Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செ. பீட்டர்ஸ்பர்க் ரஷ்யாவின் “ஐரோப்பிய நுழைவாயில்”

செ. பீட்டர்ஸ்பர்க் ரஷ்யாவின் “ஐரோப்பிய நுழைவாயில்”

செ. பீட்டர்ஸ்பர்க் ரஷ்யாவின் “ஐரோப்பிய நுழைவாயில்”

ரஷ்யாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“பீட்டரின் கைவண்ணமே, உனை நேசிக்கிறேன்! / உனது எளிமையை நேசிக்கிறேன், உனது சமச்சீர் வடிவை நேசிக்கிறேன்; / பளபளக்கும் கருங்கல் பாவிய உனது கப்பற்துறை மேடைகளிடையே / எத்தனை மௌனமாய், நளினமாய் நீவா நதி நெளிந்தோடுகிறாள்!”​—⁠அலிக்சண்டர் சிர்கேயிச் பூஷ்கின்.

இவ்வரிகள், செ. பீட்டர்ஸ்பர்க் நகரத்தைப் பற்றி பூஷ்கின் எழுதிய பிரசித்தி பெற்ற கவிதையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன; இவ்வரிகள், அந்நகரத்தை உருவாக்கியவர் யார் என்பதன்பேரில் நம் கவனத்தை திருப்புகின்றன; அதுமட்டுமல்ல, அது வடகோடியில் அமைந்திருப்பதை, அதாவது நீவா நதி பால்டிக் கடலில் சங்கமமாகின்ற இடத்தில் அமைந்திருப்பதை இவ்வரிகள் சுட்டிக்காட்டுகின்றன. ‘ஆனால், உலகின் மிக முக்கிய நகரமான இது, வடகோடியில் அதுவும் ஒரு சதுப்புநிலப் பகுதியில் எப்படி உருவானது?’ என ஒருவேளை நீங்கள் கேட்கலாம்.

17-⁠ம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குள்ளாக, ரஷ்யா வளர்ச்சியடையாமல் பின்தங்கிப்போனது; கடல்வழிப் போக்குவரத்து இல்லாதிருந்ததே அதற்கு காரணம். கடல் மார்க்கத்தை, அதாவது ரஷ்யாவுக்காக “ஐரோப்பிய நுழைவாயில்” ஒன்றை எப்படியாவது நிறுவ வேண்டுமென்பது ரஷ்ய இளம் சக்கரவர்த்தியான மகா பீட்டரின் கனவாக இருந்தது. தெற்கே அமைந்திருந்த கருங்கடலை நெருங்க முடியாதபடி ஆட்டொமன் சாம்ராஜ்யம் தடையாக நின்றது. ஆகவே, பீட்டர் தன் கவனத்தை வடக்குப் பக்கமாக திருப்பினார்; சுவீடன் கைவசமிருந்த பால்டிக் கடலோரப் பகுதியின் மீது அவர் பார்வை விழுந்தது.

தன் கனவை நனவாக்க பீட்டர், ஆகஸ்ட் 1700-⁠ல், சுவீடன் மீது போர் தொடுத்தார். ஆனால் தோல்விதான் மிஞ்சியது; இருந்தாலும், தன் முயற்சியை அவர் கைவிடவில்லை. நவம்பர் 1702-க்குள்ளாக, சுவீடன் நாட்டவர்களை லடோகா ஏரிப் பகுதியை விட்டு துரத்தியடித்தார். ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய இந்த ஏரியையும் சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திலிருந்த பால்டிக் கடலையும் இணைத்தது நீவா நதி. இந்நதியின் பிறப்பிடமான லடோகா ஏரிக்கு அருகில் ஒரு குட்டித் தீவு இருந்தது; அந்தத் தீவிலிருந்த ஒரு கோட்டையில் சுவீடன் நாட்டவர்கள் தஞ்சம் புகுந்திருந்தனர். அரண் போன்றிருந்த அந்தத் தீவை அவர்களிடமிருந்து பீட்டர் கைப்பற்றினார், அதற்கு ஷ்லிஸல்பர்க் எனவும் பெயரிட்டார்.

பிற்பாடு, சுவீடன் நாட்டவர்கள் நீவா நதி பால்டிக் கடலில் சங்கமிக்கும் இடத்திற்கு அருகிலிருந்த நீன்ஸ்ஹான்ட்ஸ் என்ற கோட்டையிலிருந்து ரஷ்யர்களை எதிர்த்துப் போராடினர். மே 1703-⁠ல், சுவீடன் நாட்டவர்களின் அந்தக் காவற்கோட்டை முற்றிலும் கைப்பற்றப்பட்டது. இந்தப் போரில் ரஷ்யர்கள் வெற்றியடைந்ததால் அந்த கழிமுகப்பகுதி முழுவதுமே அவர்கள் கைக்கு வந்தது. அப்பகுதியை பாதுகாப்பதற்காக அருகிலிருந்த ஜைச்சி என்ற தீவில் ஒரு கோட்டையை உடனடியாக கட்ட ஆரம்பித்தார் பீட்டர். இவ்வாறு, மே 16, 1703-⁠ல், சுமார் 300 வருடங்களுக்கு முன், பீட்டர்-பால் கோட்டை என இன்று அழைக்கப்படும் கோட்டைக்கு மகா பீட்டர் அடிக்கல் நாட்டினார். ரஷ்ய சக்கரவர்த்தியின் மனங்கவர்ந்த புனிதரான அப்போஸ்தலன் பீட்டரின் பெயர் சூட்டப்பட்ட செ. பீட்டர்ஸ்பர்க் நிறுவப்பட்ட அதிகாரப்பூர்வ தேதி இதுவே.

ஒரு தலைநகரம் உருவாகிறது

தலைசிறந்த தலைநகரமாக திகழ வேண்டும் என்ற திட்டத்தோடுதான் செ. பீட்டர்ஸ்பர்க் கட்டப்பட்டது; பெரும்பாலான மற்ற தலைநகரங்களுக்கு இல்லாத சிறப்பு இது. இந்நகரம் வடகோடியில்​—⁠பூமத்திய ரேகைக்கு 60 டிகிரி வடக்கில்​—⁠அமைந்திருந்ததையும் பொருட்படுத்தாமல், அதன் கட்டுமான பணிகளில் பீட்டர் முழுவீச்சுடன் தொடர்ந்து செயல்பட ஆரம்பித்தார். இந்த இமாலயப் பணிக்காக லடோகா ஏரிப் பகுதியிலிருந்தும் நாவ்கோராட் பகுதியிலிருந்தும் மரக்கட்டைகள் கொண்டு வரப்பட்டன. கட்டடங்களுக்கு ஏகப்பட்ட கற்கள் தேவைப்பட்டதால் பீட்டர் அதற்கு ஒரு வழி செய்தார். செ. பீட்டர்ஸ்பர்கிற்குள் சரக்குகளை எடுத்து வரும் எந்த ரஷ்யனும் அவற்றோடு சேர்த்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான கற்களையும் கொண்டு வர வேண்டும் என்ற ஆணையை பிறப்பித்தார். அதுமட்டுமல்ல, மாஸ்கோவில் கற்களை பயன்படுத்தி யாரும் வீடுகளை கட்டக்கூடாது என்றும் தடை விதித்தார்; பிற்பாடு இந்தத் தடையை தன் சாம்ராஜ்யத்தின் மற்ற இடங்களிலும் அமல்படுத்தினார். இதனால் நாடெங்கும் கட்டுமான பணியாளர்களுக்கு வேலை இல்லாமல் போனது; ஆகவே அவர்கள் எல்லாரும் செ. பீட்டர்ஸ்பர்கிற்கு வர வேண்டியதாயிற்று.

அந்நகரத்து கட்டுமான பணிகளெல்லாம் “அந்த சமயத்தில் சாதனை படைக்கும் அளவுக்கு அசுரவேகத்தில்” நடைபெற்றதாக த கிரேட் சோவியத் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. கழிவு நீர்க் கால்வாய்களும், அஸ்திவாரத் தூண்களும், வீதிகளும், கட்டடங்களும், சர்ச்சுகளும், ஆஸ்பத்திரிகளும், அரசாங்க அலுவலகங்களும் சீக்கிரத்திலேயே உருவாக ஆரம்பித்தன. இந்நகரம் நிறுவப்பட்ட அதே ஆண்டில், கப்பற்துறையை அமைக்கும் வேலை தொடங்கியது; அது அட்மிரல்ட்டி என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் ரஷ்ய கப்பற்படையின் தலைமைக் காரியாலயமானது.

கோடை காலத்தில் தங்குவதற்கென்றே ரஷ்ய சக்கரவர்த்திகளுக்காக கோடை மாளிகை ஒன்று, 1710-⁠ம் வருடத்திற்குள்ளாக கட்டப்பட ஆரம்பித்தது. 1712-⁠ல், ரஷ்யாவின் தலைநகராக செ. பீட்டர்ஸ்பர்க் தேர்ந்தெடுக்கப்பட்டது; ஆகவே மாஸ்கோவிலிருந்த அரசு அலுவலகங்கள் அனைத்தும் இங்கு இடம் மாற்றப்பட்டன. இந்நகரத்தில் முதன்முதலாக கற்களாலான ஒரு மாளிகை 1714-⁠ல் கட்டி முடிக்கப்பட்டது; அது இன்றும்கூட பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த நகரத்து முதல் ஆளுனரான அலிக்சண்டர் மியேன்ஷிகஃப்புக்காக அது கட்டப்பட்டது. அதே வருடத்தில், பீட்டர்-பால் கோட்டைக்குள் இருந்த பீட்டர்-பால் கத்தீட்ரலின் கட்டுமான பணியும் தொடங்கியது. அதன் வானளாவிய கோபுரம் நகரத்தின் சிறப்பம்சமாக விளங்கியது. நீவா நதிக்கு அருகில் குளிர்கால மாளிகை ஒன்றும் கட்டப்பட்டது, ஆனால் 1721-⁠ல் அது தரைமட்டமாக்கப்பட்டு, அந்த இடத்தில் வேறொரு கல் கட்டடம் கட்டப்பட்டது. அதன் பிறகு, 1,100 அறைகளுடன் உள்ள குளிர்கால மாளிகை கட்டப்பட்டது; இது இன்றும் உள்ளது. மிகப் பிரமாண்டமான இந்த மாளிகை, நகரத்தின் மையமாக திகழ்கிறது, இங்குதான் பெயர்பெற்ற ஹெர்மிடேஜ் அரசு மியூசியமும் குடிகொண்டிருக்கிறது.

செ. பீட்டர்ஸ்பர்க் நிறுவப்பட்ட முதல் பத்தாண்டுகளில் அதன் வளர்ச்சியைப் பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனார்கள் என்றே சொல்ல வேண்டும்; 1714-⁠க்குள்ளாக அங்கு ஏறக்குறைய 34,500 கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அத்தனை கட்டடங்கள் எழுப்பப்பட்ட பிறகும்கூட புதுப்புது மாளிகைகளும் பெரிய பெரிய கட்டடங்களும் ‘முளைத்துக்கொண்டே’ இருந்தன. பெரும்பாலான அந்தக் கட்டடங்களைப் பார்த்தாலே போதும் ரஷ்ய சரித்திரத்தில் மதம் எந்தளவுக்கு செல்வாக்கு செலுத்தியிருந்தது என்பது பளிச்சென்று தெரிந்துவிடும்.

உதாரணத்திற்கு, கஜான்யா கத்தீட்ரலை எடுத்துக்கொள்ளுங்கள்: அது அரைவட்ட வடிவமுடையது; அதன் முற்பகுதியில் வரிசையாக நிறைய தூண்களுள்ள மண்டபம் ஒன்றுள்ளது. நியேஃப்ஸ்கய் ப்ராஸ்ப்யிக்ட் என்ற முக்கிய வீதியில் இந்தக் கத்தீட்ரல் அமைந்திருக்கிறது; உலகிலுள்ள மாபெரும் வீதிகளில் இதுவும் ஒன்று என அழைக்கப்படுவதற்கு இந்தக் கத்தீட்ரலின் கம்பீர தோற்றமும் ஒரு காரணம் என்று சொல்லலாம். பிற்பாடு, செ. ஐஸக் கத்தீட்ரலின் கட்டுமான வேலை தொடங்கப்பட்டது. அது சதுப்புநிலப் பகுதியாக இருந்ததால் கட்டடத்தை தாங்குவதற்காக சுமார் 24,000 ஆதார தூண்களைக் கொண்ட அஸ்திவாரம் போடப்பட்டது; மலைக்க வைக்கும் அதன் பிரமாண்டமான உட்கூரைக்கு 100 கிலோ சுத்தத் தங்கத்தால் முலாம் பூசப்பட்டது.

செ. பீட்டர்ஸ்பர்கின் புறநகர் பகுதியிலிருந்த கட்டடங்களும் வெகு கவர்ச்சியாக இருந்தன. இன்று பீட்ரோஜாவோட்ஸ்க் என அழைக்கப்படும் பீட்டர்ஹாஃப் என்ற இடத்தில் பீட்டர் குடியிருப்பதற்காக மகா அரண்மனை ஒன்றின் கட்டட வேலை 1714-⁠ல் ஆரம்பிக்கப்பட்டது. அதே சமயத்தில், ட்ஸார்ஸ்கயா சலா எனப்பட்ட பக்கத்து ஊரில், அதாவது இன்று புஷ்கின் எனப்படும் ஊரில், பீட்டரின் மனைவிக்காக எக்கச்சக்க பணச்செலவில் காத்தரீன் அரண்மனை கட்டப்பட்டது. அதே நூற்றாண்டின் பிற்பகுதியில், தெற்கிலிருந்த பாவ்லஃப்ஸ்க் மற்றும் கெச்சினா என்ற இரண்டு புறநகர் பகுதிகளில் மிகப் பெரிய இரண்டு அரண்மனைகள் கட்டப்பட்டன.

ஒரு புதிய நகரமாக உருவாகிய செ. பீட்டர்ஸ்பர்கின் அலாதி அழகுக்கு இன்னும் அழகு சேர்த்தது எது தெரியுமா? அதிலுள்ள ஏராளமான வாய்க்கால்கள் மீதும், கால்வாய்கள் மீதும் கட்டப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான மேம்பாலங்களே. இதன் காரணமாகத்தான், செ. பீட்டர்ஸ்பர்க் “வடக்கு வெனிஸ்” என்று பெரும்பாலும் வர்ணிக்கப்பட்டுள்ளது. பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்களின் கைவண்ணமும், திறமைமிக்க ரஷ்ய கட்டிடக் கலைஞர்களின் கைவண்ணமும் சேர்ந்துதான், தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறபடி, செ. பீட்டர்ஸ்பர்கை “ஐரோப்பாவிலுள்ள மிக அற்புதமான நகரங்களில் ஒன்றாகவும், நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரமாகவும்” உருவாக்கியிருக்கிறது.

துன்பத்திலும் நிலைத்திருத்தல்

தங்களுடைய ஐரோப்பிய நுழைவாயில் மீது ரஷ்யர்கள் உயிரையே வைத்திருப்பார்கள் என்று பீட்டரின் எதிரிகள் கொஞ்சங்கூட உணரவில்லை. “நீவா நதியின் கழிமுகப் பகுதியில் மகா பீட்டர் தன் காலடி எடுத்து வைத்த நாள் தொடங்கி, அந்த நிலமும் நகரமும் ரஷ்யர்களின் ஆதிக்கத்தின் கீழ்தான் இருந்து வந்திருக்கிறது” என மகா பீட்டர்​—⁠அவர் வாழ்க்கையும் உலகமும் என்ற ஆங்கில புத்தகம் விளக்குகிறது.

ஆம், மேலே குறிப்பிடப்பட்டுள்ள புத்தகம் சொல்கிறபடி, “நூற்றாண்டுகளினூடே, திரளான படைகளுடன் ரஷ்யாவுக்குள் நுழைந்த வெற்றி வீரர்களால்​—⁠பன்னிரண்டாம் சார்லஸ், நெப்போலியன், ஹிட்லர் ஆகிய வீரர்களால்​—⁠பீட்டரின் பால்டிக் துறைமுகத்தை கைப்பற்ற முடியாமல் போனது; என்றாலும், இரண்டாவது உலகப் போரில், நாசி துருப்புகளால் இந்த நகரத்தை 900 நாட்களுக்கு முற்றுகையிட முடிந்தது.” அந்த நீண்ட கால முற்றுகையின்போது, நகரிலிருந்த சுமார் பத்து லட்சம் பேர் மரித்தார்கள். 1941/42-⁠ம் ஆண்டின் குளிர்காலத்தில், அங்கே சீதோஷ்ணநிலை -40 டிகிரிக்கு குறைந்தபோது அநேகர் அந்த கடுங்குளிருக்கும் பஞ்சத்திற்கும் பலியானார்கள். சீதோஷ்ணநிலை -40 டிகிரியை எட்டுகையில், செல்ஷியஸும் ஃபாரன்ஹீட்டும் சம அளவில் இருக்கின்றன.

1914-⁠ல், முதல் உலகப் போர் தொடங்கியபோது, இந்நகரத்தின் பெயர் பெட்ரகிராட் என மாற்றப்பட்டது. சோவியத் யூனியனின் முதல் அதிபராக இருந்த விளாடிமிர் லெனின் 1924-⁠ல் மரித்தபோது இதன் பெயர் லெனின்கிராட் என மாற்றப்பட்டது. கடைசியாக, 1991-⁠ல், சோவியத் யூனியன் வீழ்ந்ததும், ஆரம்பத்தில் வைக்கப்பட்ட செ. பீட்டர்ஸ்பர்க் என்ற பெயரே இதற்கு மறுபடியுமாக சூட்டப்பட்டது.

உலக வளர்ச்சிக்கு பங்களிக்கிறது

பீட்டர் தன் 52 வயதில் மரித்ததற்கு முந்தின வருடத்தில், அதாவது 1724-⁠ல் அவருடைய ஆணையின்படியே ரஷ்ய அறிவியல் அகடமி அங்கு நிறுவப்பட்டது; பிறகு, 1757-⁠ல் கலை அகடமி ஒன்று தொடங்கி வைக்கப்பட்டது. 19-⁠ம் நூற்றாண்டின் ஓவியர்களான கார்ல் ப்ரயூல்லாஃப் மற்றும் இல்யே ரியேப்யேன் இந்தக் கலை அகடமியில்தான் படித்தார்கள்; பிறகு உலகளவில் பிரசித்தி பெற்று விளங்கினார்கள்.

1819-⁠ல், செ. பீட்டர்ஸ்பர்க் அரசு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது; அதன் பிறகு காலப்போக்கில், மேற்படிப்புக்கான இன்னும் வேறுபல பயிலகங்களும் உருவாயின. 19-⁠ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், செ. பீட்டர்ஸ்பர்கில் வசித்தவரான ரஷ்ய உடலியல் நிபுணர் இவான் பவ்லோவ், பழக்கத்தாலோ பயிற்சியாலோ மாறுதலுக்குட்படும் அனிச்சை செயல்களைப் பற்றிய கருத்துக் கொள்கைக்கு விளக்கவுரை அளித்து நோபல் பரிசு பெற்றார். இந்த நகரத்தில்தான் ரஷ்யாவை சேர்ந்த வேதியியல் வல்லுனரான டிமிட்ரய் மென்டலெயஃப் என்பவர் தனிம வரிசை அட்டவணையை அமைத்தார்; ரஷ்யாவில் இந்த அட்டவணையை மென்டலெயஃப்பின் அட்டவணை என்றழைக்கிறார்கள்.

இவற்றைத் தவிர, செ. பீட்டர்ஸ்பர்கின் கலாச்சாரமும் பன்னாட்டு கவனத்தை கவர்ந்திழுத்தது. 1738-⁠ல், நடனக் கல்லூரி ஒன்று நிறுவப்பட்டது; இது காலப்போக்கில் உலகப் புகழ்பெற்ற மரின்ஸ்கி பாலே என்று அறியப்பட்டது. சீக்கிரத்திலேயே ஏராளமான பாலே அரங்குகளும் இசையரங்குகளும் தியேட்டர்களும் இந்நகரத்தை அலங்கரிக்க ஆரம்பித்தன. ப்யாட்டர் இல்லிச் சைகாஃப்ஸ்கி உட்பட பல பிரபல இசையமைப்பாளர்கள் செ. பீட்டர்ஸ்பர்கில்தான் குடியிருந்தார்கள். கேட்க கேட்க திகட்டாத இசைகளை அமைத்ததில் சைகாஃப்ஸ்கி பெயர்பெற்றிருந்தார்; உதாரணத்திற்கு, ஸ்லீப்பிங் ப்யூட்டி, ஸ்வான் லேக், த நட்க்ராக்கர் மற்றும் பிரசித்தி பெற்ற 1812 ஒவர்ச்சர் ஆகிய பாரம்பரிய பாலே இசைகளுக்காக பெயர்பெற்றிருந்தார்.

செ. பீட்டர்ஸ்பர்க்கில் வசித்த அநேக ரஷ்ய கவிஞர்களும் எழுத்தாளர்களும் புகழ் ஏணியில் ஏற அந்நகரம் உதவியது. அவர்களில் ஒருவரான இளம் அலிக்சண்டர் சிர்கேயிக் பூஷ்கின் என்பவரை ரஷ்யாவின் “தலைசிறந்த கவிஞராகவும் நவீன ரஷ்ய இலக்கியங்களின் படைப்பாளராகவும்” அநேகர் கருதுகிறார்கள். ஷேக்ஸ்பியரின் படைப்புகளைப் போலவே பூஷ்கினின் படைப்புகளும் இலக்கியத்தின் மீது மாபெரும் செல்வாக்கை செலுத்தின; முக்கிய மொழிகள் எல்லாவற்றிலும் அவை மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றில் ஒன்று, தன் சொந்த ஊராக அவர் கருதிய செ. பீட்டர்ஸ்பர்கைப் பற்றிய ஒரு பாடலாகும்; அதன் சில வரிகளே இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு, டாஸ்டயெஃப்ஸ்கி என்ற எழுத்தாளரும் செ. பீட்டர்ஸ்பர்கில் இருந்தார்; இவர் “எக்காலத்திலும் வாழ்ந்தவர்களுள் மிகச் சிறந்த கதாசிரியரென பொதுவாக கருதப்படுகிறார்” என்று தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது.

இவற்றையெல்லாம் காண்கையில், செ. பீட்டர்ஸ்பர்க் பிரபலமடைந்திராத அதன் ஆரம்ப நாட்களின்போது ஐரோப்பாவிலிருந்து எவற்றையெல்லாம் பெற்றுக்கொண்டதோ அவற்றையெல்லாம்விட பன்மடங்கு அதிகமாக பெருந்தன்மையுடன் அதற்கு திருப்பித் தந்திருக்கிறது என்றே சொல்லலாம். இத்தனை வருடங்களாக அதன் குடிமக்கள் உலக கலாச்சாரத்திற்கு அதிகத்தை அளித்திருக்கின்றனர் என்பதில் சந்தேகமே இல்லை.

நினைவுகளை மலர வைத்த தருணம்

மே 24 முதல் ஜூன் 1 வரையான வாரத்தின்போது, லட்சக்கணக்கான பார்வையாளர்கள் செ. பீட்டர்ஸ்பர்கின் 300-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்டமான நிகழ்ச்சிகளை அவர்கள் அனுபவிக்கையில், அநேகர் அந்நகரத்தின் அழகையும், குறிப்பிடத்தக்க அதன் சரித்திரத்தையும் பற்றிய நினைவுகளை தங்கள் மனதிலே மலர வைத்துக் கொண்டிருந்தனர்.

எதேச்சையாக, அதற்கு முந்தின வாரத்தில்தான், செ. பீட்டர்ஸ்பர்கின் புறநகர் பகுதியில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளது விஸ்தரிக்கப்பட்ட ரஷ்ய கிளை அலுவலகத்தின் பிரதிஷ்டைக்கு அநேகர் வந்திருந்தனர். அடுத்த நாள், 9,817 பேர் செ. பீட்டர்ஸ்பர்கிலுள்ள கைரொவ் ஸ்டேடியத்தில் கூடிவந்தனர்; பிரதிஷ்டை நிகழ்ச்சியையும், பல நாடுகளிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உற்சாகமளிக்கும் அறிக்கைகளையும் கேட்பதற்காக அங்கு கூடியிருந்தனர்.

பார்ப்பதற்கு ஏராளம் ஏராளம்

செ. பீட்டர்ஸ்பர்கில் சுற்றிப் பார்க்க எக்கச்சக்கமான இடங்கள் இருப்பதால், எதைத்தான் முதலில் பார்ப்பது என்று தெரியாமல் சுற்றுலாப் பயணிகள் திக்குமுக்காடுகிறார்கள். ஹெர்மிடேஜ் மியூசியத்திற்குப் போனாலும் இதே குழப்பம்தான். அங்குள்ள நூற்றுக்கணக்கான அறைகளிலிருக்கும் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பதற்கு ஒரு நிமிடம் செலவிட்டால், அந்த முழு மியூசியத்தையும் சுற்றிப் பார்க்க பல வருடங்கள் பிடிக்குமாம்!

செ. பீட்டர்ஸ்பர்கின் பாலே நடனம்தான் எல்லாவற்றையும்விட பிரமாதமானது என்பதாக மற்றவர்கள் கருதுகிறார்கள். உதாரணத்திற்கு, பிரசித்தி பெற்ற மரின்ஸ்கி தியேட்டருக்கு போவோமானால், அங்கே படிகங்களால் ஆன ஆடம்பர சரவிளக்குகளின் கீழ் நாம் உட்காருவோம்; கட்டடத்தை சுற்றி மினுமினுக்கும் முகப்புகளைப் பார்ப்போம், அதுமட்டுமல்ல, ஏறக்குறைய 400 கிலோ எடையுள்ள தங்கத்தால் முலாம் பூசப்பட்ட சுவர்களையும் பார்ப்போம். இந்தச் சூழலில் உட்கார்ந்து கொண்டு, உலகின் மிகச் சிறந்த பாலே நடனத்தை ஆனந்தமாக கண்டுகளிப்போம்.

சுமார் 50 லட்சம் பேர் குடியிருக்கும் இந்நகரத்தை சுற்றிப் பார்க்க காலார நடந்து போவோமானால், நீவா நதியோரமாக இருக்கும் நவநாகரிக கட்டடங்களின் அழகில் மனதையே பறிகொடுத்து விடுவோம்; அவற்றைப் பார்ப்பது அத்தனை அருமையான அனுபவமாக இருக்கும். இந்நகரத்தின் அற்புதமான சுரங்க ரயிலில் பயணம் செய்தாலே போதும், அது கலாச்சார கண்களுக்கு விருந்தளிப்பதாக இருக்கும்; உலகிலுள்ள வெகு ஆழமான சுரங்க ரயில் பாதைகளில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு நாளும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தச் சுரங்க ரெயிலில் பயணிக்கிறார்கள்; இந்த ரயில், சுமார் 98 கிலோமீட்டர் பயண தூரத்தில் 50-⁠க்கும் மேற்பட்ட ஸ்டேஷன்கள் வழியாக செல்கிறது. அவற்றில் சில, உலகிலுள்ள எந்த ஸ்டேஷனைப் பார்க்கிலும் மிக மிக அழகானவை. 1955-⁠ல், இந்தச் சுரங்க ரெயில் பாதையை திறந்து வைத்தபோது, இந்த ஸ்டேஷன்களை “இருபதாம் நூற்றாண்டின் தொடர் சுரங்க அரண்மனைகள்” என த நியு யார்க் டைம்ஸ் அழைத்தது.

உண்மைதான், செ. பீட்டர்ஸ்பர்கின் கண்கவர் ஆரம்பத்தையும், வளர்ச்சியையும், தொன்றுதொட்டுவரும் அதன் அழியா அழகு, கலை, கலாச்சாரம், கல்வி, இசை ஆகியவற்றையும் பார்த்து யார்தான் அசந்து போகாமல் இருப்பார்கள்? செ. பீட்டர்ஸ்பர்கை பார்க்க வரும் பயணிகளுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, “பேரழகு வாய்ந்த ஐரோப்பிய நகரங்களில் இதுவும் ஒன்று” என ஒரு புத்தகம் கூறுவதை மட்டும் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என சொல்லலாம். (g03 8/22)

[பக்கம் 15-ன் படம்]

மகா பீட்டர், செ. பீட்டர்ஸ்பர்கை நிறுவியவர்

[பக்கம் 16-ன் படம்]

கத்தீட்ரலை உடைய பீட்டர்-பால் கோட்டை; இங்குதான் செ. பீட்டர்ஸ்பர்கின் அஸ்திவாரம் போடப்பட்டது

[பக்கம் 1617-ன் படங்கள்]

நீவா நதி அருகிலுள்ள குளிர்கால மாளிகை; தற்போது ஹெர்மிடேஜ் மியூசியம் இங்குள்ளது (வலது கடைக் கோடியில்)

[படத்திற்கான நன்றி]

The State Hermitage Museum, St. Petersburg

[பக்கம் 1617-ன் படம்]

மகா அரண்மனை

[பக்கம் 17-ன் படம்]

செ. பீட்டர்ஸ்பர்க் வடக்கு வெனிஸ் என்றழைக்கப்படுகிறது

[பக்கம் 18-ன் படங்கள்]

உலகப் புகழ்பெற்ற மரின்ஸ்கி தியேட்டர்

[படங்களுக்கான நன்றி]

Steve Raymer/National Geographic Image Collection

Photo by Natasha Razina

[பக்கம் 18-ன் படங்கள்]

பீட்டர்ஸ்பர்கின் சுரங்க ரயில்வே ஸ்டேஷன்கள் “சுரங்க அரண்மனைகள்” என்று வர்ணிக்கப்படுகின்றன

[பக்கம் 15-ன் படங்களுக்கான நன்றி]

மேலே படம்: Edward Slater/Index Stock Photography; ஓவியம் மற்றும் சின்னங்கள்: The State Hermitage Museum, St. Petersburg