Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மாறிவரும் ஃபாஷன்

மாறிவரும் ஃபாஷன்

மாறிவரும் ஃபாஷன்

“இன்னைக்கு என்ன டிரஸ் போடுவது?” என்று தினம் தினம் நாம் எடுக்கும் தீர்மானம் தெரிந்தோ தெரியாமலோ ஓரளவுக்காவது ஃபாஷனை சார்ந்திருக்கிறது. சொல்லப்போனால் ஃபாஷனுக்கு தகுந்த மாதிரிதான் கடைகளில் துணிமணிகளே கிடைக்கின்றன.

இப்போது நம் கண்கள் பார்த்துப் பார்த்து பழகிப்போன துணிமணிகள்கூட ஒருசமயத்தில் லேட்டஸ்ட் ஃபாஷனாக இருந்தன. உதாரணத்திற்கு ஆண்கள் அணியும் ஷர்ட்டும் டையும் நூறு வருடங்களுக்கு முன்பு மிகவும் பிரபலமாக இருந்தன. பெண்களின் ஸ்வெட்டர் 1920-களில் ஒரு புதிய பாணியாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஃபாஷன் துறைக்கு எண்ணெய் வார்ப்பது இரண்டு அடிப்படை ஆசைகள்; ஒன்று புதுமை படைக்கும் ஆசை, இன்னொன்று பிறரோடு ஒத்துப்போகும் ஆசை. புதிய துணிமணிகள் அணிய யாருக்குத்தான் பிடிக்காது? அதனால்தான் நம்மிடம் உள்ள துணிமணிகள் நைந்து போகிறதோ இல்லையோ, வெறுமனே ஒரு மாறுதலுக்காக சிலசமயம் புதிய துணிமணிகள் வாங்குகிறோம். அதேசமயத்தில் நாம் மட்டும் விசித்திரமாக தெரிய விரும்புவதில்லை; ஆகவே நம் நண்பர்களின் பாணிக்கு ஓரளவு ‘மாட்ச்’ ஆகும் டிரஸ்ஸுகளை வாங்குகிறோம். புதுமை படைக்கும் ஆசைக்கும் பிறரோடு ஒத்துப்போகும் ஆசைக்கும் பல நூற்றாண்டுகளாகவே ஆடைத் துறை தீனி போட்டு வந்திருக்கிறது, சிலசமயங்களில் அவற்றை சுயநலத்திற்காக ஆதாயப்படுத்தியும் இருக்கிறது.

சுருக்கமான சரித்திரம்

ஒரு பாணியை உருவாக்க டிசைனர்கள் ஐந்து அடிப்படை அம்சங்களான நிறம், வடிவம், மடிப்பு, துணி நயம், தையல் பாட்டர்ன் (அல்லது துணிமணியின் டிசைன்) ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். கடந்த பல ஆண்டுகளில், இந்த எல்லா ஐந்து அம்சங்களிலும், டிசைனர்களும் டிரஸ்மேக்கர்களும் தேர்ந்தெடுப்பதற்கு தினுசு தினுசாக ஏராளமானவை வந்து குவிந்திருக்கின்றன. உதாரணத்திற்கு, பூர்வ எகிப்தில் தயாரிக்கப்பட்ட, மிக மெல்லிசான லினன், முதல் ரக துணியாக கருதப்பட்டது; அந்த சூடான பிரதேசத்திற்கு ஏற்ற ஒன்றாகவும் அது இருந்தது. ஆனால் லினன் துணிக்கு எளிதாக சாயமேற்ற முடியாததால் பொதுவாக ஒரே நிறத்தில்தான்​—⁠வெண்ணிறத்தில்தான்​—⁠கிடைத்தது. இருந்தாலும் எகிப்திய ஃபாஷன் டிசைனர்கள், லினன் துணியை பயன்படுத்தி, மடிப்புகளோடு நேர்த்தியாக தொங்கும் அழகிய வடிவுள்ள துணிமணிகளை தயாரித்தனர். உலகிலேயே மிக அதிக காலம் நீடித்த பாணிகளில் ஒன்று உருவான கதை இதுதான்.

பொ.ச. முதல் நூற்றாண்டிற்குள் புதிய துணிகளும் வண்ணங்களும் விற்பனைக்கு வந்தன. வசதிபடைத்த ரோமர்கள் சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் பட்டுத் துணியை இறக்குமதி செய்தார்கள்; போக்குவரத்து செலவினால் பட்டுத் துணியின் விலை தங்கத்தின் விலையை எட்டியபோதிலும் அதை இறக்குமதி செய்தார்கள். ஃபாஷனுக்கு வந்த இன்னொரு துணி, தீருவில் தயாரிக்கப்பட்ட சாயம் தோய்த்த கம்பளியாகும். ஒரு கிலோ கம்பளி 2,000 தினாரிக்கு கிடைத்தது; இது ஒரு சராசரி தொழிலாளியின் ஆறு வருட கூலிக்கு சமம். புதுப் புது வண்ணச்சாயங்களும் துணிகளும் கிடைத்ததால் தொளதொளவென்ற, நீளமான மேலங்கியை செல்வத்தில் திளைத்த ரோம பெண்கள் அணிய ஆரம்பித்தனர். அது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நீலநிற பருத்தி அல்லது சீனாவில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் நிற பட்டுத் துணியினால் செய்யப்பட்டது.

அவ்வப்போது புதுப் புது பாணிகள் தோன்றின என்றாலும், அந்தக் காலங்களில் விலையுயர்ந்த ஆடைகள் ஒருவரது வாழ்நாள் காலம் முழுவதும் ஃபாஷனில் இருந்தன. மெது மெதுவாக மாற்றங்கள் ஏற்பட்டன, ஆனால் அவை பொதுவாக ராஜ குடும்பத்தினரைத்தான் பாதித்தன. தொழிற்புரட்சிக்குப் பிறகோ ஃபாஷன் பொது மக்களையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.

19-வது நூற்றாண்டில் பெரிய பெரிய தொழிற்சாலைகள் பணக்காரர்களுக்கும் சரி ஏழைகளுக்கும் சரி துணிமணிகளை உற்பத்தி செய்ய துவங்கின. பருத்தி மற்றும் கம்பளி இயந்திர ஆலைகள் காளான்கள் போல் முளைத்ததால், துணிகளின் விலை கிடுகிடுவென இறங்கியது. தையல் மெஷின்களின் உதவியால் குறைந்த விலையில் துணிமணிகளை தைக்க முடிந்தது. அதோடு புதிய செயற்கை சாயங்களின் வருகையால் பற்பல வண்ணங்களில் ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டன.

சாதாரண மக்களுக்கு ஆடை வழங்குவதில் சமூக மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் இன்னும் பெரிய பங்கு வகித்தன. மேற்கத்திய ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் மக்கள் பெரும் வசதிபடைத்தவர்களாக இருந்தார்கள். 1850-களில் மங்கையர் இதழ்கள் வெளிவர ஆரம்பித்தன; சீக்கிரத்திலேயே ஸ்டான்டர்டு சைஸ்களில் ரெடிமேட் ஆடைகள் கடைகளில் கிடைக்க ஆரம்பித்தன. மேலும் 19-வது நூற்றாண்டில் சார்ல்ஸ் ஃப்ரெடரிக் வர்த் என்பவர் ஃபாஷன் ஷோக்களை அறிமுகப்படுத்தினார். வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் விதத்தில் தனது புதிய ஃபாஷன் ஆடைகளை விளம்பரப்படுத்த மாடல் அழகிகளை பயன்படுத்தினார்.

20-ஆம் நூற்றாண்டில் ரேயான், நைலான், பாலியஸ்டர் போன்ற புதிய செயற்கை நூலிழைகள் கண்டுபிடிக்கப்படவே, உற்பத்தியாளர்களுக்கு எக்கச்சக்க துணிகள் கைவசம் இருந்தன. கம்ப்யூட்டர் கைகொடுத்ததால் புதிய ஸ்டைல்களை உருவாக்குவது அதிக சுலபமானது; உலகமயமாதல் காரணமாக டோக்கியோ, நியு யார்க், பாரிஸ், சாவோ போலோ ஆகிய நகரங்களின் தெருக்களில் புதிய ஃபாஷன்கள் கிட்டத்தட்ட ஒரேசமயத்தில் வலம் வந்தன. இதற்கிடையே, டிசைனர்களும் உற்பத்தியாளர்களும் தங்கள் துணிமணிகளுக்கு கிராக்கியை ஏற்படுத்த புதிய உத்திகளை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இன்று பணக்கார வர்க்கத்தினருக்குப் பதிலாக இளைய வர்க்கத்தினரே ஃபாஷன் பித்தர்களாக இருக்கிறார்கள். லட்சக்கணக்கான இளவட்டங்கள் ஒவ்வொரு மாதமும் புதுத் துணிமணிகள் வாங்குகிறார்கள்; ஆடை தொழிற்சாலைகள் வருடாவருடம் கோடானு கோடி டாலர் மதிப்புள்ள ஆடைகளை உற்பத்தி செய்கின்றன. a ஆனால் ஏதேனும் கண்ணிகள் மறைந்திருக்கின்றனவா? (g03 9/08)

[அடிக்குறிப்பு]

a சமீபத்திய ஒரு ஆண்டில், 335 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டன.

[பக்கம் 45-ன் பெட்டி/படங்கள்]

ஃபாஷன் படைப்பாளிகள்

பல நூற்றாண்டுகளாக ஆடைகளுக்கான தராதரங்களை நிர்ணயித்தது ராஜாக்களும் உயர்குடி மக்களுமே. 17-வது நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டு அரசர் பதிமூன்றாம் லூயி தன் வழுக்கைத் தலையை மறைக்க விக் அணிந்துகொண்டார். கொஞ்ச காலத்திற்குள் ஐரோப்பிய உயர்குடியினர் மொட்டையடித்துக் கொண்டு விக் அணிய ஆரம்பித்தார்கள்; இந்தப் பாணி ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக நீடித்தது.

19-வது நூற்றாண்டில் மங்கையர் இதழ்கள் புதிய ஃபாஷன்களை விளம்பரப்படுத்தின. பெண்களே தங்கள் துணிமணிகளை மலிவான விலையில் தைத்துக் கொள்வதற்கு ஏற்ற டிசைன்களையும் பிரசுரித்தன. 20-ஆம் நூற்றாண்டில் சினிமாவும் டிவியும் பிரபலமடைந்தபோது, அவற்றில் தோன்றிய நட்சத்திரங்கள் உலக மக்களின் இதய தெய்வங்களானார்கள். இவர்களே புதிய பாணிகளை அறிமுகப்படுத்தினார்கள். பிரபல இசைக் கலைஞர்களும் மிதமீறிய பாணிகளில் உடை அணிந்தார்கள், அநேக இளைஞர்கள் உடனடியாக அந்தப் பாணிகளை காப்பியடித்தார்கள். இன்றுள்ள நிலைமையில் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை. புதிய ஆடைகளுக்கு பலத்த கிராக்கியை ஏற்படுத்துவதற்காக ஃபாஷன் ஷோக்கள், பளபளப்பான பத்திரிகைகள், விளம்பரப் பலகைகள், கடையிலுள்ள ஷோ கேஸ்கள், டிவி விளம்பரங்கள் போன்றவற்றை விளம்பரதாரர்கள் சாமர்த்தியமாக பயன்படுத்துகிறார்கள்.

[படம்]

அரசர் பதிமூன்றாம் லூயி

[படத்திற்கான நன்றி]

From the book The Historian’s History of the World

[பக்கம் 4-ன் படம்]

லினன் துணியில் தயாரிக்கப்பட்ட இந்த பூர்வ எகிப்திய ஆடை உலகிலேயே மிக அதிக காலம் நீடித்த ஃபாஷன்களில் ஒன்று

[படத்திற்கான நன்றி]

Photograph taken by courtesy of the British Museum

[பக்கம் 4-ன் படம்]

பூர்வ ரோமில் பெண்கள் நீண்ட மேலங்கியை அணிந்தனர்

[படத்திற்கான நன்றி]

From the book Historia del Traje, 1917

[பக்கம் 4-ன் படம்]

சுமார் பொ.ச. 650 முதற்கொண்டு கிமோனோ உடை ஃபாஷனில் இருந்திருக்கிறது

[படத்திற்கான நன்றி]

From the newspaper La Ilustración Artística, Volume X, 1891

[பக்கம் 5-ன் படம்]

அந்தக் காலங்களில் விலையுயர்ந்த ஆடைகள் ஒருவரது வாழ்நாள் காலம் முழுவதும் ஃபாஷனில் இருந்தன

[படத்திற்கான நன்றி]

EclectiCollections

[பக்கம் 5-ன் படம்]

தொழிற்புரட்சிக்குப் பிறகு பொது மக்கள் ஃபாஷனுக்கு அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தனர்