Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் பச்சைகுத்திக் கொள்ளலாமா?

நான் பச்சைகுத்திக் கொள்ளலாமா?

இளைஞர் கேட்கின்றனர் . . .

நான் பச்சைகுத்திக் கொள்ளலாமா?

“பச்சைகுத்திக் கொள்ளும் சில டிஸைன்கள் மிக அழகானவை. கலைநயம் மிக்கவை.”​—⁠ஜேலின். a

“பச்சைகுத்திக் கொள்ள வேண்டுமென்று நான் இரண்டு வருடமாக கனவு கண்டுகொண்டிருந்தேன்.”​—⁠மஷெல்.

யாரைப் பார்த்தாலும் பச்சைகுத்தியிருக்கிறார்கள்​—⁠அப்படித்தான் தோன்ற வைக்கிறது. ராக் இசைக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், ஃபாஷன் மாடல்கள், சினிமா நட்சத்திரங்கள் என யாரைப் பார்த்தாலும் தங்கள் உடம்பில் பச்சைகுத்தியிருப்பதை பந்தாவாக காட்டிக்கொள்கிறார்கள். அவர்களை காப்பியடிக்கும் அநேக டீனேஜர்கள்கூட தங்கள் தோள்களிலும், கைகளிலும், இடுப்புகளிலும், கணுக்கால்களிலும் பச்சைகுத்தியிருப்பதை எல்லாருக்கும் பெருமையாக காட்டி அலட்டிக் கொள்கிறார்கள். “இப்போதெல்லாம் பச்சைகுத்துவதுதான் ஃபாஷன். பச்சைகுத்துவதா வேண்டாமா என்பது அவரவருடைய விருப்பம்” என வாதாடுகிறார் ஆண்ட்ரூ.

உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “பச்சைகுத்துவது என்பது அழியாத டிஸைன்களை உடம்பில் வரைந்துகொள்ளும் ஒரு பழக்கமாக இருக்கிறது. கூர்மையான ஒரு குச்சியையோ எலும்பையோ ஊசியையோ இயற்கை சாயங்களாலான ஒருவித மையில் தொட்டு சருமத்தில் குத்துவதன் மூலமாக இது செய்யப்படுகிறது.”

எத்தனை பேர் பச்சைகுத்தியிருக்கிறார்கள் என்ற துல்லியமான புள்ளிவிவரம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்றாலும், ஐக்கிய மாகாணங்களிலுள்ள 15-லிருந்து 25 வயதுக்காரர்கள் அனைவரில் 25 சதவீதத்தினர் பச்சைகுத்தியிருப்பதாக ஒரு புத்தகம் மதிப்பிட்டிருக்கிறது. “இதுதான் இப்போ படு பாப்புலர்” என சொல்கிறாள் சான்டி. சில இளசுகளுக்கு பச்சைகுத்துவதில் ஏன் இப்படியொரு நாட்டம்?

ஏன் இந்தளவு பிரபலம்?

பச்சைகுத்துவது சிலருக்கு காதலை தெரிவிக்கும் கவர்ச்சியான வழியாக இருக்கிறது. மஷெல் சொல்கிறாள்: “என் அண்ணன் தன் முன்னாள் காதலியோட பேரை தன்னுடைய கணுக்காலில் பச்சைகுத்தியிருக்கிறான்.” இதில் என்ன பிரச்சினை? “அவன் இப்போ அவளை காதலிக்கவில்லை.” டீன் என்ற பத்திரிகை இவ்வாறு சொல்கிறது: “பச்சைகுத்தியதை நீக்க தங்களிடம் வருபவர்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர், முன்னாள் காதலனின் பெயரை அழிப்பதற்காக வரும் டீனேஜ் பெண்களே என டாக்டர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.”

இந்த டிஸைன்களை சில இளைஞர்கள் கலை ரசனையோடு பார்க்கிறார்கள். மற்றவர்களோ, அதை சுதந்திரத்தின் சின்னமாக கருதுகிறார்கள். “இப்போ நான் ஒரு சுதந்திரப் பறவையா இருக்கேன்” என சொன்னாள் ஜோஸி; பச்சைகுத்தியிருப்பதைப் பற்றி சொல்கையில், “என் வாழ்க்கையில நானே சொந்தமா எடுத்த ஒரே முக்கிய தீர்மானம் இது” என்றாள். புதிதாக ஏதோ ஒன்றை செய்து பார்க்க சில இளவட்டங்களுக்கு இது சந்தர்ப்பம் அளிக்கிறது​—⁠அவர்களுடைய தோற்றத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு இருப்பது போல் உணர வைக்கிறது. ஆனால் பச்சைகுத்துவது கலகத்தின் சின்னமாகவோ, இயல்புக்கு மாறான வாழ்க்கைப்பாணியின் சின்னமாகவோகூட இருக்கலாம். ஆகவேதான் ஆபாச வார்த்தைகள், படங்கள் அல்லது உணர்ச்சிகளைத் தூண்டும் கோஷங்களை சிலர் பச்சைகுத்தியிருக்கிறார்கள்.

என்றாலும், பெரும்பாலான இளைஞர்கள் ஃபாஷனுக்காக மட்டுமே பச்சைகுத்தியிருக்கலாம். ஆனால், யாரைப் பார்த்தாலும் பச்சைகுத்தியிருப்பது போல தோன்றுகிறது என்பதற்காக நீங்களும் பச்சைகுத்திக் கொள்ள வேண்டுமா?

பூர்வ கலை

பச்சைகுத்தும் பழக்கம் நிச்சயம் நவீன காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. எகிப்து மற்றும் லிபியாவில், கிறிஸ்துவின் காலத்திற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்பட்டவர்களின் மம்மிகளில் (பதப்படுத்தப்பட்ட பிணங்களில்) பச்சைகுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பச்சைகுத்தப்பட்டிருந்த மம்மிகள் தென் அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அந்த டிஸைன்கள் புறமத கடவுட்களை வணங்குவதோடு நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தன. “பச்சைகுத்தும் டிஸைன்களிலேயே மிக மிக பழமைவாய்ந்த டிஸைன் கண்டபடி வரையப்பட்ட ஏதோவொரு டிஸைனாக இருக்கவில்லை, ஆனால் பெஸ் என்ற தெய்வத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக இருந்தது. பெஸ் என்ற இந்த தெய்வம், எகிப்திய கட்டுக்கதைகளில் களியாட்டங்களின் காமவெறி கொண்ட தெய்வமாக சித்தரிக்கப்படுகிறது” என ஆராய்ச்சியாளரான ஸ்டீவ் கில்பர்ட் சொல்கிறார்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கடவுளுடைய ஜனங்கள் தங்கள் உடம்பில் பச்சைகுத்திக் கொள்வதற்கு நியாயப்பிரமாணச் சட்டம் தடை விதித்திருந்தது. லேவியராகமம் 19:28 சொன்னதாவது: “செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துகளை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.” எகிப்தியர் போன்ற புறமத வணக்கத்தார், தங்கள் தெய்வங்களின் பெயர்களை அல்லது சின்னங்களை தங்கள் மார்பிலோ கைகளிலோ பச்சைகுத்தியிருந்தார்கள். யெகோவா விதித்த இந்தத் தடை சட்டத்திற்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிந்து நடப்பதன் மூலம் புறமத வணக்கத்தாரிலிருந்து வித்தியாசப்பட்ட ஜனங்களாக தனித்து நின்றார்கள்.​—உபாகமம் 14:1, 2.

இன்று கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணச் சட்டத்தின் கீழ் இல்லையென்றாலும், பச்சைகுத்திக் கொள்வதற்கான தடைச் சட்டம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. (எபேசியர் 2:15; கொலோசெயர் 2:14, 15) நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்றால், புறமத பழக்கத்தை அல்லது பொய் வணக்கத்தை சித்தரிக்கும் இப்படிப்பட்ட குறிகளை உங்கள் உடம்பில் குத்திக்கொள்வதை கண்டிப்பாக விரும்ப மாட்டீர்கள்.​—⁠ஆம், தற்காலிகமாகக்கூட.​—2 கொரிந்தியர் 6:15-18.

ஆரோக்கியத்திற்கு ஆபத்து

உடல் ஆரோக்கியத்திற்கும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். தோலியல் உதவி பேராசிரியரான டாக்டர் ராபர்ட் டாம்சிக் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நீங்கள் சருமத்தை குத்தி சாயப் பொருட்களை உள்ளே செலுத்துகிறீர்கள். தோலுக்குள் ஊசி லேசாகத்தான் இறங்கும் என்றாலும், சருமத்தைக் குத்தும்போதே பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமிகள் தொற்றிக்கொள்ளும் அபாயம் ஏற்படுகிறது. பொதுவாக [பச்சைகுத்துவது] ஆபத்தானது என்றே நான் நினைக்கிறேன்.” அவர் மேலும் தொடர்கிறார்: “சாயம் உள்ளே செலுத்தப்பட்டதும், ஒருவேளை தொற்று ஏற்படாதிருந்தால்கூட, அலர்ஜிகளும் சரும நோயும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, அதுமட்டுமல்ல, அலர்ஜிகளின் பின்விளைவாக சருமம் சிவந்து, வீங்கிவிடலாம், அதோடு வெடிப்புகளும் அரிப்பும்கூட உண்டாகலாம்.”

பச்சைகுத்துவது நிரந்தரமானது என்றாலும், அவற்றை அழித்துப் போடும் முயற்சியில் பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகின்றன: லேசர் முறை (பச்சைகுத்தியிருக்கும் இடத்தை கருக்கிப்போடுவது), ஆபரேஷன் செய்வது (பச்சைகுத்தியிருக்கும் பகுதியை வெட்டியெடுப்பது), டெர்மாபரேஷன் (மேல்தோலையும் அடித்தோலையும் நீக்குவதற்காக ஒயர் பிரஷ்ஷினால் தோலை உரசியெடுப்பது), ஸாலாபரேஷன் (பச்சைகுத்தப்பட்டிருக்கும் தோலை உப்புத் தண்ணீரில் ஊற வைப்பது), ஸ்காரிஃபிக்கேஷன் (பச்சைகுத்தியிருக்கும் குறிகளை அமிலத்தால் அழித்து வடு உண்டாக்குவது). இந்த முறைகளுக்கு செலவும் அதிகம், வலியும் அதிகம். “பச்சைகுத்தும்போது ஏற்படும் வலியைவிட, லேசர் முறைப்படி அதை அழிக்கும்போது தாங்க முடியாத வலி ஏற்படுகிறது” என டீன் பத்திரிகை சொல்கிறது.

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?

நீங்கள் பச்சைகுத்தியிருப்பதைப் பார்த்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற விஷயத்திற்கும் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் அநேகருக்கு அதைப் பார்த்தாலே பிடிக்காது. (1 கொரிந்தியர் 10:29-33) தைவானிலுள்ள லி என்ற பெண் 16 வயதாக இருக்கும்போது, ஏதோ ஓர் ஆசையில் முன்பின் யோசிக்காமல் பச்சைகுத்திக் கொண்டாள். இப்போது அவளுக்கு வயது 21; ஆபீஸில் வேலை பார்த்து வருகிறாள். “என்கூட வேலை பார்க்கிறவர்கள் என் உடம்பில் இருக்கிற பச்சைக் குறிகளை வெறிச்சுப் பார்க்கிறப்பல்லாம் எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கும்” என அவள் ஒத்துக்கொள்கிறாள். பச்சைகுத்தியிருப்பது, “வன்முறையான, முரட்டுத்தனமான, சமூக விரோதமான க்ரிமினல் குரூப்பை சேர்ந்த ஓர் ஆள் என்பதற்கு . . . தெளிவான அடையாளம் என்றே அநேகர் நினைக்கின்றனர்” என பிரிட்டனிலுள்ள மனநல மருத்துவரான தியோடோர் டல்ரிம்பல் சொல்கிறார்.

இதே கருத்தைத்தான் அமெரிக்கன் டிமோகிராஃபிக்ஸ் என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையும் தெரிவித்தது: “மற்றவர்கள் கண்ணில் படும் விதத்தில் பச்சைகுத்தியிருப்பது ஆபத்தானதென்று அமெரிக்கர்களில் பெரும்பாலோர் கருதுகிறார்கள். ‘எல்லாரும் பார்க்கும் விதத்தில் பச்சைகுத்தியிருப்பவர்கள், . . . தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் தொழிலுக்கோ தனிப்பட்ட உறவுமுறைகளுக்கோ அது இடையூறாக அமைந்து விடலாம் என புரிந்து கொள்ள வேண்டும்’ என்ற விஷயத்தை [இளைஞர்களில்] எண்பத்தி ஐந்து சதவீதத்தினர் ஒத்துக்கொள்கிறார்கள்.”

பச்சைகுத்துவது ஒரு கிறிஸ்தவராக உங்களுக்கு நற்பெயரை வாங்கித்தருமா அல்லது இழுக்கை ஏற்படுத்துமா என்றும் சற்று யோசித்துப் பாருங்கள். அதோடு, மற்றவர்களுக்கு அது ‘இடறல் உண்டாக்குமா?’ (2 கொரிந்தியர் 6:3) சில இளைஞர்கள் மற்றவர்கள் கண்ணில் படாத பகுதிகளில் பச்சைகுத்தியிருக்கிறார்கள் என்பது உண்மைதான். இப்படி இரகசியமாக பச்சைகுத்தியிருப்பதை அவர்கள் பெற்றோர்கூட அறியாதிருக்கலாம். ஆனால் ஜாக்கிரதை! ஏதோவொரு ஆத்திர அவசரத்திற்கு டாக்டரிடம் போகும்போதோ, பள்ளிகளில் பொது குளியலறைகளில் குளிக்கும்போதோ உங்கள் இரகசியம் அம்பலமாகிவிடலாம்! ஆக, முட்டாள்தனமாக நம்மையே ஏமாற்றிக்கொள்ளாமல், ‘எல்லாவற்றிலும் யோக்கியமாய் [“நேர்மையாய்,” NW] நடப்பதே’ நல்லது.​—எபிரெயர் 13:18.

காலப்போக்கில், மற்ற ஃபாஷன்களைப் போலவே பச்சைகுத்தும் மோகமும் மாயமாய் மறைந்து போய்விடலாம். சொல்லப்போனால், உங்களுடைய ஒரு ஜீன்ஸோ, ஷர்ட்டோ, ட்ரெஸ்ஸோ அல்லது ஒரு ஜோடி ஷூவோ உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது என்பதற்காக அதை உங்கள் வாழ்நாள் பூராவும் போட்டுக்கொள்ள விரும்புவீர்களா என்ன? நிச்சயமாக இல்லை! ஸ்டைல்களும், டிஸைன்களும், கலர்களும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், உடைகளைப் போல பச்சைகுத்தியிருக்கும் குறிகளை அவ்வளவு எளிதில் களைந்து போட முடியாது. இது ஒருபுறமிக்க, 16 வயதில் உங்கள் கண்களுக்கு எது “ஃபாஷன்” என்று தோன்றியதோ 30 வயதில் அது உங்களுக்கு பிடிக்காத ஒன்றாகி விடலாம் என்பதையும் நினைவில் வையுங்கள்.

தங்களுடைய வெளித்தோற்றத்தில் நிரந்தர மாற்றங்களை செய்த அநேகர், “ஏன்தான் அப்படி செய்தோமோ” என்று பிற்பாடு வருத்தப்பட்டிருக்கிறார்கள். ஏமி என்பவள் இவ்வாறு சொல்கிறாள்: “யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு முன் நான் பச்சைகுத்தியிருந்தேன். இப்போது அதை யாரும் பார்க்காதபடிக்கு மறைத்து வைக்க முயற்சிக்கிறேன். தப்பித்தவறி சபையிலிருப்பவர்கள் அதைப் பார்த்துவிடும்போது தர்மசங்கடமாக உணருகிறேன்.” இது கற்றுத்தரும் பாடம் என்ன? பச்சைகுத்துமுன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். பிற்பாடு நினைத்து வருத்தப்பட வைக்கும் தீர்மானங்களை எடுக்காதீர்கள். (g03 9/22)

[அடிக்குறிப்பு]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 24-ன் படம்]

பெரும்பாலும், கலகத்தனமான வாழ்க்கைப் பாணியோடு பச்சைகுத்துதல் இணைக்கப்படுகிறது

[பக்கம் 24-ன் படம்]

பச்சைகுத்தியதை நினைத்து அநேகர் பிற்பாடு வருத்தப்படுகிறார்கள்

[பக்கம் 25-ன் படம்]

பச்சைகுத்துமுன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள்