வேர்வைக் குளியல் அன்றும் இன்றும்
வேர்வைக் குளியல்—அன்றும் இன்றும்
நூற்றாண்டுகளாக, பல்வேறு கலாச்சாரங்களில் வேர்வைக் குளியல் பிரபலமாக இருந்து வந்திருக்கிறது. வட அமெரிக்க இந்தியர்களின் இனிப்பி, ரஷ்யர்களின் பான்யா, துருக்கியர்களின் ஹாமான், ஜப்பானியர்களின் மூஷிபூரோ என வேர்வைக் குளியலில் பல வகைகள் இருந்திருக்கின்றன.
பூர்வ ரோமிலும் குளியலறை கட்டடங்கள் இருந்தன; அவற்றில் ஒரு வெப்ப அறையும் ஒரு நீராவி அறையும் இருந்தன. ஏராளமான ரோம குளியலறைகள் அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; அவற்றிலேயே மிக அழகானவையும் சொகுசானவையும் கரகலா குளியலறை கட்டடங்கள்தான்; அவை 28 ஏக்கர் பரப்பளவில் இருந்தன; 1600 பேர் அங்கு குளிக்க முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இன்றும்கூட இரண்டு வகையான வேர்வைக் குளியல் பிரபலமாக இருக்கின்றன; அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். அவற்றில் ஒன்று, மெக்சிகர்களின் டெமெஸ்கால், மற்றொன்று பின்லாந்து நாட்டவரின் சௌனா; இவற்றைப் பற்றி படித்ததுமே, அதே மாதிரி குளிக்க உங்களுக்கும் ஆசை வந்துவிடும் பாருங்களேன்!
டெமெஸ்கால்
மெக்சிகோவை ஸ்பெயின் கைப்பற்றுவதற்கு முன்பிருந்த காலப்பகுதியில், அஸ்டெக், சாபோடெக், மிக்ஸ்டெக், மாயா போன்ற ஜனங்கள் மருத்துவக் காரணங்களுக்காகவும் சுத்திகரிப்புக்காகவும் டெமெஸ்காலை பயன்படுத்தினார்கள். அதாவது வயதுக்கு வருவது, குழந்தை பிறப்பு, சொந்தக்காரரின் சவ அடக்கம் போன்ற சடங்குகளுக்காவும், பழங்குடியினர் செய்யும் வேறு சடங்குகளுக்காகவும் அதைப் பயன்படுத்தினார்கள். டெமெஸ்கால் என்ற வார்த்தை டெமாஸ்க்கால்லி என்ற பூர்வீக நாயூயாட்டல் மக்களின் பாஷையிலிருந்து வந்திருக்கிறது; அதன் அர்த்தம் “குளியல் வீடு” என்பதாகும். அது வளைவான கூரையைக் கொண்ட செவ்வக அல்லது வட்ட வடிவமான செங்கல் கட்டடமாக இருந்தது. அதனுள் பெரிய எரிமலைக் கற்கள் வைக்கப்பட்டு சூடாக்கப்பட்டன; நீராவி வருவதற்காக அந்தக் கற்களின் மீது ரோஸ்மேரி, யூக்கலிப்டஸ் போன்ற மூலிகைகள் கலக்கப்பட்ட தண்ணீர் தெளிக்கப்பட்டது. அங்கு குளிக்கப் போகிறவர், சடங்குக்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவ குணமுள்ள செடிகளால் மென்மையாக அடிக்கப்பட்டார்; அந்தச் சடங்கின் கடைசியில் குளிர்ந்த நீர் அவர் மீது தெளிக்கப்பட்டது.
ஸ்பானிய மடத்துறவிகள் இந்தப் பழக்கத்தை எதிர்த்துப் போராடினார்கள்; ஏன்? ஏனெனில்
ஆண்களும் பெண்களும் சேர்ந்து குளிப்பது சரியல்ல என அவர்கள் நினைத்தார்கள். என்னதான் எதிர்ப்பு இருந்தபோதிலும், டெமெஸ்கால் குளியல் நிறுத்தப்படவே இல்லை; மெக்சிகோவின் சில பாகங்களில் இன்றும் அது பயன்படுத்தப்பட்டு வருகிறது; முக்கியமாக, குளிப்பதற்கும் வியாதியை தணிப்பதற்கும் அல்லது குழந்தைப்பேறுக்கு பிறகு சகஜ நிலைக்கு வருவதற்கும் அது பயன்படுத்தப்பட்டு வருகிறது. என்றாலும், டெமெஸ்காலின் பண்டைய மத அம்சங்களை புதுப்பித்து, அதை நாட்டின் பாரம்பரிய சொத்தாக ஆக்குவதில் அதிக ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது.பின்லாந்து நாட்டவரின் சௌனா
வேர்வைக் குளியல்களிலேயே மிகவும் பிரபலமானது ஒருவேளை பின்லாந்து நாட்டவரின் சௌனாவாக இருக்கலாம். சொல்லப்போனால், “சௌனா” என்பதே பின்லாந்து நாட்டு மொழியின் ஒரு வார்த்தையாகும். சுமார் 2000 ஆண்டுகளாக சௌனா இருந்து வந்திருக்கிறது; மிகப் பழமை வாய்ந்த சௌனா எப்படி இருந்தது தெரியுமா? தரையிலுள்ள குழிகள் கற்களால் ஏடாகூடமாக மூடப்பட்டிருந்தது, அதன் நடுவிலோ மூலையிலோ நெருப்புக் குழி ஒன்று இருந்தது. பிற்பாடு, பொ.ச. 12-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், வெளிப்புறத்தில் கட்டப்பட்ட சௌனாக்கள் ஒரு சிறிய அறை போல இருந்தன.
பின்லாந்தில் இன்று ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் ஒரு சௌனா இருக்கிறது; அது மரப்பலகைகளால் கட்டப்பட்டு மின்சாரத்தினாலோ விறகு வைத்து எரித்தோ சூடேற்றப்படுகிறது. சிறிய அறைகளிலும் கிராமப்புறங்களிலும் விறகினால் சூடேற்றப்படும் சௌனாக்கள் இன்றும்கூட சர்வசகஜமாக காணப்படுகின்றன. மின்சார சௌனாக்களாகட்டும், விறகடுப்பால் சூடேற்றப்படும் சௌனாக்களாகட்டும், அவற்றிலுள்ள அடுப்புகள்மீது பெரிய கற்கள் பரப்பப்பட்டு இருக்கும். வேர்வைக் குளியல் எடுக்க இருப்பவர்கள், காற்றின் ஈரப்பதத்தை அதிகரிப்பதற்காக ஒரு பெரிய கரண்டியால் தண்ணீரை மொண்டு சூடாக்கப்பட்ட அந்தக் கற்கள் மீது வீசுவார்கள். பின்லாந்து நாட்டவரின் சௌனாவுக்கும் ரோம அல்லது துருக்கிய குளியலறைக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் என்னவென்றால், சௌனா பெரும்பாலும் மரப்பலகைகளால் கட்டப்பட்டிருக்கும்; அதிலிருக்கும் எல்லா பொருட்களும் மரத்தாலானவை. மரம் அத்தனை எளிதாக வெப்பத்தைக் கடத்தாது. ஆகவே சௌனாவின் வெப்பநிலையை எவ்வளவுதான் அதிகரித்தாலும், அதிலுள்ள பெஞ்சுகளும், கைப்பிடிச் சுவர்களும், சுவரும் சூடே ஆகாது; இதனால் குளிப்பவர்கள் அவற்றை தொடும்போது சூடுபட்டுக்கொள்ள மாட்டார்கள்.
பின்லாந்தில், 3 பேரில் ஒருவருக்கு ஒரு சௌனா இருக்கிறதென கணக்கிடப்பட்டிருக்கிறது; அந்தளவுக்கு சௌனா பின்லாந்து நாட்டு கலாச்சாரத்தின் பாகமாகியிருக்கிறது. பெரும்பாலான பின்லாந்துக்காரர்கள் வாரத்திற்கு ஒருமுறை சௌனா பாத் எடுக்கிறார்கள். கோடை விடுமுறையை ஜாலியாக அனுபவிக்கும்போது—பெரும்பாலும் ஒரு ஏரியின் அருகே—அநேக ஜனங்கள் ஏறக்குறைய தினந்தோறும் சௌனா பாத் எடுக்கிறார்கள்! இந்தக் குளியலை எடுப்பவர்கள் பொதுவாக சூடான சௌனா பாத் எடுத்தவுடனே வெளியே வந்து குளத்தின் ‘ஜில்’ தண்ணீரில் நீச்சலடிப்பார்கள்; பிறகு மறுபடியும் சூடான சௌனா பாத் எடுப்பார்கள்; இப்படி மாறி மாறி சூடான குளியலையும் ஜில்லென்ற குளியலையும் வருஷம் முழுக்க விரும்பி அனுபவிப்பவர்களுக்காகவே, உறைந்த தண்ணீருள்ள குளங்களுக்கு அருகே எக்கச்சக்கமான சௌனாக்கள் கட்டப்பட்டிருக்கின்றன; அந்தக் குளங்களில் குதித்து குளிப்பதற்காக அதன் ஒரு பாகத்திலுள்ள ஐஸ் கட்டிகள் எப்போதும் அகற்றப்பட்டே இருக்கும்.
வேர்வைக் குளியலால் வரும் சரீர நன்மைகள்
சௌனா பாத் உடலுக்கு நன்மையளிக்கிறதென்று காலங்காலமாக பின்லாந்து நாட்டவர்கள் அதை பிரபலப்படுத்தி வந்திருக்கிறார்கள். பின்லாந்து பழமொழி ஒன்று இவ்வாறு வழங்குகிறது: “சௌனா—ஒரு ஏழையின் நிவாரணி.” உண்மைதான், 19-ம் நூற்றாண்டு வரையாக, சௌனா ஒருவித ஆஸ்பத்திரி போலவும் குழந்தைப்பேறு வார்டு போலவும் உபயோகிக்கப்பட்டது.
சௌனா பாத், பொதுவாக 10-லிருந்து சுமார் 15 நிமிடம் வரை நீடிக்கும்; அதன் வெப்பநிலை 80-லிருந்து 100 டிகிரி செல்ஷியஸ் ஆகும். அநேகர் சௌனா பாத் எடுத்ததுமே கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்பார்கள் அல்லது தண்ணீரில் குளிப்பார்கள், பிறகு மறுபடியும் சௌனா பாத் எடுப்பார்கள்; இப்படி திரும்பத் திரும்ப நிறைய முறை சௌனா பாத் எடுப்பது பலருக்கு ரொம்பவுமே இஷ்டம். இந்த சௌனா பாத் எடுக்கும்போது உடம்பு சூடாவதால், இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது; சருமத்திலுள்ள நுண்ணிய துவாரங்கள் திறக்கப்பட்டு லாக்டிக் அமிலம் போன்ற கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன, இதனால் உடல் சுத்தமாவதோடு உடலிலுள்ள நச்சுத்தன்மையும் நீங்குகிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு ஏற்படும் வலிகளை தணிப்பதற்காகவும், அலர்ஜி, சளி, ஸைனஸ், மூட்டு வலி ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்காகவுமே அநேகர் சௌனா பாத் எடுக்கிறார்கள். இந்த மருத்துவ நலன்களைப் பற்றி வித்தியாசமான அபிப்பிராயங்கள் இருந்தாலும், இப்படிப்பட்ட குளியல் ஆரோக்கியமாக இருப்பது போன்ற உணர்வையும், உடல் லேசாகி, சுத்தமாகி விட்டது போன்ற உணர்வையும் கொடுக்கிறது என சௌனா ஆர்வலர்கள் சொல்கிறார்கள். வேலையெல்லாம் முடிந்த பிறகு, நாள் முடிவில் சௌனா பாத் எடுப்பதை சிலர் விரும்புகிறார்கள்; ஏன்? ஏனெனில் அது ஒருவிதத்தில் உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்கிறது. மற்றவர்களோ அதை பகல் வேளைகளில் எடுக்க விரும்புகிறார்கள்; ஏன்? மாறி மாறி வெப்பமும் சூடும் உடம்பில் படும்போது சுறுசுறுப்பு கிடைப்பதாக உணருகிறார்கள். a
முன்னொருபோதும் இல்லாதளவுக்கு, உலகம் முழுக்க சௌனாக்கள் பிரபலமாகி வருகின்றன—முக்கியமாக, ஹோட்டல்களிலும் ஸ்போர்ட்ஸ் க்ளப்களிலும். ஆனால் ஓர் எச்சரிக்கை: சில நாடுகளில் “சௌனா” என்ற வார்த்தை விபச்சார விடுதிகள் உள்ள இடங்களை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, நீங்கள் விஜயம் செய்யும் சௌனா கண்ணியமான நிஜ சௌனாவா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
சில இடங்களில் சௌனாக்கள் சரியாக இயக்கப்படுவதில்லை. உதாரணமாக, போதியளவு கற்கள் போடப்படாத ஒரு அடுப்பின்மீது தண்ணீர் வீசப்படும்போது ஒருவேளை குபுகுபுவென்று நீராவி மேல்நோக்கி எழலாம்; இதனால் குளிப்பவர் அசௌகரியமாக உணரலாம். அதுமட்டுமல்ல, நெருப்புக்குள்ளோ அல்லது மின்சார கம்பிகளிலோ தண்ணீர் கசிய ஆரம்பித்து விடலாம்; காலப்போக்கில், அடுப்பே பாழாகி விடும். ஆகவே, அதன் தயாரிப்பாளர்கள் கொடுக்கும் அறிவுரைகளை கடைப்பிடிப்பதில் எப்போதும் கவனம் செலுத்துங்கள்; சௌனா சுத்தமாக வைக்கப்பட்டிருக்கிறதா என்றும் அது நன்கு காற்றோட்டமாக இருக்கிறதா என்றும் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட ஒரு சௌனா உங்கள் வீட்டருகே இருக்குமானால், இந்தப் பழங்கால குளியல் முறையை, . . . இல்லையில்லை . . . இந்த நவீன குளியல் முறையை ஒருவேளை நீங்கள் ட்ரை செய்து பார்க்கலாம். (g03 7/22)
[அடிக்குறிப்பு]
a நீங்கள் வயதானவராகவோ கர்ப்பிணியாகவோ இருதய நோய் உள்ளவர்களாகவோ இருந்தால், சௌனா பாத் எடுப்பதற்கு முன் ஒரு டாக்டரை கலந்தாலோசியுங்கள்.
[பக்கம் 23-ன் பெட்டி/படங்கள்]
சௌனா குளியலுக்கு இதோ சில டிப்ஸ்
● சௌனா பாத் எடுப்பதற்கு முன் மது அருந்துவதையும் அதிகமாக சாப்பிடுவதையும் தவிருங்கள்.
● முதலில் குளியுங்கள்.
● ஒரு டவல் மீது உட்காருங்கள்.
● பெஞ்சின் உயரம் குறையக் குறைய, வெப்பமும் குறையும் என்பதை ஞாபகம் வையுங்கள்.
● காற்றிலுள்ள ஈரப்பதத்தை சரி செய்வதற்காக அடுப்பிலுள்ள கற்கள் மீது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளியுங்கள்.
● படுபயங்கர வெப்பத்தை யார் சகிக்க முடியும் என்றும், நீண்ட நேரத்திற்கு யார் அதில் இருக்க முடியும் என்றும் பார்ப்பதற்காக நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளாதீர்கள்; அது ஆபத்தானது.
● கடைசியாக குளிர்ந்த நீரில் குளியுங்கள்.
[பக்கம் 21-ன் படம்]
ரோமிலுள்ள கரகலா குளியலறை கட்டடங்கள்
[படத்திற்கான நன்றி]
Courtesy of James Grout/ Soprintendenza Archeologica di Roma
[பக்கம் 21-ன் படம்]
“டெமெஸ்கால்” வேர்வைக் குளியலறை