Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஃபாஷன்—சமநிலையான கண்ணோட்டம்

ஃபாஷன்—சமநிலையான கண்ணோட்டம்

ஃபாஷன்​—⁠சமநிலையான கண்ணோட்டம்

கடவுள் “எல்லாவற்றையும் அதனதன் காலத்தில் அழகாக படைத்திருக்கிறார்” என பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 3:11, நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்) இவ்வுலகில் எங்கு திரும்பினாலும் நாம் அழகைக் காண்கிறோம். மனிதர்களிலும் அழகை பார்க்கிறோம்.

ஆடைகளால் நம் அழகைக் கூட்டுவதே ஃபாஷன் டிசைனர்களின் குறிக்கோள். ஆனால் முந்தைய கட்டுரையில் விளக்கப்பட்டபடி, ஃபாஷன் துறை அழகிற்கு புதிய அர்த்தம் கற்பித்திருக்கிறது. “ஒடிந்து விழுபவர்கள் போல் ஒடிசலாக இருக்கும் பெண்களையே பார்த்துப் பார்த்து அதுதான் அழகு போலும் என நினைக்க ஆரம்பித்துவிட்டோம்” என்கிறார் மனோதத்துவ பேராசிரியர் ரூத் ஸ்ட்ரிகல்-மோர்.

உலகம் தற்போது எதை அழகு என்று கருதுகிறதோ அதையே நாமும் அழகு என்று ஏற்றுக்கொள்வது ஞானமற்றது என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. “இன்றுள்ள பெண்கள், ஃபாஷனில் வரும் ‘கட்டழகிற்கு’ ஏற்ப அவ்வப்போது தங்கள் உடற்கட்டை மாற்றிக்கொள்ள அல்லது வித்தியாசமாக காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை” என ஆல்வேஸ் இன் ஸ்டைல் என்ற தனது புத்தகத்தில் டாரஸ் பூசர் சொல்கிறார். மீடியா அதற்கே உரிய தனி பாணியை நம்மீது திணிப்பதற்கு நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்? “நம்மை மாற்றிக்கொள்ள வெறியாய் அலைந்து கஷ்டப்படுவதைவிட நாம் நாமாகவே இருந்துவிடுவது எவ்வளவு சுலபம்” என்கிறார் பூசர்.

அழியா அழகு

வாழ்க்கையில் தன்னம்பிக்கையும் திருப்தியும் பெற பார்வைக்கு அழகாக இருந்தால் மட்டும் போதாது. “உண்மையான சந்தோஷம் உடலின் எடையை அல்ல, ஆனால் உள்ளத்தையே சார்ந்திருக்கிறது” என பசியில்லா உளநோயால் முன்பு பாதிக்கப்பட்டிருந்த ஜூடி சார்ஜன்ட் எழுதுகிறார். இவ்விஷயத்தில் பைபிள் இன்னும் ஒரு படி மேலே செல்கிறது. “உங்கள் உள்ளத்தில் மறைந்திருக்கிற குணங்களே, சாந்தமும் அமைதியுமான அழியா அழகே உங்கள் அழகாக இருக்க வேண்டும், இதுவே கடவுளுடைய பார்வையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது” என அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதினார்.​—1 பேதுரு 3:4, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்.

பேதுரு குறிப்பிடும் அழியா அழகு புற அழகையெல்லாம் விஞ்சிவிடுகிறது; ஏனென்றால் அது நிரந்தரமானது, அதோடு கடவுளுடைய பார்வையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது. அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பு ஞானமுள்ள அரசர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “சௌந்தரியம் பொய்யாய் போகலாம், அழகும் வீணாய் போகலாம்; ஆனால் யெகோவாவிற்கு பயப்படும் பெண்ணே தனக்கு புகழைத் தேடிக்கொள்கிறாள்.”​—நீதிமொழிகள் 31:30, NW.

இன்று சரீர அழகுதான் நிறைய பேரை மிகவும் கவர்ந்திழுக்கிறது என்றாலும், கிறிஸ்தவ பண்புகளை வெளிக்காட்டும் நபர்களை மதிக்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் பின்வரும் அறிவுரையைக் கொடுத்தார்: “உருக்கமான இரக்கம், தயவு, மனத்தாழ்மை, சாந்தம், நீடிய பொறுமை ஆகியவற்றாலான . . . புதிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள்.”​—கொலோசெயர் 3:10, 12, NW.

ஃபாஷன் நிலையற்றது, அதன் இயல்பே அதுதான். அதோடு, எப்படிப்பட்ட லேட்டஸ்ட் ஸ்டைலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் நமக்கு அழகூட்டும். மேலும், நாம் எவ்வளவுதான் அழகாக தோன்றினாலும் நம் இயல்பு அதற்கேற்றாற்போல் இல்லாவிட்டால் அவ்வழகு சீக்கிரத்தில் குலைந்துவிடும். ஆனால் “ஆவியின் கனி”​—⁠அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, நற்குணம், இச்சையடக்கம் போன்ற குணங்கள்​—⁠ஒருபோதும் அவுட்-ஆஃப்-ஃபாஷன் ஆவதில்லை என்பதை ஞாபகம் வையுங்கள்.​—கலாத்தியர் 5:22, 23; 1 தீமோத்தேயு 2:9, 10.

இருந்தாலும் நம் உடைக்கு போதிய கவனம் செலுத்துவது ஏற்றதே என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் சமநிலையைக் காத்துக்கொள்வது சவாலாக இருந்ததாய் பிரான்ஸைச் சேர்ந்த ஆலின் ஒப்புக்கொள்கிறார். “டீனேஜ் பருவத்தில் உடையில் ரொம்ப ஆர்வம் காட்டினேன். தன்னம்பிக்கையை பெறுவதற்காக லேட்டஸ்ட் ஃபாஷன்படி டிரஸ் செய்துகொள்ள விரும்பினேன். அதுவும் டிசைனர் ஆடைகள் மீது எனக்கு தனி மோகம் இருந்தது.

“ஆனால் வளர்ந்த பிறகு என் செலவுகளை நானே கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதோடு கிறிஸ்தவ ஊழியத்திலும் அதிக நேரம் செலவிட ஆரம்பித்தேன். இனியும் ஃபாஷனுக்கு அடிமையாக இருப்பது எனக்கு கட்டுப்படியாகாது என்பதை உணர்ந்தேன். ஆகவே சேல்ஸ் போடப்பட்டிருக்கும் இடங்களுக்கு அல்லது தள்ளுபடி கடைகளுக்கு சென்று துணிமணிகள் வாங்க ஆரம்பித்தேன். முன்பைவிட கால்வாசிதான் செலவழித்தேன், ஆனாலும் என்னால் நன்றாக டிரஸ் பண்ணிக்கொள்ள முடிந்தது. உங்களுக்கு பொருத்தமான, நடைமுறையான, ஏற்கெனவே உங்களிடம் உள்ளவற்றோடு நன்றாக மாட்ச் ஆகிற, சீக்கிரத்தில் அவுட்-ஆஃப்-ஃபாஷன் ஆகாத துணிமணிகளை வாங்கக் கற்றுக்கொள்வதுதான் வெற்றியின் இரகசியம். இப்போதெல்லாம், ஃபாஷனுக்கு ஏற்றாற்போல் துணிமணிகள் வாங்குவதற்கு பதிலாக எனக்கு எது பொருத்தமோ அதைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்கிறேன். அதற்காக உடைகளைப் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் என் மதிப்பு என் தோற்றத்தை மட்டுமே சார்ந்திருப்பதில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்” என்கிறார் ஆலின்.

உள் அழகைவிட வெளி அழகிற்கு அளவுக்கதிகமான மதிப்பு கொடுக்கும் ஒரு சமுதாயத்தில், பைபிள் தரும் கருத்தாழமிக்க இந்த நினைப்பூட்டுதலை கிறிஸ்தவர்கள் மனதில் வைப்பது நல்லது: “இச்சைகளை திருப்திப்படுத்துபவையும், கண்களை மயக்குபவையும், வாழ்க்கையின் சகலவித கவர்ச்சிகளுமான உலகம் அளிக்கும் அனைத்துமே பிதாவிடமிருந்து தோன்றுவதில்லை, ஆனால் தெய்வபக்தியற்ற உலகிலிருந்தே தோன்றுகின்றன. அப்படிப்பட்ட உலகமும் அதன் எல்லா கவர்ச்சிகளும் அழிந்து போகின்றன, ஆனால் கடவுளுடைய சித்தத்தை செய்பவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.”​—1 யோவான் 2:16, 17, த நியூ இங்லிஷ் பைபிள். (g03 9/08)

[பக்கம் 9-ன் படம்]

உண்மையான அழகு உடையில் அல்ல, உள்ளத்திலேயே இருக்கிறது

[பக்கம் 10-ன் படம்]

ஏற்கெனவே உங்களிடம் உள்ள உடைகளுக்கு பொருந்தும், நடைமுறைக்கு ஏற்ற ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள்