அனுபவமுள்ள விமானியிடமிருந்து பயண டிப்ஸ்
அனுபவமுள்ள விமானியிடமிருந்து பயண டிப்ஸ்
விமானத்தில் பயணிப்பது என்றாலே எனக்கு எப்போதும் கொள்ளை ஆசை. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வெகு சீக்கிரத்தில் போய் சேருவதற்கு இது உதவுகிறது; அதுமட்டுமா? மப்பும் மந்தாரமுமான ஒரு நாளில் மேகக்கூட்டத்தை துளைத்துக் கொண்டுபோய், அதற்கு மேலே தகதகக்கும் சூரிய வெளிச்சத்தில் பறக்க உதவுகிறது. நான் முதன்முதலில் விமானத்தில் பயணித்தது 1956-ல்; அப்போது சின்னப் பையனாக இருந்தேன்; அன்றிலிருந்து இன்று வரையாக விமானத்தில் பறக்கும் ‘த்ரில்லை’ அனுபவித்து வருகிறேன். விமானப் பயணத்தில் எனக்கு அத்தனை ஆர்வம் இருந்ததால் அதுவே என் வாழ்க்கைத் தொழில் ஆனது; ஆம், நான் ஒரு கைதேர்ந்த விமானியானேன்; விமான விபத்து சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரியாகக்கூட வேலை பார்த்தேன்.
விமானப் பயணம் எந்தளவுக்கு பாதுகாப்பானது? விமானத்தில் பயணிக்க உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது, நீங்கள் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?
பாதுகாப்பான இந்தப் பயணத்தை மேலும் பாதுகாப்பாக்குதல்
ஒவ்வொரு வருடமும் உலகமுழுவதிலும், கிட்டத்தட்ட 18,000 விமானங்கள், ஆயிரக்கணக்கான விமான நிலையங்களை விட்டு புறப்பட்டுக் கொண்டும் தரையிறங்கிக் கொண்டும் இருக்கின்றன; 160 கோடிக்கும் அதிகமான பயணிகளை அவரவர் போக வேண்டிய இடங்களுக்கு சுமந்து செல்கின்றன—இத்தனைக்கும் அதிக விபத்துகள்கூட ஏற்படுவதில்லை. சொல்லப்போனால், கார்களில் பயணம் செய்வதைவிட விமானத்தில் பயணிப்பது 25 மடங்கு அதிக பாதுகாப்பானது என்று லண்டனின் பிரபல இன்ஷூரன்ஸ் கம்பெனியான லாயிட்ஸ் மதிப்பிடுகிறது. அப்படியானால் இந்தக் கணக்கின்படி, உங்கள் பயணத்திலேயே மிக மிக ஆபத்தான கட்டம் எது தெரியுமா? விமான நிலையத்திற்கு நீங்கள் வரும்போதும், போகும்போதும்தான். என்றாலும், விமானத்தில் பயணிக்கையில் ஒரு சில ஞானமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் ஓரளவு பாதுகாப்பான இந்தப் போக்குவரத்தை மேலும் பாதுகாப்பானதாக ஆக்க உங்களால் முடியும்.
● ஏர்லைன்ஸை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்: எல்லா ஏர்லைன்ஸ்களுக்கும் ஒரேமாதிரியான பாதுகாப்பு ரெக்கார்டு இல்லை. பல வருடங்களாக இயங்கி வரும் ஏர்லைன்ஸ்களே பொதுவாக பாதுகாப்பானவை என்று சொல்லலாம். அவை நவீன விமானங்களை உபயோகிப்பதாலும் பயணிகளை பத்திரமாக அழைத்து செல்வதாலும், காலங்காலமாக நன்கு பராமரிக்கப்பட்டு வருவதாலும் நற்பெயரை சம்பாதித்திருக்கின்றன.
● நன்கு யோசித்து உடையை தேர்ந்தெடுங்கள்: விமான விபத்தில் உயிர்தப்புகிறவர்கள் அதிலிருந்து வெளிப்படும் நெருப்பிலும் புகையிலும் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. ஆகவே முழுக்கை சட்டை, பேன்ட்டு அல்லது நீளமான ஸ்கர்ட் அணிவதே சிறந்தது; அப்போதுதான் தீயிலிருந்தும், உஷ்ணத்திலிருந்தும் உங்கள் சருமத்தை நன்கு பாதுகாக்க முடியும். பருத்தி அல்லது கம்பளி உடைகள் நல்ல விதத்தில் பாதுகாப்பளிக்கும்; ஆனால், நைலான் போன்ற சிந்தடிக் துணிகள்மீது அனலடிக்கும்போது, அவை பெரும்பாலும் உருகிவிடுகின்றன அல்லது சுருங்கிப் போய் சருமத்தோடு ஒட்டிக்கொள்கின்றன; இதனால் இன்னும் படுமோசமான தீக்காயங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. தோல் உடைகள்கூட சூடுபடும்போது சுருங்கிவிடலாம், ஆகவே பயணம் செய்கையில் அவற்றை அணிவது சரியல்ல. ஒரேவொரு உடையை போட்டுக்கொள்வதைவிட ஒன்றன் மீது ஒன்றாக நிறைய உடைகளை அணிந்திருப்பது அதிக பாதுகாப்பளிக்கும். வெப்பத்தை தடுப்பதில் டார்க் கலர்களைவிட லைட் கலர்களே மேலானவை. ஹீல்ஸ் இல்லாத ஷூக்கள்—லேஸ்களோடு இருந்தால் இன்னும் நல்லது—உங்கள் கால்களைவிட்டு பெரும்பாலும் நழுவவே நழுவாது, அதோடு காலில் ஏதாவது வெட்டுக்காயம் ஏற்படாமல் இருப்பதற்கும் தீக்காயங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் அவை உதவும். பருத்தி அல்லது கம்பளியாலான சாக்ஸுகள் சிந்தடிக் சாக்ஸுகளைவிட மேலானவை.
● பாதுகாப்பு விளக்கவுரைக்கு செவிகொடுங்கள்: விமானம் புறப்படுவதற்கு முன், விமான பணியாளர்கள் உங்களிடம் பாதுகாப்பைப் பற்றி ஒரு விளக்கவுரையை கொடுப்பார்கள். ஒருவேளை விபத்து நேரிட்டால், அந்த விளக்கவுரையில் சொல்லப்பட்ட குறிப்புகளை ஞாபகப்படுத்திக் கொண்டு அந்த விமானத்திலிருந்து நீங்கள் தப்ப வேண்டியிருக்கலாம். ஆகவே சொல்லப்படும் குறிப்புகளை கவனமாக கேளுங்கள். கனடா நாட்டு விமானப் பயணிகளில் 29 சதவீத பயணிகள் மட்டுமே விமானத்திலுள்ள பாதுகாப்பு அட்டையை படித்ததாகவோ ஏறிட்டுப் பார்த்ததாகவோ ஒரு சர்வே காட்டியது. பாதுகாப்பு ஆலோசனைகளை வாசிப்பதற்கு சிறிது நேரத்தையாவது ஒதுக்குங்கள்; குறிப்பாக கதவுகளையோ ஜன்னல்களையோ எப்படி திறப்பது என்பது பற்றிய குறிப்புகளை வாசியுங்கள், ஏனெனில், கதவருகே சென்றடையும் முதல் நபர் நீங்களாக இருக்கலாம். ஒருவேளை சரியாக பார்க்க முடியாதபடி இருட்டாக இருந்தாலோ புகைமண்டலமாக இருந்தாலோ கதவை எப்படி கண்டுபிடிப்பீர்கள் என்பதை முன்கூட்டியே சிந்தித்துப் பாருங்கள். இதற்கு ஒரு எளிய வழி: உங்களுக்கும் கதவுக்கும் இடையே எத்தனை சீட் வரிசைகள் இருக்கின்றன என்பதை எண்ணி வைத்துக் கொள்வதே. இப்படி செய்தால், கும்மிருட்டிலும்கூட உங்களால் வழியைக் கண்டுபிடித்து, எமர்ஜென்சி டோரை திறக்க முடியும்.
● கையில் எடுத்துச் செல்லும் லக்கேஜை குறையுங்கள்: “விமானத்திலுள்ள சீட்டுகளுக்கு மேலிருக்கும் ஷெல்ஃப்புகள் சரியாக மூடப்படாததாலோ மற்ற பயணிகள் அவற்றை திறந்துவிடுவதாலோ, அவற்றிலிருந்து விழும் பொருட்களால் [பயணிகள்] அடிக்கடி ஆபத்திற்குள்ளாகிறார்கள்; இதனால் அவர்களுக்கு தலையில் பலத்த காயம் மட்டுமல்ல சிலசமயம் மரணம்கூட ஏற்பட்டுவிடுகிறது” என ஃபிளைட் இன்டர்நேஷனல் பத்திரிகை குறிப்பிடுகிறது. ஆகவே, கனமான லக்கேஜ்ஜை கையில் எடுத்துச் செல்வது பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கலாம் என்பதை நினைவில் வையுங்கள். உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகையில் உங்களுடைய எல்லா லக்கேஜையும் அங்கேயே விட்டுவிடுங்கள். உங்கள் உயிரைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருங்கள்! லக்கேஜ் போனால் போகட்டும், பிறகு வாங்கிக் கொள்ளலாம்.
அவசர நிலை ஏற்படுகையில்
நெருப்பு, புகை மண்டலம், விஷ வாயு ஆகியவை மூளுகையில் விமானத்தைவிட்டு வெளியேறுவது அவ்வளவு எளிதாக இருக்காது; அது படு ஆபத்தாக இருக்கலாம். ஒரு விபத்தை பற்றிய அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டது: “விமானம் தரை இறங்கியபோது, விமானத்திற்குள் எதையுமே சுத்தமாக பார்க்க முடியவில்லை; [புகை மண்டலமாக இருந்ததால்] ஒரு அடி உயரத்துக்கு சற்று மேலிருந்து ஒன்றுமே கண்ணுக்கு தெரியவில்லை. அந்த விபத்தில் தப்பியவர்கள், எமர்ஜென்சி டோர்களை கண்டுபிடிப்பதற்கு அந்த நேரத்தில் தங்களுக்கு தெம்பும் இல்லை மனோதிடமும் இல்லை என்பதாக குறிப்பிட்டார்கள்.” அவர்கள் உயிர் பிழைப்பதற்கு விமானத்தைவிட்டு சீக்கிரமாக வெளியேற வேண்டியிருந்தது.
விமானத்தைவிட்டு பயணிகள் சீக்கிரமாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற உதவுவதற்காக விமான பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அவர்கள் கூறுகிறபடியே உடனடியாக செயல்படுங்கள். இப்படியெல்லாம் செய்தாலும்கூட, சில நேரங்களில், திட்டமிட்டபடி எல்லா காரியங்களும் நடைபெறுவதில்லை. ஒலிபெருக்கி சாதனங்களில் கோளாறு ஏற்பட்டுவிடலாம், விமான பணியாளர்களுக்கு காயம் ஏற்பட்டுவிடலாம், குழப்பங்கள் ஏதாவது ஏற்பட்டு விடலாம்; அதோடு, கூச்சலினாலும், உஷ்ணத்தினாலும், புகையினாலும் விமான பணியாளர்களின் கடும் முயற்சியும்கூட பலனளிக்காமல் போய்விடலாம். இன்னொரு பிரச்சினை, ஏர்லைன்ஸ் பணியாளர்கள் பேசும் பாஷை உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம், இதனால் உங்களுக்கும் விமான பணியாளர்களுக்கும் இடையே நல்ல பேச்சுத்தொடர்பு இல்லாமல் போய்விடலாம்.
எதிர்பாராமல் ஏற்படும் அவசர நிலையிலிருந்து உயிர் தப்ப வேண்டுமானால், முதலாவது உங்களுக்குத் தேவை மன உறுதி என்பதாக விபத்துகளைப் பற்றிய ஒரு அலசல் ரிப்போர்ட் காண்பிக்கிறது. தப்பிக்கும் வழிகளைக் குறித்து நீங்கள் தெளிவான விதத்தில் திட்டமிட்டிருக்க வேண்டும்; உங்களை காப்பாற்றிக் கொள்வதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். உங்களோடு பயணிப்பவர்களை, குறிப்பாக பிள்ளைகளை அல்லது முதியோர்களை, நினைவில் வைத்துக்கொண்டு தப்புவதற்கான வழியை திட்டமிடுங்கள்; விமானத்தைவிட்டு வெளியேறும் சமயத்தில் ஒருவருக்கொருவர் உதவுவதற்காக பிரிந்து போய்விடாமல் சேர்ந்தே இருப்பது எப்படி என்றும் திட்டமிடுங்கள். “புகைமண்டலத்திலிருந்து நீங்கள் வெளியேற வேண்டியிருந்தால், உங்களோடு பயணிப்பவர்கள் ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொள்ள சொல்லுங்கள். உங்கள் பெல்ட்டை அவர்கள் நன்றாக பிடித்துக் கொண்டிருந்தால்தான் அவர்களால் பத்திரமாக வெளியேற முடியும்” என ஃபிளையிங் சேஃப்டி என்ற பத்திரிகை பரிந்துரைக்கிறது. ஒரு அவசர ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்ய நீங்கள் உத்தேசமாக இருக்கிறீர்கள் என்பதை உங்களோடு பயணம் செய்யும் நபரிடம் அல்லது நபர்களிடம் சொல்லி வையுங்கள்.
எல்லா விதமான போக்குவரத்துகளிலும் ஏதோவொரு ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நவீன பயணிகள் விமானங்களோ பல அபாயங்களை தவிர்க்க உதவுகின்றன; அதோடு, போக வேண்டிய இடங்களில் பயணக் களைப்பே தெரியாமல் நம்மை பூப்போல இறக்கி விடுகின்றன. இதனால் நாம் வேலைக்கு உடனே கிளம்ப முடிகிறது அல்லது சந்தோஷமாய் விடுமுறையை கழிக்க முடிகிறது. ஆகவே, வீணாக கவலைப்படாமல் விமானப் பிரயாணத்திற்கு தயாராகுங்கள். சாவகாசமாக பயணியுங்கள், ஜாலியாக ‘பறந்து போங்கள்’—நான் சதா இப்படித்தான் பறந்து கொண்டிருக்கிறேன்.—அளிக்கப்பட்டது. (g03 7/08)
[பக்கம் 25-ன் படம்]
அவசர நிலை ஏற்படுகையில் பயணிகளை வெளியேற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது
[பக்கம் 25-ன் படம்]
பாதுகாப்பு விளக்கவுரைக்கு செவிகொடுங்கள்