Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் எதிலும் நூறு சதம் எதிர்பார்ப்பது ஏன்?

நான் எதிலும் நூறு சதம் எதிர்பார்ப்பது ஏன்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

நான் எதிலும் நூறு சதம் எதிர்பார்ப்பது ஏன்?

“என் அப்பா டீச்சராக இருந்ததால் எல்லா பாடத்திலும் நான் A கிரேட் மார்க் வாங்கணும்னு எல்லாரும் எதிர்பார்த்தாங்க. இதனால சில சமயம் தூக்கம் கண்களை தழுவும்வரை கண்ணீரால் என் படுக்கையை நனைத்திருக்கிறேன்.”​⁠லியா. a

“என்னைப் பொறுத்தவரை, எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய துடிப்பேன். எதைச் செய்தாலும் அதில் நம்பர் 1-ஆக இருக்கணும் அல்லது மற்றவர்களைவிட முற்றிலும் வித்தியாசமான விதத்தில் அதை செய்யணும், இல்லேன்னா அதை செய்வதில் அர்த்தமே இல்லை.”​⁠காலேப்.

நீங்கள் எப்போதுமே நூறு சதம் வெற்றி பெற வேண்டுமென நினைப்பவரா? எவ்வளவு முயற்சி செய்தாலும் எப்போதும் திருப்தி காணாமல் தவிப்பவரா? குறைகளை சுட்டிக் காட்டுகையில் அவற்றை ஒப்புக்கொள்ள முடியாதவரா? நினைப்பது போல் காரியங்கள் நடக்காத சமயத்தில் உங்கள்மீதே பழியைப் போட்டுக் கொள்பவரா? முட்டாள், மட்டமானவன், அல்லது லாயக்கில்லாதவன் என உங்களை நீங்களே நொந்துகொள்கிறவரா? கச்சிதமாக ஒரு காரியத்தை செய்ய வேண்டியிருந்தால், அதை நீங்களே செய்ய வேண்டுமென நினைப்பவரா? தொட்டால் துலங்காது என்ற பயத்தில் காரியத்தைத் தள்ளிப் போடுகிறவரா அல்லது செய்யாமலே இருந்துவிடுகிறவரா?

மற்றவர்களுடன் நீங்கள் பழகும் விதம் எப்படி இருக்கிறது? உங்களை சுற்றி இருப்பவர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் தராதரம் இல்லாததால் நண்பர்களென சொல்லிக் கொள்ள உங்களுக்கு யாருமே இல்லையா? மற்றவர்களுடைய குற்றம் குறைகளைக் கண்டு நிலைகுலைந்து போகிறவரா? இந்தக் கேள்விகளில் ஏதாவதொன்றுக்கு உங்கள் பதில் ஆம் என இருந்தால் நீங்கள் பரிபூரணவாதம் என அழைக்கப்படும் மனோபாவத்துடன் போராடி வருகிறீர்கள் என்று அர்த்தம். அது உண்மையென்றால் நீங்கள் மட்டுமே இப்படிப்பட்ட போராட்டத்தில் அவதிப்படுகிறவர் அல்ல. இந்த மனோபாவம் இளைஞர்களுக்கு இடையே சகஜம், அதுவும் படுதிறமைசாலியான அல்லது வெற்றிகரமான இளைஞர்களுக்கு இடையில் ரொம்பவே சகஜம். b

பரிபூரணவாதத்தை உண்டுபண்ணுவது எது? கோட்பாட்டு அளவிலேயே ஆய்வாளர்கள் பதிலளிக்கிறார்கள். பரிபூரணவாதம்​—⁠குறையற்றவராக சிறந்து விளங்குவதில் என்ன தவறு? என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு ஆலோசனை அளிக்கிறது: “உங்களைத் தொற்றிக் கொள்ள பரிபூரணவாதம் ஒரு வியாதியல்ல; உங்கள் இரத்தத்தில் கலந்திருப்பதற்கு அது ஒரு பரம்பரைப் பண்புமல்ல; அப்படியிருக்கையில் நீங்கள் எப்படி பரிபூரணவாதி ஆனீர்கள்? பிள்ளைப் பருவத்தில் பரிபூரணவாதம் வளருவதாக சில வல்லுநர்கள் நம்புகிறார்கள். குடும்ப அழுத்தம், சுயமாக வருவித்துக்கொள்ளும் அழுத்தம், சமுதாய அழுத்தம், மீடியா அழுத்தம் ஆகியவற்றோடு நியாயமற்ற இலட்சிய மாதிரிகளும் சேர்ந்து ஒரேயடியாக உந்தித் தள்ளுகையில் சிலர் காலம் முழுவதும் கவலைப்படுகிறார்கள், குற்றவுணர்வில் துடிதுடிக்கிறார்கள், மிதமிஞ்சி மாங்கு மாங்கென உழைக்கிறார்கள்.”

அதற்கான காரணம் எதுவாக இருந்தாலும், எதிலும் நூறு சதம் கரெக்ட்டாக இருக்க வேண்டுமென்ற விருப்பம் உங்கள் வாழ்க்கையையே சீரழித்து சின்னாபின்னமாக்கிவிடலாம். ஆகவே பரிபூரணவாதம் என்றால் என்ன, அது ஏன் உங்களுக்கு தீங்கு விளைவிக்கலாம் என்பதை விளக்கமாக கவனிப்போம்.

பரிபூரணவாதம் என்றால் என்ன?

நிகரற்று விளங்க முயலுவதை அல்லது சிறப்பாக செய்த பணியில் பெருமிதம் கொள்வதைக் காட்டிலும் அதிகத்தை பரிபூரணவாதம் அர்த்தப்படுத்துகிறது. மொத்தத்தில், நீதிமொழிகள் 22:29-⁠ல் “தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிற” நபரை பைபிள் பாராட்டுகிறது. பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொண்டு சிறப்புற்று விளங்கியவர்களைப் பற்றியும் அது பெருமையாக பேசுகிறது. (1 சாமுவேல் 16:18; 1 இராஜாக்கள் 7:13, 14) எனவே சிறப்படைய முயலுவதும், உயர்ந்த, நியாயமான இலட்சியங்களை வைப்பதும் பாராட்டத்தக்கது. இவ்வாறு ஒருவர் ‘தன் பிரயாசத்தின் பலனை அநுபவித்து’ மகிழலாம்.​—⁠பிரசங்கி 2:24.

ஆனால் பரிபூரணவாதியோ அத்தகைய திருப்தியை ருசிப்பதில்லை. சாதனை பற்றிய அவருடைய கண்ணோட்டமே நியாயமற்றது. சில வல்லுநர்களின்படி பரிபூரணவாதம், “எட்ட முடியாத (அதாவது பரிபூரண) இலக்குகள் வைப்பதையும், எவ்வளவு சிறப்பாக செய்தாலும் எப்போதும் திருப்தியற்ற மனநிலையோடு இருப்பதையும்” உட்படுத்துகிறது. இதனால் பரிபூரணவாதம் “தீராத அழுத்தத்தை ஏற்படுத்தி பெரும்பாலும் ஒருவருக்கு தன்னைப் பற்றி ஏமாற்ற உணர்வை அளிக்கிறது.” எனவே பரிபூரணவாதம் என்பது, “நீங்கள் மற்றும்/அல்லது உங்கள் சுற்றுப்புறம் கனகச்சிதமாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கும் நியாயமற்ற எண்ணம்” என ஒரு புத்தகம் விவரிக்கிறது. அது “உங்கள் வாழ்க்கையில் செய்ய முயலும் எதையும் துளியும் பிசகில்லாமல், தவறில்லாமல், பிழையில்லாமல், அல்லது முரண்பாடில்லாமல் செய்து முடிக்க வேண்டுமென உங்களுக்குள் ஊடுருவிக் கிடக்கிற எண்ணம்.”

ஆனால், “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பரிபூரணராய் இருக்கிறதுபோல நீங்களும் பரிபூரணராய் இருக்க வேண்டும்” என இயேசு சொல்லவில்லையா? (மத்தேயு 5:48, NW) சொன்னார், ஆனால் ஒருவர் முற்றும் முழுமையாக பரிபூரணமாய் இருக்க முடியுமென சொல்லவில்லை. மொத்தத்தில், “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி” இருக்கிறோம் என்றே பைபிள் கற்பிக்கிறது. (ரோமர் 3:23) அப்படியென்றால் இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? பைபிளில் ‘பரிபூரணம்’ என்ற வார்த்தை முழுமை என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. (மத்தேயு 19:21) நாம் பரிபூரணராய் இருக்க வேண்டுமென இயேசு சொன்னபோது அவர் அன்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்; முழுமையாக அன்பு காட்ட வேண்டுமென தம்மை பின்பற்றுபவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். எப்படி? அவர்கள் தங்கள் பகைவர்களையும்கூட நேசிக்கும் அளவுக்கு அன்பு காட்டுவதில் விரிவடைவதன் மூலம். “உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்” என இயேசு சொன்னதாக பைபிள் எழுத்தாளராகிய லூக்கா குறிப்பிடுகிறார்.​—⁠லூக்கா 6:36.

எனினும் முற்றும் முழுமையான அர்த்தத்தில் சிறப்பாக விளங்க முடியுமென்ற பிரமையுடன் பரிபூரணவாதிகள் போராடுகிறார்கள். எனவே அவர்கள் மற்றவர்களிடம் மட்டுக்குமீறி எதிர்பார்க்கலாம். எதிலும் திருப்தி இல்லை​—⁠உங்கள் பரிபூரணமெனும் விலங்கை உடைத்தெரிதல் என்ற ஆங்கில புத்தகத்தின்படி பரிபூரணவாதிகள், “மற்றவர்கள் வேலை செய்யும் விதத்தைக் கண்டு ஏமாற்றமடைபவர்கள் . . . அவர்களைப் பொறுத்தவரை தங்களை சுற்றிலும் இருப்பவர்கள் திருப்திகரமாக வேலை செய்வதில் அக்கறை காட்டாதவர்கள், தங்கள் உழைப்பின் பலனைக் கண்டு பெருமைப்படாதவர்கள்.”

உதாரணமாக, கார்லி என்பவள் படிப்பில் சூரப்புலி, படுதிறமைசாலியான மாணவர்களுக்கான பட்டியலில் அவளும் இடம்பெற்றிருக்கிறாள். எனினும் மற்றவர்களுடன் அவளால் சகஜமாக பழக முடியவில்லை. காரணம், எல்லாம் நூற்றுக்கு நூறு கரெக்ட்டாக இருக்க வேண்டுமென அவள் எதிர்பார்க்கிறாள்; இதனால் பெரும்பாலான நண்பர்களை இழந்திருக்கிறாள். “அவர்கள் எல்லாம் அபூரணத்தின் அடிமட்டத்திலிருப்பவர்கள் என்றே நான் நினைக்கிறேன்” என அவள் விவரிக்கிறாள்.

இன்னும் சிலர் நூறு சத வெற்றியை மற்றவர்களிடமிருந்தல்ல, தங்களிடமே எதிர்பார்க்கலாம். “தங்களிலும் தங்கள் வேலையிலும் திருப்தியே இல்லை” என அப்படிப்பட்டவர்கள் நினைக்கிறார்கள்; அவர்கள் “முக்கியமாக, தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்றே சதா கவலைப்படுகிறார்கள்” என எதிலும் திருப்தி இல்லை புத்தகம் விவரிக்கிறது.

பரிபூரணவாதத்தில் உட்பட்டுள்ள பிரச்சினை

நூறு சத வெற்றிக்கு ஆசைப்படுவது, ஆரோக்கியமாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதற்கு மாறாக பெரும்பாலும் ஆரோக்கியமற்றதாக, கேடு விளைவிப்பதாகவே இருக்கிறது. சிறப்புற்று விளங்க செய்வதற்கு பதிலாக அப்படிப்பட்ட கண்ணோட்டம் பெரும்பாலும் ஏமாற்றத்தையே தருகிறது. டானியல் என்ற கிறிஸ்தவர் யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் நடைபெற்ற ஒரு வகுப்பில் பேச்சுக் கொடுக்கும்படி நியமிக்கப்பட்டபோது பல மணிநேரம் கஷ்டப்பட்டு பயிற்சி செய்ததைப் பற்றி கூறுகிறார். கூட்டத்தாரில் அநேகர் ரொம்ப ஜோராக பேச்சு கொடுத்ததாக சொல்லி அவரை “சபாஷ்” என்று பாராட்டினார்கள். பிறகு சபை போதகர், சாதுரியமான, பயனுள்ள ஆலோசனைகளை டானியேலுக்குக் கொடுத்தார். “ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்” என பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 19:20) ஆனால் டானியல் அவற்றை முன்னேற்றத்திற்கு உதவும் ஆலோசனையாக ஏற்றுக்கொள்ளாமல் தோல்வி அடைந்ததைப் போல் உணர்ந்தார். “யார் கண்ணிலும் படாமல் எங்கேயாவது ஓடி ஒளிந்துகொள்ள முடியாதா என நினைத்தேன்” என சொல்கிறார் அவர். வாரக்கணக்கில் தூக்கமின்றியும் தவித்தாராம்.

எனவே கற்றுக்கொண்டு முன்னேறுவதற்கு பரிபூரணவாதம் முட்டுக்கட்டையாய் இருக்கலாம். இளைஞர்களுக்கான வெப் சைட்டில் வெளியாகும் ஒரு கட்டுரையில் ரேச்சல் என்ற இளம் பெண் இவ்வாறு எழுதுகிறாள்: “உயர்நிலைப் பள்ளியில் காலடியெடுத்து வைத்த போது படிப்பில் படுசுட்டியாக இருக்க வேண்டுமென தீர்மானித்திருந்தேன். எப்போதும் “A” கிரேட் மார்க் வாங்கும் மாணவி நான், அப்படியே தொடர்ந்து மார்க் வாங்குவதில் எந்த பிரச்சினையும் இருக்காதென நினைத்தேன்.” ஆனால் அவளுக்கு அல்ஜீப்ரா கஷ்டமாக இருந்தது. எனவே “B-⁠ப்ளஸ்” கிரேட் “மார்க்குதான்” கிடைத்தது. “மற்றவர்களைப் பொறுத்தவரை இது நல்ல மார்க்கு, ஆனால் எனக்கோ . . . மானக்கேடாக போய்விட்டது. பயப்பட ஆரம்பித்தேன், கவலையும் தொற்றிக் கொண்டது . . . என்னுடைய வீட்டுப்பாடங்களை செய்வதற்கு என் டீச்சரிடம் உதவி கேட்க எனக்கு மனமில்லை, அப்படி கேட்டால், அவர் நடத்தினது எனக்குப் புரியவில்லை என அர்த்தமாகிவிடும் என நினைத்தேன். . . . குறைந்த மார்க் வாங்குவதைவிட சாவதே மேல் என்ற முடிவுக்குக்கூட சிலசமயங்களில் வந்திருக்கிறேன்” என நினைவுபடுத்தி சொல்கிறாள் ரேச்சல்.

தோல்வியை சந்திக்க வேண்டி வருமோ என்ற பயம் தற்கொலை செய்து கொள்வதைப் பற்றி சில இளைஞர்களை சிந்திக்க வைத்திருக்கிறது. பெரும்பாலான இளைஞர்கள் இத்தகைய பயங்கரமான செயலை செய்ய துணிவதில்லை என்பது சந்தோஷமான விஷயம். ஆனால் மனநல நிபுணரான சில்விய ரிம் சொல்கிறபடி தோல்வியை சந்திக்காதிருப்பதற்காக பொறுப்புகளை செய்யாமலே போகலாம். சில பரிபூரணவாதிகள் “பொறுப்புகளை ஏற்பதில்லை, அவர்களுடைய செயல்களைக் குறித்துப் பெருமைப்படுவதில்லை, வீட்டுப் பாடம் செய்ய மறந்துவிடுகிறார்கள், அதற்கு சாக்குப்போக்கு சொல்கிறார்கள்” என்கிறார் ரிம்.

மறுபட்சத்தில், மற்ற இளைஞர்கள் வெற்றி தங்களுக்கே என்று மிதமிஞ்சிய முடிவுக்கு வருகிறார்கள். “ஸ்கூல் ப்ராஜெக்ட் எல்லாவற்றையும் படுகச்சிதமாக செய்து முடிப்பதற்காக விடிய விடிய உட்கார்ந்திருப்பேன்” என சொல்கிறான் டானியல். பிரச்சினை என்னவென்றால், இத்தகைய மிதமிஞ்சிய போக்கு பொதுவாக முன்னேற்றத்துக்கு எதிரான விளைவையே ஏற்படுத்துகிறது. தூங்கி வழியும் மாணவனோ மாணவியோ கண்டிப்பாக நல்ல மார்க் வாங்க முடியாது.

எனவே, பரிபூரணவாதியாய் இருக்கும் ஒருவர், கோபத்தில் கொதித்தெழலாம், தாழ்வு மனப்பான்மையுடன் போராடலாம், குற்ற உணர்வில் குறுகுறுக்கலாம், கெட்டதே நடக்கும் என்ற எண்ணத்தில் உழலலாம், தவறான சாப்பாட்டு பழக்கத்தால் ஏற்படும் நோய்களுக்கு ஆளாகலாம்; இதில் ஆச்சரியமேதுமில்லை. எனினும் எல்லாவற்றையும்விட பரிபூரணவாதம் ஆவிக்குரிய விதத்தில் ஒருவரை பெரிதளவு பாதிக்கலாம். உதாரணமாக, தங்கள் விசுவாசத்தைக் குறித்து வாய் திறந்து பேசும்படி கிறிஸ்தவர்களுக்கு பைபிள் கட்டளையிடுகிறது. (ரோமர் 10:10; எபிரெயர் 10:24, 25) எனினும் விவியன் என்ற இளம் பெண் கூட்டங்களில் பதில் சொல்ல தயங்கினாள், பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தி தன்னால் பதிலளிக்க முடியாதென பயந்ததே அதற்குக் காரணம். லியா என்ற இளம் பெண்ணும் அதே போல பயப்பட்டாள். “நான் தப்பாக பதில் சொல்லிவிட்டால் மற்றவர்கள் என்னைப் பற்றி தப்புக்கணக்குப் போட்டுவிடுவார்களே. அதனால் வாயே திறக்காமல் இருப்பது மேல்” என்கிறாள் அவள்.

எனவே எதிலும் நூறு சதம் கரெக்ட்டாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது உண்மையிலேயே கேடு விளைவிக்கிறது, அது ஆரோக்கியமற்றதும்கூட. இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள மனோபாவங்கள் ஏதேனும் உங்களிடத்தில் இருந்தால் நீங்கள் சிந்திக்கும் விதத்தில் சில மாற்றங்களைச் செய்வது அவசியம் என நினைக்கலாம். இதை நீங்கள் எப்படி செய்யலாம் என்பதை இனிவரும் கட்டுரை கலந்தாலோசிக்கும். (g03 7/22)

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b ஒரு பள்ளியில் படுதிறமைசாலிகளாக திகழும் மாணவர்களில் 87.5 சதவீதத்தினருக்கு 100 சதம் வெற்றி காணும் மாணவர்களாக இருக்க ஆசையென ஓர் ஆய்வு காட்டியது.

[பக்கம் 12-ன் படம்]

தோல்வியை சந்திப்போமோ என்ற பயத்தால் சில இளைஞர்கள் தங்கள் வீட்டுப் பாடங்களை செய்யாமலேயே இருந்து விடுகிறார்கள்

[பக்கம் 13-ன் படம்]

பரிபூரணவாதி மன உளைச்சலாலும் தாழ்வு மனப்பான்மையாலும் அவதிப்படலாம்