Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மகரந்தம் ஆபத்தானதா அதிசயமானதா?

மகரந்தம் ஆபத்தானதா அதிசயமானதா?

மகரந்தம் ஆபத்தானதா அதிசயமானதா?

ஆஸ்திரேலியா விழித்தெழு! எழுத்தாளர்

ஹ. . . ஹ . . . ஹச்சூ! தும்மல் வருகிறது, கண்ணில் நீர் வடிகிறது, கண் அரிக்கிறது, சளி ஒழுகுகிறது, மூக்கு உறுத்துகிறது​—⁠இந்த அறிகுறிகளெல்லாம் கோடிக்கணக்கான ஜனங்களுக்கு இளவேனிற்காலம் தொடங்கிவிட்டதை ஞாபகப்படுத்துகின்றன. காற்றில் ஏகமாக பரவியிருக்கும் மகரந்தத்துகளினால்தான் (pollen) பொதுவாக அவர்களுக்கு இந்த அலர்ஜி ஏற்படுகிறது. இவ்வுலகிலுள்ள 6-⁠ல் 1 நபர், சீஸன்தோறும் தலைகாட்டும் இப்படிப்பட்ட மகரந்த அலர்ஜிகளால் அவதிப்படுவதாக பிஎம்ஜெ (முன்னாள் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்) கணக்கிடுகிறது. இந்த விகிதாச்சாரத்தைக் கேட்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை; ஏனென்றால், நினைத்துக்கூட பார்க்க முடியாதளவுக்கு ஏகப்பட்ட மகரந்தத் துகள்கள் செடிகளிலிருந்து காற்றிலே கலந்திருக்கின்றன.

தெற்கு ஸ்வீடனின் மூன்றில் ஒரு பகுதியிலுள்ள ஸ்ப்ரூஸ் என்ற ஒரு வகை ஊசியிலை மரங்களிலிருந்து மட்டும் ஒவ்வொரு வருடமும் சுமார் 75,000 டன் எடையுள்ள மகரந்தத் துகள்கள் வெளிவிடப்படுகிறதென விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்கள். இந்த அலர்ஜியால் கஷ்டப்படும் வட அமெரிக்கர்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பது ராக்வீட் என்ற செடி; ஒரு நாளைக்கு பத்து லட்சம் மகரந்தத் துகள்களை இந்தச் செடியால் உற்பத்தி செய்ய முடியும். இந்த ராக்வீடின் மகரந்தத் துகள்களை காற்று அடித்துக்கொண்டு செல்வதால், பூமியிலிருந்து 3 கிலோமீட்டர் உயரத்தில்கூட அவை காணப்பட்டிருக்கின்றனவாம்; அதுமட்டுமல்ல, கடல் கடந்து 600 கிலோமீட்டர் தூரத்திலும் காணப்பட்டிருக்கின்றனவாம்.

ஆனால், இந்த மகரந்தம் சிலருக்கு ஏன் அலர்ஜியை உண்டாக்குகிறது? இந்தக் கேள்விக்கு பதிலை சிந்திப்பதற்கு முன், மகரந்தத்தைப் பற்றி நாம் சற்று ஆராய்ச்சி செய்து பார்க்கலாம்; இந்தக் குட்டி குட்டியான துகள்களிலிருக்கும் பிரமிப்பான டிஸைனை கவனிக்கலாம் வாருங்கள்.

ஜீவனளிக்கும் நுண்ணிய துகள்கள்

மகரந்தம் என்பது “விதை கொடுக்கும் தாவரங்களில் இருக்கும் மகரந்தப் பையில், அதாவது பூவின் ஆண் உறுப்பில் உண்டாகிறது; பிறகு பல்வேறு வழிகளில் (காற்று, நீர், பூச்சிகள் போன்றவற்றால்) சூலகத்திற்கு, அதாவது பூவின் பெண் பாகத்திற்கு, கொண்டு செல்லப்படுகிறது; அங்குதான் கருவுறுதல் நடைபெறுகிறது” என தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது.

பூக்கும் தாவரங்களிலுள்ள மகரந்தத் துகள்கள் மூன்று வித்தியாசமான பாகங்களால் ஆனவை​—⁠ஆண் அணுஉட்கரு, மகரந்தத் துகளுடைய ஓட்டின் இரு வகையான உறைகள் ஆகியவை. படு கெட்டியான வெளி உறை அந்தத் துகள் உடைந்து போகாதபடிக்கு பத்திரமாக பாதுகாக்கிறது; அதோடு சக்திவாய்ந்த அமிலங்களையும், காரங்களையும், ஏன் பயங்கர வெப்பத்தையும்கூட அதனால் தாக்குப்பிடிக்க முடிகிறது. என்றாலும், சில வகைகளைத் தவிர, மற்ற எல்லா வகை மகரந்தங்களும் சில நாட்களுக்குள்ளோ வாரங்களுக்குள்ளோதான் முளைவிட முடியும். ஆனால், அந்த கெட்டியான வெளியுறையோ பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்குகூட சிதைந்து போகாமல் அப்படியே இருக்குமாம். பூமியின் மண்ணில் ஏராளமான மகரந்தத் துகள்கள் இருப்பதற்கு காரணம் இதுவே. சொல்லப்போனால், பல்வேறு ஆழங்களிலிருந்து எடுத்த மண்ணில் கிடந்த மகரந்தத்தை ஆராய்ந்ததன் மூலமாகத்தான் விஞ்ஞானிகள் பூமியின் தாவரவியல் சரித்திரத்தைப் பற்றியே கற்றிருக்கிறார்கள்.

அந்த மகரந்தத் துகள்களின் தனித்தன்மை வாய்ந்த வெளி உறையின் டிஸைன்களின் காரணமாக அந்தச் சரித்திரம் மிகத் துல்லியமானதாகவும் இருக்கலாம். வகைக்கு தகுந்தாற்போல, ஒரு மகரந்தத்தின் வெளியுறை மற்றொன்றிலிருந்து வித்தியாசப்படுகிறது; அதாவது மொழு மொழுவென்றோ, சுருங்கியோ, டிஸைன் டிஸைனாகவோ அல்லது முட்களாலும் குமிழ்களாலும் சூழப்பட்டதாகவோ இருக்கலாம். “அடையாளம் கண்டுபிடிக்க உதவுவதற்கு மனிதனின் கை ரேகைகள் எந்தளவு நம்பகமானவையோ அந்தளவு இந்த மகரந்தத்தின் எல்லா வகைகளும் நம்பகமானவை” என மனிதவியல் பேராசிரியர் வான் எம். ப்ரையன்ட் ஜூனியர் சொல்கிறார்.

தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் விதம்

பூவின் சூல்முடியில் (stigma), அதாவது பூவின் பெண் பாகமான சூலகத்தின் (pistil) தலைப் பகுதியில், ஒரு மகரந்தத் துகள் பட்டதுமே, ஒருவித இரசாயன மாற்றம் ஏற்படுகிறது; இதன் காரணமாக அந்த மகரந்தத் துகள் உப்பிவிடுகிறது, ஒரு குழாயும் அதிலிருந்து வளருகிறது; அந்தக் குழாய் கீழுள்ள சூல் (ovule) வரைக்கும் சென்றெட்டுகிறது. பிறகு, மகரந்தத் துகளுக்குள் இருக்கும் ஆண் அணுக்கள் அந்தக் குழாய் வழியாக சூலை அடைகின்றன; இப்படியாக கருவுற்ற ஒரு விதை உருவாகிறது. அந்த விதை முற்றியதுமே அதற்கு தேவையானதெல்லாம் ஏற்ற ஒரு சூழல்; அப்போதுதான் அது முளைவிட முடியும்.

விதை கொடுக்கும் சில செடிகள் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ வளர்ந்தாலும், பெரும்பாலான செடிகள் மகரந்தத்தை மட்டுமல்லாமல் சூலையும் உற்பத்தி செய்கின்றன. சில செடிகள் தன் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்றன; மற்றவை அயல் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்றன, அதாவது ஒரே இனத்தைச் சேர்ந்த வேறு செடிகளில் அல்லது அதன் வகையைச் சேர்ந்த மற்ற செடிகளில் மகரந்தத்தை விழச் செய்வதன் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்றன. இத்தகைய செடிகள் “தங்களின் சூல்முடிகள் தங்கள் மகரந்தத்தை ஏற்கும் பக்குவத்திற்கு வரும் முன்போ அல்லது பின்போ மகரந்தத்தை வெளிவிடுகின்றன; இப்படியாக தன் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுவதை பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றன” என பிரிட்டானிக்கா சொல்கிறது. மற்ற செடிகளோ, தங்கள் சொந்த மகரந்தத்திற்கும் அதே இனத்தைச் சேர்ந்த வேறொரு செடியின் மகரந்தத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிப்பதற்கு தேவையான இரசாயன முறைகளை கொண்டிருக்கின்றன. தங்கள் சொந்த மகரந்தத்தை அடையாளம் கண்டுகொண்டதும் அவை என்ன செய்யும் தெரியுமா? பெரும்பாலும், மகரந்தக் குழாயின் வளர்ச்சியை தடை செய்து விடுகின்றன; இதன் மூலம் அந்த மகரந்தத்தை செயலிழக்கச் செய்கின்றன.

வித விதமான தாவர வகைகள் ஒரு இடத்தில் இருந்தால் கேட்கவே வேண்டாம், எல்லா வகை மகரந்தங்களும் கலந்த காற்றுதான் அங்கு வீசும். ஆனால் தாவரங்கள் தங்களுக்கு தேவையான மகரந்தத்தை மாத்திரமே காற்றிலிருந்து எப்படி சல்லடை போட்டு எடுத்துக் கொள்கின்றன? இதற்கு மிகச் சிக்கலான வாயு இயக்கக் கலையை (aerodynamics) சில தாவரங்கள் பயன்படுத்துகின்றன. உதாரணத்திற்கு, ஊசியிலை மரங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

காற்றிலிருந்து அறுவடை

ஊசியிலை மரத்தின் ஆண் கூம்புகள் கொத்துக் கொத்தாக காய்க்கின்றன; அவை முற்றி வெடிக்கும்போது, மேகக்கூட்டம் போல ஏராளமான மகரந்தத் துகள்களை அவை காற்றிலே வெளிவிடுகின்றன. காற்றில் மிதந்து கொண்டிருக்கும் மகரந்தத் துகள்கள் எப்படி பெண் கூம்புகளின் இனப்பெருக்க பகுதிகள் மீது மிகச் சரியாக போய் விழுகின்றன தெரியுமா? பெண் கூம்புகள், அவற்றை சுற்றியுள்ள ஊசியிலைகளின் உதவியோடு அவற்றினூடாக காற்றை புகுந்துசெல்ல அனுமதிக்கின்றன, அப்போது மகரந்தங்கள் சுழன்று வந்து தங்கள் இனப்பெருக்க உறுப்பின்மீது விழும்படி செய்கின்றன என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். மகரந்தங்களை ஏற்கும் பெண் கூம்புகளிலுள்ள செதிள்கள் லேசாக விரிந்து ஒன்றிலிருந்து ஒன்று விலகியிருக்கும்போது இந்த இனப்பெருக்க உறுப்புகள் தென்படுகின்றன.

கார்ல் ஜே. நிக்லஸ் என்ற ஒரு ஆராய்ச்சியாளர் ஊசியிலைக் கூம்புகளின் இந்த அதிபுத்திசாலித்தனமான விமானக் கலையைப் பற்றி (aeronautics) தீவிரமாக சோதனைகள் நடத்தினார். ஸைன்டிஃபிக் அமெரிக்கன் என்ற பத்திரிகையில் அவர் இவ்வாறு எழுதினார்: “ஒவ்வொரு வகையான செடியிலும் காய்க்கும் இந்தக் கூம்புகளின் ஒரு தனி வடிவமைப்பின் காரணமாகவே காற்றோட்டத்தில் வினோதமான [பிரத்தியேகமான] மாற்றங்கள் ஏற்படுகின்றனவென எங்கள் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன . . . அவ்வாறே, மகரந்தத்தின் அளவும், வடிவமைப்பும், தடிமனும் வகைக்கு வகை வித்தியாசப்படுவதால்தான் அந்தக் காற்றோட்டத்தில் நிகரற்ற விதமாக அவற்றால் செயல்பட முடிகிறது.” இத்தகைய உத்திகள் எந்தளவுக்கு ஆற்றல் படைத்தவை? “நாங்கள் ஆராய்ந்த பெரும்பாலான கூம்புகள் தங்கள் ‘சொந்த’ இனத்தைச் சேர்ந்த மகரந்தத்தையே காற்றிலிருந்து வடிகட்டி எடுக்கின்றன, மற்ற வகையைச் சேர்ந்த மகரந்தத்தை அவை எடுக்கவில்லை” என்கிறார் நிக்லஸ்.

ஆனால், எல்லா வகையான தாவரங்களுமே மகரந்தச் சேர்க்கையில் ஈடுபட காற்றைப் பயன்படுத்துவதில்லை​—⁠அலர்ஜியால் அவதியுறுபவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்! அநேக செடிகள் மகரந்தச் சேர்க்கைக்காக மிருகங்களை பயன்படுத்துகின்றன.

மலர்த் தேன் மயக்குகிறது

பறவைகள், சின்னச் சின்ன பாலூட்டிகள், பூச்சிகள் ஆகியவற்றின் உதவியால் மகரந்தத்தை பெற்றுக்கொள்ளும் செடிகள், பொதுவாக கொக்கிகள், ஊசிகள், அல்லது பிசுபிசுவென ஒட்டும் நூல்கள் போன்றவற்றை உபயோகித்து மகரந்தத்தை அந்த உயிரினங்களின் உடம்பில் ஒட்டச் செய்கின்றன. உதாரணமாக, நிறைய ரோமங்களை உடைய ஒரு பெரிய வண்டு ஒரே தடவையில் சுமார் 15,000 மகரந்தத் துகள்களைக்கூட சுமந்து சென்றுவிடுமாம்!

சொல்லப்போனால், பூக்கும் தாவரங்களில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு மிக முக்கியமாக கைகொடுப்பது வண்டுகளே. அதற்கு கைமாறாக அந்த செடிகள் வண்டுகளுக்கு தித்திப்பான மலர்த் தேனையும் மகரந்தத்தையும் பரிசாக தந்து விருந்தளிக்கின்றன; அந்த மகரந்தம் புரதச்சத்தையும், வைட்டமின்களையும், தாதுப் பொருட்களையும், கொழுப்புச் சத்தையும் தருகின்றன. ஒரே தடவையில் வண்டுகள் 100-⁠க்கும் அதிகமான பூக்களை சந்திக்கலாம்; ஆனாலும் அதே இனத்தைச் சேர்ந்த செடியிலிருந்துதான் அவை மகரந்தத்தையும், மலர்த் தேனையும் அல்லது இரண்டையுமே சேகரிக்கின்றன; தேவையானளவுக்கு சேகரிக்கும் வரை அல்லது அவை பூக்களில் காலியாகும் வரை அந்த வண்டுகள் சளைக்கவே சளைக்காது. குறிப்பிடத்தக்க இந்த இயல்பான குணம் சிறந்த விதத்தில் மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவுகிறது.

பூக்களால் ஏமாற்றப்படுகிறது

சில செடிகள் பூச்சிகளுக்கு இனிப்பான விருந்து கொடுப்பதற்கு பதிலாக, பெரிய கில்லாடிகளைப் போல அவற்றை தந்திரமாக தாஜா பண்ணி மகரந்தச் சேர்க்கைக்கு உதவும்படி செய்து விடுகின்றன. உதாரணத்திற்கு, மேற்கு ஆஸ்திரேலியாவில் வளரும் ஹாமர் ஆர்கிட் செடியை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த ஹாமர் ஆர்கிட் பூவில் ஒரு நடு இதழ் இருக்கிறது; அது சட்டென்று பார்ப்பதற்கு, மனித கண்களுக்குக்கூட, கொழுகொழுவென்ற இறக்கையில்லா பெண் தின்னிட் குளவியைப் போலவே இருக்கும். அதுமட்டுமல்ல, நிஜமான பெண் குளவியிடமுள்ள செக்ஸ் ஃபெரமோனும், அதாவது இனப் பெருக்கத்திற்கு கவர்ந்திழுக்கும் ஒரு வித நறுமணமும், இந்தப் பூவிலிருந்து வீசுகிறது! இந்தக் கவர்ச்சியான ஏமாற்றுக்காரியின் தலைக்கு மேலுள்ள காம்பு நுனியில்தான் மகரந்தம் நிரம்பிய பிசுபிசுப்பான பைகள் நிறைய இருக்கின்றன.

ஒரு ஆண் தின்னிட் குளவி, இந்தப் பொய் ஃபெரிமோனின் நறுமணத்தில் மதி மயங்கி, அந்த ஏமாற்றுக்காரியை அப்படியே இறுகப் பிடித்தவாறு “அவளோடு” சேர்ந்து வேகமாக பறந்துவிட முயற்சிக்கும். ஆனால் ஐயோ பாவம்! பறக்க முடியாமல் அவனும் அவனுடைய “காதலியும்” பல்டியடித்தவாறு அந்தப் பிசுபிசுப்பான மகரந்தப் பைகளின் நடுவில் விழுந்து விடுவார்கள். தன் முட்டாள்தனத்தை உணர்ந்தவனாக அந்த ஏமாற்றுக்காரியை, அதாவது பூவின் நடு இதழை, அவன் விட்டுவிடுவான்; ஒரு வகை கீல் அமைப்போடு அந்த நடு இதழ் பொருத்தப்பட்டிருப்பதால் அதன் இடத்திற்கே அது திரும்ப வந்துவிடும். அங்கிருந்து அந்த வண்டு பறந்துபோனாலும், மறுபடியுமாக இன்னொரு ஹாமர் ஆர்கிட் செடியிடம் ஏமாந்து போய்விடும். என்றாலும், தன் முதல் சந்திப்பின்போது எடுத்து வந்த மகரந்தத்தை இப்போது இந்த ஆர்கிட் பூவில் சேர்த்துவிடும்.

ஆனால், பெண் தின்னிட் குளவிகள் சுறுசுறுப்பாக இருந்தால், ஆண் குளவிகள் அவற்றில் ஒன்றையே எப்போதும் தேர்ந்தெடுக்கின்றன, அந்த ‘நயவஞ்சகியை’ தேர்ந்தெடுப்பதில்லை. பெண் குளவிகள் தங்கள் புழுப் பருவத்தைவிட்டு, நிலத்தடியில் இருந்து வெளி வருவதற்கு பல வாரங்களுக்கு முன்பாகவே ஆர்கிட் பூக்கள் சமயம் பார்த்து மலர்ந்துவிடுகின்றன; இதனால் இந்தப் பூக்கள் தற்காலிக நன்மையடைகின்றன.

ஏன் இந்த அலர்ஜிகள்?

சிலருக்கு ஏன் மகரந்தத்தினால் அலர்ஜி ஏற்படுகிறது? பொடிப் பொடியான மகரந்தத் துகள்கள் மூக்கிற்குள் தஞ்சம் புகுந்தவுடன், அவை கெட்டியான சளிப்படலத்தில் போய் மாட்டிக் கொள்கின்றன. அங்கிருந்து அவை தொண்டைக்கு நகர்கின்றன; அந்த சமயத்தில் அவை விழுங்கப்படலாம் அல்லது காரி துப்பப்படலாம்; இதனால் பொதுவாக எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. என்றாலும், சில சமயங்களில் உடம்பிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியிடம் இந்த மகரந்தம் தன் வேலையை காட்டுகிறது.

மகரந்தத்தின் புரதம்தான் அலர்ஜிக்கான பிரச்சினையைக் கிளப்புகிறது. அவதிப்படுபவரின் நோய் எதிர்ப்புச் சக்தி, ஏதோ சில காரணங்களுக்காக குறிப்பிட்ட சில வகை மகரந்தங்களின் புரதத்தை ஒரு அபாயப் பொருளாகவே கருதுகிறது. இதனால் அவர்கள் உடம்பில் ஒரு சங்கிலி விளைவு ஏற்படுகிறது; இந்த விளைவின் காரணமாக, உடம்பின் தசைகளில் காணப்படும் மாஸ்ட் என்ற அணுக்கள் எக்கச்சக்கமான ஹிஸ்டமைன்களை வெளிவிடுகின்றன. இந்த ஹிஸ்டமைன் இரத்தக் குழாய்களை விரிவுபடுத்தி, ஏராளமான நோய் எதிர்ப்பு அணுக்களை உடைய திரவங்கள் அவற்றில் எளிதாக நுழையும்படி செய்கிறது. இயல்பான நிலையில் இருக்கும்போது, இந்த நோய் எதிர்ப்பு அணுக்கள் காயமடைந்த இடத்திற்கோ கிருமிகள் தாக்கிய இடத்திற்கோ படை படையாக சென்று அங்கிருக்கும் ஆபத்தான எதிராளிகளை கொன்று விடுகின்றன. ஆனால் அலர்ஜிக்காரர்களுக்கோ, அந்த மகரந்தம் ஒரு பொய்யான அபாய ஒலியை எழுப்புகிறது; விளைவு? மூக்கு உறுத்துகிறது, சளி ஒழுகுகிறது, தசை வீங்கிவிடுகிறது, கண்ணிலிருந்து நீரும் வடிகிறது.

பெற்றோர்களுக்கு அலர்ஜி இருந்தால் பிள்ளைகளுக்கும் அலர்ஜி உண்டாகிறது என ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்; ஆனாலும் அலர்ஜியை உண்டாக்கும் குறிப்பிட்ட ஒரு பொருளோடு அது சம்பந்தப்பட்டதாக இல்லாதிருக்கலாம். தூய்மைக்கேடும்கூட இந்த அலர்ஜிக்கு காரணமாக இருக்கலாம். “அதிகளவு டீஸல் எரிவாயு துகள்கள் இருக்கும் இடத்திலுள்ள காற்றை சுவாசிப்பதற்கும் மகரந்த அலர்ஜிக்கும் நேரடி தொடர்பு இருப்பதை ஜப்பானில் கண்டுபிடித்திருக்கிறார்கள்” என பிஎம்ஜெ சொல்கிறது. “இத்தகைய துகள்கள் அலர்ஜியை அதிகரிக்கச் செய்கின்றன என்பதை மிருகங்களை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் காட்டுகின்றன” என்றும் அது கூறியது.

இந்த அலர்ஜிகளால் கஷ்டப்படும் அநேகருடைய தொந்தரவுகளை ஆன்ட்டி-ஹிஸ்டமைன்கள் சற்று குறைக்கின்றன என்பதுதான் ஒரு சந்தோஷமான செய்தி. a இந்தப் பெயருக்கு ஏற்றாற்போல், இத்தகைய மருந்துகள் ஹிஸ்டமைன் செயல்படாதபடி தடுக்கின்றன. மகரந்தத் துகள்கள் என்னதான் நமக்கு தொந்தரவு கொடுத்தாலும், அவற்றின் டிஸைனிலும், அவை பரப்பப்படும் விதத்திலும் உள்ள அபார ஞானத்தைப் பார்த்து யார்தான் அசந்து போக மாட்டார்கள்? ஆம், அவை மட்டும் இல்லையென்றால், இந்த பூகோளமே வெறிச்சோடிக் கிடந்திருக்கும். (g03 7/22)

[அடிக்குறிப்பு]

a முன்பெல்லாம் ஆன்ட்டி-ஹிஸ்டமைன்களை எடுத்தவர்களுக்கு பெரும்பாலும் தலைச் சுற்றல் ஏற்பட்டது, வாயும் வறண்டு போனது. இப்போதுள்ள புதிய மருந்துகளோ இத்தகைய பின்விளைவுகளை குறைத்திருக்கின்றன.

[பக்கம் 24-ன் படக்குறிப்பு]

மகரந்தத் துகள்கள்: © PSU Entomology/PHOTO RESEARCHERS, INC.

[பக்கம் 2425-ன் படம்]

சூலகம்

சூல்

பூவின் பெண்பாகம்

மகரந்தக்குழாய்

சூல்முடி

மகரந்தத் துகள்

பூவின் ஆண்பாகம்

மகரந்தப் பை

இதழ்

[படத்திற்கான நன்றி]

NED SEIDLER/NGS Image Collection

[பக்கம் 25-ன் படங்கள்]

நுண்ணோக்கியில் தெரியும் பல்வேறு வகையான மகரந்தத் துகள்கள்

[படத்திற்கான நன்றி]

மகரந்தத் துகள்கள்: © PSU Entomology/PHOTO RESEARCHERS, INC.

[பக்கம் 26-ன் படங்கள்]

ஹாமர் ஆர்கிட் பூவின் ஒரு பாகம் அசப்பில் பார்த்தால் பெண் குளவியைப் போலவே இருக்கிறது

[படத்திற்கான நன்றி]

ஹாமர் ஆர்கிட் படங்கள்: © BERT & BABS WELLS/OSF

[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]

மகரந்தத் துகள்கள்: © PSU Entomology/PHOTO RESEARCHERS, INC.

[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]

மகரந்தத் துகள்கள்: © PSU Entomology/PHOTO RESEARCHERS, INC.