் வரும் பிரச்சினைகளும் எவ்வளவு பயங்கரமான விளைவுகளை உண்டாக்கும் என்பதைப் பற்றிய முழு பரிமாணத்தையும் [அநேகர்] கவனிப்பதில்லை” என அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆபாசத்தை ஆதரிப்பவர்களுடைய அலைக்குள் சிலர் இழுப்புண்டு போகிறார்கள், ஆபாசப் படங்கள் மக்களை பாதிக்கும் என்பதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை என உரிமை பாராட்டுகிறார்கள். “ஆபாசம் என்பது வெறும் கற்பனை காட்சிதான், இந்த உண்மையை புரிந்துகொள்வது கண்டனம் தெரிவிப்பவர்களுக்குக் கடினமாக தெரிகிறது” என எழுதுகிறார் நூலாசிரியர் எஃப். எம். கிறிஸ்டென்ஸன். ஆனால் கற்பனை காட்சிக்கு எந்த சக்தியும் இல்லையென்றால், விளம்பர உலகம் எந்த அடிப்படையில் இயங்குகிறது? மக்கள் மீது எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லையென்றால், டிவி நிகழ்ச்சிகள், வீடியோக்கள், அச்சிடப்பட்ட விளம்பரங்கள் ஆகியவற்றை படைக்க ஏன் கோடிக்கணக்கான டாலர்களை கம்பெனிகள் கொட்டுகின்றன?

வெற்றிகரமான எல்லா விளம்பரத்தையும் போல, ஆபாசத்தின் முக்கிய நோக்கமே இதற்கு முன்பு இல்லாத வேட்கையை உண்டாக்குவதாகும். “ஆபாசம் லாபத்தை அடிப்படையாக கொண்டதே அன்றி வேறொன்றுமில்லை. வெறிபிடித்த இந்தச் சந்தையில், எல்லாமே​—⁠முக்கியமாக பெண்களின் உடல்களும் பாலுறவுகளும்​—⁠சுரண்டிப் பிழைப்பதற்கும் லாபம் சம்பாதிப்பதற்கும் சிறந்த வழிகளாக கருதப்படுகின்றன” என ஆராய்ச்சியாளர்கள் ஸ்டீவன் ஹில்லும் நைனா சில்வரும் எழுதுகிறார்கள். சுவையூட்டுகிற சேர்மானங்களும் இரசாயனப் பொருட்களும் கொண்ட ஊட்டச்சத்தில்லாத உணவாகிய அடிமைப்படுத்தும் ‘ஃபாஸ்ட் ஃபுட்’டுக்கு ஆபாசத்தை ஒப்பிடுகிறார் கிரிர். “வியாபார உலகில் உடனடியாக கிடைக்கும் செக்ஸ் உண்மையான செக்ஸ் அல்ல . . . உணவு விளம்பரங்கள் ‘ஃபேன்டஸி ஃபுட்’டை ஊக்குவிக்கின்றன, பாலியல் விளம்பரங்களோ ‘ஃபேன்டஸி செக்ஸை’ ஊக்குவிக்கின்றன” என அவர் கூறுகிறார்.

போதைப் பொருளுக்கு அடிமையாவதை சமாளிப்பதைவிட ஆபாசத்திற்கு அடிமையாவதை சமாளிப்பது படு கஷ்டம் என டாக்டர்கள் சிலர் கூறுகின்றனர். போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது பொதுவாக அவர்களுடைய உடலிலிருந்து அந்த அடிமைப்படுத்தும் வஸ்துவை நீக்குவதற்கு சிகிச்சை அளிக்கிறார்கள். ஆனால் ஆபாசத்திற்கு அடிமையாவது “மனதில் கற்பனை காட்சிகளை உருவாக்குகிறது, இவை ஒருவருடைய மனதில் நிரந்தரமாக வேரூன்றியிருப்பதால் மூளை இரசாயனத்துடன் இரண்டறக் கலந்துவிடுகின்றன” என பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மேரி ஆன் லேடன் விவரிக்கிறார். அதனால்தான் பல வருடங்களுக்குப் பிறகும் ஆபாசக் காட்சிகளை ஒருவர் தெள்ளத் தெளிவாக மனதிற்குக் கொண்டுவர முடிகிறது. ஆகவே அவர் இவ்வாறு முடிக்கிறார்: “மனதில் வேரூன்றிய ஆபாசக் காட்சிகளை நீக்குவதற்கு எந்த நம்பிக்கையுமில்லை, அந்த வகையில் பார்த்தால் இதுவே அடிமைப்படுத்தும் வஸ்துக்களில் முதலிடம் வகிக்கிறது என சொல்லலாம்.” இதனால் ஆபாசத்தின் கோரப் பிடியிலிருந்து விடுபடவே முடியாது என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? ஆபாசத்தைப் பார்ப்பதால் வரும் முக்கியமான தீங்கு என்ன? (g03 7/22)

[பக்கம் 5-ன் பெட்டி]

இன்டர்நெட் ஆபாசம் பற்றிய உண்மைகள்

◼ ஏறக்குறைய 75 சதவீத இன்டர்நெட் ஆபாசம் ஐக்கிய மாகாணங்களிலிருந்து வருகிறது. சுமார் 15 சதவீதம் ஐரோப்பாவிலிருந்து வருகிறது.

◼ ஒரு வாரத்திற்கு சுமார் ஏழு கோடி பேர் ஆபாச வெப் சைட்டுகளுக்கு விஜயம் செய்கிறார்கள் என மதிப்பிடப்படுகிறது. இவர்களில் கிட்டத்தட்ட இரண்டு கோடி பேர் கனடாவிலும் ஐக்கிய மாகாணங்களிலும் வசிப்பவர்கள்.

◼ சமீப ஒரு மாத காலத்தில், ஆன்-லைன் ஆபாசத்தைப் பார்த்தவர்களில் மிகவும் அதிகமானோரை கொண்ட ஐரோப்பிய நாடு ஜெர்மனி; பிரிட்டன், பிரான்சு, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் இந்த வரிசையில் அடுத்து இடம் பெறுகின்றன என்று ஓர் ஆய்வு வெளிப்படுத்தியது.

◼ ஜெர்மனியில், இன்டர்நெட் ஆபாசத்தைப் பார்ப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 70 நிமிடங்கள் ஆபாச தளங்களில் செலவழிக்கிறார்கள்.

◼ ஐரோப்பாவில் வாழும் ‘ரசிகர்களில்,’ 50 வயதுக்கு மேற்பட்ட ஆட்கள் பெரும்பாலான நேரங்களை ‘அடல்ட் வெப் சைட்’களில் செலவழிக்கின்றனர்.

◼ இன்டர்நெட் ஆபாச வாடிக்கையாளர்களில் 70 சதவீதத்தினர் பகலில் பார்ப்பவர்கள் என ஒரு தகவல் மூலம் கூறுகிறது.

◼ 1,00,000 இன்டர்நெட் சைட்டுகளில் சிறார் ஆபாசம் சம்பந்தப்பட்ட விவரங்கள் இருப்பதாக சிலர் கணக்கிட்டிருக்கின்றனர்.

◼ சுமார் 80 சதவீத வியாபார ரீதியிலான இன்டர்நெட் சிறார் ஆபாசம் ஜப்பானிலிருந்து பிறக்கிறது.

[பக்கம் 4-ன் படங்கள்]

ஆபாசம் எளிதில் கிடைக்கும் ஒன்றாகிவிட்டது