எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
சிறார் விபச்சாரம் “சிறார் விபச்சாரம்—கசப்பான உண்மை” (மார்ச் 8, 2003) என்ற தொடர் கட்டுரைகளுக்கு நன்றியைத் தெரிவிக்க எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. இது எந்தளவுக்கு கேவலமானது என்பதை இக்கட்டுரைகள் அம்பலப்படுத்தின. இப்படிப்பட்டதோர் அடிமைத்தனமும் உள்ளது என்பதை பலர் அறியச் செய்வதற்கு இதை பிற அச்சகங்களிலும் மறுபதிப்பு செய்ய வேண்டுமென்பது என் கருத்து.
எம். கே., செக் குடியரசு (g03 10/08)
ஆரோக்கியத்துடன் இருத்தல் உடற்பயிற்சி மற்றும் எடையைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக “உலகை கவனித்தல்” பகுதியில் கொடுக்கப்பட்ட அனைத்து ஆலோசனைகளுக்கும் நன்றி. முக்கியமாக, “ஆரோக்கியத்துடன் இருத்தல்” (மார்ச் 8, 2003) என்ற பகுதியை வாசித்து மகிழ்ந்தேன். கொஞ்சம் உடற்பயிற்சி செய்வதுகூட ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என அது காட்டியது. இது எனக்கு உற்சாகத்தை அளித்தது, காரணம் நான் மருத்துவ சிகிச்சை பெறுவதால் எளிதில் துவண்டுவிடுகிறேன், இதனால் கொஞ்ச நேரம்தான் உடற்பயிற்சி செய்ய முடிகிறது. உடல் ஆரோக்கியத்திற்காக நீங்கள் தந்த இந்த டிப்ஸுக்கு நன்றி.
ஜி. பி., ஐக்கிய மாகாணங்கள் (g03 10/08)
சகாக்களின் அழுத்தம் சகாக்களின் அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கும் 15 வயது பெண் நான். “இளைஞர் கேட்கின்றனர் . . . சகாக்களின் அழுத்தத்தை நான் எப்படி சமாளிக்க முடியும்?” (ஜனவரி 8, 2003) என்ற கட்டுரையைப் படித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இப்படிப்பட்ட பிரச்சினைகளை சந்தித்த இளைஞர்களைப் பற்றி வாசித்தது, நான் மட்டுமே அப்படிக் கஷ்டப்படவில்லை என்பதை எனக்கு உணர்த்தியது. சர்வவல்லமையுள்ள ஒரே கடவுளுடைய உதவியால் மட்டுமே சகாக்களின் அழுத்தத்தை நாம் சமாளிக்க முடியும். ஏற்ற சமயத்தில் கிடைத்த இந்தத் தகவலுக்கு மிக்க நன்றி.
கே. ஆர்., ஆஸ்திரேலியா (g03 9/08)
மியூசிக் வீடியோக்கள் எனக்குத் தெரிந்த யெகோவாவின் சாட்சி ஒருவர் சிலசமயங்களில் உங்கள் பத்திரிகைகளை எனக்கு தருவார். “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் மியூசிக் வீடியோக்களை பார்க்கலாமா?” (மார்ச் 8, 2003) என்ற கட்டுரை அருமையாக எழுதப்பட்டிருந்தது. அது விஷயங்களை சுற்றி வளைக்காமல் நேரடியாக சொன்னது, நவீன இசையில் மறைந்திருக்கும் ஆபத்துக்களையும் அம்பலப்படுத்தியது.
எம். எம்., ஜப்பான் (g03 10/22)
இந்தக் கட்டுரையைப் பார்த்ததும் உடனடியாக முழுவதையும் வாசித்து முடித்தேன். என் நண்பர்களில் அநேகர் மியூசிக் வீடியோக்களைப் பார்க்கிறார்கள், அவற்றைக் குறித்து ஆர்வமாக பேசுவார்கள். ஆனால், அவற்றை பார்க்க வேண்டுமென்ற ஆசைக்கு இடங்கொடுக்காதிருக்க இந்தக் கட்டுரை எனக்கு உதவியிருக்கிறது. எனக்கு 12 வயது, இந்தக் கட்டுரை ஏற்ற சமயத்தில் என் கையில் கிடைத்தது.
கே. டபிள்யூ., ஐக்கிய மாகாணங்கள் (g03 10/22)
இந்தக் கட்டுரையை ரசித்துப் படித்தேன். நான் முழுநேர ஊழியம் செய்பவள், மற்ற இளைஞர்களுக்கு நல்ல முன்மாதிரி வைப்பது முக்கியம் என்பது எனக்குத் தெரியும். ஏதாவது ஒரு மியூசிக் வீடியோவை ஏன் பார்க்கவில்லை என இளைஞர்கள் என்னிடம் கேட்டால் யெகோவாவுடன் வைத்திருக்கும் உறவைக் கெடுத்துக்கொள்ள விரும்பாததால் பார்க்கவில்லை என இனி என்னால் சொல்ல முடியும். தகவல் நிறைந்த “இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரைகளை தயவுசெய்து தொடர்ந்து பிரசுரியுங்கள்.
ஆர். பி., ஐக்கிய மாகாணங்கள் (g03 10/22)
எனக்கு சுமார் 21 வயதாகிறது, எனக்கு மியூசிக் வீடியோக்களைப் பார்ப்பது என்றாலே பயங்கர குஷிதான். ஆனால் அவற்றைப் பார்ப்பவர்கள் மீது அவை செல்வாக்கு செலுத்துகின்றன என்று நீங்கள் சரியாகவே குறிப்பிட்டிருக்கிறீர்கள். பெரும்பாலும் இளைஞர்கள் குறிப்பிட்ட ஒரு இசையின் சுருதி அல்லது சந்தத்திற்காகத்தான் அதைக் கேட்க ரொம்ப ஆசைப்படுகிறார்கள், ஆனால் அதிலுள்ள வார்த்தைகளைப் பற்றி அவர்கள் துளியும் கவலைப்படுவதில்லை. முக்கியமாக புரியாத பாஷையில் பாட்டு இருக்கும்போது அப்படித்தான் செய்கிறார்கள். இசை உண்மையில் எப்படிப்பட்ட செய்தியை பரப்புகிறது என்பதை வீடியோவை பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். நல்ல பாட்டு என நான் நினைத்ததை வீடியோவில் பார்த்து சிலசமயங்களில் அதிர்ந்தே போயிருக்கிறேன். தரங்கெட்ட வீடியோவை பார்க்கையில் உடனே டிவி சேனலை மாற்றிவிடுவேன், அந்தப் பாட்டை அதற்குப் பிறகு கேட்கவே மாட்டேன்.
டி. ஜி., பிரான்சு (g03 10/22)