Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இனப் பகைமை நியாயமானதா?

இனப் பகைமை நியாயமானதா?

பைபிளின் கருத்து

இனப் பகைமை நியாயமானதா?

நீங்கள் ஒரு குறிப்பிட்ட இனப் பிரிவை சேர்ந்தவர் என்பதாலேயே யாரேனும் உங்களை தந்திரக்காரராக, முரடராக, முட்டாளாக, ஒழுக்கங்கெட்டவராக நினைத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? a நிச்சயமாகவே உங்களுக்கு கோபம் வரும். வேதனை தரும் விஷயம் என்னவெனில், எண்ணிலடங்கா ஆட்களின் அனுபவம் இதுதான். இதுமட்டுமா, இன்ன இனம் அல்லது தேசம் என்ற ஒரே காரணத்துக்காக காலங்காலமாகவே எண்ணிறந்த அப்பாவி மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள், கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால், இன்று நடந்துவரும் பெரும்பாலான போர்களில் மக்கள் கொல்லப்படுவதற்கு அடிப்படை காரணமே இனப் பகைமைதான். இருந்தாலும், இத்தகைய வன்முறையை ஆதரிப்பவர்களில் அநேகர், உண்மையில் கடவுளையும் பைபிளையும் நம்புவதாக சொல்லிக்கொள்பவர்களே. இனப் பாகுபாடு நமக்குள் குடியிருக்கும் ஒன்று, அதாவது மனித இயல்பின் பாகம் என சொல்பவர்களும் உண்டு.

இத்தகைய இனப் பகைமையை பைபிள் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறதா? வித்தியாசமான கலாச்சாரத்தையோ இனத்தையோ சேர்ந்தவர்களை பகைப்பது சரிதான் என நியாயப்படுத்தும் சூழ்நிலைகள் உள்ளனவா? இனப் பகைமையே இல்லாத ஓர் எதிர்காலம் வருமென்ற நம்பிக்கை ஏதேனும் உள்ளதா? இதைப் பற்றிய பைபிளின் கருத்து என்ன?

தங்கள் செயல்களால் நியாயந்தீர்க்கப்படுகிறார்கள்

மனிதகுலத்திடம் ஆரம்ப காலத்தில் கடவுள் நடந்து கொண்ட விதத்தை மேலோட்டமாக பார்ப்பது ஒருவரை தவறான முடிவுக்கு, அதாவது இனப் பகைமையை கடவுள் உண்மையிலேயே ஆதரித்தார் என்ற முடிவுக்கு வரச் செய்யலாம். கோத்திரங்களையும் தேசங்களையும் பூண்டோடு அழித்துப்போட்டவராக கடவுளை பைபிள் பதிவுகள் பலவும் சித்தரித்துக் காட்டவில்லையா? ஆம், சித்தரித்துக் காட்டுகின்றன; ஆனால், அப்பதிவுகளை கவனமாக ஆராய்ந்து பார்க்கையில், மக்களின் இனப் பின்னணியின் காரணமாக அல்ல, கடவுளுடைய சட்டங்களை அவமதித்து ஒழுக்கங்கெட்ட நடத்தையில் ஈடுபட்டதால்தான் அவர்களை அவர் தண்டித்தார் என்பது புலப்படுகிறது.

உதாரணமாக, இழிவான பாலியல் பழக்கங்களிலும் பேய்த்தனமான மதச் சடங்குகளிலும் ஈடுபட்டதால் கானானியரை யெகோவா தேவன் கண்டித்தார். பொய்க் கடவுட்களுக்கு தங்கள் பிள்ளைகளையும்கூட அவர்கள் தீயில் பலி கொடுத்தார்களே! (உபாகமம் 7:5; 18:9-12) ஆனாலும் சில சமயங்களில், கானானியர் சிலர் கடவுள் மீது விசுவாசம் வைத்து மனந்திரும்பினார்கள். அதனால் யெகோவாவும் அவர்களை அழிக்காமல் காப்பாற்றி, ஆசீர்வதித்தார். (யோசுவா 9:3, 25-27; எபிரெயர் 11:31) ராகாப் என்ற கானானிய பெண் வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் மூதாதையரில் ஒருவராகவும் ஆனாள்.​—மத்தேயு 1:5.

இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்த நியாயப்பிரமாணம், அவர் பட்சபாதமுள்ளவரல்ல என்பதைக் காட்டுகிறது. மாறாக, எல்லா மக்களுடைய நலனிலும் அவர் உண்மையான அக்கறை காட்டுகிறார். இரக்கத்துடன் இஸ்ரவேலருக்கு அவர் கொடுத்த கட்டளையை லேவியராகமம் 19:33, 34 வசனங்களில் காணலாம்: “யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்த வேண்டாம். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.” இதேவிதமான கட்டளைகள் பைபிளில் யாத்திராகமம், உபாகமம் புத்தகங்களிலும் காணப்படுகின்றன. இனப் பகைமையை யெகோவா நியாயமானதென கருதவில்லை என்பது இதிலிருந்து தெள்ளத்தெளிவாகிறது. இன ஒற்றுமையையே அவர் வலியுறுத்தினார்.

இயேசு இன சமரசத்தை ஆதரித்தார்

இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில், யூதர்களும் சமாரியர்களும் ஒருவருக்கொருவர் எப்போதும் வெறுப்பு காட்டி வந்தனர். ஒரு சந்தர்ப்பத்தில், தங்குவதற்கு இடம் தேடி ஒரு சமாரிய கிராமத்துக்கு இயேசு சென்றபோது, அவர் ஒரு யூதன், எருசலேமுக்கு செல்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அங்குள்ள மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே அன்று இருந்த வெறுப்பு மனப்பான்மைகள் இயேசுவின் சீஷர்களுக்கும் இருந்திருக்கலாம்; அதனால்தான், “வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா?” என்று அவரிடம் கேட்டார்கள். (லூக்கா 9:51-56) சீஷர்களின் வெறுப்பு மனப்பான்மைக்கு அவர் இணங்கினாரா? இல்லை, அதற்கு மாறாக அவர்களை அதட்டி, சண்டை சச்சரவுக்கு இடங்கொடுக்காமல் தங்குமிடம் தேடி வேறொரு கிராமத்திற்கு அமைதலாக சென்றுவிட்டார். அந்த அனுபவத்திற்கு சற்று பின்னரே நல்ல சமாரியனைப் பற்றிய உவமையை இயேசு சொன்னார். இது, ஒருவரின் இனப் பின்னணி அவரை ஒரு விரோதியாக ஆக்குவதில்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துக்காட்டியது. சொல்லப்போனால், அவர் ஒரு மிகச் சிறந்த அயலானாக இருக்கலாம்!

கிறிஸ்தவ சபையில் இனப் பிரிவுகள்

இயேசு பூமியில் ஊழியம் செய்தபோது, முக்கியமாக தம் சொந்த ஜனங்களை சீஷராக்குவதிலேயே கவனம் செலுத்தினார். ஆனால், நாளடைவில் மற்றவர்களும் தம் சீஷர்களாக ஆவார்கள் என அவர் குறிப்பிட்டார். (மத்தேயு 28:19) எல்லா இனப் பிரிவைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்ளப்படுவார்களா? ஆம், ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்! “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்” என அப்போஸ்தலன் பேதுரு குறிப்பிட்டார். (அப்போஸ்தலர் 10:34, 35) பிற்பாடு, அதே கருத்தை அப்போஸ்தலன் பவுலும் வலியுறுத்தினார்; ஒருவரின் இனப் பின்னணி கிறிஸ்தவ சபையில் ஒரு பொருட்டே அல்ல என்பதை அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.​—கொலோசெயர் 3:11.

எல்லா இனப் பிரிவை சேர்ந்தவர்களையும் கடவுள் ஏற்றுக்கொள்கிறார் என்பதற்கு மேலுமான குறிப்பு வெளிப்படுத்துதல் புத்தகத்தில் காணப்படுகிறது. கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலால் அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தைப் பார்த்தார்; அதில், “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த . . . திரளான கூட்டமாகிய ஜனங்கள்” கடவுளிடமிருந்து இரட்சிப்பைப் பெற்றதை அவர் பார்த்தார். (வெளிப்படுத்துதல் 7:9, 10) இந்தத் ‘திரள் கூட்டம்’ புதிய மனித சமுதாயத்திற்கு அஸ்திவாரமாக அமையும்; அந்த சமுதாயத்தில் எல்லா பின்னணியினரும் கடவுள் மீதுள்ள அன்பால் ஒன்றுபட்டவர்களாய் சமாதானத்துடன் சேர்ந்து வாழ்வர்.

அதற்கிடையில், இனப் பின்னணியின் காரணமாக மற்றவர்களை நியாயந்தீர்க்கத் தூண்டும் மனப்பான்மையை கிறிஸ்தவர்கள் விட்டொழிக்க வேண்டும். ஒவ்வொருவரையும் இன வேற்றுமை எனும் கண்ணோட்டத்தில் பார்க்காமல், கடவுள் பார்க்கும் விதமாகவே நாம் பார்க்க வேண்டும்; அதுவே நியாயமான, அன்பான செயல். உங்களை இதேவிதமாக பார்க்க வேண்டுமென்று விரும்புவீர்கள் அல்லவா? “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என இயேசு நமக்கு சரியாகவே அறிவுரை கொடுக்கிறார். (மத்தேயு 7:12) இனப் பகைமை இல்லாத வாழ்க்கை இனிமையானது. அது மனதுக்கு அதிக நிம்மதி தருகிறது. மற்றவர்களோடு சமாதானமாக வாழவும் உதவுகிறது. மிக முக்கியமாக பாரபட்சமற்ற படைப்பாளராகிய யெகோவா தேவனுடைய இந்த குணத்திற்கு இசைவாக நாமும் வாழ வழிசெய்கிறது. இனப் பகைமையை விட்டொழிப்பதற்கு எத்தகைய மறுக்க முடியாத ஆதாரத்தை இது அளிக்கிறது! (g03 8/08)

[அடிக்குறிப்பு]

a “இனப் பிரிவு” என இக்கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது ஒரே இனத்தை, தேசத்தை, குலத்தை அல்லது கலாச்சார பின்னணியைச் சேர்ந்த மக்களை குறிக்கிறது.