Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இன்னார் பிள்ளையாக மற்றவர்கள் என்னை பார்க்காதிருக்க என்ன செய்வது?

இன்னார் பிள்ளையாக மற்றவர்கள் என்னை பார்க்காதிருக்க என்ன செய்வது?

இளைஞர் கேட்கின்றனர் . . .

இன்னார் பிள்ளையாக மற்றவர்கள் என்னை பார்க்காதிருக்க என்ன செய்வது?

“யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் மூப்பராக இருக்கிற என் அப்பாவை எல்லாருக்கும் நல்லா தெரியும். எனக்கு அவர் மேல் மதிப்பு ஜாஸ்தி, ஆனால் சிலசமயத்திலே நான் எங்கே போனாலும் அவருடைய மகனாக மற்றவர்கள் என்னைப் பார்க்கையில் கோபம் கோபமாக வந்திருக்கிறது.”​—⁠லார்ரி. a

“எங்கப்பா நல்ல பெயரெடுத்த மூப்பராக இருக்கிறதாலே எல்லாரும் என்னிடம் அதிகம் எதிர்பார்த்ததாக உணர்ந்தேன், அதனால் இயல்பாய் நடந்துக்க முடியாமல் திண்டாடினேன்.”​—⁠அலிக்ஸாண்டர்.

நீங்கள் பெரியவர்களாக வளர்ந்து வருகையில் ஓரளவு சுதந்திரத்தை எதிர்பார்ப்பது சகஜம்தான்; அதுவும் நீங்கள் யாரென மற்றவர்கள் தெரிந்துகொள்ளும் விதத்தில் நற்பெயரெடுக்க விரும்புவது சகஜம்தான். நீங்கள் பிறந்த போது உங்கள் பெற்றோர் தங்களுக்குப் பிடித்த பெயரை உங்களுக்கு வைத்தார்கள். இப்போதோ, இளைஞராக நீங்கள் வளர்ந்து வருகையில் உங்களுக்கென நன்மதிப்பை, அதாவது நற்பெயரை பெற வேண்டுமென விரும்புகிறீர்கள்.

“திரளான ஐசுவரியத்தைப் பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப் பார்க்கிலும் தயையே நலம்” என சாலொமோன் ராஜா எழுதினார். (நீதிமொழிகள் 22:1) இளம் வயதிலேயே உங்களுக்கென நற்பெயரை சம்பாதிக்க நீங்கள் ஒருவேளை முயலலாம்.

இன்னார் பிள்ளையாக வாழ்வது

லார்ரி, அலிக்ஸாண்டர் ஆகியவர்களைப் போலவே சில இளைஞர்கள், பெற்றோரின் பெயர் அல்லது சாதனைகளால் இன்னார் பிள்ளையாக மட்டுமே தாங்கள் வாழ்வதாக நினைக்கிறார்கள். அவர்களுடைய பெற்றோர், தங்களது உத்தியோகம் அல்லது படிப்பு காரணமாக சமுதாயத்தில் பிரபலமானவர்களாக இருக்கலாம். அல்லது அவர்கள் கிறிஸ்தவ சபையில் நல்ல பெயரெடுத்தவர்களாக இருக்கலாம். இந்த இரண்டு காரணங்களில் ஒன்று உங்கள் பெற்றோரைப் பொருத்ததில் உண்மையாக இருக்கலாம்; அப்படிப்பட்ட சிலசமயங்களில் நீங்கள் செய்கிற காரியங்கள் அனைத்தையும் எப்போதும் மற்றவர்கள் கவனித்துக் கொண்டே இருப்பதாக உணரலாம். இன்னார் பிள்ளையாக இருப்பதால் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டுமென மற்றவர்கள் வற்புறுத்துவதாக நீங்கள் நினைக்கும்போது உங்களுக்குக் கோபம் வரலாம்.

உதாரணமாக ஐவானின் அப்பா யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையில் ஒரு மூப்பர். “என் அப்பாவை எல்லாருக்கும் நன்கு தெரியும், அவருக்கு மதிப்பு ஜாஸ்தி. அதனாலே ஸ்கூலிலும் சரி வீட்டிலும் சரி எல்லாரும் பாராட்டுகிற மாதிரி நடந்துகொள்ள வேண்டுமென எப்போதும் நினைத்தேன். மற்ற பிள்ளைகள் என்னைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டுமென அவர்களுடைய பெற்றோர் எதிர்பார்த்ததைப் போல உணர்ந்தேன். இது பெருமிதத்தில் மிதக்க வைத்தாலும் மற்றவர்கள் பாராட்டும்படி நடந்துகொள்ள வேண்டுமென்ற வெறி எனக்குள் இருந்தது. இதனால் சிலசமயங்களில் பணிவாக நடந்துகொள்ள தவறினேன், என்னுடைய குறைகள் என் கண்ணுக்குத் தெரியவில்லை” என ஐவான் சொல்கிறான். “எப்போது பார்த்தாலும் மற்றவர்கள் என்னையே கவனித்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன். ஒரு தப்பு செய்தாலும் அதை சுட்டிக்காட்ட எல்லாரும் தயாராக இருந்தார்கள்” என அலிக்ஸாண்டர் சொல்கிறான்.

ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட லார்ரி, தன் குடும்பப் பெயரை சொல்லாதிருப்பதன் மூலம் மற்றவர்களுடைய கவனம் தன் பக்கம் திரும்புவதை தவிர்க்க முயன்றான். “பார்ட்டிகளில் புதியவர்களை சந்திக்கையில் என் பெயருடன் குடும்பப் பெயரையும் சேர்த்துச் சொல்லாமல் ‘ஹாய், என் பெயர் லார்ரி’ என சொல்வதோடு நிறுத்திக் கொள்வேன். முடிந்த சமயங்களில் ஃபார்ம்களில் என்னுடைய பெயரை மட்டுமே கையெழுத்திடுவேன். இன்னார் மகன் என்பது தெரிந்தால் என்னை ரொம்பவே வித்தியாசமாக நடத்துவார்களோ என பயந்தேன். என் தோழர்கள் என்னிடம் சகஜமாய் பழக வேண்டுமென எதிர்பார்த்தேன்” என அவன் சொல்கிறான்.

உங்கள் அப்பா கிறிஸ்தவ மூப்பராகவோ உதவி ஊழியராகவோ இருந்தால் நியாயமாகவே மற்றவர்கள் உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பார்கள். மொத்தத்தில், அப்படிப்பட்ட ஸ்தானங்களில் சேவிக்கும் ஆண்கள், “தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்க வேண்டும்” அல்லவா? (1 தீமோத்தேயு 3:5, 12) எனவே நீங்கள் முன்மாதிரியாய் திகழும்படி ஜனங்கள் எதிர்பார்ப்பதில் ஆச்சரியமேதுமில்லை! ஆனால் அப்படி எதிர்பார்ப்பது முழுக்க முழுக்க தவறா? இல்லை; கிறிஸ்தவ இளைஞராகிய தீமோத்தேயுவை எடுத்துக்கொண்டால் அவர் ஒருவேளை டீனேஜராக இருக்கையிலேயே தன்னுடன் பயணம் செய்வதற்கும் அதிமுக்கிய ஊழிய வேலையில் ஈடுபடுவதற்கும் பவுல் அவரைத் தேர்ந்தெடுத்தார். (1 தெசலோனிக்கேயர் 3:1-3) எனவே, உங்கள் அப்பா மூப்பராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி நீங்கள் முன்மாதிரியாக விளங்குவதற்கு பாடுபட வேண்டும்.

கலகம் செய்வது சரியான தெரிவல்ல

இன்னும் சில இளைஞர்கள் இன்னார் பிள்ளையென மற்றவர்கள் தங்களை பார்க்காதிருப்பதற்காக கலகம் செய்கிறார்கள். “முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு சில சமயங்களில் வெறுப்பேற்படுத்தியது. வேண்டுமென்றே தலைமுடியை நீளமாக வளர்த்தேன்; எப்போது யார் வந்து என்ன சொல்கிறார்கள் பார்க்கலாம் என காத்திருந்தேன்” என ஐவான் சொல்கிறான்.

தாவீது ராஜாவின் மகன்களில் ஒருவனான அப்சலோம் கலகத்தனமான போக்கைப் பின்பற்றினான். அவனுடைய தகப்பன் யெகோவாவிடம் காட்டிய தேவபக்தி எல்லாருக்கும் தெரிந்ததே; இஸ்ரவேல் தேசத்தாரில் அநேகர் அவரை நேசித்தார்கள். தாவீதின் குமாரன் என்ற முறையில் அப்சலோமிடம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நியாயமான எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழாமல் தன் தகப்பனுக்கு எதிராக கலகம் செய்வதன் மூலம் தனக்குப் புகழ் சேர்த்துக்கொள்ள தீர்மானித்தான். யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட பிரதிநிதியாக தாவீது இருந்ததால் உண்மையில் அப்சலோம் கடவுளுக்கு விரோதமாகவே கலகம் செய்தான். அவனுடைய செயல்கள் குடும்பத்திற்கு அவமானத்தையும் அவனுக்கோ அழிவையும் ஏற்படுத்தின.​—⁠2 சாமுவேல் 15:1-15; 16:20-22; 18:9-15.

அவ்வாறே, கலகம் செய்வது படுமோசமான விளைவுகளை உங்களுக்கு ஏற்படுத்தலாம். நெகேமியாவைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறதென கவனியுங்கள். தேவபக்தியற்ற செயலில் அவரை ஈடுபடுத்த அவருடைய பகைவர்களில் சிலர் தந்திரத்தைக் கையாண்டார்கள். ஏன்? ‘என் நற்பெயரைக் கெடுப்பதற்கும் என்னை அவமானப்படுத்துவதற்குமே’ என நெகேமியா சொன்னார். (நெகேமியா 6:13, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) கலகம் செய்வது உங்களுக்கு அவப்பெயரை தேடித் தரலாம்; அது மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துவிடும்.

கலகத்தனமாக நடந்துகொள்வதால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் நாம் அசட்டை செய்துவிட முடியாது. அத்தகைய பாதிப்புகளில் ஒன்று உங்கள் பெற்றோருக்கு ஏற்படும் தேவையில்லாத கவலை. (நீதிமொழிகள் 10:1) நீங்கள் நடந்துகொள்ளும் விதம் மற்ற இளைஞர்களையும்கூட பெருமளவு பாதிக்கலாம். “நான் நடந்துகொண்ட விதம் என் தம்பியை மோசமாக பாதித்தது. கொஞ்ச காலத்துக்கு அவன் கிறிஸ்தவ சபையிலிருந்தே விலகியிருந்தான், பைபிள் தராதரங்களுக்கு முரணானவை என தெரிந்த எல்லா காரியங்களையும் அவன் செய்ய ஆரம்பித்தான். அவன் மனந்திரும்பி, மீண்டும் யெகோவாவை சேவிப்பது சந்தோஷமாக இருக்கிறது, அவனும் மகிழ்ச்சியாக இருக்கிறான்” என ஒத்துக்கொள்கிறான் ஐவான்.

மேம்பட்ட வழி

அப்சலோமின் ஒன்றுவிட்ட சகோதரனான சாலொமோன் வித்தியாசமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். மனத்தாழ்மையுடன் தன் தகப்பனாகிய தாவீதிடமிருந்து கற்றுக்கொள்ள மனமுள்ளவராக இருந்தார். (1 இராஜாக்கள் 2:1-4) சாலொமோன் மக்கள் மத்தியில் தனக்குப் பெயரையும் புகழையும் சம்பாதிக்காமல் கடவுளிடம் நல்ல பெயரெடுப்பதற்கே முயன்றார். அப்படி முயன்ற காலம் முழுவதும் அவர் தன் குடும்பத்துக்குப் பெருமை சேர்த்தார், இஸ்ரவேலின் சிறந்த ராஜாக்களில் ஒருவர் என்ற நற்பெயரையும் சம்பாதித்துக் கொண்டார்.​—⁠1 இராஜாக்கள் 3:4-14.

சாலொமோனின் நல்ல முன்மாதிரி இரண்டு முக்கிய அம்சங்களை சிறப்பித்துக் காட்டுகிறது: முதலாவதாக, உங்கள் குடும்பத்தைவிட்டு விலகி இருப்பதன் மூலமல்ல, ஆனால் உங்கள் குடும்பத்தாரிடமுள்ள நல்ல குணங்களை கற்றுக்கொள்வதன் மூலமே உங்களுக்கென ஒரு பெயரை ஏற்படுத்திக்கொள்ள முடியும். “தங்களுக்கென ஒரு பெயரை ஏற்படுத்திக் கொள்வதற்காக இளைஞர்கள் தங்கள் பெற்றோரைவிட்டு விலகுவதற்கு வளரிளமை பருவம் பொருத்தமான சமயமல்ல” என வளரிளமை என்ற ஆங்கில பத்திரிகை சொல்கிறது. உங்களுக்கென ஒரு பெயரை ஏற்படுத்திக் கொள்வதற்கான உங்கள் திறமைக்கு “பெற்றோரின் உதவிக்கரம் இடைஞ்சலாக இருப்பதற்கு மாறாக உறுதுணையாகவே இருக்கும்” என அந்தப் பத்திரிகை மேலும் சொல்கிறது.

“உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே” என சாலொமோன் ராஜாவே புத்திமதி கொடுத்தது ஆர்வத்துக்குரியது. (நீதிமொழிகள் 23:22) இதை சாலொமோன் இளம் பிள்ளைகளுக்கு எழுதவில்லை; காரணம் பெற்றோர் ‘வயது சென்றவராகும்போது’ பிள்ளை ஏற்கெனவே வளர்ந்து ஆளாகியிருப்பார்கள். அப்படியென்றால் அந்த நீதிமொழி சொல்லும் குறிப்பென்ன? நீங்கள் பெரியவர்களான பின்பும், உங்களுக்கென தனி குடும்பம் உருவான பின்பும்கூட உங்கள் பெற்றோரின் ஞானம் உங்களுக்குக் கைகொடுக்கும். இதன் உண்மையை ஐவான் அனுபவத்தில் கண்டான். “வயதாக வயதாக என் பெற்றோரின் நல்ல குணங்களை அதிகமதிகமாக பின்பற்ற முயலுகிறேன், அதேசமயத்தில் அவர்கள் செய்த தவறுகளைத் தவிர்க்க முயலுகிறேன்” என அவன் சொல்கிறான்.

தனக்கென ஒரு பெயரை ஏற்படுத்திக் கொள்வதல்ல ஆனால் யெகோவாவைப் பிரியப்படுத்துவதே சாலொமோனுக்கு முக்கியமானதாக இருந்தது; இதுவே கவனிக்க வேண்டிய இரண்டாவது அம்சமாகும். தாவீதின் குமாரன் என்ற முறையில் அவரிடம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது உண்மைதான். ஆனால் பொறுப்புக்களை ஏற்பதற்கு அவர் யெகோவாவை சார்ந்திருந்தது அவருக்கு பெரிதும் உதவியது. அலிக்ஸாண்டரும் அதையே செய்தான். “பொதுவாகவே மூப்பரின் பிள்ளைகளிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் என்ற உண்மையை ஒருவழியாக ஏற்றுக்கொண்டேன். இதை நல்ல கண்ணோட்டத்தில் பார்த்து பயனடைய தீர்மானித்தேன். இது எனக்குப் பாதுகாப்பாய் நிரூபித்திருக்கிறது. யெகோவா என்னை எப்படி கருதுகிறார் என்பதே ரொம்ப முக்கியம் என்பதையும் அவர் என்னை இன்னார் மகனாக பார்க்காமல் தனிப்பட்ட விதத்தில் பார்க்கிறார் என்பதையும் இப்போது புரிந்துகொண்டிருக்கிறேன்” என சொல்கிறான்.

டாரனின் அப்பா மிஷனரிகளைப் பயிற்றுவிக்கும் உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளி பட்டதாரி. b நல்ல பெயரெடுத்த பெற்றோரின் மகனாக வாழும் சூழ்நிலையை அவன் சமாளிக்க கற்றுக்கொண்டிருக்கிறான். “நான் முழுக்காட்டப்பட்ட போது என்னை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தேன், வேறு யாருக்கும் அல்ல. முடிந்த மட்டும் என்னுடைய ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழ்கிறேன்; என் பெற்றோரைப் போல எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியாவிட்டாலும் யெகோவா என்னைக் குறித்து சந்தோஷப்படுகிறார் என்பதை அறிவது எனக்கு மன நிம்மதியைக் கொடுக்கிறது” என அவன் சொல்கிறான்.

“பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்” என சாலொமோன் ராஜா சொன்னார். (நீதிமொழிகள் 20:11) கடைசியில், ஜனங்கள் உங்கள் சொல்லுக்காகவும் செயலுக்காகவுமே உங்களை நினைவில் வைப்பார்கள். “வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும்” முன்மாதிரியாய் திகழுங்கள். அப்படி செய்தால் உங்கள் தனித்தன்மைக்காக ஜனங்கள் உங்களை நேசிப்பார்கள், மதிப்பார்கள்.​—⁠1 தீமோத்தேயு 4:12.

உடன் பிறப்புக்கள் சிறந்த சாதனை படைத்தவர்களாக இருக்கையில் இன்னாரின் சகோதர சகோதரிகள் என சில இளைஞர்கள் முத்திரை குத்தப்படுகிறார்கள். இந்த சவாலை நீங்கள் எப்படி சமாளிக்கலாம் என்பதை இனிவரும் கட்டுரை சிந்திக்கும். (g03 10/22)

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b கிலியட் பள்ளி யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்படுகிறது.

[பக்கம் 28-ன் சிறு குறிப்பு]

கலகம் செய்வது உங்கள் பெற்றோருக்கு கவலையைத்தான் தரும், உங்கள் நற்பெயரையும் கெடுத்துவிடும்

[பக்கம் 28-ன் படம்]

உங்கள் நல்ல முன்மாதிரி மற்றவர்களுக்கு பயனளிக்கலாம்