Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

போதையில் தள்ளாடும் விலங்கினங்கள்

மதுபானத்தால் மனிதர்களுக்கு மட்டுமல்ல மற்ற உயிரினங்களுக்கும் போதை ஏறுவதாக உலகெங்குமிருந்து வந்திருக்கும் அறிக்கைகள் காட்டுகின்றன. சமீபத்தில் இந்தியாவிலுள்ள அஸ்ஸாமில் ஒரு கிராமத்தில் யானைக் கூட்டம் ஒன்று பீரை ருசிகண்டுவிட்டு, பிறகு போதை வெறியில் கட்டிடங்களை எல்லாம் அடித்து நொறுக்கியது. பாஸ்னியாவில், தூக்கியெறியப்பட்ட தகர டப்பாக்களின் அடியில் இருந்த கொஞ்சம் பீரை குடித்துக் குடித்துப் பழகிய ஒரு கரடி இன்னும் வேண்டுமென்று கெஞ்ச ஆரம்பித்தது. அதனுடைய ரௌடித்தனத்தை சகிக்க முடியாமல், ஆல்கஹால் இல்லாத பீரை கொடுக்க கிராமவாசிகள் முடிவு செய்தார்கள். திட்டம் பலித்தது. அந்தக் கரடி பீரை குடித்து மகிழ்ந்தாலும் ரெளடித்தனம் செய்வதில்லை. வட கலிஃபோர்னியாவில் சாலையோர புதர்ச்செடிகளிலுள்ள புளிப்பேறிய பெர்ரி பழங்களை சாப்பிட்ட பறவைகள் போதை ஏறி கார்களை தாக்க ஆரம்பித்தன. பிரச்சினையைத் தீர்க்க அந்தப் புதர்ச்செடிகள் வெட்டப்பட்டன. புளிப்பான மலர்த் தேனை அருந்தும் தேனீக்களுக்கு, போதையில் “வீடு” திரும்ப வழி தெரிவதில்லை; தள்ளாடியவாறு மரங்களில் போய் மோதுகின்றன அல்லது தரையில் பொத்தென்று விழுந்துவிடுகின்றன. அப்படியே தட்டுத்தடுமாறி கூட்டிற்கு போய் சேர்ந்தாலும் அவற்றிற்கு இன்னொரு சவால் அங்கு காத்திருக்கிறது; தேனீக்கூட்டம் முழுவதும் போதையூட்டப்படுவதை தடுக்க தீர்மானத்தோடு செயல்படும் காவல்கார தேனீக்களின் கோபத்தை அவை சந்திக்க வேண்டியிருக்கிறது. (g03 9/22)

உயிருக்கு உலை வைக்கும் ப்ளாஸ்டிக் பைகள்

உலகெங்கும், ஒவ்வொரு வருடமும் 1,00,000-⁠க்கும் அதிகமான பாலூட்டிகளும் பறவைகளும் மீன்களும், தூக்கியெறியப்படுகின்ற ப்ளாஸ்டிக் பைகளை சாப்பிட்டு அல்லது அவற்றில் மாட்டிக்கொண்டு மூச்சுத் திணறி இறக்கின்றன என கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் மட்டுமே வருடா வருடம் 690 கோடி ப்ளாஸ்டிக் பைகளை கடைகண்ணிகளுக்கு செல்பவர்கள் பயன்படுத்துகிறார்கள். அப்படிப் பார்த்தால் ஷாப்பிங் செய்யும் ஒவ்வொரு நபரும் சராசரியாக 360 பைகளை பயன்படுத்துகிறார். இவற்றில் 2 கோடியே 50 லட்சம் பைகள் குப்பையில் போடப்படுகின்றன. மிருகங்களின் சாவைக் குறைப்பதற்காக ஆஸ்திரேலியாவிலுள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் இனி ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக மக்கிப்போகக்கூடிய (biodegradable) பைகளை பயன்படுத்தப்போவதாக 2002-⁠ன் பிற்பகுதியில் சிட்னியின் சன்டே டெலிகிராஃப் செய்தித்தாள் அறிக்கை செய்தது. இந்தப் புதிய பைகள் பார்ப்பதற்கும் தொடுவதற்கும் ப்ளாஸ்டிக் பைகளைப் போலவே இருந்தாலும், அவை மரவள்ளிக் கிழங்கு மாவிலிருந்து செய்யப்படுகின்றன. மூன்று மாதங்களுக்குள் அவை சிதைந்துவிடும். “இங்கே ஆஸ்திரேலியாவில், மக்கிப்போகும் ஒன்றை முதன்முறையாக கண்டுபிடித்திருக்கிறோம், அதுவும் இதன் விலை சாதாரண ப்ளாஸ்டிக் பைகளின் விலையேதான்” என்கிறார் பால் ஷன்ஸ்டன். இவர், ப்ளானட் ஆர்க் என்ற சுற்றுச்சூழல் குழுவின் தலைவர். “மக்கிப்போகும் பைகளே பயன்படுத்தப்பட வேண்டுமென 81 சதவீத மக்கள் ‘முழுமையாக ஒப்புக்கொள்வதாக’” சமீபத்திய சுற்றாய்வு ஒன்று காட்டுகிறது. (g03 9/08)

“கத்தோலிக்க சர்ச்சின் அங்கத்தினராயிருக்க இனியும் விருப்பமில்லை”

இத்தாலியில் கத்தோலிக்கராக முழுக்காட்டப்பட்ட ஒரு நபர் “இனியும் கத்தோலிக்க சர்ச்சின் பாகமாக இருக்க விரும்பவில்லையென்றால்” அவரது விருப்பம் பூர்த்தி செய்யப்படும் என இல் சோலி​—⁠24 ஓரி என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. முன்பெல்லாம், முழுக்காட்டப்பட்டோரின் பதிவேட்டிலிருந்து தங்கள் பெயரை நீக்கும்படி கேட்டுக்கொண்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது; ஏனென்றால் அது “சர்ச் சரித்திரத்தின் ‘சுவடுகளை’ அழித்துவிடுவதற்கு சமம்” என சொல்லப்பட்டது. ஆனால் அநேகர் தங்கள் பெயரை சர்ச்சின் அதிகாரப்பூர்வ பதிவேட்டிலிருந்து நீக்கும்படி வேண்டுகோள் விடுத்த பிறகு நிலைமை மாறியது; முழுக்காட்டுதல் பெறுவோருக்கான வட்டார பதிவேட்டில், “கத்தோலிக்க சர்ச்சின் அங்கத்தினராயிருக்க இனியும் விருப்பமில்லை” என்ற குறிப்பை சேர்க்கும்படி தனிப்பட்ட தகவல் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிப்பவர் ஆணையிட்டார். இவர் குறைந்தது மூன்று நபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களது பெயர்களை பதிவேட்டிலிருந்து நீக்கும்படி பாதிரிமார்களிடம் ஏற்கெனவே கேட்டிருக்கிறார். (g03 9/08)

டீனேஜ் தாய்மார்கள்

மெக்சிகோவில் 10-லிருந்து 19 வயதுக்குட்பட்ட பெண்கள் கர்ப்பமாகும் எண்ணிக்கை “கடந்த 30 ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது” என மெக்சிகோ நகர பத்திரிகை காம்ப்யோ குறிப்பிடுகிறது. குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அரசு பள்ளிகளில் செக்ஸ் கல்வி புகட்டப்பட்டும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. “புகைபிடிக்கும், மது அருந்தும், அல்லது சட்டத்திற்கு புறம்பான போதைப்பொருள் எடுத்துக்கொள்ளும் டீனேஜர்கள் சிறு வயதிலேயே பாலுறவு கொள்ளும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம்” என உடல்நல அதிகாரிகளின் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அதோடு, 30 சதவீத டீனேஜ் தாய்மார்கள், முதல் குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் இன்னொரு குழந்தையை திட்டமிடாமல் பெற்றெடுக்கிறார்கள்; அவர்களில் 50 சதவீதத்தினர் இரண்டு வருடங்களுக்குள்ளாக இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்கிறார்கள். டீனேஜ் பருவத்தில் அல்லது அதைவிட சிறுவயதில் கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் போதாதென்று, இந்த இளம் தாய்மாரில் 60 சதவீதத்தினர் தங்கள் குழந்தைகளை அவற்றின் அப்பாவின் ஆதரவு இல்லாமல் வளர்க்க வேண்டியிருக்கிறது. (g03 9/08)

அமில நாசம்

பாரிஸிலுள்ள நேஷனல் லைப்ரரியில் வைக்கப்பட்டிருக்கும், 1875 முதல் 1960 வரை பிரசுரிக்கப்பட்ட புத்தகங்களிலும் ஆவணங்களிலும் கிட்டத்தட்ட 65 சதவீதம் அழியும் ஆபத்தில் இருப்பதாக லா மான்ட் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. அவற்றில் கந்தக அமிலம் இருப்பதாலேயே அவை மெதுமெதுவாக சிதைகின்றன; ஏனென்றால் அந்த அமிலத்தால் காகிதம் மொரமொரப்பாகி தூள் தூளாகிவிடுகிறது. ஒவ்வொரு வருடமும் நேஷனல் லைப்ரரி சர்வீஸஸ் சுமார் 20,000 புத்தகங்களிலிருந்து இந்தக் கந்தக அமிலத்தை நீக்குகிறது; இதற்காக ஒவ்வொரு புத்தகத்திற்கும் 7-8 ஐ.மா. டாலர் செலவாகிறது. 1980-கள் முதற்கொண்டு பெரும்பாலான புத்தகங்கள் அமிலம் இல்லாத காகிதத்திலேயே அச்சிடப்பட்டு வருகின்றன. (g03 9/08)

தூக்கம் கெட்டால் உடல் கெடும்

“போலாந்து நாட்டவரில் ஒன்பது சதவீதத்தினர் ஒவ்வொரு ராத்திரியும் ஐந்து மணிநேரத்திற்கும் குறைவாகவே தூங்குகிறார்கள்” என வார்ஸாவின் வார வெளியீடாகிய வப்ராஸ்ட் அறிக்கையிடுகிறது. “அமெரிக்கர்களையும் பிரிட்டன் நாட்டவரையும் பொறுத்தவரை, மூன்றில் ஒருவர் 6.5 மணிநேரத்திற்கு மேலாக தூங்குவதில்லை.” போலாந்திலுள்ள தூக்கக் கோளாறு க்ளினிக்கை சேர்ந்த மிக்கா ஸ்கால்ஸ்கி, “போதிய நேரம் தூங்காதவர்கள் எந்நேரமும் அழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள்” என்கிறார். “ஒவ்வொரு ராத்திரியும் எட்டு மணிநேரம் தூங்குபவர்களோடு ஒப்பிட, ஐந்து மணிநேரமோ அதற்கும் குறைவாகவோ தூங்குபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து 50 சதவீதம் அதிகம்” என ஜப்பானிய ஆராய்ச்சி காட்டுவதாக வப்ராஸ்ட் சொல்கிறது. அதுமட்டுமல்ல, தூக்கக் குறைவு சர்க்கரை வியாதிக்கும் மற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கும் இட்டுச் செல்லலாம் என அமெரிக்க ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. போதிய நேரம் தூங்காதது “க்ளூகோஸ் வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகளை” ஏற்படுத்துவதோடு “அளவுக்கதிகமாக குண்டாகும் ஆபத்தையும் அதிகரிக்கலாம்” என அந்த அறிக்கை சொல்கிறது. “நீங்கள் சோர்வாக இருக்கும்போது, குறைவுபடும் சக்தியை ஈடு செய்ய உங்கள் உடல் முயற்சி செய்கிறது. . . . போதிய நேரம் தூங்காதவர்கள், விழித்திருக்கும்போது தூங்கி வழியாமல் இருப்பதற்கு இன்னுமதிகமாக சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள். ஆகவே நீங்கள் பல கிலோ எடை குறைந்திருக்கிறீர்கள் என்றால் மறுபடியும் எடை கூடாமலிருக்க சற்று அதிக நேரம் தூங்குங்கள்” என அமெரிக்கன் ஃபிட்னஸ் என்ற பத்திரிகை விளக்குகிறது. (g03 9/22)

ஆபீஸில் ஒரு நாள்

ஆபீஸில் செலவழிக்கும் ஒரு நாளைப் பற்றி 511 பேரிடம் லண்டன் மேகஸீன் கேட்டது. வேலைநேரத்தில் சுமார் 50 சதவீதத்தினர் மது அருந்தியிருந்தார்கள், 48 சதவீதத்தினர் எதையாவது திருடியிருந்தார்கள், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் சட்டத்திற்கு புறம்பான போதைப்பொருள் உட்கொண்டிருந்தார்கள் என லண்டனின் செய்தித்தாள் த டெய்லி டெலிகிராஃப் அறிக்கை செய்கிறது. கூடுதலாக 42 சதவீதத்தினர் “தங்கள் முதலாளியை கொல்வது போல் கற்பனை செய்திருந்தார்கள்,” கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் “இன்டர்நெட்டில் ஆபாசத்தை பார்த்திருந்தார்கள்,” “62 சதவீதத்தினர் சக வேலையாளிடமிருந்து தகாத ‘அழைப்பு’ பெற்றிருந்தார்கள், கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கினர் ஆபீஸில் உடலுறவு கொண்டிருந்தார்கள்.” இந்த வேலையாட்களில் 36 சதவீதத்தினர் தங்கள் விண்ணப்பங்களில் ஏதோ பொய் சொல்லியிருந்தார்கள், 13 சதவீதத்தினர் வேலை உயர்வு கிடைப்பதற்காக முதலாளியோடு உடலுறவு கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்கள், 45 சதவீதத்தினர் தங்கள் உயர்வுக்காக மற்ற பணியாளர்களின் கூட இருந்தே குழி பறிக்கத் தயாராக இருந்தார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது கசப்புணர்ச்சி ஏற்படுவதே இப்படிப்பட்ட பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு காரணம் என உளநோய் மருத்துவர் பிலிப் ஹாட்சன் கூறுகிறார். “உயர்ந்த அந்தஸ்திற்காக நாம் எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம். பட்டம், பதவி, அந்தஸ்து ஆகியவையே நமக்கு ரொம்ப முக்கியமாக இருக்கிறது” என அவர் சொல்கிறார். (g03 9/22)

குடும்பத்திற்குத் தேவை​—⁠உரையாடல்

“குடும்பங்களில் வெறுமனே உம்கொட்டுவதுதான் உரையாடலாக ஆகிவிட்டது, இதனால் சிறு பிள்ளைகளுக்கு தங்கள் உணர்ச்சிகளை சரிவர வெளிப்படுத்த தெரிவதில்லை” என லண்டனின் த டைம்ஸ் அறிக்கை செய்கிறது. இதற்கான காரணம் “டிவி முன்பாகவும் கம்ப்யூட்டர் முன்பாகவும் [பிள்ளைகள்] எந்நேரமும் உட்கார்ந்திருப்பது, ஒன்றுசேர்ந்து சாப்பிடுவதற்கு குடும்பங்கள் நேரத்தை ஒதுக்காதிருப்பது ஆகியவையே” என ஆலன் வெல்ஸ் சொல்கிறார்; இவர், பிரிட்டனில் கல்வி தராதரங்களை காக்கும் அரசு நிறுவனமாகிய பேஸிக் ஸ்கில்ஸ் ஏஜென்ஸியின் இயக்குநர். தாத்தா பாட்டிமார் இல்லாத ஒற்றை பெற்றோர் குடும்பங்களில் பிள்ளைகள் வளருவதும் ஒரு காரணமென வெல்ஸ் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல இப்போதெல்லாம் வெகு சில பெற்றோரே தங்கள் பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டுகிறார்கள், இது இன்னொரு காரணம் என்றும் சொல்கிறார். இந்தக் காரணங்கள், நான்கு அல்லது ஐந்து வயதில் பள்ளியில் சேரும் பிள்ளைகள் அந்தக் காலத்துப் பிள்ளைகளைப் போல் ஏன் “தெளிவாகவும் நன்றாகவும் பேச முடிவதில்லை” என்பதைப் புரிந்துகொள்ள உதவுவதாக அவர் நம்புகிறார். பிள்ளைகளோடு எப்படி தொடர்புகொள்வது என பெற்றோருக்கு கற்றுத்தரும் திட்டங்களை வெல்ஸ் பரிந்துரைக்கிறார். (g03 9/22)