Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயற்கைப் பேரழிவுகளுக்கு முடிவு!

இயற்கைப் பேரழிவுகளுக்கு முடிவு!

இயற்கைப் பேரழிவுகளுக்கு முடிவு!

“வசதி, வேகம், லாபம் ஆகியவற்றை பேராசையோடு பெறத் துடிக்கும் இன்றைய மனிதன் பூமிக்கு மதிப்பு காட்டுவதில்லை.” இந்தக் கிரகத்தைக் காப்பாற்ற 5000 நாட்கள் என்ற ஆங்கில புத்தகத்தின் அட்டையில் இப்படித்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. மனிதனுடைய பேராசையின் விளைவுகளை நாம் இப்போது எதிர்ப்படுகிறோம். புவிச்சூடு அதிகரிப்பதைப் பற்றிய கோட்பாடுகள் உண்மையோ பொய்யோ, ஒன்று மட்டும் நிச்சயம்​—⁠மனிதன் நம் அழகிய கிரகத்தை பாழாக்கி வருகிறான். கடவுள் ‘பூமியை கெடுப்பவர்களை கெடுப்பார்’ என்ற பைபிளின் வாக்குறுதியே நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.​—வெளிப்படுத்துதல் 11:⁠18.

இன்றைய ஊழல் மிக்க மனித ஆட்சிமுறைக்கு முடிவுகட்டி புத்தம் புதிய ஒழுங்குமுறையை கடவுள் ஏற்படுத்துவார். ‘இதெல்லாம் முட்டாள்தனமான நம்பிக்கை’ என உடனடியாக சொல்லிவிடாதீர்கள். இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: பூமியின் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட தேவைகளை அதன் படைப்பாளரைவிட யார் அதிகம் தெரிந்து வைத்திருக்க முடியும்? அவர் இந்தக் கிரகத்தின் சொந்தக்காரராக, அதன் நலனில் அக்கறையுடையவராக இருக்க மாட்டாரா? அக்கறையுடையவராக இருக்கிறார் என்று பைபிள் தெளிவாக காட்டுகிறது; யெகோவா, ‘பூமியை வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர்’ என ஏசாயா 45:18 சொல்கிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்ற கடவுளால் தலையிட முடியும், அவர் கண்டிப்பாக தலையிடுவார்.

பூமியை நிர்வகிக்க ஒரு புதிய அரசாங்கத்தை அல்லது ராஜ்யத்தை ஏற்படுத்துவதன் மூலம் கடவுள் இதைச் செய்வார். மாதிரி ஜெபத்தில் “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று கிறிஸ்தவர்கள் ஜெபிக்கும்போது இந்த அரசாங்கம் வர வேண்டுமென்றே கேட்கிறார்கள். (மத்தேயு 6:9, 10) கடவுளுடைய ராஜ்யம் அல்லது அரசாங்கம் பூமியின் சிக்கலான இயற்கை சுழற்சிகளைப் பற்றி நன்கு அறிந்து அதற்கேற்றாற்போல் செயல்படும். இவ்வாறு தூய்மைக்கேட்டினாலும் சுற்றுச்சூழல் துஷ்பிரயோகத்தினாலும் பாழாக்கப்பட்ட பகுதிகளை அது மறுபடியும் சீர்படுத்தும். ஏசாயா 35:1, 6 இவ்வாறு சொல்கிறது: ‘வனாந்தரம் . . . புஷ்பத்தைப்போல செழிக்கும். . . . வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.’

கடவுள் தலையிடும் வரை

2002-⁠ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளுக்குப் பிறகு, மேற்கு ஜெர்மனியின் முன்னாள் முதல்வர் ஹெல்முட் ஷ்மிட் இவ்வாறு எழுதினார்: “இயற்கை சக்திகள் அணைகளை உடைப்பதை யாராலும் தடுக்க முடியாது. பேரழிவுகள் தொடர்ந்து ஏற்படுகின்றன.” இது உண்மைதான். இயற்கை சீறியெழும்போது, மனிதர்களால் ஓரளவுக்குத்தான் சமாளிக்க முடிகிறது. பேரழிவுகளால் துயரம் ஏற்பட்டாலும் நன்மைகளும் விளைவடைகின்றன. மற்றவர்களிடம் அன்பும் அக்கறையும் காட்ட அவை மக்களை தூண்டுகின்றன. (மாற்கு 12:31) உதாரணத்திற்கு, ஐரோப்பாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது சிலர் இப்படித்தான் அன்பும் அக்கறையும் காட்டினார்கள். ஒரு செய்தித்தாள் இவ்வாறு குறிப்பிட்டது: “[நிவாரண] பணியில் ஈடுபட ஜெர்மனியின் எல்லா பகுதிகளிலிருந்தும் வாலண்டியர்கள் ஆர்வத்தோடு வந்திருக்கிறார்கள். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு நடந்த வாலண்டியர் பணியில் இதுதான் மிகப் பிரமாண்டமானது.”

அந்த வாலண்டியர்களில் அநேகர் யெகோவாவின் சாட்சிகள். வித்தியாசமான நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள் செய்த நிவாரணப் பணிகளைப் பற்றிய அறிக்கைகளை நம் பிரசுரங்கள் அவ்வப்போது வெளியிடுகின்றன. இந்தக் கிறிஸ்தவர்களின் நடத்தை, வரவிருக்கும் கடவுளுடைய அரசாங்கத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காட்டுகிறது; அங்கே பேராசையும் சுயநலமும் அல்ல, ஆனால் அன்பும் சகோதர நேசமுமே நிலவும்.​—ஏசாயா 11:9. a

‘நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப் பண்ணுவேன்’ என்று பூர்வத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு கடவுள் வாக்குறுதி அளித்தார்; இது கிறிஸ்தவர்களுக்கும் ஆறுதல் தருகிறது. (உபாகமம் 11:14) கடவுளுடைய புதிய உலகில் வாழும் பாக்கியத்தைப் பெறுவோரும் அந்த வாக்குறுதியின் நிறைவேற்றத்தைக் காண்பார்கள்; அங்கே இயற்கை பேரழிவுகளின் சுவடுகூட தெரியாது. (g03 8/08)

[அடிக்குறிப்பு]

a கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய பைபிளின் வாக்குறுதியைப் பற்றி இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால் உள்ளூரில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடன் தயவுசெய்து தொடர்புகொள்ளுங்கள் அல்லது இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்பாளர்களுக்கு எழுதுங்கள்.

[பக்கம் 9-ன் பெட்டி/படம்]

கச்சிதமான வானிலைக் கட்டுப்பாடு

கடவுளுடைய புதிய உலகில், திடீரென புயல் அடித்து வீட்டை அல்லது பயிர்களை பாழாக்கிவிடுமோ என்று மக்கள் பயப்பட வேண்டியிருக்காது. (2 பேதுரு 3:13) வானிலையை கட்டுப்படுத்தும் திறனை கடவுளும் அவரது குமாரன் இயேசு கிறிஸ்துவும் முழுமையாக பெற்றிருப்பதாக பைபிள் தெளிவாக காட்டுகிறது. பின்வரும் வசனங்களை கவனியுங்கள்.

ஆதியாகமம் 7:4: ‘இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணுவேன்.’

யாத்திராகமம் 14:21: “கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.”

1 சாமுவேல் 12:18: ‘சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்; அன்றைய தினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்தார்கள்.’

யோனா 1:4: “கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.”

மாற்கு 4:39: “அவர் [கடவுளுடைய சக்தியைப் பெற்றிருந்த இயேசு] எழுந்து, காற்றை அதட்டி, கடலைப் பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.”

[பக்கம் 89-ன் படங்கள்]

கடவுளுடைய புதிய உலகில் ஆபத்தான வானிலை மாற்றங்களைக் குறித்து நாம் பயப்பட வேண்டியதில்லை