Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரிவுகள்

உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரிவுகள்

உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரிவுகள்

ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை ‘சிக்’கென்று வைத்துக்கொள்வது பெரும்பாலும் ஒரு சவால்தான். அழுத்தங்கள் நிறைந்த இன்றைய உலகில், தேவையான பொருட்களை சேர்த்து உணவை தாங்களாகவே சமைத்து சாப்பிடுவதைவிட பதப்படுத்தப்பட்ட ‘ரெடிமேட்’ உணவை சாப்பிடுவதே ரொம்ப சௌகரியமாக தெரிகிறது; அதோடு உடல் ‘வளைத்து’ வேலை செய்வதற்கு பதிலாக டிவி அல்லது கம்ப்யூட்டருக்கு முன் தங்களுடைய பொழுதை கழிப்பதும் எளிதாக தெரிகிறது. ஆனால், இந்தத் தெரிவுகள் அதிகமதிகமான பெரியவர்களையும் பிள்ளைகளையும் மோசமான உடல்நல பிரச்சினைகளில் சிக்க வைத்து விடலாம்.

ஆசியாவில், “கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வதும், உடல் அலுங்காமல் வேலை செய்யும் பழக்கங்கள் அதிகரித்து வருவதும் நீரிழிவு எனும் கொள்ளை நோய்க்கு காரணம்” என ஏஷியாவீக் பத்திரிகை குறிப்பிடுகிறது. இந்த வியாதி சமுதாயத்தின் இளம் தலைமுறையினரைக்கூட விட்டுவைக்காதிருப்பது திடுக்கிட வைக்கிறது. கனடாவில், “12 வயதுக்குட்பட்ட ஏழு பிள்ளைகளில் ஒரு பிள்ளை மட்டுமே போதுமானளவு பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிடுவதையும், பாதிக்கும் சற்று அதிகமானோர் மட்டுமே வியர்வை சிந்துமளவுக்கு விளையாடுவதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்” என த க்ளோப் அண்ட் மெய்ல் குறிப்பிடுகிறது. இத்தகைய வாழ்க்கைப் பாணி இளைஞர்களை “30-களிலேயே இருதய நோய்க்கு இழுத்து சென்றுவிடுகிறது” என்றும் அது குறிப்பிடுகிறது.

அவ்வாறே தூக்கத்தைப் பொறுத்ததில், பெரியவர்களுக்கு இரவில் சுமார் எட்டு மணிநேர தூக்கமும் இளைஞர்களுக்கு அதைவிட அதிக தூக்கமும் தேவைப்படலாம் என்று தூக்க நிபுணர்கள் கூறுகிறார்கள். சொல்லப்போனால் சிகாகோ பல்கலைக்கழக ஆய்வின்படி, தொடர்ந்து ஆறு நாட்களுக்கு இரவில் நான்கு மணிநேரம் மட்டுமே தூங்கும் பழக்கத்தையுடைய வாட்டசாட்டமான இளம் ஆண்கள் மத்தியில், பொதுவாக முதியவர்களுக்கு வருகிற உடல்நல உபாதைகளுக்கான அறிகுறிகள் தென்பட்டன. அநேகர் தங்களுடைய அருமையான தூக்க நேரத்தை வேலைக்காகவோ, பள்ளிப் படிப்புக்காகவோ, பொழுதுபோக்குக்காகவோ தியாகம் செய்தாலும் நினைத்ததை தங்களால் சாதிக்க முடியாமல் போய்விடலாம். “வேலை செய்துவிடுவது நல்லதென்றாலும், விழிப்புணர்வுடன் இருப்பதும் படைப்பாற்றலை பெற்றிருப்பதும் நெடுஞ்சாலையில் வண்டி ஓட்டுகையில் கண் அயராமல் இருப்பதுமே அதைவிட முக்கியமானது” என நியு யார்க்கிலுள்ள கார்னல் பல்கலைக்கழகத்தின் தூக்கம் பற்றிய ஆய்வாளர் ஜேம்ஸ் மாஸ் குறிப்பிடுகிறார்.

நம் உடல் நலனை பாதிக்கும் இதர அம்சங்களும் இருக்கின்றன. உதாரணமாக, நம்பிக்கையான மனநிலை நம் ஆரோக்கியத்திற்கு நன்மை தரலாம். அதோடு, ஓர் உண்மையான நோக்கத்துடன் வாழ்வது ஆரோக்கியத்திற்கு கைகொடுக்கும் தெரிவுகளை செய்ய நம்மைத் தூண்டலாம். (g03 8/22)