Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடல், வானம், காற்று கைகொடுத்த கடற்பயணம்

கடல், வானம், காற்று கைகொடுத்த கடற்பயணம்

கடல், வானம், காற்று கைகொடுத்த கடற்பயணம்

பூமியின் விளிம்பிலிருந்து பொத்தென்று கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயம் உங்களை கவ்வியுள்ளதா? இப்படியொரு பயம் உங்களுக்கு இருக்காதுதான். பண்டைய காலத்திலோ கடல் பயணிகள் சிலர் இப்படித்தான் பயந்தார்கள். அதனாலேயே அநேகர் கரையைவிட்டு வெகுதூரம் போகாமல் பயணித்தார்கள். ஆனால் தைரியமிக்க கடல் பயணிகள் சிலரோ தங்கள் பயத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு நடுக்கடலுக்கே சென்றார்கள்.

சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஃபினீஷிய மாலுமிகள் ஐரோப்பாவிலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் வாணிகம் செய்வதற்காக மத்தியதரைக் கடலின் கிழக்குக் கரையில் அமைந்திருந்த தங்களுடைய துறைமுகங்களை விட்டு புறப்பட்டனர். பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டில் பித்தியஸ் என்ற கிரேக்க நாட்டு ஆய்வுப் பயணி ஒருவர் பிரிட்டனை சுற்றி வலம் வந்து, ஐஸ்லாந்து வரையிலும் சென்றிருக்கலாம். ஐரோப்பிய கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைவதற்கு வெகு முன்பே கீழை நாட்டு சீனரும் அரேபியரும் இக்கடலில் பயணம் செய்து வந்தனர். இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியர் வாஸ்கோட காமாதான். சொல்லப்போனால், அவர் ஓர் அரேபிய மாலுமியான இபன் மேஜித்தின் உதவியோடுதான் பத்திரமாக இங்கு வந்து சேர்ந்தார்; இந்தியப் பெருங்கடலை கடக்கும் அந்த 23 நாள் படலத்தின்போது வாஸ்கோட காமாவின் கப்பல்களுக்கு அந்த அரேபியரே வழிகாட்டினார். இந்தப் பண்டைக் கால மாலுமிகள் தங்கள் வழியை எப்படி கண்டுபிடித்தார்கள்?

ஊகக் கணிப்பு கைகொடுத்தது

அந்தக் காலத்து மாலுமிகள் ஊகக் கணிப்பைத்தான் நம்பியிருந்தனர். கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டிருப்பதைப் போல பின்வரும் மூன்று விஷயங்கள் மாலுமிக்கு தெரிந்திருக்க வேண்டும். (1) கப்பல் புறப்படும் இடம், (2) அதன் வேகம், (3) செல்லும் திசை. புறப்படும் இடத்தை அறிவது எளிதாக இருந்தது. ஆனால், செல்லும் திசையை அறிவது எப்படி?

செல்லும் திசையைக் கண்டுபிடிப்பதற்கு 1492-⁠ல் கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் ஒரு திசைமானியை பயன்படுத்தினார். ஆனால், பொ.ச. 12-⁠ம் நூற்றாண்டிலிருந்துதான் ஐரோப்பாவில் திசைமானிகள் புழக்கத்துக்கு வந்திருந்தன. அவை இல்லாத காலத்தில் சூரியனையும், நட்சத்திரங்களையும் வைத்து மாலுமிகள் கப்பலைச் செலுத்தினர். ஆனால், மேகம் மறைக்கும்போது? சீராக அடிக்கும் காற்றினால் ஏற்படுகிற நீண்ட பெருக்கலைகளை (swells) நம்பியே அவர்கள் சென்றனர். இந்தப் பெருக்கலைகளை சூரிய, நட்சத்திரங்களின் உதயம் மற்றும் அஸ்தமனங்களோடு ஒத்துப்பார்த்து தங்கள் திசையில் தொடர்ந்தனர்.

கப்பலின் வேகத்தை அவர்கள் எப்படி கணக்கிட்டனர்? கப்பலின் முன் பக்கத்திலிருந்து ஒரு பொருளை எறிந்து, அதைக் கடப்பதற்கு எடுக்கும் நேரத்தைக் கணக்கிடுவது ஒரு வழியாக இருந்தது. பிற்பாடு அதைவிட மிகத் துல்லியமான முறை பயன்படுத்தப்பட்டது. அதாவது, குறிப்பிட்ட இடைவெளிகளில் வரிசையாக முடிச்சுகள் போடப்பட்ட கயிறு ஒரு மரத்துண்டுடன் இணைக்கப்பட்டு கடலில் போடப்பட்டது. கப்பல் முன்னோக்கி செல்லச் செல்ல இந்த மிதக்கும் மரத்துண்டு கயிறை கீழே இழுக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, அந்தக் கயிறு கப்பலுக்குள் இழுக்கப்பட்டு, அதுவரை கப்பலைவிட்டு வெளியே சென்றிருந்த கயிற்றின் முடிச்சுகள் எண்ணப்பட்டன. இது கப்பலின் வேகத்தை, அதாவது மணிக்கு எத்தனை கடல் மைல்களை கப்பல் கடந்துள்ளது என்பதைக் காட்டியது. இன்று வரையில் இந்த அலகே பயன்படுத்தப்படுகிறது. இவ்விதமாக வேகத்தை அறிவதால், ஒரு நாளில் எவ்வளவு தூரம் தன்னுடைய கப்பல் பயணித்திருக்கிறது என்பதை மாலுமியால் கண்டுபிடிக்க முடிந்தது. அதன் பின்பு, தான் செல்ல வேண்டிய திசையில் எவ்வளவு தூரம் சென்றிருக்கிறார் என்பதைக் காட்டுவதற்கு கடல் வரைபடத்தில் ஒரு கோடு இழுத்தார்.

கடல் நீரோட்டங்களும், பக்கவாட்டிலிருந்து வீசும் காற்றும் கப்பலை அதன் திசையிலிருந்து திருப்பிவிடலாம் என்பது உண்மையே. ஆகவே மாலுமி, கப்பலை அதன் திசைக்கு கொண்டு வருவதற்கு ஸ்டியரிங்கை தான் எவ்வளவு திருப்பினார் என்பதைக் கணக்கிட்டு அவ்வப்போது குறித்து வைத்தார். கப்பலை சரியான திசையில் செலுத்துவதற்கு அப்படி செய்வது அவசியமாக இருந்தது. இவ்வாறு, அளவிடுவதையும் கணக்கிடுவதையும் கோடிடுவதையும் அவர் தினந்தினம் செய்தார். கப்பல் உரிய இடத்திற்கு வந்த பிறகு, அவர் எடுத்த குறிப்புகள் அனைத்தும் அந்தக் கப்பல் சேர வேண்டிய இடத்தை எப்படி அடைந்தது என்பதற்கு ஒரு நிரந்தர பதிவை அளித்தன. கொலம்பஸ் 500-⁠க்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பெயினிலிருந்து வட அமெரிக்காவுக்கு போனதும் அங்கிருந்து திரும்பி வந்ததும் இந்த ஊகக் கணிப்பின் அடிப்படையில்தான். அவரது குறிப்பிடத்தக்க கடற்பயணத்தை அச்சுப்பிசகாமல் பின்பற்ற இன்றைய மாலுமிகளுக்கு உதவுவதும் அவர் கவனத்துடன் தீட்டிய வரைபடங்களே.

வானம் கைகொடுத்தது

அந்தக் காலத்து மாலுமிகள் சூரிய, சந்திர, நட்சத்திரங்களின் உதவியோடு எப்படி கப்பலைச் செலுத்தினர்? சூரிய உதயமும் அஸ்தமனமும், கிழக்கு, மேற்கு திசைகளைக் காண்பித்தன. விடியற்காலையில், சூரியன் எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பதை மங்கலாகத் தெரியும் நட்சத்திரங்களின் அடிப்படையில் மாலுமிகளால் கண்டுபிடிக்க முடிந்தது. இரவில் துருவ நட்சத்திரத்தை வைத்து எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடிந்தது. இந்தத் துருவ நட்சத்திரம் பெரும்பாலும் இருள் கவிந்தபின், வட துருவத்திற்கு நேர் மேலாக இருப்பதாக தோன்றுகிறது. தெற்கே தொலைவில் தெரியும் சதர்ன் க்ராஸ் எனும் பிரகாசமான விண்மீன் கூட்டம் தென் துருவத்தைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவியது. ஆகவே, மேகமூட்டமில்லாத இரவில் உலகின் எந்தக் கடலில் மாலுமிகள் பயணித்தாலும், வானில் தெரியும் ஏதாவது ஒரு விண்மீனை வைத்து தாங்கள் செல்லும் திசையை அறிய முடிந்தது.

ஆனால் வான் வழிகாட்டிகள் இவை மட்டுமே அல்ல. உதாரணமாக, பாலினேசியர்களுக்கும், பசிபிக் கடற்பயணிகளுக்கும் இரவு நேர வானம், சாலை வரைபடத்தைப் போல் அத்துப்படியாக இருந்தது. அவர்களுடைய உத்திகளில் ஒன்று, தாங்கள் இலக்கு வைத்து செல்லும் திசையிலுள்ள அடிவானில் உதிக்கும் அல்லது மறையும் ஒரு நட்சத்திரத்தை நோக்கி செல்வதாகும். அதுமட்டுமல்ல, தாங்கள் செல்லும் திசையை உறுதிப்படுத்துவதற்கு இரா முழுக்க மற்ற நட்சத்திர அமைப்பையும் அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்தனர். அவர்கள் செல்லும் திசை தவறிவிட்டால், சரியான பாதையில் செல்வதற்கு நட்சத்திரங்களின் அமைப்பு கைகொடுத்தது.

இந்த முறை எந்தளவுக்கு நம்பகமானது? ஒரு காலத்தில், ஐரோப்பிய மாலுமிகள் தட்டையான பூமியின் விளிம்பிலிருந்து கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயத்தில் பெரும்பாலும் கரையைவிட்டு வெகுதூரம் போகாமல் பயணித்தார்கள்; மறுபட்சத்தில், பசிபிக் மாலுமிகளோ நடுக்கடலில் ஓரளவு சிறிய தீவுகளுக்கிடையே நீண்ட தூரம் பயணித்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, 1,500-⁠க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு பாலினேசியர்கள் மார்கொஸ்ஸஸ் தீவுகளிலிருந்து பரந்த பசிபிக் பெருங்கடலைக் கடந்து வடக்கே சென்றிருக்கிறார்கள். ஹவாய் போய் சேருவதற்குள்ளாக அவர்கள் 3,700 கிலோமீட்டர் பயணித்திருந்தார்கள்! பூர்வ பாலினேசியர் ஹவாய்க்கும் டஹிடிக்கும் இடையே பயணித்ததைப் பற்றி தீவு சம்பந்தமான பாரம்பரிய வரலாறு சொல்கிறது. இதெல்லாம் வெறும் கட்டுக்கதைகளே என சில சரித்திராசிரியர்கள் சொல்கிறார்கள். இருந்தாலும், அதே பயணத்தை இன்றைய மாலுமிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த கருவிகளுமின்றி நட்சத்திரங்கள், கடலின் பெருக்கலைகள், பிற இயற்கை சம்பவங்கள் ஆகியவற்றின் உதவியால் கப்பலை செலுத்தியிருக்கிறார்கள்.

காற்று கைகொடுத்தது

கப்பல்கள் காற்றையே பெரிதும் சார்ந்திருந்தன. பின்னாலிருந்து வீசும் தள்ளுக்காற்று கப்பலை லாவகமாக முன்னோக்கி செலுத்தியது, ஆனால் முன்னாலிருந்து அடிக்கும் எதிர்க்காற்றோ கப்பலின் வேகத்தை பெருமளவு குறைத்தது. காற்று இல்லையேல் முன்னோக்கிச் செல்லவே இயலாது. பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள அமைதி மண்டல பகுதியில் இந்நிலை அடிக்கடி உருவாகியது. வழக்கமாக அடிக்கும் கடல் காற்றை கடற்பயணிகள் பிற்பாடு கண்டுபிடித்தார்கள். அது முக்கிய கடல் மார்க்கத்தைத் தீர்மானிக்க உதவியது; இதனால் நடுக்கடலில் கப்பலோட்டுவது எளிதாக ஆனது. அவர்கள் இந்தக் காற்றை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.

வீசும் காற்று சாதகமாக அமையாவிட்டால், அது துயரத்தையும் மரணத்தையும்கூட ஏற்படுத்தும் என்பது உண்மைதான். உதாரணமாக, வாஸ்கோட காமா 1497-⁠ல் இந்தியாவின் பிரசித்தி பெற்ற மலபார் கடலோரப் பகுதிக்கு செல்வதற்கென போர்ச்சுகலை விட்டுப் புறப்பட்டபோது, வழக்கமாக அடிக்கும் கடல் காற்று அவரது கப்பலை தென் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அலாக்காக கொண்டு சென்றது; அங்கிருந்து தென் கிழக்குத் திசை நோக்கி தள்ளிச் சென்றது, பிறகு ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை வழியாக எடுத்துச் சென்றது. ஆனால் இந்தியப் பெருங்கடலுக்கு வந்தபோது, பருவக் காற்றை சந்தித்தார்; இந்தக் காற்று காலத்திற்கு ஏற்றவாறு திசைமாறும் தன்மை கொண்டது. இந்தியப் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் கோடைகால பருவக் காற்று உருவாகிறது. பல மாதங்களுக்கு வீசும் இந்தக் காற்று, கடலில் மிதந்து செல்லும் அனைத்தையும் ஆசியாவின் பக்கமாக தள்ளுகிறது. இலையுதிர் காலத்தின் பிற்பகுதியில் குளிர்கால பருவக் காற்று வீச ஆரம்பிக்கிறது. இக்காற்று வடகிழக்கிலிருந்து கிளம்பி ஆப்பிரிக்காவை நோக்கி பலமாக வீசுகிறது. வாஸ்கோட காமாவோ, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவிலிருந்து புறப்பட்டார். இதனால் பயணம் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே எதிர்க்காற்றை சந்திக்க நேர்ந்தது. மலபாரை நோக்கி அவர் கிழக்கு முகமாக பயணித்தபோது 23 நாட்களே எடுத்தது. ஆனால் திரும்பிச் செல்வதற்கு கிட்டத்தட்ட மூன்று மாதம் பிடித்தது. இந்தத் தாமதத்தால், பச்சைக் காய்கறிகளும் உணவு வகைகளும் தீர்ந்துவிட்டன; இதனால் அவருடைய கப்பல் குழுவினரில் அநேகர் ஸ்கர்வி நோயால் இறந்தனர்.

இந்தியப் பெருங்கடலில் பயணிக்கும் மாலுமிகள் காலண்டரையும் திசைமானியையும் வைத்து காற்றுக் காலங்களை கணிப்பதில் கில்லாடிகள் ஆயினர். நன்னம்பிக்கை முனையைக் கடந்து கிழக்கு நோக்கி இந்தியாவுக்கு செல்ல விரும்பிய மாலுமிகள் கோடையின் ஆரம்பத்தில் புறப்பட வேண்டியிருந்தது; தவறினாலோ தங்களுக்கு சாதகமாக காற்று வீசுவதற்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. மறுபட்சத்தில் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு திரும்பும்போது கோடைகால பருவக் காற்றோடு போராடுவதைத் தவிர்க்க இலையுதிர் காலத்தின் பிந்திய பருவத்தில் கப்பலோட்டிகள் புறப்பட்டார்கள். இவ்வாறு இந்தியப் பெருங்கடல் மார்க்கம் மாறிமாறி வந்த ஒருவழிப் பாதைபோல் ஆனது. அதாவது, ஒரு பருவத்தில், ஐரோப்பாவுக்கும் இந்தியாவின் மலபார் கடற்கரைக்கும் இடையே பெரும்பாலும் ஒரு திசையில் மட்டுமே கடல் பயணம் இருந்தது.

கடற்பயணத்தில் ஏறுமுகம்

காலங்கள் மாறின, கப்பலோட்டும் கலையிலும் புதுமை ஏற்பட்டது. இயந்திரக் கருவிகள் புழக்கத்துக்கு வந்ததும், கண்களையும் ஊகக் கணிப்பையும் நம்பியிருந்த காலம் மலையேறத் தொடங்கியது. உயர்வுமானியும், அதைவிட மிகத் துல்லியமான கோணமானியும் பூமத்திய ரேகையில் இருந்து வடக்கு தெற்காக அட்சரேகையில் தங்கள் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதில் மாலுமிகளுக்கு கைகொடுத்தன. சூரியனும் சரி நட்சத்திரமும் சரி, அடிவானத்திற்கு மேலே எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதை இக்கருவிகள் தீர்மானித்தன. கடல் காலமானி எனும் கடிகாரம் நம்பகமானது, கடற்பயணத்திற்கு உகந்தது. இது கிழக்கு மேற்காக தீர்க்கரேகையில் தங்கள் இருப்பிடத்தை அறிய உதவியது. இக்கருவிகள் ஊகக் கணிப்பைவிட பல மடங்கு துல்லியமானவையாய் இருந்தன.

இன்றோ, சுழல் திசைமானிகள் (gyrocompass) காந்த முள் இல்லாமலேயே வடதிசையை காட்டுகின்றன. ஒருசில பட்டன்களை அழுத்தினாலே ஒருவர் சரியாக எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை குளோபல் பொஸிஷனிங் சிஸ்டம் காட்டுகிறது. காகித வரைபடத்திற்கு பதிலாக எலக்ட்ரானிக் படங்கள் வந்துள்ளன. ஆம், கடற்பயணம் விஞ்ஞான மயமாகிவிட்டது. இத்தனை முன்னேற்றங்களை கருத்தில் கொள்ளுகையில், பண்டைய மாலுமிகளின் தைரியத்தையும் திறமையையும் கண்டு வியக்கும் நமக்கு அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கவே செய்கிறது. கடல், வானம், காற்று ஆகியவற்றை மட்டுமே கருவியாக பயன்படுத்தி பரந்து விரிந்த கடலில் அவர்கள் வலம் வந்தார்களே! (g03 8/22)

ஊகக் கணிப்பு

பிற்கால பயனுக்காக ஊகக் கணிப்பு கவனமாக பதிவு செய்யப்பட்டது

[பக்கம் 10-ன் படக்குறிப்பு]

1 புறப்படும் இடம்

2 வேகம் குறிப்பிட்ட இடைவெளி​யில் வரிசையாக முடிச்சுகள் போடப்பட்ட கயிறு

இணைக்​கப்பட்ட ஒரு மரத்துண்டின் மூலமும் ஒரு டைமர் மூலமும் தீர்மானிக்கப்பட்டது

3 திசை கடல் நீரோட்டம், நட்சத்திரங்கள், சூரியன், காற்று ஆகியவற்றை கவனித்து

தீர்மானிக்கப்பட்டது

[படங்கள்]

திசைமானி

உயர்வுமானி

[பக்கம் 12-ன் படங்கள்]

அதிநவீன கருவிகள் கடற்பயணத்தை விஞ்ஞான மயமாக்கிவிட்டன

[படத்திற்கான நன்றி]

Kværner Masa-Yards