Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

6 வழிகள் ஆரோக்கியத்தை பாதுகாக்க!

6 வழிகள் ஆரோக்கியத்தை பாதுகாக்க!

6 வழிகள் ஆரோக்கியத்தை பாதுகாக்க!

வளரும் நாடுகளில் ஒரு சவால்

சுத்தமாக இருப்பதற்கு மக்கள் பலர் படாதபாடு படுகிறார்கள். முக்கியமாக சுத்தமான தண்ணீரும் போதிய சுகாதாரமும் இல்லாத நாடுகளில் இந்நிலை ஏற்படுகிறது. இருந்தாலும், சுத்தத்திற்கு வேண்டி பாடுபடுவதால் நன்மைதான் கிட்டும். சிறு பிள்ளைகளுக்கு ஏற்படும் நோய்களிலும் மரணங்களிலும் பாதிக்கும் மேற்பட்டவை அவர்களின் வாய்க்குள் செல்லும் கிருமிகளால்தான் உண்டாகின்றன. இந்தக் கிருமிகள் அழுக்கான கைகள், அசுத்தமான உணவு அல்லது அசுத்தமான தண்ணீர் வழியாக அவர்களுடைய வாய்க்குள் சென்றுவிடுகின்றன. பின்வரும் ஆலோசனைகளை கடைப்பிடிப்பதன் மூலம் முக்கியமாக வயிற்றுப்போக்கு போன்ற பல வியாதிகள் வருவதை தடுக்கலாம். இந்த ஆலோசனைகள் ஐநா குழந்தைகள் நல நிதி நிறுவனத்தின் ஆங்கில வெளியீடான வாழ்க்கைக்கான உண்மைகள் என்ற புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

1 கழிவுகளை கவனமாக அப்புறப்படுத்துங்கள்

கழிவுகளில் அதிகமான கிருமிகள் காணப்படுகின்றன. நோய் உண்டாக்கும் கிருமிகள் தண்ணீரிலும் உணவிலும் புகுந்து விடுகையில், அல்லது கைகளில், பாத்திரங்களில், உணவை சமைத்து பரிமாறும் இடங்களில் தொற்றிக் கொள்ளுகையில் அவை நம் வாய்க்குள்ளும் வயிற்றிற்குள்ளும் சென்றுவிடலாம். இதனால் நோய் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட கிருமிகள் பரவுவதைத் தடுப்பதற்கு சிறந்த வழி, கழிவுகள் அனைத்தையும் அப்புறப்படுத்துவதாகும். மலத்தை கழிவறைகளில் கழிப்பது அவசியம். வீட்டிற்கு அருகில், நடைபாதைகளில் அல்லது பிள்ளைகள் விளையாடும் இடங்களில் பிராணிகளின் கழிவுகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

கழிவறைகள் இல்லையெனில் மலத்தை உடனடியாக மண்ணால் மூடிவிடுங்கள். கழிவுகள் அனைத்திலும், கைக்குழந்தைகளின் மலத்திலும்கூட நோய் விளைவிக்கும் கிருமிகள் உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள். பிள்ளைகளின் மலத்தையும் கழிவறைக்குள் போட்டு தண்ணீர் ஊற்றி விட வேண்டும் அல்லது மண்ணில் புதைத்துவிட வேண்டும்.

கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கழிவறைகளை நன்றாக ஃப்ளஷ் செய்து மூடி வையுங்கள்.

2 கைகளை கழுவுங்கள்

கைகளை தவறாமல் கழுவுவது அவசியம். சோப்பையோ சாம்பலையோ தேய்த்து கைகளை நீரில் கழுவினால் கிருமிகள் போய்விடுகின்றன. கைகளை வெறும் நீரால் கழுவுவது போதாது; சோப்பு அல்லது சாம்பல் வைத்து இரண்டு கைகளையும் தேய்த்து கழுவ வேண்டும்.

மலம் கழித்த பின்னர் உங்களுடைய கைகளை கழுவுவது முக்கியம்; மலம் கழித்த குழந்தையின் அல்லது பிள்ளையின் கால்களை கழுவி சுத்தம் செய்த பின்பும் உங்கள் கைகளை கழுவுவது முக்கியம். அதோடு, விலங்குகளை தொட்டிருந்தால் அதற்குப் பின்பும் உணவு பதார்த்தங்களை தொடுவதற்கு முன்பும், பிள்ளைகளுக்கு உணவூட்டுவதற்கு முன்பும் கைகளை கழுவுங்கள்.

கைகளை கழுவுவது நோய் உண்டாக்கும் புழுக்களிலிருந்து ஆட்களை பாதுகாக்கிறது. இந்தப் புழுக்களை நுண்ணோக்கி மூலமாக மட்டுமே பார்க்க முடியும், அந்தளவுக்கு மிகச் சிறியவை. அவை மலத்தில், சிறுநீரில், தேங்கியிருக்கும் நீரில், மண்ணில், சமைக்காத அல்லது நன்கு சமைக்காத இறைச்சியில் வாழ்கின்றன. அவை உடலுக்குள் புகுந்து விடுவதைத் தடுப்பதற்கு ஒரு முக்கியமான வழி கைகளை கழுவுவதாகும். அதுமட்டுமல்ல, காலணி அணிந்துகொண்டு கழிப்பிடத்திற்கு செல்வதன் மூலம் அங்குள்ள புழுக்கள் உங்கள் பாதங்கள் வழியே உடலில் புகுந்து விடாதவாறு தடுக்கலாம்.

பிள்ளைகள் அடிக்கடி தங்கள் கைகளை வாயில் வைக்கிறார்கள்; ஆகவே அடிக்கடி, முக்கியமாக மலம் கழித்த பின்பும் சாப்பிடுவதற்கு முன்பும் அவர்களுடைய கைகளை கழுவி விடுங்கள். தங்களுடைய கைகளை அவர்களாகவே கழுவுவதற்கும், கழிப்பிடங்களுக்கு அருகே அல்லது மலஜலம் கழிக்கும் இடங்களுக்கு அருகே விளையாடாமல் இருப்பதற்கும் அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.

3 தினமும் முகம் கழுவுங்கள்

கண்களில் நோய் தொற்றுவதைத் தவிர்க்க, உங்கள் முகத்தை தினமும் சோப்பு போட்டு கழுவுங்கள். பிள்ளைகளின் முகத்தையும் கழுவிவிட வேண்டும். முகம் அழுக்காக இருந்தால் கிருமிகளை சுமந்து வரும் ஈ போன்ற பூச்சிகள் வந்து உட்காரும். இந்தக் கிருமிகளால் கண் நோய்கள் வரலாம், ஒருவர் குருடாகியும் விடலாம்.

உங்கள் பிள்ளைகளுடைய கண்களை தவறாமல் கவனியுங்கள். ஆரோக்கியமான கண்கள் ஈரப்பசையுடன் மின்னும். பிள்ளையின் கண்கள் வறண்டு, செக்கச்செவேலென்று இருந்தால், அல்லது கண்ணில் புண் அல்லது கசிவு இருந்தால் பரிசோதனைக்காக டாக்டரிடம் கொண்டுபோய் காட்ட வேண்டும்.

4 சுத்தமான நீரை மட்டுமே பயன்படுத்துங்கள்

சுத்தமான நீரை பயன்படுத்தும்போதும் கிருமிகள் அண்டாதவாறு அதை பாதுகாப்பாக வைக்கும்போதும் குடும்பங்களில் நோய் நொடிகள் வருவது மிகக் குறைவே. சரியாக அமைக்கப்பட்டு பராமரிக்கப்படும் குழாயிலிருந்து அல்லது மாசுபடாத கிணறு, நீரூற்று ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்கலாம். குளம், ஆறு, திறந்த தொட்டி அல்லது கிணறு ஆகியவற்றிலுள்ள தண்ணீர் சுத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது; ஆனால் அதை கொதிக்க வைத்து ஓரளவு சுத்தப்படுத்தலாம்.

கிணற்றை மூடி வைக்க வேண்டும். வாளி, கயிறு, தண்ணீர் பிடித்து வைக்கும் தொட்டிகள், பாத்திரங்கள் ஆகியவற்றை தவறாமல் கழுவி சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும், அவற்றை கீழே தரையில் வைக்கக் கூடாது. குடிதண்ணீர் எடுக்கும் இடங்களுக்கும் வீட்டில் நாம் புழங்கும் இடங்களுக்கும் பிராணிகளை அண்டவிடக் கூடாது. தண்ணீர் எடுக்கும் இடத்திற்கு பக்கத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளையோ இரசாயனங்களையோ பயன்படுத்தாதீர்கள்.

வீட்டில், சுத்தமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி மூடி வைக்க வேண்டும். தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரத்திற்கு குழாய் இருந்தால் நல்லது. குழாய் இல்லையெனில் சுத்தமான ‘கப்’ அல்லது அகப்பையால் பாத்திரத்திலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டும். குடிதண்ணீரை அழுக்குக் கையுடன் எடுக்கக் கூடாது.

5 உணவை கிருமிகளிலிருந்து பாதுகாத்திடுங்கள்

உணவை நன்றாக வேகவைக்கும்போது கிருமிகள் செத்துவிடுகின்றன. முக்கியமாக இறைச்சி வகைகளை நன்றாக வேகவைக்க வேண்டும். வெதுவெதுப்பான உணவில் கிருமிகள் விரைவில் பெருகிவிடுகின்றன. ஆகவே, சமைத்த உணவை முடிந்தவரை சுடச்சுட சாப்பிட வேண்டும். சமைத்த உணவை இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு சாப்பிடுவதாக இருந்தால் அதை அடுப்பிலேயே சூடாக வைத்திருங்கள் அல்லது ஃபிரிட்ஜில் வையுங்கள். அதோடு, உணவை அடுத்த வேளை சாப்பிடுவதற்காக எடுத்து வைப்பதானால், மூடி வையுங்கள். அப்படி வைக்கும்போது ஈக்களும், பூச்சிகளும் மொய்க்காமல் பாதுகாப்பாக இருக்கும். அதை சாப்பிடுவதற்கு முன்பு மறுபடியும் சூடாக்குங்கள்.

பச்சிளம் குழந்தைகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் தாய்ப்பாலே சிறந்தது, பாதுகாப்பானது. பசும்பால் போன்றவற்றை அப்படியே குடிப்பதைவிட கொதிக்க வைத்து குடிப்பதே பாதுகாப்பானது. கொதிநீரில் நன்கு கழுவாத புட்டியில் குழந்தைக்கு பாலோ, தண்ணீரோ கொடுக்காதீர்கள். பால்புட்டிகளில் வயிற்றுப்போக்கு உண்டாக்கும் கிருமிகள் பெரும்பாலும் காணப்படுகின்றன. ஆகவே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது அல்லது சுத்தமான தம்ளரில் ஊற்றி பால் கொடுப்பது நல்லது.

பழங்களையும் காய்கறிகளையும் சுத்தமான நீரில் கழுவுங்கள். முக்கியமாக, குழந்தைகளுக்கும் சிறு பிள்ளைகளுக்கும் அவற்றை பச்சையாக சாப்பிட கொடுக்கும்போது கழுவியே கொடுக்க வேண்டும்.

6 குப்பைக்கூளங்களை அப்புறப்படுத்துங்கள்

ஈ, கரப்பான் பூச்சி, எலி, சுண்டெலி இவையெல்லாம் கிருமிகளை சுமந்து வருபவை. குப்பைக்கூளங்களில் இவை நன்கு கும்மாளம் போடுகின்றன. நீங்கள் வசிக்கும் இடத்தில் குப்பையை அப்புறப்படுத்த வசதி இல்லையென்றால், உங்கள் வீட்டு குப்பையை தினமும் ஒரு குழியில் போட்டு மூடிவிடுங்கள் அல்லது எரித்து விடுங்கள். குப்பை, கழிவுநீர் எதுவும் தேங்கிவிடாமல் வீட்டை சுத்தமாக வைத்திருங்கள்.

இந்த ஆலோசனைகளை நீங்கள் தவறாமல் பின்பற்றி வந்தால், சீக்கிரத்தில் இவை உங்களுடைய அன்றாட வேலையின் பாகமாகவே ஆகிவிடும். இவற்றை கடைப்பிடிப்பது கடினமல்ல, இவற்றிற்கு அதிக பணமும் தேவையில்லை; இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பாதுகாப்பையே தரும். (g03 9/22)

[பக்கம் 11-ன் படம்]

கழிவறைகள் இல்லாத இடங்களில், மலத்தை உடனே மூடிவிடுங்கள்

[பக்கம் 11-ன் படம்]

தவறாமல் கைகளை கழுவுங்கள்

[பக்கம் 12-ன் படம்]

முகத்தை தினமும் சோப்பு போட்டு கழுவுங்கள்

[பக்கம் 12-ன் படங்கள்]

சுத்தமான நீரை பயன்​படுத்தும்​போதும் கிருமிகள் அண்டாதவாறு அதை பாதுகாப்பாக வைக்கும்​போதும் குடும்பங்களில் நோய் நொடிகள் வருவது மிகக் குறைவே

[பக்கம் 13-ன் படம்]

உணவை அடுத்த வேளை சாப்பிடுவதற்காக எடுத்து வைத்தால், மூடி வையுங்கள்

[பக்கம் 13-ன் படம்]

வீட்டுக் குப்பையை தினமும் புதைத்துவிட வேண்டும் அல்லது எரித்துவிட வேண்டும்