Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடலில்பேரழிவு கரையில் சீரழிவு

கடலில்பேரழிவு கரையில் சீரழிவு

கடலில்பேரழிவு—கரையில் சீரழிவு

ஸ்பெயினிலுள்ள விழித்தெழு! எழுத்தாளர்

சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பேரழிவு ஒன்று நவம்பர் 13, 2002 அன்று ஆரம்பமானது. அன்றைய தினம்தான் ஆழ்கடலில் ப்ரெஸ்டிஜ் என்ற எண்ணெய்க் கப்பலில் கசிவு ஏற்பட்டது. சேதமடைந்த கப்பலை சரிப்படுத்துவதற்கான முயற்சி தோல்வியைத் தழுவியது. ஆறு நாட்களுக்குப் பிறகு ஸ்பெயினின் கரையோரத்திலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் கப்பல் இரண்டாக பிளந்து நீருக்குள் மூழ்கியது. அதற்குள், கிட்டத்தட்ட 20,000 டன் எண்ணெய் கசிந்துவிட்டது.

அந்தக் கப்பல் கடலுக்குள் மூழ்கியபோதும் 50,000 டன்னுக்கும் அதிகமான எண்ணெய்யை சுமந்துகொண்டிருந்தது. கடலுக்கடியில் தினமும் சுமார் 125 டன் எண்ணெய் கசிந்துகொண்டே இருந்தது. எண்ணெய்ப் படலங்கள் உருவாகிய வண்ணம் இருந்தன; அவை ஓயாமல் கரையை நோக்கி மிதந்து சென்றவாறே இருந்தன. அந்தக் கன எரிபொருள் எண்ணெய் அதிக பிசுபிசுப்பாகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும் இருந்ததால் சுற்றுச்சூழலுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது.

கடற்கரைகளை சுத்தப்படுத்த முயன்ற அநேக வாலண்டியர்களுக்கு புகை மண்டலத்தால் மூச்சு முட்டியது. போதாததற்கு அந்த எண்ணெய் கெட்டியான தார் போல் மிதந்து, பாறைகளோடு ஒட்டிக்கொண்டது. பார்ப்பதற்கு கருநிற ச்சூயிங் கம் ஒட்டிக்கொண்டிருப்பதைப் போல் தெரிந்தது. “இதுதான் சரித்திரத்திலேயே மிகக் கொடிய எண்ணெய்க் கசிவு” என்று புலம்பினார் மிஷெல் கரென்; இவர், நீர்த் தூய்மைக்கேடு விபத்துகள் பேரிலான பதிவுகள், ஆராய்ச்சி, மற்றும் சோதனை மையத்தின் இயக்குநர்.

மெச்சத்தக்க முயற்சிகள்

வயிற்றுப்பிழைப்புக்கு வழியே இல்லாமல் போய்விடுமோ என்று பயந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலில் சென்று அந்த எண்ணெய்ப் படலங்களை நீக்க வாரக்கணக்காக போராடினார்கள். அந்த எண்ணெய் தங்கள் கடற்கரையை கறைப்படுத்தி, உலகிலேயே மீன்கள் மிக அதிகமாக திரண்டுவரும் அந்தப் பகுதியை நாசமாக்குவதற்கு முன்பு அதை நீக்க மீனவர்கள் தீவிரமாக முயன்றார்கள். சிலர் எண்ணெய்க் கசடுகளை கைகளாலேயே அள்ளி அள்ளி எடுத்தார்கள். “எங்கள் முதுகெலும்பே முறிந்துவிடும் போல் இருந்தது, ஆனால் சிறு படகுகளில் சென்ற எங்களுக்கு வேறு வழியே இல்லை” என ஆன்ட்டோன்யோ என்ற மீனவர் ஒருவர் விளக்கினார்.

மீனவர்கள் கடலிலிருந்த எண்ணெய்யை அகற்ற போராடிய சமயத்தில், ஸ்பெயினின் எல்லா பகுதிகளிலிருந்தும் வந்த ஆயிரக்கணக்கான வாலண்டியர்கள் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கினார்கள். வெண்ணிற டிஸ்போஸபிள் மேலாடைகளையும் முகமூடிகளையும் அணிந்துகொண்டு அவர்கள் வேலை செய்தார்கள்; பார்ப்பதற்கு ஏதோ உயிரியல் போரில் அவர்கள் ஈடுபட்டிருப்பதுபோல் தெரிந்தது. இடுப்பு நோக எண்ணெய்யை வாரி வாரி பக்கெட்டுகளில் போடுவதுதான் அவர்களது வேலை; பிறகு அந்த பக்கெட்டுகள் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டன. மீனவர்களைப் போலவே இந்த வாலண்டியர்களில் சிலரும் கடற்கரையில் குவிந்துகிடந்த எண்ணெய்க் கசடுகளை கைகளால் எடுத்துப் போட்டனர்.

சீரழிவுகள்

“கன்னங்கரேலென்ற அலைகள் கப்பற்துறை மீது வந்து மோதிய கோரக் காட்சியை முதன்முதலில் பார்த்தபோது என் நெஞ்சே வெடித்துவிடும் போல் ஆகிவிட்டது” என்றார் ராஃபாயில் மூசோ; இவர் வட கலிஷியாவிலுள்ள கோர்கூபியானின் மேயர். அங்குள்ள கரையோரம்தான் பயங்கரமாக பாழானது. “இந்த எண்ணெய்க் கசிவு எங்கள் ஊரிலுள்ள எத்தனையோ பேரின் வயிற்றில் அடித்துவிட்டது” என்றும் அந்த மேயர் சொல்கிறார்.

ஸ்பெயினின் எழில் கொஞ்சும் புதிய தேசிய பூங்காவான லாஸ் இஸ்லாஸ் ஆட்லான்ட்டிகாஸ் (அட்லாண்டிக் தீவுகள்) எண்ணெய் படலத்தால் பெருமளவு நாசமானதுதான் நெஞ்சைப் பிழியும் விஷயம். கலிஷியா கரையோரத்திற்கு அருகே மாசுமறுவற்றிருந்த அந்த ஐந்து தீவுகளில் எண்ணிலடங்காத கடற்பறவைகள் கூட்டம் கூட்டமாக குடியிருந்தன. அவற்றைச் சுற்றிலுமுள்ள நீரடி மணல் திட்டில் நீர்வாழ் ஜீவராசிகள் வகை தொகை இல்லாமல் வாழ்ந்தன.

டிசம்பர் மாத ஆரம்பத்திற்குள் அப்பூங்காவின் 95 சதவீத கரையோரப் பகுதிகளில் எண்ணெய்க் கறைபடிந்தது. சுமார் 1,00,000 பறவைகள் பாதிக்கப்படலாம் என பறவையியல் வல்லுநர்கள் கணக்கிட்டனர். எண்ணெய் கெட்டியாகி பெரிய பெரிய கட்டிகளாக சமுத்திரத் தரையில் மேலும் கீழும் அசைந்து கொண்டிருந்ததைக்கூட முக்குளிப்பவர்கள் பார்த்தார்களாம். இந்தக் கட்டிகள் கடலின் மென்மையான சூழியல் அமைப்பை சேதப்படுத்துகின்றன.

பறவைகள் காப்பு மையம் ஒன்றை நிறுவிய ஜே ஹோல்கம் என்பவர் இவ்வாறு அறிக்கையிட்டார்: “பறவைகள் பொதுவாக தண்ணீரில் மூழ்கிவிடுவதால் அல்லது உடல் வெப்பம் மிகவும் குறைந்துவிடுவதால் இறக்கின்றன. பறவைகளின் சிறகுகளில் எண்ணெய் அப்படியே அப்பிக்கொள்வதால் உடலை வெதுவெதுப்பாக வைத்துக்கொண்டு நீர் புகாதவாறு காக்கும் அச்சிறகுகளின் சக்தி குலைந்து போகிறது. போதாததற்கு அந்தக் கன எண்ணெய்யால் பறவைகளின் எடை கூடுவதால் தண்ணீருக்குள் அவை அமிழ்ந்து விடுகின்றன. தொப்பலாக நனைந்த துணிமணிகளின் காரணமாக நீந்துபவர் எப்படி தண்ணீருக்குள் அமிழ்ந்து போவாரோ அப்படித்தான் இவை அமிழ்கின்றன. . . . எல்லா பறவைகளையும் காப்பாற்ற முடியாவிட்டால்கூட சிலவற்றையாவது காப்பாற்ற முடிவதில் பரம திருப்தி எங்களுக்கு.”

“எதிர்பார்க்கப்பட்ட விபத்து”

ஆற்றலுக்காக உலகம் எண்ணெய்யை சார்ந்திருக்கிறது; ஆனால் செலவைக் குறைப்பதற்காக, சரியாக பழுதுபார்க்கப்படாத, ஆபத்தான நிலையிலுள்ள கப்பல்களிலேயே பெரும்பாலும் எண்ணெய் இடம் விட்டு இடம் அனுப்பப்படுகிறது. இந்த நிலைமையை “எதிர்பார்க்கப்பட்ட விபத்து” என த நியூ யார்க் டைம்ஸ் விவரித்தது.

கலிஷியா கரையோரத்திற்கு அருகே கடந்த 26 வருடங்களில் மூழ்கிய மூன்றாவது எண்ணெய்க் கப்பலே இந்த ப்ரெஸ்டிஜ். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வட கலிஷியாவில் லா கோரூன்யா மாவட்டத்திற்கு அருகே ஏஜியன் ஸீ என்ற கப்பல் கவிழ்ந்து 40,000 டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. அருகேயுள்ள கரையோர பகுதிகளில் சில அந்த சேதத்திலிருந்து இன்னும் மீளவில்லை. 1976-⁠ல் அதே கழிமுகத்தில் உர்கியோலா என்ற கப்பல் மூழ்கியது; அப்போது 1,00,000 டன்னுக்கும் அதிகமான எண்ணெய் கசிந்து பேரழிவை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நடந்த பேரழிவை கருத்தில் கொண்டு, இரட்டை உடற்பகுதி இல்லாத எல்லா எண்ணெய்க் கப்பல்களுக்கும் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் தீர்மானித்திருக்கிறது. ஆனால் இந்த நடவடிக்கை திரும்பத் திரும்ப சேதப்படுத்தப்பட்ட ஐரோப்பிய கரையோரத்தைப் பாதுகாக்க போதுமானதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எண்ணெய் கசிவுகள், நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகள், காற்று தூய்மைக்கேடு என எவ்வித மாசும் இல்லாத உலகை உருவாக்க இன்றுள்ள மனித அரசாங்கங்களால் முடியவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஆனால் கடவுளுடைய அரசாங்கம், ஒருபோதும் மாசுபடுத்தப்படாத ஒரு பரதீஸாக இந்தப் பூமியை மாற்றும்; அது நிறைவேறப்போகும் காலத்திற்காக கிறிஸ்தவர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.​—ஏசாயா 11:1, 9; வெளிப்படுத்துதல் 11:⁠18. (g03 8/22)

[பக்கம் 1819-ன் படம்]

ப்ரெஸ்டிஜ் என்ற கப்பல் 50,000 டன் எண்ணெய்யோடு கடலுக்குள் மூழ்கியது

[படத்திற்கான நன்றி]

AFP PHOTO/DOUANE FRANCAISE