Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அர்த்தமுள்ள என் வாழ்க்கையின் அஸ்திவாரம்

அர்த்தமுள்ள என் வாழ்க்கையின் அஸ்திவாரம்

அர்த்தமுள்ள என் வாழ்க்கையின் அஸ்திவாரம்

அர்னஸ்ட் பான்டச்சக் சொன்னபடி

கனடாவிலுள்ள சஸ்காட் செவன் என்ற மாநிலத்தில் பரந்த புல்வெளிப் பிரதேசத்தில் நான் பிறந்தேன். 23 வயதில் ஆப்பிரிக்காவுக்கு சென்றேன். அங்கு 35 வருடங்கள் மிஷனரியாக சிறப்பாய் வாழ்ந்தேன். எனக்கு இப்படிப்பட்ட வாழ்க்கை எப்படி அமைந்தது? இது நிச்சயம் தற்செயலாக நடக்கவில்லை. விவரமாக சொல்கிறேன்.

நாங்கள் முதலில் இருந்த வீடு கம்புகள், களிமண், புல் ஆகியவற்றால் கட்டப்பட்டிருந்தது; அப்பிரதேசத்தின் கடுங்குளிர் காலத்தில் அது உதவாக்கரையாகவே இருந்தது. 1928-⁠ல் எங்கள் பண்ணைக்கு வந்த ஒருவரிடமிருந்து அப்பாவும் அம்மாவும் பைபிள் பிரசுரங்களை வாங்கினார்கள். அப்போது ஒன்பது பிள்ளைகளில் ஓரிருவரே பிறந்திருந்தார்கள். அதற்கு பின் வந்த நீண்ட குளிர்காலத்தில், அந்தப் பிரசுரங்களின் உதவியால் அவர்கள் பைபிளைப் படித்தார்கள். பிறகு இளவேனிற்காலத்தில், தாங்கள் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக உறுதியாக நம்பினார்கள். குடும்பத்தார், நண்பர்கள், அக்கம்பக்கத்தார் எல்லாரிடமும், முக்கியமாக தங்கள் பிள்ளைகளிடமும் அதைப் பற்றி அவர்கள் பேசினார்கள்.

நான் 1931-⁠ல் பிறந்தேன். அதன் பிறகு அடுத்தடுத்து என் ஐந்து தம்பி தங்கைகள் பிறந்தார்கள். பைபிளை வாசிப்பதும் படிப்பதும் எங்கள் குடும்பத்தின் அன்றாட வழக்கமாக இருந்தது. காலை வேளைகளில் நாங்கள் சேர்ந்து படித்த நாட்களை இப்போதும் ஆசை ஆசையாக நினைத்துப் பார்க்கிறேன். வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால்கூட அப்பா எங்களோடு சேர்ந்து பைபிள் வசனத்தை கலந்துபேசுவார். அம்மாவும் அப்பாவும் மூத்த பிள்ளைகளும் மாறி மாறி பைபிள் பிரசுரங்களிலிருந்து சப்தமாக வாசிப்பார்கள்.

வாசிக்கவும் எழுதவும் அப்பா எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்; அதோடு, பைபிள் கன்கார்டன்ஸின் உதவியால் ஆராய்ச்சி செய்வதற்கும் சொல்லித் தந்தார். விரைவில், பைபிளைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு எங்கள் நம்பிக்கைகளை விளக்கக் கற்றுக்கொண்டோம். பைபிள் விஷயங்களின் பேரில் நியாயப்படுத்திப் பார்க்க அந்த கலந்தாலோசிப்புகள் எனக்கு உதவின. காலப்போக்கில், பொய் மத போதனைகளை தவறென பைபிளிலிருந்து நிரூபிக்க கற்றுக்கொண்டேன். ஆத்துமா சாகும், எரிநரகம் இல்லை, கடவுளும் இயேசுவும் ஒருவர் அல்ல, அவர்கள் திரித்துவத்தின் பாகமும் அல்ல என்பதையெல்லாம் என்னால் நிரூபிக்க முடிந்தது.​—பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4; யோவான் 14:⁠28.

அம்மாவும் அப்பாவும் தங்கள் நடத்தையின் மூலமும் எங்களுக்கு கற்பித்தார்கள். சரியானதைச் செய்வதால் மற்றவர்களின் இகழ்ச்சிக்கு ஆளாக வேண்டியிருந்தாலும் உறுதியாக இருக்கும்படி அவர்கள் எங்களை உற்சாகப்படுத்தினார்கள். உதாரணத்திற்கு அவர்கள் ஒருபோதும் புகையிலையை உபயோகிக்கவில்லை. அதன் தீய பாதிப்புகளையெல்லாம் எங்களுக்கு விளக்கிச் சொல்லி, பள்ளியில் அதைப் பயன்படுத்தும்படி வற்புறுத்தப்படுவோம் என்பதைப் பற்றியும் எச்சரித்தார்கள். அப்பா இப்படி சொல்லிக்கொடுத்தது இப்போதும் நினைவிருக்கிறது: “சிகரெட் குடிக்காதவன் ஆம்பிளையே இல்லை என்று யாராவது கேலி செய்யலாம். ஆனால், ‘யார் உண்மையான ஆம்பிளை? சிகரெட்டின் பிடியில் இருப்பவனா அல்லது சிகரெட்டை தன் பிடியில் வைத்திருப்பவனா?’ என்று நீ திருப்பிக்கேள்.”

சிறுவயதிலிருந்தே பைபிள் அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்ட எனக்கு அதை கடைப்பிடிப்பேனா என்ற மற்றொரு சோதனை 11 வயதில் வந்தது. அப்போது இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்திருந்தது, பள்ளியிலிருந்த பிள்ளைகள் எல்லாரும் கொடிக்கு முன்பாக உறுதிமொழி எடுக்க வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட உறுதிமொழி ஒரு வணக்கச் செயல் என்பதை பைபிள் படிப்பிலிருந்து நான் கற்றிருந்தேன், ஆகவே அதில் கலந்துகொள்ள மறுத்தேன். இதனால் ஆறு மாதங்களுக்கு பள்ளியிலிருந்து நீக்கப்பட்டேன்.

இருந்தாலும் காலாகாலத்தில் பள்ளிப் படிப்பை முடித்தேன்; பிறகு மார்ச் 1947-⁠ல், யெகோவா தேவனுக்கு என்னை ஒப்புக்கொடுத்திருப்பதன் அடையாளமாக தண்ணீர் முழுக்காட்டுதல் பெற்றேன். ஆறு மாதங்களுக்குப் பிற்பாடு பயனியர் சேவையை ஆரம்பித்தேன், அதாவது நற்செய்தியை முழுநேரமாக அறிவிக்க துவங்கினேன். முதலில் சஸ்காட் செவனின் தெற்கே சேவை செய்தேன். அந்தப் பெரிய பிராந்தியத்திலிருந்த விவசாயிகளுக்கும் பண்ணை ஆட்களுக்கும் சாட்சி கொடுத்தேன். கோடைகாலத்தில் குதிரையில் சவாரி செய்தேன், கடுங்குளிர் காலத்திலோ கபுஸ் என்று நாங்கள் அழைத்த பனிச்சறுக்கு குதிரை வண்டியில் சவாரி செய்தேன். நாலாபுறமும் மூடப்பட்ட அந்த வண்டியில் மரக்கரி ஹீட்டர் இருந்தது. ஆகவே வண்டி குடை சாய்ந்துவிடாதபடி கவனமாக ஓட்ட வேண்டியிருந்தது.

கிராமத்து மக்கள் நன்கு பழகினார்கள், உபசரித்தார்கள். சாயங்காலங்களில் நான் அவர்களை சந்தித்தபோது, இரவு அங்கேயே தங்கிவிடும்படி அடிக்கடி சொன்னார்கள். அவர்களிடம் பைபிளைப் பற்றி பேசிய அந்த சந்தர்ப்பங்கள் எனக்கு தித்திப்பான அனுபவங்கள்! அப்படி விடிய விடிய பேசியதைக் கேட்டு சத்தியத்தை ஏற்றுக்கொண்டவர்களில் பீட்டர்சன் குடும்பத்தினரும் அடங்குவர். எர்லும் அவரது அம்மாவும் வைராக்கியமான யெகோவாவின் சாட்சிகளானார்கள்.

கியுபெக்கில் சேவை

1949-⁠ல் கியுபெக் மாகாணத்தில் பிரசங்க வேலை செய்ய பயனியர்கள் அழைக்கப்பட்டபோது நான் அங்கு செல்ல முன்வந்தேன். கனடாவின் மேற்குப் பகுதியிலிருந்து சுமார் 200 பயனியர்களும் முன்வந்தார்கள். அவர்கள் செப்டம்பரில் மான்ட்ரீல் நகருக்கு சென்றார்கள். அங்கிருந்து கியுபெக்கின் எந்தப் பகுதிக்கும் சென்று சேவை செய்ய தயாராக இருந்தார்கள். அது, கத்தோலிக்க பிரதம மந்திரி மாரிஸ் டூயிப்ளிஸி பதவியிலிருந்த சமயம்; சாட்சிகளை அந்த மாகாணத்திலிருந்து ஒழித்துக்கட்டுவதாக அவர் சபதம் செய்திருந்தார்.

அது மிக மும்முரமான, பூரிப்பான, அதேசமயத்தில் அநேக சவால்கள் நிறைந்த காலமாக இருந்தது. உதாரணத்திற்கு, பிரெஞ்சு மொழியை கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது; கைது செய்யப்பட்டோம், கும்பல்களால் தாக்கப்பட்டோம். மேலும், நாங்கள் நடத்திய கிறிஸ்தவ மாநாடுகளை சில வெறியர்கள் கலைத்தார்கள். இருந்தாலும் அப்படிப்பட்ட வெறித்தனமான செயல்களைக் கண்டு நான் பயப்படவில்லை; கடவுளுடைய ஊழியத்தை செய்வதிலிருந்து பின்வாங்கவும் இல்லை. சரியானதை நேசிக்கவும், எப்படிப்பட்ட எதிர்ப்பின் மத்தியிலும் இயேசு முன்னறிவித்த உலகளாவிய பிரசங்க வேலை நடந்தேறும் என்பதில் நம்பிக்கை வைக்கவும் வேண்டும் என்பதை என் பெற்றோர் மனதில் ஆழமாக பதிய வைத்திருந்தார்கள்.​—மத்தேயு 24:9, 14.

நான் கியுபெக்கில் வசித்து வந்த சமயத்தில் எமலி ஹௌரிஷ் என்ற சகோதரியை சந்தித்தேன். அவள் சஸ்காட் செவனை சேர்ந்த விசுவாசமுள்ள பயனியர். ஜனவரி 27, 1951-⁠ல் எங்கள் திருமணம் நடந்தது. அது முதற்கொண்டு எமலி எனக்கு உத்தம துணையாகவும் பக்கபலமாகவும் இருந்திருக்கிறாள். ஊழியத்தில் இன்னுமதிகமாக ஈடுபட வேண்டும் என்பது எங்கள் இலக்காக இருந்தது; ஆகவே உவாட்ச் டவர் பைபிள் கிலியட் பள்ளிக்கு விண்ணப்பித்தோம். மிஷனரி சேவைக்காக ஊழியர்களை பல மாதங்களுக்கு பயிற்றுவிக்கும் பள்ளி அது. கிலியட்டின் 20-வது வகுப்பில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டோம். பிப்ரவரி 1953-⁠ல் பட்டம் பெற்றோம்.

ஆப்பிரிக்காவிற்கு போவதற்கான சட்டப்பூர்வ அனுமதிக்கு நாங்கள் காத்திருந்தபோது கனடாவிலுள்ள ஆல்பர்ட்டா, ஒன்டாரியோ ஆகிய இடங்களில் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டோம். அப்போதெல்லாம் பொது வாகனங்களில்தான் சபைக்கு சபை பயணம் செய்தோம். ஆகவே எங்கள் வாழ்க்கையை எளிமையாக்கி, ஒரே சூட்கேஸோடு எல்லா இடங்களுக்கும் செல்ல கற்றுக்கொண்டோம். சில மாதங்களுக்குப் பிற்பாடு, நாங்கள் போவதற்கு தேவையான எல்லா ஆவணங்களும் தயாரானவுடன் தென் ரோடீஷியாவுக்கு (தற்போது ஜிம்பாப்வே) சென்றோம்.

ஆப்பிரிக்க சூழலை அனுசரித்தல்

நாங்கள் அங்கு சென்று ஐந்து மாதங்களில், ஜிம்பாப்வேயிலும் போட்ஸ்வானாவிலும் வட ரோடீஷியாவின் (தற்போது ஜாம்பியா) தெற்கு பகுதிகளிலும் இருந்த யெகோவாவின் சாட்சிகளது தொகுதிகளை சந்திக்கும்படி நியமிக்கப்பட்டோம். வெளிநாட்டில் செய்யும் ஊழியத்தை சொந்த நாட்டில் செய்த ஊழியத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்று கிலியட் பள்ளியில் எங்களுக்கு சொல்லப்பட்டது. மேலும், எப்படிப்பட்ட சூழ்நிலையை சந்தித்தாலும் அந்தச் சூழ்நிலையால் பெறும் அனுபவங்களிலிருந்து ஏதோவொரு பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதும் எங்களுக்கு நினைவூட்டப்பட்டது. அப்படிப்பட்ட ஞானம் பொதிந்த வார்த்தைகள் எங்கள் சிந்தையை செதுக்கி சீராக்க உதவின. இந்நாள்வரை, எமலியும் நானும் இந்த பழமொழியை நம்புகிறோம்: “ஒவ்வொரு சூழ்நிலையையும் முடிந்தளவு சாதகமாக பயன்படுத்திக் கொள், அச்சூழ்நிலை மறுபடியும் வராமலே போய்விடலாம்.”

ரயில், பஸ், ட்ரக், சைக்கிள் என எது கிடைத்தாலும் அதில் நாங்கள் பயணித்தோம். இது மிகவும் களைப்பூட்டியது என்றாலும், ‘ஒவ்வொரு சூழ்நிலையையும் முடிந்தளவு பயன்படுத்திக்கொள்ளும்’ எங்கள் தீர்மானத்திற்கு சவாலளித்த மற்ற சந்தர்ப்பங்களையும் எதிர்ப்பட்டோம். முதல் இரண்டு வருடங்களுக்கு, சட்டப்பூர்வ தடைகளின் காரணமாக பழங்குடியினரின் பிராந்தியங்களுக்கு என்னோடு வர எமலி அனுமதிக்கப்படவில்லை. ஆகவே கல்யாணமாகி சில வருடங்களே ஆகியிருந்தபோது என் மனைவியை ரயில் பாதையின் கடைக்கோடிக்கு அருகேயிருந்த பட்டணங்களில் விட்டுச் செல்ல வேண்டியிருந்தது; அதுவும் அங்கே வேறு சாட்சிகளே இருக்கவில்லை. எமலி காட்டிய விசுவாசத்தையும் தைரியத்தையும் உறுதியையும் பார்த்து நான் அசந்துபோனேன், அவள் மீதிருந்த அன்பு அதிகரித்தது. அதோடு அவள் காட்டிய குணங்களால் அந்தப் பிராந்தியங்களில் செய்யப்பட்ட ஊழியத்திற்கு பலன் கிடைத்தது.

உள்ளூர் வாசிகளில் ஒருவரது வீட்டில் தங்குவதற்கு இடம் கிடைத்தவுடனேயே எமலி அக்கம்பக்கத்தில் சாட்சி கொடுக்க ஆரம்பிப்பாள்; நான் பழங்குடியினரின் பிராந்தியத்திலிருந்து திரும்பும்வரை அப்படி செய்வாள். சிலசமயங்களில் அவள் ஒரு மாதத்திற்குக்கூட தன்னந்தனியாக ஊழியம் செய்திருக்கிறாள். யெகோவாவின் பலத்த கரத்தின்மீது சார்ந்திருப்பது அவளுக்கு பலத்தையும் பாதுகாப்பையும் தந்தது; அவளது ஊழியமும் பலன் தந்தது. ரீட்டா ஹான்காக் என்ற பெண் பைபிள் சத்தியத்திற்கு செவிகொடுத்தார், பிற்பாடு அவரது கணவரும் விசுவாசமுள்ள சகோதரரானார். அவர் மரணம் வரை கிறிஸ்தவ மூப்பராக சேவித்தார். எமலி பைபிள் சத்திய விதைகளை விதைத்த பட்டணங்கள் சிலவற்றில் இன்று சபைகள் செழித்தோங்குகின்றன.

ஆப்பிரிக்கரின் உபசரிப்பும் புதுமையான செயல்களும்

இதற்கிடையே, பழங்குடியினரின் பிராந்தியங்களில், யெகோவாவின் அமைப்பிற்கும் அதன் பயண பிரதிநிதிகளுக்கும் ஆப்பிரிக்க சாட்சிகள் காட்டிய ஆழ்ந்த போற்றுதல் என்னை நெகிழ வைத்தது. அந்த அன்பான கிறிஸ்தவ சகோதரர்கள் என்னை நன்கு கவனித்தார்கள். ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாநாடு நடக்கும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்றேன். புதிதாக கட்டப்பட்ட வைக்கோல் குடிசைகளில் தங்கினேன். அப்போது, சஸ்காட் செவனில் என் குடும்பத்தோடு பண்ணை வீட்டில் வசித்தது என் நினைவுக்கு வந்தது. ஒரு அடி உயர வைக்கோல் கட்டுதான் என் படுக்கை. அதன் மீது விரிப்பு போடப்பட்டது.

பழங்குடியினரின் பிராந்தியங்களில் மாநாடுகள் காட்டுப்பகுதியில் நடந்தன. அங்கு வந்தவர்கள் செடிகொடிகளை வெட்டி சுத்தப்படுத்தினார்கள், பெரிய மரங்களை மட்டும் நிழலுக்காக அப்படியே விட்டுவிட்டார்கள். உட்காருவதற்காக வைக்கோல் கட்டுகள் நேர்த்தியாக கட்டப்பட்டு சீராக, வரிசை வரிசையாக வைக்கப்பட்டன. பிறகு சுற்றிலும் புல் வேலி அமைக்கப்பட்டது. அப்படிப்பட்ட இயற்கை சூழலில் ஆப்பிரிக்க சகோதர சகோதரிகள் யெகோவாவை துதித்து இனிமையாக பாடியதைக் கேட்ட போதெல்லாம் என் இருதயம் நெகிழ்ந்தது; அதுவும் அவர்களது ஒத்திசைவான குரலை மறக்கவே முடியாது.

நினைவைவிட்டு நீங்காத அனுபவம்

ஊழியத்தில் நான் கிடியன் சென்டா என்பவரை சந்தித்தேன். அவர் ஆங்கிலிக்கன் சர்ச் மிஷன்கள் நடத்தும் பள்ளிகளுக்கான தலைமை மேற்பார்வையாளராக இருந்தார். சர்ச் மூலமாகவே அவர் கல்வி கற்றார், பல்கலைக்கழக பட்டமும் பெற்றார். இருந்தாலும் பைபிள் சம்பந்தமாக தனக்கிருந்த அநேக சந்தேகங்களுக்கு திருப்தியான பதிலை அவர் பெறவில்லை. ஆகவே அந்த சந்தேகங்களை தெளிவுபடுத்த அவரையும் அவரது சகபணியாளர்கள் பலரையும் வந்து சந்திக்கும்படி அவர் என்னை கேட்டுக்கொண்டார். சுமார் 50 பேர் அந்த கலந்தாலோசிப்பிற்காக கூடியிருந்தார்கள்; பள்ளி மேற்பார்வையாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் என பலர் அங்கிருந்தார்கள். கிடியன்தான் சேர்மனாக இருந்தார். நாங்கள் ஒவ்வொரு விஷயமாக முறைப்படி கலந்து பேசினோம். ஒவ்வொரு விஷயத்தைக் குறித்தும் முதலில் நான் 15 நிமிடங்கள் பேசினேன், பிறகு அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தேன். அந்தக் கலந்தாலோசிப்பு பல மணிநேரம் நீடித்தது.

இந்த புதுமையான கூட்டத்தின் விளைவாக கிடியனும் அவரது குடும்பத்தினரும் அவரது சகபணியாளர்கள் பலரும் யெகோவாவிற்கு தங்களை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்ற ஊழியர்களானார்கள். உள்ளூர் பிஷப் அவர்கள் அனைவரையும் ஆங்கிலிக்கன் சர்ச்சின் கல்வி ஸ்தாபனங்களில் பணிபுரியாதபடி வேலை நீக்கம் செய்தார். இருந்தாலும் அவர்கள் அனைவரும் அஞ்சா நெஞ்சத்தோடு யெகோவாவின் சேவையில் நிலைத்திருந்தார்கள்; சிலர் பயனியர் ஊழியமும் செய்ய ஆரம்பித்தார்கள்.

அசத்தலான படக்காட்சிக்கு அமோக வரவேற்பு

1954-⁠ல் புதிய உலக சமுதாயம் செயலில் என்ற ஆங்கில படக்காட்சியை யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டார்கள். அதற்கடுத்த வருடம், பழங்குடியினரின் பிராந்தியத்திற்கு கணவனோடு செல்ல மனைவிக்கு விதிக்கப்பட்ட சட்டப்பூர்வ தடைகள் நீக்கப்பட்டன. ஆகவே எமலியும் என்னோடு சேர்ந்து பழங்குடியினரின் பிராந்தியங்களுக்கு வந்தாள். படக்காட்சியை அங்கிருந்த எல்லா சமுதாயத்தினருக்கும் போட்டுக் காட்ட எங்களுக்கு ஒரு மோட்டார் வாகனமும், எலெக்ட்ரிக் ஜெனரேட்டரும், புரொஜக்டரும் கொடுக்கப்பட்டன. அநேகர் அதற்கு முன்பு படக்காட்சிகளை பார்த்ததே இல்லை; ஆகவே இதனிடம் மிகவும் கவர்ந்திழுக்கப்பட்டார்கள். நியு யார்க், புரூக்ளினிலுள்ள பெரிய அச்சகத்தில் பைபிளும் பைபிள் பிரசுரங்களும் தயாரிக்கப்பட்ட விதத்தை படிப்படியாக அந்தப் படக்காட்சி சித்தரித்துக் காட்டியது.

1953-⁠ல் நியு யார்க் யாங்கி ஸ்டேடியத்தில் வணக்கத்திற்காக ஒன்றுகூடிய யெகோவாவின் சாட்சிகளின் சர்வதேச சகோதரத்துவத்தின் காட்சிகளையும் அந்தப் படம் காட்டியது. வெவ்வேறு இனத்தவர் இந்தளவு ஐக்கியப்பட்டு அன்பு காட்டுவதை அந்த ஆப்பிரிக்கர்கள் அப்போதுதான் முதன்முறையாக பார்த்தார்கள். அந்தப் படக்காட்சி, பைபிளை படிக்கவும் சாட்சிகளோடு கூட்டுறவு கொள்ளவும் அநேக குடும்பத்தாரைத் தூண்டியது. நாடு முழுவதிலுமிருந்த தலைமையாசிரியர்கள் இந்தப் படக்காட்சியை போட்டுக் காட்டும்படி கேட்டார்கள். தங்கள் மாணவர்களுக்கு இப்படிப்பட்ட படங்களைக் காட்டி கல்விபுகட்டுவது சிறந்ததென அவர்கள் உணர்ந்தார்கள்.

ஒருநாள் ராத்திரி நான் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென சாட்சிகள் என்னை எழுப்பி அந்தப் படக்காட்சியைப் போட்டுக் காட்டும்படி கேட்டார்கள். கிட்டத்தட்ட 500 பேர் அதைப் பார்ப்பதற்காகவே பல மணிநேரம் நடந்து வந்திருந்தார்கள், எனக்கு ஒரே ஆச்சரியம். நான் அந்தப் பகுதியில் இருந்ததையும் அந்தப் படக்காட்சியை போட்டுக் காட்டிவந்ததையும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தார் போனவுடனே இன்னொரு 300 பேர் வந்தார்கள். மறுபடியும் அவர்களுக்கு அதைப் போட்டுக் காட்டினேன். கடைசி கூட்டத்தார் போவதற்கு அதிகாலை மூன்று மணி ஆகிவிட்டது! 17 வருட காலப்பகுதியில் ஜாம்பியாவில் மட்டுமே அந்த வலிமைமிக்க படக்காட்சியை பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்திருந்தார்கள்!

ஆப்பிரிக்காவில் புதிய நியமிப்புகள்

ஜிம்பாப்வேயில் ஐந்தரை ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த பிறகு நாங்கள் தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டோம். ஆக ஆப்பிரிக்கான்ஸ் மொழியை நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. பிற்பாடு ஸிஸோதோ, ஜூலு ஆகிய மொழிகளையும் கற்றுக்கொண்டோம். பல்வேறு மொழிகளில் கடவுளுடைய வார்த்தையைப் பற்றி போதித்ததால் இன்னும் திறம்பட ஊழியம் செய்ய முடிந்தது, அதோடு சாதனை உணர்வையும் பெற முடிந்தது.

1960-⁠ன் ஆரம்பத்தில் தென் ஆப்பிரிக்காவில் பயண ஊழியம் செய்யும்படி நியமிக்கப்பட்டோம். அடுத்த 27 ஆண்டுகளுக்கு நாங்கள் லெசோதோ, நமிபியா, தென் ஆப்பிரிக்கா, ஸ்வாஸிலாந்து, தென் அட்லாண்டிக் கடலிலுள்ள அஷேன்சியன் தீவுகள், செ.ஹெலினா ஆகிய எல்லா இடங்களுக்கும் பயணம் செய்தோம். மொத்தத்தில் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு சேவை செய்ய லட்சக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்தோம். சாதகமற்ற சூழ்நிலைகளிலும் அவர்கள் காட்டிய விசுவாசமும் உத்தமத்தன்மையும், ஒருபோதும் தளர்ந்துவிடாதிருக்க எங்களை உற்சாகப்படுத்தின.

உதாரணத்திற்கு, ஸ்வாஸிலாந்தில் அரசர் இரண்டாம் சோபூஸா இறந்த சமயத்தில் தங்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுக்காமல் உறுதியோடிருந்த சாட்சிகளோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்படிப்பட்ட முக்கிய பிரமுகரின் ஈமச்சடங்குகளில் கலந்துகொள்ளாததற்காக அவர்களுடைய வேலை பறிபோனது, குடியுரிமையையும் இழந்தார்கள். பல வருடங்களாக இழப்புகளையும் துன்பங்களையும் அனுபவித்தும் அவர்கள் தங்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுக்கவே இல்லை. அந்த அருமையான சகோதர சகோதரிகளை நேருக்கு நேர் சந்தித்து பேசிப் பழகியது எனக்குக் கிடைத்த பெரிய பாக்கியம்; அதற்காக நான் யெகோவாவிற்கு எப்போதும் நன்றி சொல்கிறேன்.

ஃபைலிமான் மாஃபரெக்கா என்ற ஒரு பயனியர் சகோதரர் லெசோதோவிலுள்ள மக்காட்லாங் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். அந்தக் கிராமம் 3,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் மலைமீது அமைந்திருந்தது. போக்குவரத்து வசதி இல்லாததால் அவரும் அவரது அன்பு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் முழுக்காட்டுதல் பெறவிருந்த நான்கு பேரும் ஒரு மாநாட்டிற்கு 100 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றார்கள். அசெம்பிளி நடக்கவிருந்த இடம் 1,200 மீட்டர் உயரத்தில் அமைந்திருந்தது. பெரும்பாலும் செங்குத்தான பகுதிகளை அவர்கள் கடக்க வேண்டியிருந்தது. மலையிடுக்குகளில் கஷ்டப்பட்டு ஏறி இறங்க வேண்டியிருந்தது, அநேக ஓடைகளையும் ஆறுகளையும்கூட கடக்க வேண்டியிருந்தது.

அசெம்பிளி முடிந்து அவர்கள் வீடு திரும்பியபோது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்தின் சுமார் 100 பிரதிகளை தங்களுடன் எடுத்துச் சென்றார்கள். தங்கள் மக்காட்லாங் கிராமத்தில் இருந்தவர்களுக்காக அதை எடுத்துச் சென்றார்கள். ஆனால் போகும் வழியிலேயே அநேகர் பைபிள் பிரசுரத்தில் ஆர்வம் காட்டியதால் எல்லா பிரசுரங்களும் தீர்ந்துவிட்டன. ஃபைலிமானைப் போன்ற கிறிஸ்தவ சகோதர சகோதரிகளின் வைராக்கியத்தையும் ஈடுபாட்டையும் கண்கூடாக பார்த்தது எமலிக்கும் எனக்கும் கிடைத்த சிலாக்கியம்; இன்று வரை அதை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.

நாகம் போன்ற விஷப்பாம்புகள், திடீர் வெள்ளப்பெருக்கு ஆகிய ஆபத்துக்களை சிலசமயங்களில் நாங்கள் சந்தித்தோம். அப்படிப்பட்ட அனுபவங்கள் அப்போதைக்கு எங்களை கதிகலங்க வைத்தாலும், யெகோவாவின் சேவையில் கிடைத்த பலன்களோடும் சந்தோஷத்தோடும் ஒப்பிட அவை ஒன்றுமேயில்லை. யெகோவா தமது உண்மையுள்ள ஊழியர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம்.

எமலியின் உடல்நிலை மிகவும் மோசமானபோது, அச்சூழ்நிலையை பதற்றமில்லாமல் நிதானமாக கையாள தேவையான ஞானத்தை யெகோவா எங்களுக்கு அளித்தார். பத்திய சாப்பாடும் சுகாதார வசதிகளும் அவள் குணமாக உதவின. அவள் பாதுகாப்பான சூழலில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு சிறிய ட்ரக்கை நடமாடும் வீடாக அமைத்தோம்; படிப்படியாக அவள் உடல்நலம் நன்கு தேறியது.

மறுபடியும் கனடாவிற்கு

மனங்கவரும் ஆப்பிரிக்க கண்டத்தில் 35 வருடங்களாக மிஷனரி சேவை செய்த பிறகு 1988-⁠ல் நாங்கள் மறுபடியும் கனடாவில் ஊழிய நியமிப்பைப் பெற்றோம். பிறகு 1991-⁠ல் நான் மீண்டும் பயணக் கண்காணியாக சேவிக்க ஆரம்பித்தேன். எட்டு வருடங்களுக்குப் பிற்பாடு எனக்கு ஸ்ட்ரோக் வந்தது. அதுமுதல் என்னால் வெகு குறைவாகவே ஊழியம் செய்ய முடிகிறது என்றாலும் ஒன்டாரியோ, லண்டனில் உள்ள ஒரு சபையில் இன்னமும் மூப்பராக சேவிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

சுமார் 56 வருடங்களுக்கு முன்பு தென் சஸ்காட் செவனில் குதிரையில் சென்று பயனியர் சேவையை ஆரம்பித்த சமயத்தை இன்றும் மனநிறைவோடு நினைத்துப் பார்க்கிறேன். ஆவிக்குரிய முதிர்ச்சியோடு சிந்திப்பது எப்படி என்பதையும் சத்தியத்திற்காகவும் நீதிக்காகவும் நிலைநிற்கை எடுக்க ஒருபோதும் அஞ்சக்கூடாது என்பதையும் அப்பா விடாமல் எங்களுக்கு சொல்லிக் கொடுத்ததற்காக எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்! அவர் கடவுளுடைய வார்த்தையை எனக்குக் கற்பித்ததால் என் வாழ்க்கைக்கு நோக்கம் கிடைத்தது. அவர் தந்த அந்த சொத்துதான் வாழ்நாள் பூராவும் எனக்கு பலனளித்திருக்கிறது. இந்த பழைய உலகம் தரும் எதற்காகவும் நான் யெகோவாவின் சேவையை விட்டுக்கொடுக்க மாட்டேன். (g03 10/22)

[பக்கம் 21-ன் படம்]

1949-⁠ல், ஒன்பது பிள்ளைகளடங்கிய எங்கள் குடும்பம், கடைக்குட்டி அம்மாவின் கையில். அம்மாவிற்குப் பின்புறம் நான்

[பக்கம் 22-ன் படம்]

ஊழியத்திற்காக கபுஸ் என்ற இந்த வண்டியை செய்தேன்

[பக்கம் 22-ன் படம்]

கியுபெக்கில் பிரசங்கித்ததற்காக கைது செய்யப்பட்ட பெண்கள்

[பக்கம் 2425-ன் படம்]

ஜிம்பாப்வேயில் இந்தப் பயணக் கண்காணிகளுக்கு கற்றுக்கொடுக்கும் வேலையில் ஈடுபட்டேன்

[பக்கம் 25-ன் படம்]

எமலி குணமடைய இந்த நடமாடும் வீட்டை அமைத்தோம்

[பக்கம் 25-ன் படம்]

இன்று எமலியுடன்