Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புத்தகங்களுக்கு எதிராக ஒரு புத்தகம்

புத்தகங்களுக்கு எதிராக ஒரு புத்தகம்

புத்தகங்களுக்கு எதிராக ஒரு புத்தகம்

இத்தாலியிலுள்ள விழித்தெழு! எழுத்தாளர்

பைபிள் மீது ஏன் அநேகருக்கு தவறான அபிப்பிராயம் இருக்கிறது? சில நாடுகளைப் பொறுத்தவரை, இதற்கான பதில், “மதபேதத்தை” கட்டுப்படுத்துவதற்காக மனிதன் தயாரித்த ஒரு புத்தகத்தின் வரலாற்றோடு சம்பந்தப்பட்டதாகும். அப்புத்தகம்தான், “தடை செய்யப்பட்ட புத்தகங்களின் இன்டெக்ஸ்.” அக்கேள்விக்கும் இப்புத்தகத்திற்கும் என்ன சம்பந்தம்?

அச்சுக்கலையின் கண்டுபிடிப்பை கத்தோலிக்க சர்ச் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றது. அதை “தெய்வீகக்கலை” என சில குருமார் அழைத்தனர்; போப்புகள் சிலரும் அதை போற்றிப் புகழ்ந்தனர். இருந்தாலும், கத்தோலிக்க நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை பரப்ப அச்சுக்கலை பயன்படுத்தப்பட்டதை குருமார் விரைவில் உணர்ந்தனர். ஆகவே 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அநேக ஐரோப்பிய பங்குகளில் (dioceses) கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அச்சடிப்பதற்கு அனுமதி (imprimatur) பெறும் வழக்கம் ஆரம்பிக்கப்பட்டது; 1515-⁠ல் ஐந்தாவது லாட்டரன் கௌன்சில், அச்சடிப்பைக் கட்டுப்படுத்த விதிமுறைகளை நிர்ணயித்தது. அவற்றை மீறுபவர்கள் சர்ச்சிலிருந்து நீக்கப்படுவார்களென அறிவிக்கப்பட்டது. இருந்தாலும், பாரம்பரிய நம்பிக்கைகளுக்கும் ஒழுக்கத்திற்கும் ஆபத்து உண்டாக்குவதாக சர்ச் கருதிய பிரசுரங்களும் புத்தகங்களும் விநியோகிக்கப்படுவதை சர்ச்சால் தடுக்க முடியவில்லை. அதுவும் குறிப்பாக சீர்திருத்த இயக்கம் தோன்றிய பிறகு அதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆகவே 16-வது நூற்றாண்டின் இறுதியில், “அச்சடிப்பு இனி பல வருடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டால் நல்லது” என வாட்டிகன் வட்டாரம் நினைத்தது.

1951-⁠ல் இத்தாலிய ஜெஸ்யூட் ஒருவர் விவரித்தபடி, “நச்சுவாய்ந்த புத்தகங்களின் தீவிர, வெறுக்கத்தக்க, கடும் தாக்குதலை” நிறுத்த எல்லா கத்தோலிக்கர்களுக்கும் பொருந்தும் ஒரு பட்டியலை தயாரிக்க சர்ச் விரும்பியது. 1542-⁠ல் ரோம ஒடுக்குமுறை விசாரணை ஏற்படுத்தப்பட்டது. முதன்முதலாக அது எடுத்த வெளிப்படையான நடவடிக்கை, மத சம்பந்தமான எழுத்துரிமைக்கு எதிரான ஆணையை பிறப்பித்ததே. தலைமை விசாரணையாளரான ஜான் பைட்ரோ காராஃபா 1555-⁠ல் நான்காம் போப் பால்-ஆக பதவியேற்ற உடனே, தடை விதிக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலை தயாரிக்கும்படி ஒரு குழுவிற்கு ஆணையிட்டார். இவ்வாறு 1559-⁠ல் எல்லா கத்தோலிக்கர்களுக்கும் பொருந்தும் முதல் புத்தகமாகிய “தடை செய்யப்பட்ட புத்தகங்களின் இன்டெக்ஸ்” அச்சிடப்பட்டது.

எப்படிப்பட்ட புத்தகங்கள் தடை செய்யப்பட்டன?

அந்த இன்டெக்ஸ் மூன்று “பிரிவுகளாக” பகுக்கப்பட்டது. முதல் பிரிவில், ஆசிரியர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருந்தன; அவர்களது புத்தகங்கள் எந்த விஷயத்தின் பேரில் எழுதப்பட்டிருந்தாலும் அனைத்தும் தடைசெய்யப்பட்டன. இரண்டாவது பிரிவில், தடைசெய்யப்பட்ட புத்தகங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன; அவற்றை எழுதியவர்களின் மற்ற புத்தகங்கள் தடை செய்யப்படவில்லை. மூன்றாவது பிரிவில், எழுத்தாளர்கள் யாரென்று தெரியாத புத்தகங்களின் நீண்ட பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது. ஆக மொத்தம் இன்டெக்ஸில் 1,107 கண்டனக் குறிப்புகள் இருந்தன; அதில், மத சம்பந்தமான புத்தகங்களின் எழுத்தாளர்கள் மட்டுமல்ல மற்ற எல்லா விதமான பிரசுரங்களின் எழுத்தாளர்களும் கண்டனம் செய்யப்பட்டிருந்தனர். பிற்சேர்க்கை ஒன்று, தடை செய்யப்பட்ட பைபிள் பதிப்புகளை பட்டியலிட்டது; பொது மக்களின் மொழிகளிலுள்ள அனைத்து பைபிள்களும் தடை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டது.

உள்ளூர் தடைகள் ஏற்கெனவே அமலில் இருந்தன என்றாலும், “இந்த கட்டுப்பாடுகள் எல்லா கத்தோலிக்கரையும் பாதிக்கவே, பரிசுத்த வேதாகமத்தை சாதாரண மொழியில் அச்சிடுவதும் வாசிப்பதும் சொந்தமாக வைத்திருப்பதும் குற்றம் என்ற முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சர்ச் செய்தது” என ஜிலியோலா ஃப்ரான்யிட்டோ கூறுகிறார்; இவர் இத்தாலியிலுள்ள பார்மா பல்கலைக்கழகத்தில் நவீன வரலாற்றை கற்பிக்கும் ஆசிரியர். இந்த இன்டெக்ஸை புத்தக விற்பனையாளர்களும் பதிப்பாசிரியர்களும் தீவிரமாக எதிர்த்தனர். அச்சுத் தொழிலால் லாபமடைந்த அரசாங்கங்களும் அதேபோல் எதிர்த்தன. இந்த காரணங்களுக்காகவும் மற்ற காரணங்களுக்காகவும் ஒரு புதிய பதிப்பு தயாரிக்கப்பட்டு 1564-⁠ல் ட்ரென்ட் ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டது.

1571-⁠ல் இன்டெக்ஸை திருத்தியமைப்பதற்காகவே ஒரு விசேஷ அமைப்பு நிறுவப்பட்டது. எந்தெந்த புத்தகங்களை தடை செய்வது என்பதை ஒரு காலகட்டத்தில் மூன்று அதிகாரங்கள் தீர்மானித்தன: பரிசுத்த அலுவலக சபை (Congregation of the Holy Office), இன்டெக்ஸின் சபை (Congregation of the Index), போப்பின் இறைமையியல் ஆலோசகரான பரிசுத்த மாளிகையின் பண்டிதர் (master of the sacred palace). பல்வேறு நபர்கள் ஒரே விதமான பொறுப்புகள் வகித்ததும், அதிக அதிகாரம் போப்புகளுக்கு கொடுக்கப்பட வேண்டுமா அல்லது உள்ளூர் விசாரணையாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டுமா என்ற விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவியதும், தடை செய்யப்பட்ட புத்தகங்களின் மூன்றாவது பட்டியலை பிரசுரிப்பதில் தாமதம் ஏற்பட சில காரணங்களாக இருந்தன. இன்டெக்ஸின் சபையால் இன்டெக்ஸ் தயாரிக்கப்பட்டது. மார்ச், 1596-⁠ல் எட்டாம் க்ளெமென்ட் அதை அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்தார்; ஆனால், பொது மக்களின் மொழிகளிலுள்ள பைபிள் வாசிக்கப்படுவதை அறவே தடை செய்யும் விதத்தில் இன்னும் தெளிவாக இன்டெக்ஸை திருத்தி எழுதும்வரை அதை தடை செய்ய வேண்டுமென பரிசுத்த அலுவலகம் வேண்டுகோள் விடுத்தது. அதற்கு இணங்க, இன்டெக்ஸின் விநியோகிப்பு தடை செய்யப்பட்டது.

இந்தப் பதிப்பு முதற்கொண்டு, தடை செய்யப்பட்ட புத்தகங்களின் இன்டெக்ஸ் தொடர்ந்து திருத்தியமைக்கப்பட்ட போதும் ஓரளவு நிலையான வடிவைப் பெற்றது. புராட்டஸ்டன்டினரின் புத்தகங்களும் அதில் சேர்க்கப்பட்டிருந்தன; ஆகவே அவர்களில் அநேகர், “மிகச் சிறந்த புத்தகங்களைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழிகாட்டிதான்” இந்த இன்டெக்ஸ் என நக்கலாக விவரித்தனர். இருந்தாலும் அந்த சமயத்தில், புத்தகங்களை தடை செய்வது சம்பந்தமாக கத்தோலிக்கருக்கு இருந்த கிட்டத்தட்ட அதே கருத்துக்கள்தான் புராட்டஸ்டன்டினருக்கும் இருந்தது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

கலாச்சாரத்தின் மீது நாசகர விளைவுகளை இந்த இன்டெக்ஸ் ஏற்படுத்தியது. இத்தாலியைப் போன்ற நாடுகளில் கலாச்சாரத்தின் “வளர்ச்சி குன்றியது” என சரித்திராசிரியர் ஆன்டான்யோ ரோட்டோன்டா கூறுகிறார். “ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளோடு ஒப்பிட, இத்தாலியில் கலாச்சாரம் பின்தங்கிப் போனதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று” இந்த இன்டெக்ஸே என மற்றொரு சரித்திராசிரியரான க்விடோ டாலோல்யோ சொல்கிறார். ஆனால் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நரகம் என அழைக்கப்பட்ட ஒரு விசேஷ இடத்தில் வைக்கப்பட்டதால் சில புத்தகங்கள் தப்பிப்பிழைத்தன; தடை செய்யப்பட்ட பிரசுரங்களை பூட்டி வைப்பதற்காக சர்ச்சின் அநேக நூலகங்களில் ஒதுக்கப்பட்ட இடமே அந்த நரகம்.

இருந்தாலும் படிப்படியாக, அறிவொளி சகாப்தத்தில் பொது மக்களின் கருத்து வகித்த புதுவித பங்கினால் “எழுத்துரிமைக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதிலேயே மிகக் கொடிய அடக்குமுறையை” முடிவுக்கு கொண்டுவர முடிந்தது. 1766-⁠ல் இத்தாலிய பதிப்பாசிரியர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “வாட்டிகன் விதிக்கும் தடைகளின் அடிப்படையில் புத்தகங்களை மதிப்பிட முடியாது. பொது மக்களே தீர்மானிக்க வேண்டும்.” இன்டெக்ஸின் மதிப்பு குறைந்து வந்தது, பிறகு அதை திருத்தியமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இன்டெக்ஸின் சபை 1917-⁠ல் கலைக்கப்பட்டது. 1966 முதற்கொண்டு, “கண்டனங்களோடு கூடிய சர்ச் சட்டத்திற்கு உரிய வலிமையை” இன்டெக்ஸ் இழந்தது.

பொதுமக்கள் மொழிகளில் பைபிள்

“நச்சுவாய்ந்த புத்தகங்கள்” என அழைக்கப்பட்ட அனைத்திலும் ஒரு புத்தகம் குறிப்பாக சர்ச் அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளானதாக இன்டெக்ஸின் வரலாறு காட்டுகிறது; பொது மக்களின் மொழிகளில் கிடைத்த பைபிளே அந்தப் புத்தகம். 16-வது நூற்றாண்டில், “முழு பைபிள்களின் அல்லது புதிய ஏற்பாடுகளின் கிட்டத்தட்ட 210 பதிப்புகளை” இன்டெக்ஸ் பட்டியலிட்டது என நிபுணர் கேசஸ் மார்டினேத் டெ புகான்டா விளக்குகிறார். 16-வது நூற்றாண்டில் இத்தாலியர்கள், பைபிளை மும்முரமாக படித்ததற்கு பெயர் பெற்றிருந்தார்கள். இருந்தாலும் பொது மக்கள் மொழியில் கிடைத்த பைபிளை இன்டெக்ஸ் கடுமையாக தடை செய்ததால், கடவுளுடைய வார்த்தையிடம் அந்த நாட்டினருக்கு இருந்த மனப்பான்மை பெரிதும் மாறியது. “பரிசுத்த வேதாகமங்கள் மதபேத கருத்துக்களுக்கு ஊற்றுமூலமென கண்டிக்கப்பட்டு தடை செய்யப்பட்டதால், அவற்றை மதபேத புத்தகங்களோடு குழப்பிக்கொண்டார்கள் இத்தாலியர்கள்” என சொல்கிறார் ஃப்ராக்னிட்டோ. “தென் ஐரோப்பாவிலிருந்த கத்தோலிக்கர்களுக்கு இரட்சிப்பு கிடைப்பதற்கான வழி, பைபிள் பாடங்கள் நடத்தப்பட்ட காட்டகிஸ வகுப்பே; அதற்கு, மத சம்பந்தமான முதிர்ச்சியுள்ளவர்களுக்கு பதிலாக சிறுபிள்ளைத்தனமானவர்களே விரும்பப்பட்டார்கள்” என்றும் அவர் சொல்கிறார்.

1757-⁠ல்தான் பதினான்காம் போப் பெனடிக்ட் ‘போப்பினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பைபிள் மொழிபெயர்ப்புகளை’ வாசிக்க அனுமதி அளித்தார். லத்தீன் வல்கேட்டின் அடிப்படையில் புதிய இத்தாலிய மொழிபெயர்ப்பு ஒருவழியாக தயாரிக்கப்பட்டது. சொல்லப்போனால் இத்தாலிய கத்தோலிக்கர்கள் 1958 வரை காத்திருந்த பிறகுதான், மூல மொழிகளிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்ட முதல் முழு பைபிளை பெற்றார்கள்.

இன்று, முக்கியமாக கத்தோலிக்கர் அல்லாதவர்கள் “மூலைமுடுக்கெல்லாம் பைபிளை விநியோகிப்பதில்” மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிறார் ஃப்ராக்னிட்டோ. இவர்களில் முதலிடத்தில் இருப்பது சந்தேகமில்லாமல் யெகோவாவின் சாட்சிகள்தான். இத்தாலிய மொழியில் இவர்கள் 40 லட்சத்திற்கும் அதிகமான பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை விநியோகித்திருக்கிறார்கள். அதன் மூலம் கடவுளுடைய வார்த்தையின் பேரிலான அன்பை மறுபடியும் ஆயிரக்கணக்கானோரின் மனங்களில் தூண்டியிருக்கிறார்கள். (சங்கீதம் 119:97) இந்த அற்புதமான புத்தகத்தை நீங்கள் ஏன் நன்கு அலசிப் பார்க்கக் கூடாது? (g03 9/08)

[பக்கம் 2021-ன் படம்]

தடைசெய்யப்பட்ட புத்தகங்களின் இன்டெக்ஸின் சில பக்கங்கள்

[படத்திற்கான நன்றி]

Su concessione del Ministero per i Beni e le Attività Culturali

[பக்கம் 22-ன் படம்]

சர்ச் தடை செய்த, 16-வது நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலிய பைபிள்

[பக்கம் 22-ன் படம்]

“புதிய உலக மொழிபெயர்ப்பு” கடவுளுடைய வார்த்தையின் பேரிலான அன்பை அநேகரின் மனதில் தூண்டியிருக்கிறது