Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வானிலைக்கு என்ன ஆயிற்று?

வானிலைக்கு என்ன ஆயிற்று?

வானிலைக்கு என்ன ஆயிற்று?

“இப்போது ஏற்படும் வெள்ளங்களும் கடும் புயல்மழைகளும் இன்னும் அடிக்கடி தாக்க ஆரம்பிக்கும்.”

⁠தோமஸ் லாஸ்டர், வானிலை ஆபத்துக்களை ஆராயும் நிபுணர்.

வானிலையில் உண்மையிலேயே ஏதாவது கோளாறா? இருக்கலாம் என்று அநேகர் அஞ்சுகின்றனர். வானிலை தாக்கத்தின் ஆராய்ச்சிக்கான பாட்ஸ்டாம் நிறுவனத்தை சேர்ந்த வானவியல் ஆய்வாளர் டாக்டர் பெட்டர் வெர்னர் இவ்வாறு சொல்கிறார்: “பூகோள வானிலையை, அதாவது கடும் மழை, வெள்ளம், வறட்சி, புயல் ஆகியவற்றையும் அவை அதிகமாவதையும் நாம் கவனிக்கும்போது, இப்படிப்பட்ட மிதமீறிய வானிலை கடந்த 50 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது என சரியாகவே சொல்லலாம்.”

இப்படிப்பட்ட அசாதாரண வானிலை மாற்றங்கள் புவிச்சூட்டிற்கு (global warming) அத்தாட்சி என​—⁠அதாவது பசுங்கூட விளைவின் (greenhouse effect) அதிகரிப்பால் ஏற்படும் தீங்கான விளைவுகளுக்கு அத்தாட்சி என​—⁠அநேகர் நினைக்கின்றனர். ஐ.மா. சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்ஸி இவ்வாறு விளக்குகிறது: “வளிமண்டலத்தில் உள்ள சில வாயுக்கள் (உதாரணத்திற்கு நீராவி, கார்பன்-டை-ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, மீத்தேன்) சூரிய ஆற்றலை அகப்படுத்திக் கொள்வதால் பூமியின் உஷ்ணம் அதிகரிக்கிறது; இதுவே பசுங்கூட விளைவு ஆகும். இந்த வாயுக்கள் இல்லாவிட்டால் வெப்பம் மீண்டும் விண்வெளிக்குச் செல்லும், பூமியின் சராசரி தட்பவெப்பநிலை இப்போது இருப்பதைவிட [சுமார் 33 டிகிரி செல்சியஸ்] குறைவாக இருக்கும்.”

எனினும் இந்த இயற்கை செயல்முறையை மனிதன் அறியாமல் தலையிட்டு கெடுத்துவிட்டான் என அநேகர் சொல்கின்றனர். ஐ.மா. தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிறுவனம் வெளியிடும், பூமியின் வானிலை ஆய்வுக்கூடம் என்ற ஆங்கில இன்டர்நெட் பிரசுரத்தில் ஒரு கட்டுரை இவ்வாறு சொல்கிறது: “பல பத்தாண்டுகளாக மனிதனின் தொழிற்சாலைகளிலிருந்தும் கார்களிலிருந்தும் டன்கணக்கான பசுங்கூட வாயுக்கள் வளிமண்டலத்திற்கு சென்றிருக்கின்றன . . . பசுங்கூட வாயுக்கள் பெருமளவு அதிகரித்திருப்பதால் கூடுதலான வெப்பம் பூமியை விட்டு செல்ல முடியாமல் போகிறது என அநேக விஞ்ஞானிகள் கவலைப்படுகின்றனர். கார்களின் முன்பக்க கண்ணாடி எவ்வாறு சூரிய வெப்பத்தை அகப்படுத்திக் கொள்கிறதோ அப்படித்தான் இந்த வாயுக்கள் பூமியின் வளிமண்டலத்திலுள்ள அளவுக்கதிகமான வெப்பத்தை அகப்படுத்திக் கொள்கின்றன.”

வளிமண்டலத்திற்கு செல்லும் பசுங்கூட வாயுக்களில் ஒரு சிறிய சதவீதத்திற்கே மனிதன் காரணமாக இருக்கிறான் என சந்தேகவாதிகள் சொல்கின்றனர். உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனமும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டமும் சேர்ந்து நடத்தும் இன்டர்கவர்மென்டல் பேனல் ஆன் கிளைமேட் சேஞ்ச் (IPCC) என்ற ஒரு ஆராய்ச்சிக் குழு இவ்வாறு அறிக்கை செய்கிறது: “கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்பட்ட புவிச்சூட்டிற்கு பெரும்பாலும் மனித நடவடிக்கைகளே காரணம் என்பதற்கு புதிய, வலுவான அத்தாட்சி உண்டு.”

ஐ.மா. தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தைச் சேர்ந்த தட்பவெப்ப நிபுணரான பிட்டர் டான்ஸ் இவ்வாறு சொல்கிறார்: “இதை நான் மதிப்பிட வேண்டும் என்றால், 60 சதவீத தவறு நம்மீது தான் இருக்கிறது என்றே சொல்வேன் . . . மீதி 40 சதவீதத்திற்கு காரணம் இயற்கையே.”

புவிச்சூட்டின் சாத்தியமான விளைவுகள்

மனிதன் உண்டாக்கியிருக்கும் பசுங்கூட வாயுக்களின் அதிகரிப்பினால் ஏற்பட்டிருக்கும் வெளிப்படையான பாதிப்பு என்ன? பூமியின் உஷ்ணம் அதிகரித்திருப்பதாக பெரும்பாலான விஞ்ஞானிகள் இப்போது ஒப்புக்கொள்கின்றனர். இந்த வெப்பம் எந்தளவுக்கு அதிகரித்திருக்கிறது? 2001 IPCC அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “19-⁠ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதற்கொண்டு பூமியின் மேற்பரப்பு உஷ்ணம் 0.4 முதல் 0.8 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்திருக்கிறது.” இந்தச் சிறிய அதிகரிப்பு நம் வானிலையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட காரணமாக இருக்கலாம் என அநேக ஆராய்ச்சியாளர்கள் நினைக்கின்றனர்.

இந்தப் பூமியின் வானிலை அமைப்பு வியக்க வைக்கும் அளவுக்கு சிக்கலானது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்; புவிச்சூட்டின் விளைவுகள் என்ன என்பதை விஞ்ஞானிகளால் திட்டவட்டமாக குறிப்பிட முடியவில்லை. இருந்தாலும் புவிச்சூட்டின் காரணமாக வட கோளத்தில் அதிக மழை, ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் வறட்சி, பசிபிக்கில் அடிக்கடி எல்-நினோ ஆகியவை ஏற்பட்டிருப்பதாக அநேகர் நம்புகின்றனர்.

தேவை​—⁠உலகளாவிய தீர்வு

இந்தப் பிரச்சினைக்கு மனிதனே காரணம் என அநேகர் நினைப்பதால், அதைத் தீர்க்கவும் மனிதனால் முடியாதா? கார்களும் தொழிற்சாலைகளும் உண்டாக்கும் காற்று தூய்மைக்கேட்டைக் குறைப்பதற்கான சட்டங்களை அநேக சமுதாயங்கள் ஏற்கெனவே அமல்படுத்தியுள்ளன. அப்படிப்பட்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவையே என்றாலும் அவற்றால் அவ்வளவாக பலன் இல்லை. தூய்மைக்கேடு என்பது உலகளாவிய பிரச்சினை, ஆகவே அதற்கான தீர்வும் உலகளாவிய ஒன்றாக இருக்க வேண்டும்! 1992-⁠ல் ரியோ டி ஜெனிரோவில் புவி உச்சிமாநாடு நடந்தது. பத்து வருடங்களுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவின் ஜோஹெனஸ்பர்க்கில் சுற்றுச்சூழலை ஆதரிக்கும் வளர்ச்சியின் பேரிலான உலக உச்சிமாநாடு நடந்தது. 2002-⁠ல் நடந்த இதில் சுமார் 40,000 பேர் கலந்துகொண்டனர்; இவர்களில் கிட்டத்தட்ட 100 நாடுகளின் தலைவர்களும் இருந்தனர்.

விஞ்ஞானிகள் எல்லாரும் பொதுவான ஒரு முடிவுக்கு வர இப்படிப்பட்ட மாநாடுகள் பெரிதும் உதவியிருக்கின்றன. ஜெர்மன் நாட்டு செய்தித்தாளான டேர் டாகஸ்ஷ்ப்பிஜல் இவ்வாறு விளக்குகிறது: “அப்போது [1992-⁠ல்] பசுங்கூட விளைவைக் குறித்து பெரும்பாலான விஞ்ஞானிகளுக்கு சந்தேகங்கள் இருந்தன, ஆனால் இன்றோ எவ்வித சந்தேகமும் இருப்பதாக தெரியவில்லை.” இருந்தாலும் இப்பிரச்சினைக்கு உண்மையான தீர்வு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என ஜெர்மனியின் சுற்றுச்சூழல் அமைச்சர் யூர்கன் ட்ரிட்டன் நினைப்பூட்டுகிறார். “ஆகவே ஜோஹெனஸ்பர்க்கில் நடைபெற்ற உச்சிமாநாடு வெறும் சொல்லோடு நின்றுவிடாமல் செயலாகவும் உருப்பெற வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

சுற்றுச்சூழல் கேடு​—⁠நிறுத்த முடியுமா?

மனிதன் எதிர்ப்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஒன்று மட்டுமே புவிச்சூடு. அதை திறம்பட சமாளிக்க வேண்டும் என சொல்வது சுலபம்தான், செய்வதோ மகா கஷ்டம். “நம் சுற்றுச்சூழலை நாமே படுமோசமாக கெடுத்துவிட்டோம் என்பதை இப்போது ஒருவழியாக உணர்ந்துவிட்டதால், தொழில்நுட்ப தீர்வுகளை கண்டுபிடிப்பதில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறோம்” என பிரிட்டிஷ் மனிதப் பண்பியல் நிபுணர் ஜேன் குடால் எழுதுகிறார். ஆனால், “தொழில்நுட்பம் மாத்திரமே போதாது. மனமார்ந்த ஈடுபாடும் தேவை” என்று அவர் எச்சரிக்கிறார்.

புவிச்சூட்டு பிரச்சினையை மறுபடியும் எடுத்துக்கொள்ளுங்கள். தூய்மைக்கேட்டிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மிகுந்த செலவு ஆகும்; ஏழை நாடுகளுக்கு இது பெரும்பாலும் கட்டுப்படி ஆகாது. ஆற்றல் தட்டுப்பாடு ஏற்படுகையில் தொழிற்சாலைகள் அதிக லாபத்தோடு இயங்குவதற்காக ஏழை நாடுகளுக்கு இடமாற்றம் செய்யப்படுமோ என சில நிபுணர்கள் அஞ்சுகின்றனர். ஆகவே சிறந்த எண்ணத்தோடு செயல்படும் தலைவர்கள்கூட இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கின்றனர். அவர்கள் தங்கள் நாடுகளின் பொருளாதாரத்தை கட்டிக்காக்க முயன்றால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை கட்டிக்காக்க முயன்றாலோ பொருளாதாரம் ஆபத்திற்குள்ளாகிறது.

ஆகவே தனிப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும் என்று புவி உச்சிமாநாட்டு ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த செவர்ன் கலஸ் சூஸூக்கி வாதிடுகிறார். “உண்மையான சுற்றுச்சூழல் மாற்றம் தனிப்பட்டவர்களான நம்மீது சார்ந்திருக்கிறது. அரசியல் தலைவர்களை நம்பி பிரயோஜனமில்லை. தனிப்பட்டவர்களாக நம்முடைய பொறுப்புகள் என்ன என்றும், நாம் எவ்வாறு மாற்றத்திற்கு பங்களிக்கலாம் என்றும்தான் கவனம் செலுத்த வேண்டும்.”

மக்கள் சுற்றுச்சூழலை மதித்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம்தான். ஆனால் அவர்களது வாழ்க்கை பாணிகளை மாற்றிக்கொள்ள தூண்டுவது அவ்வளவு சுலபம் இல்லை. உதாரணத்திற்கு: வாகனங்கள் புவிச்சூட்டிற்கு பங்களிக்கின்றன என்பதை பெரும்பாலான மக்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஆகவே ஒருவர் தன் வாகனத்தை அதிகம் ஓட்டாதிருக்க அல்லது வாகனமே வாங்காதிருக்க விரும்பலாம். இருந்தாலும் அது நடைமுறைக்கு அவ்வளவாக ஒத்து வருவதில்லை. “அனுதினமும் நாம் போய் வர வேண்டிய இடங்கள் எல்லாமே (ஆபீஸ், நர்ஸரி, பள்ளி, கடைகள் போன்ற எல்லாமே) தூரத்தில் இருப்பதால் கார் இல்லாமல் சமாளிக்க முடிவதில்லை. . . . நமக்கு கார் வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கே இடமில்லை. பெரும்பாலானவர்களுக்கு இதில் சாய்ஸே இல்லை” என வால்ஃப்காங் சாக்ஸ் என்பவர் சமீபத்தில் குறிப்பிட்டார்; இவர், தட்பவெப்பத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆற்றலுக்குமான ஊப்பர்டால் இன்ஸ்ட்டிட்யூட்டைச் சேர்ந்தவர்.

புவிச்சூட்டின் விளைவுகளிலிருந்து பூமியைப் பாதுகாப்பதற்கு காலம் கடந்துவிட்டிருக்கலாமோ என சில விஞ்ஞானிகள் பயப்படுகின்றனர்; இவர்களில் ஒருவர், பூமி மற்றும் வளிமண்டல அறிவியலுக்கான ஜார்ஜியா தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் டிக்கின்சன். அவருடைய கருத்துப்படி, தூய்மைக்கேடு இன்று ஒரு முடிவுக்கு வந்தாலும், ஏற்கெனவே ஏற்பட்டுள்ள தூய்மைக்கேட்டின் விளைவுகள் குறைந்தது இன்னும் 100 வருடங்களுக்காவது இருக்கும்!

சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அரசாங்கங்களாலும் சரி தனி நபர்களாலும் சரி தீர்க்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது; அப்படியென்றால் யாரால் தீர்க்க முடியும்? பூர்வ நாட்களிலிருந்தே, வானிலையைக் கட்டுப்படுத்துவதற்காக மக்கள் வானத்தை நோக்கி உதவி கேட்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட முயற்சிகள் நடைமுறையற்றவை என்றாலும் ஒரு அடிப்படை உண்மையை காட்டுகின்றன; இப்படிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க மனிதனுக்கு கடவுளுடைய உதவி தேவை என்ற உண்மையை காட்டுகின்றன. (g03 8/08)

[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]

“கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்பட்ட புவிச்சூட்டிற்கு பெரும்பாலும் மனித நடவடிக்கைகளே காரணம் என்பதற்கு புதிய, வலுவான அத்தாட்சி உண்டு”

[பக்கம் 6-ன் பெட்டி]

“புவிச்சூட்டினால் உடல்நலத்திற்கு ஆபத்தா?”

ஆர்வத்திற்குரிய இந்தக் கேள்வியை சைன்ட்டிஃபிக் அமெரிக்கன் வெளியிட்ட ஒரு கட்டுரை எழுப்பியது. புவிச்சூடு, “அநேக உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கும் பரவுவதற்கும் வழிவகுக்கும்” என அது கணித்தது. உதாரணத்திற்கு சில இடங்களில் “வெயிலில் பொசுங்கி சாகிறவர்களின் எண்ணிக்கை 2020-⁠க்குள்ளாக இரட்டிப்பாகும் என கணக்கிடப்படுகிறது.”

புவிச்சூடு தொற்றுநோய்களை எவ்வாறு பாதிக்கும் என்பது அவ்வளவு தெளிவாக தெரியவில்லை. “கொசுக்களால் கடத்தப்படும் நோய்கள் அதிகரிக்கும் என கணக்கிடப்படுகிறது,” ஏனென்றால் “காற்றின் வெப்பம் அதிகரிக்கையில் [கொசுக்கள்] வேகமாக பெருகுகின்றன, அதிக வெறியோடு கடிக்கின்றன. . . . கொசுக்கள் நுழைய முடியாத பிரதேசங்களின் உஷ்ணம் அதிகரிக்கையில் அங்கும் அவை நுழைய ஆரம்பித்து நோய்களை பரப்பும்.”

இறுதியாக, வெள்ளப்பெருக்கானாலும் சரி வறட்சியானாலும் சரி, அவற்றுக்கே உரிய பாதிப்புகள் உண்டு; அவை இரண்டினாலும் தண்ணீர் மாசுபடும். ஆக, புவிச்சூட்டின் அச்சுறுத்தலுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது.

[பக்கம் 7-ன் படம்]

பசுங்கூட விளைவினால் விண்வெளிக்கு செல்ல வேண்டிய வெப்பம் வளிமண்டலத்திலேயே தங்கி விடுகிறது

[படத்திற்கான நன்றி]

NASA photo

[பக்கம் 7-ன் படங்கள்]

மனிதன் டன்கணக்கில் மாசுப்பொருட்களை வெளியேற்றி காற்றை நச்சாக்கியிருக்கிறான், இதனால் பசுங்கூட விளைவு அதிகரித்திருக்கிறது