Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வானிலையில் ஏதோ கோளாறா?

வானிலையில் ஏதோ கோளாறா?

வானிலையில் ஏதோ கோளாறா?

“இங்கிலாந்து நாட்டவர்கள் ஒருவரையொருவர் சந்தித்தால் முதலில் வானிலையைப் பற்றித்தான் பேச்செடுப்பார்கள்” என ஜோக் அடித்தார் பிரபல எழுத்தாளர் சாமுவல் ஜான்சன். இருந்தாலும், யாரிடமாவது பேச்சுக் கொடுப்பதற்காக மட்டுமே வானிலையைப் பற்றி பேசும் காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் உலகெங்கும் உள்ளவர்களுக்கு இது மிகுந்த கவலையளிக்கும் சமாச்சாரமாக ஆகிவிட்டது. ஏன்? ஏனென்றால் பொதுவாகவே ஊகிக்க முடியாததாக இருந்திருக்கும் வானிலை, மேன்மேலும் ஊகிக்க முடியாததாக ஆகிவருகிறது.

உதாரணத்திற்கு, 2002, கோடை காலத்தில் கடும் மழையும் சூறாவளியும் ஐரோப்பாவைத் தாக்கின. இதனால் “கடந்த நூறு ஆண்டுகளில் ஏற்பட்டவற்றிலேயே மிகக் கொடிய வெள்ளப்பெருக்கு மத்திய ஐரோப்பாவில்” ஏற்பட்டதாக விவரிக்கப்படுகிறது. பின்வரும் செய்தி அறிக்கைகளை கவனியுங்கள்:

ஆஸ்திரியா: “முக்கியமாக சால்ஸ்பர்க், காரின்த்தியா, டைரோல் ஆகிய மாகாணங்களை கடும் புயல்மழை தாக்கியது. அநேக தெருக்களில் சேறும் சகதியும் குப்பைக்கூளங்களும் 15 மீட்டர் உயரத்துக்கு குவிந்துவிட்டன. வியன்னாவில் சூயட்பாங்ஹாஃப் ரயில்வே நிலையத்தில், இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் ரயில் விபத்து நேரிட்டது. இதில் பலர் காயமடைந்தனர்.”

செக் குடியரசு: “ப்ராக் நகரத்தில் கோர சம்பவம் ஏற்பட்டது என்றால் மற்ற மாநிலங்களில் மகா கோர அனுபவம் ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட 2,00,000 பேர் தங்கள் வீடு வாசல்களை இழந்தனர். முழு பட்டணங்களுமே வெள்ளத்தில் மூழ்கின.”

பிரான்சு: “இருபத்தி மூன்று பேர் சாவு, ஒன்பது பேர் காணவில்லை, ஆயிரக்கணக்கானவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் . . . திங்கட்கிழமை பெய்த புயல்மழையின்போது மின்னல் தாக்கி மூன்று பேர் சாவு. . . . காரில் அமர்ந்திருந்த ஒரு தம்பதியினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்; அவர்களை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் சாவு.”

ஜெர்மனி: “இந்த ‘நூற்றாண்டின் வெள்ளப்பெருக்கில்’ ஜெர்மனியின் சரித்திரத்தில் முன்னொரு போதும் இல்லாதளவுக்கு பட்டணங்களிலும் கிராமங்களிலுமிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வீடுவாசல்களை விட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முன்ஜாக்கிரதையோடு இப்படி நடந்துகொண்டிருக்கின்றனர். வெள்ளப்பெருக்கின்போது சிலர் உயிர் ஊசலாடும் நிலையில் படகிலோ ஹெலிகாப்டரிலோ காப்பாற்றப்பட்டனர்.”

ருமேனியா: “ஜூலை மாத மத்திபத்திலிருந்து புயல்மழையினால் சுமார் 12 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.”

ரஷ்யா: “கருங்கடலின் கரையோரப் பகுதிகளில் குறைந்தது 58 பேர் இறந்தனர் . . . கிட்டத்தட்ட 30 கார்களும் பஸ்களும் கடலுக்கடியில் கிடக்கின்றன. மறுபடியும் புயல் மையம் கொண்டிருப்பதாக எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டதால் அவற்றை தேடும் படலம் கைவிடப்பட்டது.”

ஐரோப்பாவில் மட்டுமல்ல

ஆகஸ்ட் 2002-⁠ல், ஜெர்மன் செய்தித்தாள் சூயட்டாய்ச்சி ட்ஸிடுங் இவ்வாறு அறிக்கை செய்தது: “ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும் பெய்த கனமழையும் வீசிய புயல்காற்றும் பேரழிவை உண்டாக்கியிருக்கின்றன. புதன்கிழமை நேப்பாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 50 பேர் இறந்தனர். தென் சீனாவில் வீசிய கடும் புயல் எட்டு பேரை காவுகொண்டது, மத்திய சீனாவில் பேய் மழை பெய்தது. சீனாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மேகாங் நதியின் நீர் மட்டம் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு உயர்ந்தது; அதனால் வடகிழக்கு தாய்லாந்தில் 100 வீடுகளுக்கும் மேல் வெள்ளத்தில் மூழ்கின. . . . அர்ஜென்டினாவில் கொட்டிய மழையில் குறைந்தது ஐந்து பேரின் உயிர் பறிபோனது. . . . சீனாவில் கோடை கால புயல் மழைகளினால் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கின்றனர்.”

உலகின் அநேக பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தபோது ஐக்கிய மாகாணங்கள் கடும் வறட்சியால் தவித்தது. அங்கு இவ்வாறு அறிக்கை செய்யப்பட்டது: “கிணறுகளின் நீர் மட்டம் குறைந்துவிட்டது, கிணறுகள் வறண்டுவிட்டன, அநேக நீரோடைகளில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் வற்றிவிட்டது, இந்தப் பருவகாலத்தில் காட்டுத் தீ எப்போதையும்விட இரு மடங்குக்கும் அதிகமாக ஏற்படுகிறது. இதையெல்லாம் பார்த்து தேசமே கவலையில் மூழ்கியுள்ளது. பயிர்களும் பயிர்நிலங்களும் நாசமடைவதையும், குடிநீர் பற்றாக்குறையையும், காட்டுத் தீ விபத்துக்களையும், சூறாவளிகளையும் கவனிக்கும் நிபுணர்கள், 2002-⁠ல் உண்டான வறட்சியால் கோடிக்கணக்கான டாலர் நஷ்டம் ஏற்படும் என கணிக்கின்றனர்.”

வடக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளும் 1960-கள் முதற்கொண்டு கடும் வறட்சியில் தத்தளிக்கின்றன. அறிக்கைகளின்படி, “மழையின் அளவு, 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைவிட 20-49 சதவீதம் குறைந்துவிட்டது, இதனால் பஞ்சமும் சாவும் பரவலாக ஏற்பட்டது.”

கிழக்கு பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை அதிகரித்ததால் ஏற்பட்ட எல்-நினோ வானிலை, வட அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் வெள்ளப்பெருக்கையும் மற்ற வானிலை மாற்றங்களையும் அவ்வப்போது ஏற்படுத்துகிறது. a 1983/84-⁠ல் ஏற்பட்ட எல்-நினோ காரணமாக “1,000-⁠க்கும் அதிகமானவர்கள் இறந்தார்கள், கிட்டத்தட்ட எல்லா கண்டங்களிலும் இயற்கை சீற்றத்தைக் காட்டியது, உடைமைகளுக்கும் கால்நடைகளுக்கும் உண்டான சேதத்தால் மொத்தம் 1,000 கோடி அமெரிக்க டாலர் நஷ்டம் ஏற்பட்டது” என CNN செய்தி நிறுவனம் அறிக்கை செய்கிறது. இந்த எல்-நினோ 19-ஆம் நூற்றாண்டில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது; அது முதற்கொண்டு அவ்வப்போது (கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில்) தலைகாட்டியிருக்கிறது. ஆனால் “எல்-நினோ இன்னும் அடிக்கடி இப்போது ஏற்பட ஆரம்பித்திருக்கிறது” என்றும் எதிர்காலத்தில் “இதைவிட அடிக்கடி ஏற்படும்” என்றும் சில நிபுணர்கள் நம்புகிறார்கள்.

ஐ.மா. தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிறுவனம் பிரசுரித்த ஒரு கட்டுரை இந்த உறுதியை அளிக்கிறது: “நாம் அனுபவித்திருக்கும் ‘விசித்திரமான’ வானிலைக்கு​—⁠அசாதாரணமான உஷ்ணத்திற்கு அல்லது வழக்கத்திற்கு மாறான மழைக்கு​—⁠பெரும்பாலும் காரணம் அந்தந்த பகுதிகளுக்கு உரிய இயல்பான வானிலை மாற்றங்களே ஆகும்.” இருந்தாலும் இதற்கு ஒரு பெரிய பிரச்சினை காரணமாக இருக்கலாம் என அறிகுறிகள் காட்டுகின்றன. க்ரீன்பீஸ் என்ற சுற்றுச்சூழல் அமைப்பு இவ்வாறு கணிக்கிறது: “இன்னும் பலமான புயல்காற்றுகள், பலத்த மழை போன்ற ஆபத்தான வானிலை மாற்றங்கள் தொடர்ந்து இக்கிரகத்தில் பேரழிவை உண்டாக்கும். இன்னும் கடுமையான வறட்சிகளும் வெள்ளப்பெருக்குகளும் இப்பூமியின் தோற்றத்தையே உருக்குலைக்கும். இதனால் கரையோரப் பகுதிகளும் காடுகளும் அழியும்.” இப்படி சொல்வதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? இருக்கிறதென்றால், இந்த “ஆபத்தான வானிலை மாற்றங்கள்” ஏற்பட காரணம் என்ன? (g03 8/08)

[அடிக்குறிப்பு]

[பக்கம் 23-ன் படங்கள்]

ஜெர்மனியிலும் (மேலே) செக் குடியரசிலும் (இடது) வெள்ளப்பெருக்கு