Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எதையும் தாக்குப்பிடிக்கும் கிருமிகள்—மீண்டும் பிரவேசிப்பது எப்படி

எதையும் தாக்குப்பிடிக்கும் கிருமிகள்—மீண்டும் பிரவேசிப்பது எப்படி

எதையும் தாக்குப்பிடிக்கும் கிருமிகள்—மீண்டும் பிரவேசிப்பது எப்படி

வைரஸ், பாக்டீரியா, ப்ரோட்டோசோவா, பூசணம் போன்ற எல்லா நுண்ணுயிரிகளும் இவ்வுலகில் உயிர் தோன்றிய சமயம் முதற்கொண்டே இருந்து வந்திருக்கின்றன. எல்லா உயிரினங்களையும்விட மிக எளிய உடலமைப்பைப் பெற்ற இந்தக் கிருமிகளின் வளைந்துகொடுக்கும் திறன் மலைக்க வைக்கிறது; வேறு எந்த உயிரினங்களாலும் தாக்குப்பிடிக்க முடியாத சூழ்நிலைகளில்கூட இவை தப்பிப்பிழைத்திருக்கின்றன. சமுத்திர தரையின் கொதிநீர் ஊற்றுத் துவாரங்களிலும் (scalding vents) சரி ஆர்ட்டிக் கடலின் ஐஸ் தண்ணீரிலும் சரி அவை காணப்படுகின்றன. இப்போது இந்தக் கிருமிகள், தங்கள் உயிருக்கே உலை வைக்கும் மிகத் தீவிர தாக்குதலை​—⁠ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்துகளின் தாக்குதலை​—⁠எதிர்த்து நிற்கின்றன.

நூறு வருடங்களுக்கு முன்பு, சில நுண்ணுயிரிகள் வியாதியை உண்டாக்குவது அறியப்பட்டிருந்தது; ஆனால் ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்துகளை பற்றி ஒருவரும் கேள்விப்படவில்லை. ஆகவே எவருக்காவது கொடிய தொற்று வியாதி வந்தபோது, டாக்டர்களால் பெரும்பாலும் உணர்ச்சிப்பூர்வ ஆதரவைத் தவிர மற்ற எந்த விதமான சிகிச்சையையும் அளிக்க முடியவில்லை. தொற்று வியாதியை ஒருவரது நோய் எதிர்ப்பு மண்டலமே எதிர்க்க வேண்டியிருந்தது. அது பலமாக இல்லாதபோது பெரும்பாலும் விபரீதம் விளைந்தது. ஒரு சின்னக் கீறல் வழியாக நுண்ணுயிர் தொற்றியபோதும் மரணம் ஏற்பட்டது.

முதன்முதலாக பாதுகாப்பான ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்துகள்​—⁠ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள்​—⁠கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. a 1930-களில் ஸல்ஃபா மருந்துகளும் 1940-களில் பெனிசிலின், ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற மருந்துகளும் பயன்படுத்தப்பட்டதானது, பின்னான ஆண்டுகளில் இன்னும் அநேக மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வழிவகுத்தது. 1990-களில், ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் 15 வகைகளில் கிட்டத்தட்ட 150 சேர்மங்களாக கிடைத்தன.

வெற்றியின் எதிர்பார்ப்பு சுக்குநூறானது

1950-களிலும் 1960-களிலும் தொற்று நோய்களை ஒழித்துவிட்டதாக சிலர் நினைக்க ஆரம்பித்தார்கள். அந்த நோய்கள் விரைவில் கடந்தகால கொடுங்கனவாக மாறிவிடுமெனவும் சில நுண்ணுயிரியல் வல்லுநர்கள் நினைத்தார்கள். சீக்கிரத்தில் “தொற்று நோய்கள் [மனிதவர்க்கத்திற்கு] ஒரு பிரச்சினையாகவே இருக்காது” என 1969-⁠ல் ஐ.மா. தலைமை மருத்துவ அதிகாரி காங்கிரஸ் கமிட்டிக்கு முன் சான்றளித்தார். “தொற்று நோய்களின் எதிர்காலம் மிக மிக இருண்டதாக இருக்கும் என்பதே கணிப்பு” என நோபல் பரிசு பெற்ற மக்ஃபார்லன் பர்னெட் என்பவரும் டேவிட் வைட் என்பவரும் 1972-⁠ல் எழுதினார்கள். ஆம், தொற்று நோய்கள் ஒரேயடியாக ஒழித்துக்கட்டப்படும் என சிலர் நினைத்தார்கள்.

தொற்று நோய்கள் ஒழிக்கப்பட்டதாக நம்பப்பட்டதால் அளவுகடந்த தன்னம்பிக்கை எங்கும் ஏற்பட்டது. ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு கிருமிகள் எந்தளவுக்கு ஆபத்தாக இருந்தன என்பதை நன்கு அறிந்திருந்த ஒரு நர்ஸ், சாதாரண சுகாதாரத்தைக்கூட சில இளம் நர்ஸுகள் அசட்டை செய்ய ஆரம்பித்ததாக குறிப்பிட்டார். கைகளை கழுவ வேண்டிய அவசியத்தை அவர்களிடம் ஞாபகப்படுத்தியபோதுகூட, “ஏன் கவலைப்படுகிறீர்கள், இப்போதுதான் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் வந்துவிட்டனவே” என்று சொன்னார்களாம்.

இருந்தாலும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை சார்ந்திருந்து அவற்றை மட்டுக்குமீறி பயன்படுத்தியதால் விபரீத விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. தொற்று நோய்கள் தொடர்ந்து தாக்குப்பிடித்திருக்கின்றன. அதைவிட, அவை மீண்டும் பிரவேசித்து மரணத்தை ஏற்படுத்துவதில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளன! தொற்று நோய்கள் பரவியிருப்பதற்கான மற்ற காரணங்கள், போர்க் கலவரம், வளரும் நாடுகளில் ஊட்டச்சத்துக் குறைவு பரவலாக இருப்பது, சுத்தமான தண்ணீர் இல்லாதது, தரம் குறைந்த சுகாதார வசதிகள், அதிவேக சர்வதேச போக்குவரத்து, பூகோள தட்பவெப்பத்தில் மாற்றம் போன்றவை.

பாக்டீரியாவின் எதிர்ப்பு சக்தி

சாதாரண கிருமிகளுக்கு இருக்கும் மலைக்க வைக்கும் எதிர்ப்புத் திறன் பெரிய பிரச்சினையாக ஆகியிருக்கிறது; இப்பிரச்சினை எழும் என பொதுவாக யாருமே எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் கடந்த காலத்தை கருத்தில்கொண்டு பார்க்கையில், கிருமிகள் மருந்துகளை எதிர்க்கும் சக்தியைப் பெறும் என்பதை எதிர்பார்த்திருக்க வேண்டும். ஏன்? உதாரணத்திற்கு, 1940-களின் மத்திபத்தில் DDT என்ற பூச்சிக்கொல்லி கண்டுபிடிக்கப்பட்டபோது இதுபோன்ற ஒன்று நடந்தது. b அந்த சமயத்தில் DDT-ஐத் தெளித்தபோது ஈக்கள் மறைந்ததைப் பார்த்து பண்ணை ஆட்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் சில ஈக்கள் தப்பிப்பிழைத்தன, அவற்றின் சந்ததியும் DDT-ஐ எதிர்க்கும் சக்தியை பெற்றன. விரைவில், DDT-யினால் பாதிக்கப்படாத இந்த ஈக்கள் ஏராளமாக பலுகிப் பெருகின.

DDT உபயோகத்திற்கு வருவதற்கு முன்பும், 1944-⁠ல் பெனிசிலின் மருந்துக்கடைகளில் கிடைக்க ஆரம்பித்ததற்கு முன்பும், தீங்கிழைக்கும் பாக்டீரியா அதன் வியக்கத்தக்க தற்காப்பு திறனை வெளிக்காட்டியிருந்தது. பெனிசிலினை கண்டுபிடித்த டாக்டர் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் இதை அறிய வந்தார். தனது ஆய்வுக்கூடத்தில் ஸ்டஃபைலோகாக்கஸ் ஆரியஸ் (ஹாஸ்பிட்டல் ஸ்டஃப்) என்ற பாக்டீரியாவின் அடுத்தடுத்த சந்ததிகளின் செல் சுவர்கள், தான் கண்டுபிடித்திருந்த மருந்தை மேன்மேலும் எதிர்க்கும் விதத்தில் உருவாகி வந்ததை அவர் கவனித்தார்.

இதனால், தீங்கிழைக்கும் பாக்டீரியா பெனிசிலினை எதிர்க்கும் சக்தியை பெற்றுவிடலாம் என சுமார் 60 வருடங்களுக்கு முன்பாகவே டாக்டர் ஃப்ளெமிங் எச்சரித்தார். ஆகவே தீங்கிழைக்கும் பாக்டீரியாவை பெனிசிலின் போதியளவு கொல்லவில்லை என்றால், அவற்றின் சந்ததி எதிர்ப்பு சக்தியைப் பெற்று மளமளவென பெருகிவிடும். இதன் காரணமாக பெனிசிலினால் குணப்படுத்த முடியாத நோய் மீண்டும் தலைதூக்கும்.

“ஃப்ளெமிங்கின் கணிப்பு அவர் ஊகித்ததைவிட பிரமாண்டமான அளவில் மெய்யாகி நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தியது” என தி ஆன்ட்டிபயாட்டிக் பாரடாக்ஸ் புத்தகம் குறிப்பிடுகிறது. அது எப்படி? சில பாக்டீரியாவின் மரபணுக்களால்​—⁠பாக்டீரியாவின் டிஎன்ஏ-வில் உள்ள சின்னஞ்சிறிய ப்ளூப்ரின்ட்டுகளால்​—⁠உற்பத்தி செய்யப்படும் என்ஸைம்கள் பெனிசிலினின் வீரியத்தை செயலிழக்கச் செய்துவிடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக பெனிசிலினை ஏராளமாக உட்கொள்வதுகூட பயன் அளிப்பதில்லை. இக்கண்டுபிடிப்பு எப்பேர்ப்பட்ட அதிர்ச்சி அளித்தது!

தொற்று நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற 1940-கள் முதல் 1970-கள் வரை தொடர்ந்து புதுப் புது ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டன; 1980-களிலும் 1990-களிலும்கூட சில உற்பத்தி செய்யப்பட்டன. முன்பு பயன்படுத்தப்பட்ட மருந்துகளுக்கு மசியாத பாக்டீரியாவை இவை அழித்தன. ஆனால் சில வருடங்களில், இந்தப் புதிய மருந்துகளுக்கும் மசியாத பாக்டீரியா தோன்ற ஆரம்பித்தன.

பாக்டீரியாவின் எதிர்ப்பு சக்தி வியக்கத்தக்க விதத்தில் இருப்பதை மனிதன் கண்டுபிடித்திருக்கிறான். ஆன்ட்டிபயாட்டிக் நுழையாமலிருக்க பாக்டீரியா தன் செல் சுவரை மாற்றிக்கொள்கிறது அல்லது ஆன்ட்டிபயாட்டிக்கால் கொல்லப்படாதிருக்க அதன் வேதியியல் இயல்பையே மாற்றிக்கொள்கிறது. மறுபட்சத்தில், ஆன்ட்டிபயாட்டிக் நுழைந்த மறுநிமிடமே பாக்டீரியா அதை வெளியேற்றிவிடுகிறது அல்லது அந்த ஆன்ட்டிபயாட்டிக்கை சிதைப்பதன் மூலம் அதை வலுவற்றதாக்கி விடுகிறது.

ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளின் உபயோகம் அதிகரிக்க அதிகரிக்க, எதையும் தாக்குப்பிடிக்கும் பாக்டீரியா அதிகரித்து பெருமளவு பரவியிருக்கின்றன. ஆக, ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் படுதோல்வி அடைந்துவிட்டனவா? இல்லை, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அப்படியில்லை. ஒருவித தொற்றை ஒரு குறிப்பிட்ட ஆன்ட்டிபயாட்டிக் குணப்படுத்தாதபோது பெரும்பாலும் இன்னொன்று குணப்படுத்திவிடுகிறது. பாக்டீரியாவின் எதிர்ப்பு சக்தி தொல்லை தந்திருக்கிறது என்றாலும் சமீப காலம் வரை அது கட்டுப்படுத்த முடிந்ததாகவே இருந்திருக்கிறது.

பல மருந்துகளை எதிர்க்கும் சக்தி

பிறகு, பாக்டீரியா மற்ற பாக்டீரியாவுடன் மரபணுக்களை பரிமாறிக்கொள்வதை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தார்கள். முதலில், ஒரே வகையைச் சேர்ந்த பாக்டீரியா மட்டுமே மரபணுக்களை பரிமாறிக்கொள்ள முடியும் என்பதாக கருதப்பட்டது. ஆனால் பிற்பாடு அதேவித எதிர்ப்பு சக்தியுள்ள மரபணுக்கள் முற்றிலும் வித்தியாசமான பாக்டீரியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இப்படிப்பட்ட பரிமாற்றங்களின் மூலம் பல்வேறு வகை பாக்டீரியா, பொதுவாக பயன்படுத்தப்படும் வித்தியாசமான மருந்துகளை எதிர்க்கும் சக்தியைப் பெற்றுவிட்டன.

இதெல்லாம் போதாதென்று, சில பாக்டீரியா மற்றவற்றின் உதவியின்றி தானாகவே எதிர்ப்பு சக்தியை பெறுவதாக 1990-களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் காட்டின. ஒரேவொரு ஆன்ட்டிபயாட்டிக்கை எதிர்ப்பட்டாலும் சில பாக்டீரியா இயற்கை மற்றும் செயற்கை ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் அநேகத்தை எதிர்க்கும் சக்தியைப் பெற்றுவிடுகின்றன.

இருண்ட எதிர்காலம்

இன்றும் பெரும்பாலான ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் பெருவாரியான மக்களுக்கு பயனளிக்கின்றன என்றாலும் எதிர்காலத்தில் அவை எந்தளவு வீரியம் பெற்றிருக்கும்? ஆன்ட்டிபயாட்டிக் பாரடாக்ஸ் என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “கொடுக்கப்படும் முதல் ஆன்ட்டிபயாட்டிக் மருந்திலேயே நோய் குணமாகிவிடும் என்று இனியும் நாம் எதிர்பார்க்க முடியாது.” மேலும், “உலகின் சில பகுதிகளில், ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் குறைவாக இருப்பது, கிடைக்கும் எந்த ஆன்ட்டிபயாட்டிக் மருந்துமே வீரியம் உள்ளதாக இல்லை என்பதைக் காட்டுகிறது. . . . இந்தப் பூமியிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டப்படும் என 50 வருடங்களுக்கு முன்பு சிலர் முன்னறிவித்த வியாதிகளால் நோயாளிகள் துன்பப்பட்டு சாகிறார்கள்.”

மருந்துகளை எதிர்க்கும் சக்தியைப் பெற்றிருப்பது பாக்டீரியா மட்டுமே அல்ல. வைரஸ், பூசணம், மற்ற சின்னஞ்சிறிய ஒட்டுண்ணிகள் ஆகிய கிருமிகளும் மலைக்க வைக்கும் விதத்தில் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு வளைந்துகொடுக்கின்றன. இதன் மூலம், அவற்றை ஒழிப்பதற்கான மருந்துகளை கண்டுபிடிப்பதிலும் தயாரிப்பதிலும் செலவிடப்படும் அனைத்து முயற்சிகளையும் தவிடுபொடியாக்கும் எதிர்கால சந்ததிகளை பிறப்பிக்கும் வாய்ப்பை முன்வைக்கின்றன.

ஆக, என்ன செய்வது? கிருமிகளின் எதிர்ப்பு சக்தியை குலைக்க அல்லது கட்டுப்படுத்தவாவது முடியுமா? ஏராளமான தொற்று நோய்களால் பீடிக்கப்பட்டிருக்கும் ஓர் உலகில் ஆன்ட்டிபயாட்டிக்குகளும் மற்ற ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்துகளும் எவ்வாறு தொடர்ந்து வெற்றிநடை போடலாம்? (g03 10/22)

[அடிக்குறிப்புகள்]

a “ஆன்ட்டிபயாட்டிக்” என்ற வார்த்தை பாக்டீரியாவை எதிர்க்கும் மருந்தைக் குறிக்க சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது. “ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்து” என்பது இன்னும் பொதுவான பதம்; வைரஸ், பாக்டீரியா, பூசணம், சின்னஞ்சிறிய ஒட்டுண்ணிகள் ஆகிய நோயுண்டாக்கும் எவ்வித நுண்ணுயிரிகளையும் எதிர்க்கும் மருந்துகள் அனைத்தையும் அது குறிக்கிறது.

b பூச்சிக்கொல்லிகள் விஷத்தன்மை வாய்ந்தவை, ஆனால் மருந்துகளும் அப்படித்தான். இரண்டுமே நன்மையும் செய்திருக்கின்றன, தீமையும் விளைவித்திருக்கின்றன. ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் தீங்கிழைக்கும் கிருமிகளை கொல்லலாம் என்றாலும் அவை நன்மையான பாக்டீரியாவையும் கொன்றுவிடுகின்றன.

[பக்கம் 6-ன் பெட்டி/படம்]

ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்துகள் என்றால் என்ன?

டாக்டர் உங்களுக்கு பரிந்துரை செய்யும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்து, ஆன்ட்டிமைக்ரோபியல்ஸ் என்று அழைக்கப்படும் மருந்துகளின் பிரிவைச் சேர்ந்தது. இந்த ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்துகள், இரசாயனங்களால் நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் முறையான “கீமோதெரபி” என்ற பொதுப் பிரிவின் கீழ் வருகின்றன. இந்தக் “கீமோதெரபி” என்ற பதம் பொதுவாக புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சைமுறைக்கு உபயோகிக்கப்பட்டாலும், முதன்முதலில்​—⁠இப்போதுகூட​—⁠தொற்றுநோய்களுக்கான சிகிச்சையையே குறிக்கிறது. இச்சந்தர்ப்பங்களில் அது ஆன்ட்டிமைக்ரோபியல் கீமோதெரபி என்று அழைக்கப்படுகிறது.

நுண்ணோக்கியின் உதவியால் மட்டுமே பார்க்க முடிந்த நுண்ணிய ஜீவிகளே நுண்ணுயிரிகள் அல்லது நுண்கிருமிகள் ஆகும். நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படும் இரசாயனங்களே ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்துகள். ஆனால் வருத்தகரமாக நன்மையான நுண்ணுயிரிகளுக்கு எதிராகவும் ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்துகள் செயல்படுகின்றன.

1941-⁠ல், ஸ்ட்ரெப்டோமைசினின் சக கண்டுபிடிப்பாளரான செல்வான் வாக்ஸ்மான், “ஆன்ட்டிபயாட்டிக்” என்ற பதத்தை, நுண்ணுயிரிகளிலிருந்து உண்டாக்கப்படும் பாக்டீரியா கொல்லிகளுக்கு (antibacterials) பயன்படுத்தினார். மருத்துவ சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளும் ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்துகளும் மதிப்புள்ளவை, ஏனென்றால் அவை உங்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தாமல் கிருமிகளை மட்டும் கொல்லும் சக்தியுள்ளவை.

இருந்தாலும் எல்லா விதமான ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளும் மனிதர்களுக்கு ஓரளவாவது நச்சுத்தன்மை வாய்ந்தவை. கிருமிகளை கொல்வதற்கு தேவையான மருந்தின் அளவுக்கும் நம்மை பாதிப்பதற்கு தேவையான மருந்தின் அளவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் மருத்துவ விகிதம் (therapeutic index) என்றழைக்கப்படுகிறது. இந்த விகிதம் எந்தளவு அதிகமோ அந்தளவு அம்மருந்து பாதுகாப்பானது; அது எந்தளவு குறைவோ அந்தளவு அம்மருந்து ஆபத்தானது. சொல்லப்போனால் ஆயிரக்கணக்கான ஆன்ட்டிபயாட்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலானவை மருந்தாக பயன்படுத்தப்படுவதில்லை; ஏனென்றால் அவை மனிதருக்கு அல்லது மிருகங்களுக்கு மிகவும் நச்சுவாய்ந்தவை.

மனிதரால் உட்கொள்ள முடிந்த முதல் இயற்கை ஆன்ட்டிபயாட்டிக் மருந்து பெனிசிலின் ஆகும்; அது பெனிசிலியம் நொடேடம் என்ற பூசணத்திலிருந்து தயாரிக்கப்பட்டது. 1941-⁠ல்தான் பெனிசிலின் முதன்முறையாக ஊசி மூலம் உடலில் செலுத்தப்பட்டது. இதை அடுத்து 1943-⁠ல் மண்ணிலுள்ள ஸ்ட்ரெப்டோமைசிஸ் க்ரீசியஸ் என்ற பாக்டீரியாவிலிருந்து ஸ்ட்ரெப்டோமைசின் மருந்து தயாரிக்கப்பட்டது. காலப்போக்கில் இன்னுமநேக ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன; அவை உயிருள்ள இயற்கைப் பொருட்களிலிருந்தும் செயற்கைப் பொருட்களிலிருந்தும் தயாரிக்கப்பட்டன. இருந்தாலும் இப்படிப்பட்ட அநேக ஆன்ட்டிபயாட்டிக்குகளை எதிர்க்கும் சக்தியை பாக்டீரியா பெற்றிருக்கின்றன; இது உலகளாவிய மருத்துவ பிரச்சினையாகிவிட்டது.

[படம்]

கிண்ணத்தின் கீழ்பாகத்தில் காணப்படும் பெனிசிலின் பூசணம், பாக்டீரியா வளருவதைத் தடுக்கிறது

[படத்திற்கான நன்றி]

Christine L. Case/Skyline College

[பக்கம் 7-ன் பெட்டி/படங்கள்]

கிருமிகளின் வகைகள்

வைரஸ்கள் கிருமிகளிலேயே நுண்ணிய கிருமிகளாகும். சளி, ஃப்ளூ, தொண்டைப் புண் போன்ற பொதுவான தொல்லைகளுக்கு வைரஸ்களே காரணம். போலியோ, இபோலா, எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களையும் அவை உண்டாக்குகின்றன.

பாக்டீரியா ஒற்றை செல் உயிரிகளாகும். அவை மிக எளிய அமைப்புடையவை என்பதால் பொதுவாக ஒரேவொரு குரோமோசோமை பெற்றிருக்கின்றன, அதோடு அவற்றில் நியூக்ளியஸ் இல்லவே இல்லை. நம் உடலில் கோடிக்கணக்கான பாக்டீரியா வாழ்கின்றன, அவை பெரும்பாலும் செரிமான மண்டலத்தில் இருக்கின்றன. உணவு செரிமானத்துக்கு அவை உதவுகின்றன; அதோடு இரத்தம் உறைவதற்கு தேவையான K வைட்டமினையும் உற்பத்தி செய்கின்றன.

சுமார் 4,600 வகை பாக்டீரியா அறியப்பட்டிருந்தாலும் அவற்றில் சுமார் 300 வகைகளே நோய்களை உண்டாக்குவதாக கருதப்படுகிறது. இருந்தாலும் பாக்டீரியாவால் செடிகொடிகளுக்கும் மிருகங்களுக்கும் மனிதருக்கும் ஏற்படும் நோய்களின் பட்டியல் மிக நீளமானது. மனிதருக்கு காசநோய், காலரா, டிப்தீரியா, ஆன்த்ராக்ஸ், பல் சொத்தை, சில வகை நிமோனியா, அநேக பாலியல் நோய்கள் ஆகியவை ஏற்படக் காரணம் பாக்டீரியாவே.

ப்ரோட்டோசோவாக்கள் பாக்டீரியாவைப் போலவே ஒற்றை செல் உயிரிகள். ஆனால் ஒன்றுக்கும் அதிகமான நியூக்ளியஸைப் பெற்றிருக்கலாம். அமீபாக்கள், ட்ரைபனோசோம்கள், மலேரியாவை உண்டாக்கும் ஒட்டுண்ணி ஆகியவை இவற்றில் சில. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஒட்டுண்ணிகளாகும். சுமார் 10,000 வகையான ஒட்டுண்ணிகள் இருக்கின்றன; ஆனால் இவற்றில் ஒருசில மட்டுமே மனிதரில் நோய்களை உண்டாக்குகின்றன.

பூசணமும் நோய்களை உண்டாக்கலாம். பூசணத்திற்கு ஒரு நியூக்ளியஸ் உண்டு, அது பின்னிப்பிணைந்த இழைகள் போல் படருகிறது. பூசணத்தால் பொதுவாக ஏற்படுபவை, அதெலெட்ஸ் ஃபுட் என்ற படர்தாமரை, கான்டிடியேசிஸ் (கான்டிடா) போன்ற நோய்கள் ஆகும். ஊட்டச்சத்துக் குறைவு, புற்றுநோய், போதைப்பொருட்கள், வைரஸ் தொற்றுகள் ஆகியவற்றால் எதிர்ப்பு சக்தியை இழந்து பலவீனமாகியிருக்கும் நபர்களுக்கே பூசணத்தால் கொடிய தொற்றுகள் ஏற்படும்.

[படங்கள்]

இபோலா வைரஸ்

“ஸ்டஃபைலோகாக்கஸ் ஆரியஸ்” பாக்டீரியா

“ஜியார்டியா லாம்ப்ளியா” ப்ரோட்டோசோவா

படர்தாமரை பூசணம்

[படங்களுக்கான நன்றி]

CDC/C. Goldsmith

CDC/Janice Carr

Courtesy Dr. Arturo Gonzáles Robles, CINVESTAV, I.P.N. México

© Bristol Biomedical Image Archive, University of Bristol

[பக்கம் 4-ன் படம்]

பெனிசிலினை கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்