சமுதாயத்திற்கு பயனுள்ளது
சமுதாயத்திற்கு பயனுள்ளது
ஸ்பெயினிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
நூற்றாண்டுகளாவே ஸ்பானிய நகரங்கள் வணக்க ஸ்தலங்களுக்காக நிலங்களை வழங்கியிருக்கின்றன. மதப் பற்றால் சமுதாயத்திற்கு நன்மையுண்டு என நகர அரசுகள் நம்பின. கத்தோலிக்க மதம் தேசிய மதமாக இருந்ததால், நகராட்சிக்கு சொந்தமான இடம் பெரும்பாலும் கத்தோலிக்க சர்ச்சுக்கே நன்கொடையாக அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் காலங்கள் மாறிவிட்டன.
1980-ல் ஸ்பானிய சட்டம் ஒன்று மத சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளித்து, “எந்தவொரு குறிப்பிட்ட மதமும் அதிகாரப்பூர்வ தேசிய மதமாக இருக்கப் போவதில்லை” என குறிப்பிட்டது. இந்தச் சட்டம் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை வெளிப்படையாக அங்கீகரிப்பதற்கு நகர அதிகாரிகள் சிலரை தூண்டியிருக்கிறது. தங்களுடைய அங்கீகாரத்திற்கு அடையாளமாக ராஜ்ய மன்றங்களை கட்டுவதற்கு நிலத்தை அவர்கள் நன்கொடையாக கொடுத்திருக்கிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகளுடைய “வேலை கல்வி புகட்டுவதாக இருப்பதாலும்,” அதோடு “பொதுமக்களுக்கும் சமுதாயத்திற்கும் பயனளிப்பதாலும்” அத்தகைய நன்கொடைகள் தகுந்ததே என நகர நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் சில நகர அதிகாரிகளோ, “யெகோவாவின் சாட்சிகள் அங்கிருப்பதே குறிப்பிடத்தக்கது” என்பதையும் “அவர்களது வேலை லாபம் கருதாமல் செய்யப்படுகிறது” என்பதையும் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ராஜ்ய மன்றங்கள் பலவும் யெகோவாவின் சாட்சிகளுடைய கட்டுமான குழுவைச் சேர்ந்த வாலண்டியர்களின் விசேஷித்த கட்டுமான முறையை பயன்படுத்தி 48 மணிநேரத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன. தென்மேற்கு ஸ்பெயினில் லா லினேயா நகரின் மேயர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்: “இந்த வாலண்டியர்களின் தன்னலமற்ற குணம் என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது; அவர்கள் நம்முடைய ஆதரவை பெற தகுதியானவர்கள் என நினைக்கிறேன். பிளவுற்ற இந்த உலகில் இத்தகைய மனப்பான்மை நமக்கு ரொம்பவே தேவை.” அந்தப் புதிய ராஜ்ய மன்றத்தை “ஒத்துழைப்பின் நினைவுச் சின்னம்” என அவர் அழைத்தார்.
இப்படி அவர்கள் ஒற்றுமையாக சேர்ந்து உழைத்ததை அக்கம்பக்கத்தாரும் கவனித்திருக்கின்றனர். வடக்கு ஸ்பெயினில் உள்ள விடோரியா நகரத்தில் இரு ராஜ்ய மன்றங்களை உடைய ஒரு கட்டடத்தை கட்டும் பணி நடந்து கொண்டிருக்கையில், அதற்கு பக்கத்தில் வசிக்கும் மாரியன் என்ற பெண் இவ்வாறு கூறினாள்: “எல்லாருமே இப்படி அன்பு காட்டினால் இன்றைய பிரச்சினைகள் எதுவுமே இருக்காது.” கட்டட வேலை நடப்பதைக் கவனித்து வியப்புற்ற உள்ளூர் கட்டட கலைஞர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “உங்களைப் போல நானும் சந்தோஷத்தை அனுபவிப்பதற்காக ஒரு யெகோவாவின் சாட்சியாக மாற விரும்புகிறேன்!”
வடகிழக்கு ஸ்பெயினில் ஜராகோஷா நகர அதிகாரிகள், யெகோவாவின் சாட்சிகளுக்கு 600 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடத்தை இலவசமாகக் கொடுத்தார்கள். அங்குள்ள செய்தித்தாள் ஒன்று கட்டட வேலை நடந்த இடத்தை, “நூற்றுக்கணக்கான குட்டி குட்டி எறும்புகள் ஒன்று சேர்ந்து வேலை செய்கிற யெகோவாவின் சாட்சிகள் எனும் எறும்புப் புற்று” என்று விவரித்தது. அங்கு வேலை செய்தவர்களை அக்கம்பக்கத்தார் அன்புடன் வரவேற்றனர். அவர்களில் ஒரு பெண் இவ்வாறு சொன்னாள்: “பாதிரிமார்களால் என்னுடைய கடவுள் நம்பிக்கையே போய்விட்டது, ஆனால் உங்களைப் பார்த்ததும் போன நம்பிக்கை திரும்பவும் வந்துவிட்டது.”
ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு அக்கம்பக்கத்தாரும், உள்ளூர் அதிகாரிகளும் கொடுத்த ஒத்துழைப்புக்கு யெகோவாவின் சாட்சிகள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். தங்களால் முடிந்தவரை சமுதாயத்திற்கு மிகச் சிறந்த கல்வியை புகட்டுவதற்காக, அதாவது கடவுளுடைய வார்த்தையை பிரசங்கித்து கற்றுக்கொடுப்பதற்காக தங்கள் ராஜ்ய மன்றங்களை பயன்படுத்த தீர்மானமாய் இருக்கிறார்கள். (g03 8/08)
[பக்கம் 31-ன் படம்]
லா லினேயா, காடிஸ், ஸ்பெயின்