Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘க்ளாமர்’ —இருண்ட பக்கம்

‘க்ளாமர்’ —இருண்ட பக்கம்

‘க்ளாமர்’​—⁠இருண்ட பக்கம்

ஃபாஷனை பின்பற்றுவது உங்கள் தோற்றத்தை எடுப்பாக்கி உங்கள் தன்னம்பிக்கையை பலப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. கச்சிதமான ஆடைகள் சரீர குறைபாடுகள் சிலவற்றை மூடி மறைத்து உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கலாம். மற்றவர்கள் உங்களை கருதும் விதத்தின்மீதும் செல்வாக்கு செலுத்தலாம்.

ஆனால் புறக்கணிக்க முடியாத ஒரு இருண்ட பக்கமும் ஃபாஷன் உலகிற்கு உண்டு. கடைக்கு செல்கிறவர்கள் புதுத் துணிமணிகளை ஓயாமல் வாங்கிக் கொண்டே இருக்கும் கண்ணியில் மாட்டிக்கொள்ளலாம். ஃபாஷன் துறைதான் புதுப் பாணிகளை சலிக்காமல் தயாரித்துக் கொண்டே இருக்கிறதே! இது ஏதோ எதேச்சையாக நிகழ்வது அல்ல; ஏனென்றால் ஃபாஷன் எவ்வளவு சீக்கிரமாக மாறுகிறதோ அவ்வளவு அதிக லாபம் அத்துறைக்கு கிடைக்கிறது. காப்ரியல் ஷனல் என்ற டிசைனர் சொன்னபடி, “அவுட்-ஆஃப்-ஃபாஷன் ஆவதற்கே ஃபாஷன் உருவாக்கப்படுகிறது.” இவ்வாறு, நவநாகரிகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே புதுத் துணிமணிகள் வாங்கும் கட்டாயத்தில் இருப்பதாக விவரமறியாத வாடிக்கையாளர்கள் பலர் உணருகிறார்கள்.

விளம்பரங்களின் சூட்சுமமான செல்வாக்கிற்கு அடிபணிந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. ஃபாஷன் கம்பெனிகள் தங்கள் ஆடைகளை விளம்பரப்படுத்த கோடிக்கணக்கான டாலர்களை அள்ளி வீசுகின்றன; அவற்றின் ப்ரான்ட் துணிமணிகளை அணிபவர்கள் கவலையில்லாத உல்லாச வாழ்க்கை வாழ்வது போல் அடிக்கடி காட்டுகின்றன. இப்படிப்பட்ட விளம்பர செய்திகள் ஜனங்கள் மீது மிகுந்த செல்வாக்கை செலுத்தலாம். “‘பொருத்தமான ப்ரான்ட்’ ஷூ இல்லையே என்பதுதான் இன்று டீனேஜர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய கவலை” என ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியர் சொல்கிறார்.

ஃபாஷன்களின் கவர்ச்சி

சில தொகுதியினர் தங்களை அடையாளப்படுத்த ஒரு குறிப்பிட்ட பாணியில் உடை அணிகிறார்கள். அவர்களது ஆடை, சமுதாயத்தை நிராகரிப்பதற்கும், முற்போக்கான வாழ்க்கைப் பாணிக்கும், ஏன், வன்முறையான அல்லது இனவெறிக் கொள்கைகளுக்கும்கூட அடையாளமாக இருக்கலாம். இப்படிப்பட்ட பாணிகளில் சில மட்டுமீறியதாக அல்லது அதிர்ச்சியளிப்பதாக காட்சியளித்தாலும் அந்தத் தொகுதியின் பெரும்பான்மையோர் பொதுவாக அப்பாணியை பின்பற்றுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட தொகுதியின் கொள்கைகளை ஆதரிக்காதவர்கள்கூட அதன் பாணியிடம் கவர்ந்திழுக்கப்படலாம். இப்படிப்பட்ட பாணிகளை பின்பற்றுபவர்கள் அந்தத் தொகுதியின் அடிப்படை நம்பிக்கைகளை ஆதரிக்கிறார்கள் என்றும் அவற்றை முன்னேற்றுவிக்கிறார்கள் என்றும் மற்றவர்கள் நினைத்துவிடலாம்.

ஃபாஷன்கள் பொதுவாக மாறிக்கொண்டே இருக்கின்றன, தோன்றிய சில மாதங்களுக்குள் அவை மாறிவிடலாம். பிரபல சினிமா நட்சத்திரத்தால் அல்லது வேறு ஒருவரால் புதியதோர் ஃபாஷன் தோன்றலாம். ஆனால் சில ஃபாஷன்கள் நிரந்தரமான பாணிகளாகின்றன. உதாரணத்திற்கு ப்ளூ ஜீன்ஸ், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மத்தியில் 1950-களிலும் 1960-களிலும் பாப்புலராக இருந்தது. ஆனால் இப்போதோ பலதரப்பட்ட வயதினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் ப்ளூ ஜீன்ஸ் அணிகிறார்கள்.

கட்டழகு மோகம்

ஃபாஷன் பக்தர்கள் தங்கள் தோற்றத்தைக் குறித்து அளவுக்கதிகமாக கவலைப்பட ஆரம்பிக்கலாம். ஃபாஷன் மாடல்கள் பொதுவாக நெடுநெடுவென குச்சிபோல் இருக்கிறார்கள்; a இந்த மாடல்கள் நம் கண்களில் படாத நாளே இல்லை. கார் விளம்பரத்திலிருந்து காபி விளம்பரம் வரை மக்களின் கண்களைக் கொத்த பயன்படுத்தப்படுவது “கட்டழகு.” “இக்காலத்து இளம் பெண்கள் தங்கப் பதுமைகள் போன்ற அழகிகளை ஒரே நாளில் எத்தனையோ முறை பார்க்கிறார்கள்; அவர்களது தாய்மார் தங்கள் பருவகாலம் முழுவதும் பார்த்த அழகிகளின் எண்ணிக்கையைவிட இது அதிகம்” என பிரிட்டனின் சோஷியல் இஷ்யூஸ் ரிசர்ச் சென்ட்டர் கணக்கிடுகிறது.

வடிவழகிகள் இப்படி சதா கண்முன் வந்து போவதால் தீய விளைவுகள் ஏற்படலாம். உதாரணத்திற்கு, 90 சதவீத வெள்ளைக்கார டீனேஜ் பெண்கள் தங்கள் உடற்கட்டமைப்பைக் குறித்து திருப்தியற்றவர்களாக இருந்தார்கள் என ஐக்கிய மாகாணங்களில் நியூஸ்வீக் பத்திரிகையில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு சுற்றாய்வு காட்டியது. இவர்களில் சிலர் ‘கட்டழகை’ பெற எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தார்கள். ஆனால் 5 சதவீதத்திற்கும் குறைவான பெண்களே மீடியா அழகிகளைப் போன்ற கட்டழகை பெற முடியும் என சோஷியல் இஷ்யூஸ் ரிசர்ச் சென்ட்டர் சொல்கிறது. ஊசி போன்ற உடல்வாகை பெற துடிப்பதன் பலனாக லட்சக்கணக்கான இளம் பெண்கள் வலியப்போய் ‘பஞ்சத்தில்’ அடிபட்டுக் கொள்கிறார்கள். இதனால் பசியில்லா உளநோய் (Anorexia nervosa) என்ற பாதாளத்தில் சிலர் விழுந்திருக்கிறார்கள். b “சாவதைப் பற்றிக்கூட நான் அவ்வளவாக பயப்படவில்லை, குண்டாவதைப் பற்றித்தான் பயந்து நடுங்கினேன்” என்று பசியில்லா உளநோயினால் ஒருசமயம் பீடிக்கப்பட்டிருந்த ஸ்பானிய நாட்டு மாடல் நியேவஸ் ஆல்பாரேத் ஒப்புக்கொள்கிறார்.

பசியில்லா உளநோய், பெரும்பசி நோய் (bulimia) போன்ற உணவுப் பழக்க கோளாறுகள் மற்ற பல காரணங்களால் ஏற்படலாம் என்பது உண்மைதான். இருந்தாலும் “ஒல்லியாக இருக்க வேண்டுமென்ற வெறியும் இதற்கு ஒரு காரணம்” என்று டாக்டர்கள் ஆன் கிமோவும் மிஷெல் லாக்ஸநெரும் சொல்கிறார்கள்.

ஃபாஷனுக்கு இரு பக்கங்கள் உண்டு என்பது தெளிவாக தெரிகிறது. அழகாக தெரிய வேண்டும், புதிய ஆடைகளை அணிய வேண்டும் என்ற இயல்பான மனித ஆசைகளை அது பூர்த்திசெய்கிறது. ஆனால் மிதமீறிய ஃபாஷன் பாணிகளுக்கு ஏற்றாற்போல் நாம் உடை அணிந்தால் மற்றவர்களுக்கு தவறான அபிப்பிராயம் ஏற்படலாம். மேலும், தோற்றத்திற்கு அளவுக்கதிக கவனம் செலுத்தினால் அக அழகைவிட புற அழகின் பேரிலேயே நம் மதிப்பு சார்ந்திருப்பதாக நாம் தப்புக் கணக்கு போட்டுவிடுவோம். “ஒருவரது வெளித்தோற்றத்தை விட அவரது திறமைகளையும் உள்ளத்தில் மறைந்திருக்கும் குணங்களையுமே நாம் உயர்வாக மதிக்க வேண்டும்” என முன்னர் குறிப்பிட்ட ஆல்பாரேத் சொல்கிறார். ஆனால் சிந்தையில் இப்படிப்பட்ட மாற்றம் ஏற்படுவது அவ்வளவு சீக்கிரம் நடக்கும் காரியம் அல்ல. அப்படியென்றால் ஃபாஷனை சமநிலையான கண்ணோட்டத்தில் எப்படி பார்க்கலாம்? (g03 9/08)

[அடிக்குறிப்புகள்]

a “குறைந்தது [1.74 மீட்டர் உயரம்], வத்தலான உடல், தடித்த உதடுகள், புடைத்த கன்ன எலும்புகள், பெரிய கண்கள், நெடுநெடுவென்ற கால்கள், நீளமான ஆனால் தனித்துத் தெரியாத மூக்கு” ஆகியவையே மாடல்களிடம் பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது என்று டைம் பத்திரிகை அறிக்கை செய்கிறது.

b பசியில்லா உளநோய் மற்றும் அதோடு சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கான ஐ.மா. நேஷனல் அசோசியேஷனின் கணக்குப்படி, ஐக்கிய மாகாணங்களில் மட்டும் 80 லட்சம் பேர் பசியில்லா உளநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்; இந்நோய் முற்றி உயிரையே இழப்பவர்கள் அநேகர். இவர்களில் பெரும்பாலானவர்கள் (86 சதவீதத்தினர்) 21 வயதிற்கு முன்பாகவே உணவுப் பழக்க கோளாறுகளால் அவதியுற்றவர்கள்.

[பக்கம் 8-ன் பெட்டி/படங்கள்]

இப்படிப்பட்ட டிரஸ்ஸை யாராவது நிஜமாகவே போடுவார்களா?

நியு யார்க், பாரிஸ், மிலான் ஆகிய இடங்களிலுள்ள ஃபாஷன் கம்பெனிகள் டாப் டிசைனர்களின் பிரத்தியேக உடைகளை விளம்பரப்படுத்த ஒவ்வொரு இளவேனிற் காலத்திலும் இலையுதிர் காலத்திலும் ஃபாஷன் ஷோக்களை நடத்துகின்றன. அந்த உடைகளுக்கு யானை விலை குதிரை விலைதான்; அதுமட்டுமா, அவற்றில் அநேகம் நடைமுறைக்கு கொஞ்சமும் ஒத்துவராதவை, சொல்லப்போனால் அவற்றை அணிந்துகொள்ளவே முடியாது. “நீங்கள் பார்க்கின்ற வரம்புமீறிய, பகட்டிலும் பகட்டான உடைகள் உண்மையில் பொது மக்கள் அணிவதற்காக தயாரிக்கப்படுவதில்லை” என சொல்கிறார் ஸ்பெயின் நாட்டு டிசைனர் க்வான் டூயோஸ். “ஃபாஷன் ஷோக்களின் நோக்கம் ஆடைகளை விற்பது என்று சொல்ல முடியாது, டிசைனரிடம் அல்லது ப்ரான்டிடம் கவனத்தை ஈர்ப்பதுதான் அதன் முக்கிய குறிக்கோள். உதாரணத்திற்கு மீடியா பேச்சில் பெருமளவு அடிபடும் புத்தம் புதிய பாணி டிரஸ் கலெக்‍ஷனை வைத்து, டிசைனர் ப்ரான்ட் சென்ட் பாட்டிலின் விற்பனை அதிகரிக்கப்படலாம்.”

[பக்கம் 7-ன் படம்]

ஃபாஷனுக்கு அடிமையானால் பர்ஸ் காலியாகலாம்

[பக்கம் 7-ன் படம்]

சில உடை பாணிகள் உங்களை ஒரு குறிப்பிட்ட தொகுதியினரோடு அடையாளங்காட்டலாம்

[பக்கம் 7-ன் படம்]

பசியில்லா உளநோய் என்ற பாதாளத்தில் சிலர் விழுந்திருக்கிறார்கள்