Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உறிஞ்சி வாழ்ந்தாலும் உபயோகமான குளவி

உறிஞ்சி வாழ்ந்தாலும் உபயோகமான குளவி

உறிஞ்சி வாழ்ந்தாலும் உபயோகமான குளவி

இக்னூமன் என்பது ஒரு வகை குளவியாகும். அது பார்ப்பதற்கு விசித்திரமாக, கொஞ்சம் பயமாகக்கூட இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அது ஏன் மற்ற உயிரிகளின் சத்துக்களை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகளின் பட்டியலில் சேர்க்கப்படுகிறது? ஏனென்றால் அது பொதுவாக மற்றொரு பூச்சியின் அல்லது சிலந்தியின் உடல் மீதோ லார்வா மீதோ முட்டையிடுவதன் மூலம் பெருகுகிறது.

வட அமெரிக்காவில் அசலான இக்னூமன் குளவி வகையில் 3,000-⁠க்கும் அதிகமான இனங்கள் உள்ளன. இந்தக் குளவிகள் ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த பற்பல குளவிகள் அடங்கிய பெரிய குடும்பத்தின் பாகமாக இருக்கின்றன. இந்தப் பூச்சி குடும்பத்தில் உலகெங்கும் 40,000-⁠க்கும் அதிகமான இனங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்கள்.

இக்னூமன் குளவிகள் சுமார் 0.3 முதல் 5 சென்ட்டிமீட்டர் வரை வெவ்வேறு நீளங்களில் காணப்படுகின்றன. அவற்றின் மெல்லிய, வளைந்த வயிற்றுப் பகுதி, தலையும் மார்பும் சேர்ந்த பகுதியைவிட நீளமானது. கொட்டும் குளவிகளைவிட நீளமான கொடுக்கு இக்னூமன் குளவிகளுக்கு உள்ளது; இதுவே இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம்.

இக்னூமன் குளவிகளின் சிறப்பம்சம் அவற்றின் வயிற்றுப் பகுதி முடிவடையும் இடத்தில் காணப்படும் ஊசிபோன்ற குழாய்தான். முட்டையிடுவதற்கு பயன்படும் இந்த உறுப்பு (ovipositor), உடலைவிட பெரும்பாலும் நீளமானது. அது குதிரை முடியளவு பருமனுள்ளது. அதில் நூல்போன்ற மூன்று இழைகள் முன்னும் பின்னுமாக நகர்ந்து முட்டையை குழாய் வழியாக வெளியேற்றுகின்றன.

வேறு பூச்சியின் லார்வா இருக்கும் இடத்தை இக்னூமன் எப்படி கண்டுபிடிக்கிறது? இக்னூமன் இனத்தை சேர்ந்த பெண் மெகர்ஹிஸ்ஸா குளவி அதன் கொடுக்கினால் ஒரு மரத்தை தட்டுமாம். அம்மரத்தின் பட்டைக்கு 2 சென்டிமீட்டர் அடியில் அல்லது அதற்கும் அதிக அடியில் இருக்கும் லார்வா அதிர்கிறதா என்று கவனிக்குமாம். லார்வா இருப்பதை உணர்ந்தவுடன் இன்னும் பலமாக தட்டுமாம். இறுதியில், அதன் உடலிலுள்ள குழாய் மூலம் மரப்பட்டையை துளைக்க ஆரம்பிக்குமாம்.

“குளவியின் குழாய் போன்ற உறுப்பின் நுனி லார்வாவை தொட்டதும், அக்குழாய் வழியாக ஒரேவொரு முட்டை வெளியேற்றப்படுகிறது, அது பலியாகவிருக்கும் அந்த லார்வாவிற்கு பக்கத்தில் அல்லது அதன் மீது உறுதியாக வைக்கப்படுகிறது” என சிலர் கவனித்து சொல்லியிருக்கிறார்கள். முட்டை பொரிந்து குளவிக் குஞ்சு வெளிவந்தவுடன் அந்த லார்வாவின் கொழுப்புகளையும் உடல் திரவங்களையும் உண்ண ஆரம்பிக்கிறது. பிறகு பட்டு நூலால் தன் உடலைச் சுற்றி கூடு கட்டுகிறது; அதற்குள்ளேதான் அது குளவியாக உருமாறுகிறது. பிறகு பூச்சிகளின் ஒரு புதிய சந்ததியை அல்லல்படுத்துவதற்கு தயாராக, மரத்தின் வெளிப்புறத்திற்கு வருகிறது.

இக்னூமன் குளவிகள் ஈவிரக்கமில்லாத ஒட்டுண்ணிகள் என நாம் விவரிக்கலாம்; ஆனாலும் அவற்றால் ஒரு முக்கிய நோக்கம் நிறைவேறுகிறது. அவற்றின் குஞ்சுகள் பயிர் வகைகளுக்கு தீங்கிழைக்கும் பூச்சிகளை உண்கின்றன; சின்ச் பூச்சிகள், போல் விட்டில்கள், காட்லிங் அந்துப்பூச்சிகள், ஆஸ்பராகஸ் வண்டுகள் ஆகியவை அவற்றில் சில. ஆகவே வேளாண்மைக்கு இம்சைதரும் ஜீவராசிகளின் பெருக்கத்தை இக்னூமன் குளவிகள் கட்டுப்படுத்துவதாக தெரிகிறது.

இக்னூமன் குளவிகள் ஏராளமாக இருந்தாலும் அரிதாகவே மனித கண்களுக்கு அகப்படுகின்றன. ஏனென்றால் மனிதர்கள் அதிகம் செல்லாத இடங்களிலேயே உண்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன, முட்டையிடுகின்றன. உயிரினங்களில் காணப்படும் பல்வகைமையையும் சமநிலையையும் மனிதனால் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை; இவற்றிற்கு இந்த இக்னூமன் குளவிகள் மற்றொரு எடுத்துக்காட்டாகும். (g03 10/22)

[பக்கம் 12-ன் படம்]

இக்னூமன் குளவி முட்டையிடுவதற்கு தயாராகிறது

[படத்திற்கான நன்றி]

Scott Bauer/Agricultural Research Service, USDA