Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மாறுபட்ட வாழ்க்கை பாணிகள்—கடவுள் அங்கீகரிக்கிறாரா?

மாறுபட்ட வாழ்க்கை பாணிகள்—கடவுள் அங்கீகரிக்கிறாரா?

பைபிளின் கருத்து

மாறுபட்ட வாழ்க்கை பாணிகள்​—⁠கடவுள் அங்கீகரிக்கிறாரா?

“எனக்கு எந்த விதமான செக்ஸ் பிடித்திருக்கிறதென்று எப்போது தெரிந்துகொள்ள முடியும்?” இப்படித்தான் 13-வயது பருவப்பெண் ஒருத்தி ‘டீனேஜ் அட்வைஸ்’ பகுதியில் கேட்டு எழுதினாள். தாங்கள் விரும்புகிற எந்த முறையிலும் செக்ஸ் வைத்துக்கொள்ள எந்தத் தடையுமில்லை என்ற மக்களுடைய மனப்பான்மையைத்தான் இந்தச் சிறுமியின் கேள்வி எதிரொலிக்கிறது.

சிலர் தங்களுடைய பாலியல் உணர்ச்சிகளைக் குறித்து உண்மையிலேயே குழம்பிப் போயிருக்கலாம். வேறு சிலரோ ஓரினப்புணர்ச்சி போன்ற மாறுபட்ட வாழ்க்கை பாணிகளை பகிரங்கமாக ஏற்றுக்கொள்கிறார்கள். இன்னும் சிலரோ கூச்சநாச்சமில்லாமல் எதிர்பாலாரைப் போல நடந்துகொள்வதோடு அவர்களைப் போலவே உடுத்தவும் செய்கிறார்கள்​—⁠சிலர் தங்களுடைய பாலினத்தை மாற்றுவதற்கு அறுவை சிகிச்சையும் (sex-change operations) செய்து கொள்கிறார்கள். சிறுபிள்ளைகளுடன் பாலுறவு கொள்வதை அனுமதிக்க வேண்டுமென வாதிடுகிறவர்களும்கூட இருக்கிறார்கள்.

பாலியல் பழக்கங்களும் பாலினமும் உண்மையிலேயே தனிப்பட்ட விருப்பத்திற்கு உரியவையா? இந்த விஷயங்களைப் பற்றி கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது?

“ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்”

ஆண்களையும் பெண்களையும் கடவுள்தாமே வித்தியாசமாக படைத்ததை பைபிளிலுள்ள ஆதியாகம புத்தகம் கூறுகிறது. அந்தப் பதிவு இவ்வாறு சொல்கிறது: “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், . . . ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, . . . ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.”​—ஆதியாகமம் 1:27, 28.

சுயமாக தெரிவுசெய்யும் அறிவுடன் மனிதர்களை கடவுள் படைத்தார்; அவர்களுடைய சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு வாய்ப்புகளையும் அளித்தார். (சங்கீதம் 115:16) பூமியிலுள்ள மற்றெல்லா உயிரினங்களையும் பராமரித்துக் காக்கும் பொறுப்பை ஒப்படைத்து, அவற்றிற்கு பொருத்தமான பெயர் சூட்டுவதற்கும் மனிதனை அனுமதித்தார். (ஆதியாகமம் 2:19) ஆனால் பாலியல் சம்பந்தப்பட்ட விஷயத்தில், கடவுள் திட்டவட்டமான அறிவுரைகளை வழங்கினார்.​—ஆதியாகமம் 2:24.

ஆதாம் கீழ்ப்படியாமல் போனதால், நாம் அனைவரும் அபூரணத்தை சுதந்தரித்திருக்கிறோம். ஆகவே, கடவுளுடைய ஆதி நோக்கத்திற்கு முரணான மாம்ச பலவீனங்களையும் பலமான ஆசைகளையும் நாம் எதிர்த்துப் போராட வேண்டும். எனவே, மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட சட்டங்களில், அருவருப்பான பாலியல் பழக்கங்களை​—⁠விபச்சாரம், முறைதகா புணர்ச்சி, ஓரினப்புணர்ச்சி, மிருகப் புணர்ச்சி போன்றவற்றை​—⁠கடவுள் குறிப்பிட்டார். (லேவியராகமம் 18:6-23) ஒழுக்கங்கெட்ட செயல்களுக்காக எதிர்பாலாரைப் போல ஒருவர் தன்னை மாற்றிக்கொள்வதையும் கடவுள் திட்டவட்டமாக தடை செய்தார். (உபாகமம் 22:5) திருமண ஏற்பாட்டிற்குள் எதிர்பாலாரோடு உறவு கொள்வதை மட்டுமே கடவுள் அங்கீகரிக்கிறார் என்று பைபிள் திரும்பத் திரும்ப சொல்கிறது. (ஆதியாகமம் 20:1-5, 14; 39:7-9; நீதிமொழிகள் 5:15-19; எபிரெயர் 13:4) இப்படிப்பட்ட தராதரங்கள் நியாயமானவையா?

யார் தீர்மானிப்பது?

படைப்பாளருக்கு முன் மனிதனுடைய நிலையை ஒரு குயவனுடைய கைகளிலுள்ள களிமண்ணுக்கு பைபிள் ஒப்பிடுகிறது. அது இவ்வாறு கூறுகிறது: “மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?” (ரோமர் 9:20) ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் ஈர்ப்பது இயல்பானதே என்பது அவர்கள் படைக்கப்பட்ட விதத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது. எனவே, ஒரே பாலினத்தவர் மீதோ ஒரு மிருகத்தின் மீதோ அல்லது ஒரு சிறுபிள்ளையின் மீதோ பாலியல் ஆசை ஏற்படுவது இயல்புக்கு மாறானது.​—ரோமர் 1:26, 27, 32.

இயல்புக்கு மாறான இத்தகைய பாலியல் ஆசைகளை வளர்த்துக் கொள்கிறவர்கள் கடவுளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். பைபிளில் பின்வரும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது: “மண்ணோடுகளுக்கொத்த ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ! களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லத்தகுமோ?” (ஏசாயா 45:9) அப்படியானால், மனிதரை உண்டாக்கியவர் பாலியல் விஷயங்களில் வழிநடத்துதல் கொடுப்பது நியாயமானதே. மனிதர்களும் இத்தகைய வழிநடத்துதலைப் பின்பற்றுவது நியாயமானதுதானே?

ஒருவர் தனது சரீர பாண்டத்தை ஆண்டுகொள்ளுதல்

பாலியல் நடத்தை சம்பந்தமாக கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கொடுத்தபோது இது போன்ற ஓர் உதாரணத்தை பைபிள் எழுத்தாளராகிய பவுல் பயன்படுத்தினார். ‘மோக இச்சைக்குட்படாமல், உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ள வேண்டும்’ என்று அவர் கூறினார். (1 தெசலோனிக்கேயர் 4:4, 5) ஒருவருடைய சரீரத்தை ஒரு பாண்டத்திற்கு பவுல் ஒப்பிடுகிறார். அந்தப் பாண்டத்தை ஆண்டுகொள்வது என்பது ஒருவருடைய சிந்தைகளையும் ஆசைகளையும் கடவுளுடைய ஒழுக்கச் சட்டங்களுக்கு இசைவாக கொண்டு வருவதை அர்த்தப்படுத்துகிறது.

இது சுலபமல்ல என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். சிறுவயதில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானவருக்கு, ஆண்மை அல்லது பெண்மை சம்பந்தமாக பெற்றோரின் அல்லது காப்பாளரின் தவறான முன்மாதிரியை பார்த்த ஒருவருக்கு, அல்லது சிறுவயதில் ஆபாச காட்சிகளைப் பார்த்த ஒருவருக்கு இதைப் பின்பற்றுவதில் பிரச்சினைகள் இருக்கலாம் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. மரபியல், சுரப்பிகள், மனோதத்துவம் சம்பந்தப்பட்ட காரணிகளும்கூட பாலியல் பற்றிய தவறான ஆசைகளுக்கு காரணமாகிவிடலாம். என்றாலும், தேவைப்படுவோருக்கு நமது படைப்பாளர் உதவியும் ஆதரவும் அளிப்பார் என்பதை அறிவது ஆறுதலாக இருக்கிறது.​—சங்கீதம் 33:20; எபிரெயர் 4:16.

பெரிய குயவர் உங்களை வடிவமைக்க அனுமதியுங்கள்

களிமண்ணை வடிவமைப்பதற்கு முன்பு குயவன் அதை சக்கரத்தின் நடுவில் வைக்கிறான். பின்பு, அந்த சக்கரம் சுழலுகையில், அந்தக் களிமண்ணை விரும்பத்தக்க விதத்தில் வடிவமைக்க தனது விரல்களால் லாவகமாகவும் மென்மையாகவும் அழுத்தி அழுத்தி விடுகிறான். கடவுளுடைய பார்வையில் விரும்பத்தக்க நபராய் வடிவமைக்கப்படும் முன், முதலாவது அவருடைய மாறாத நியமங்கள், சட்டங்கள் என்ற சக்கரத்தின் நடுவில் நம்மை வைக்க வேண்டும். இந்த முயற்சியை மட்டும் எடுக்க ஆரம்பித்துவிட்டால், பைபிள், பரிசுத்த ஆவி, கிறிஸ்தவ சகோதரத்துவம் ஆகியவற்றின் மூலம் கடவுள் அன்புடனும் மென்மையாகவும் நம்மை வடிவமைப்பார். பிற்பாடு வாழ்க்கையில் கடவுளுடைய தனிப்பட்ட கவனிப்பை உணரவும் அனுபவிக்கவும் ஆரம்பிப்பார்.

ஆனால், படைப்பாளருடைய ஞானத்தின் மீது நாம் அதிகமதிகமாக நம்பிக்கை வைக்க வேண்டும், நமக்கு சிறந்தது எதுவோ அதை அவர் அறிந்திருக்கிறார் என உறுதியாக நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கை ஜெபத்தின் மூலமும் பைபிளை ஊக்கமாய் படிப்பதன் மூலமும் வளருகிறது. தகாத பாலியல் ஆசைகள் உள்ள ஒருவர் கடவுள் மீது நம்பிக்கை வைத்து அந்தப் பிரச்சினையை சமாளிக்கையில் அவருடைய கரங்களில் வடிவமைக்கப்படுகிறார். ஒன்று பேதுரு 5:6, 7 இவ்வாறு கூறுகிறது: “ஆகையால், ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”

பைபிளை தவறாமல் வாசிக்கும்போது, மாம்ச இச்சைகளுடன் போராடியும் தளர்ந்துவிடாமலிருந்த கடவுளுடைய உண்மை ஊழியர்கள் அநேகரைப் பற்றி நாம் அறிந்து கொள்கிறோம். இவர்களுடைய முன்மாதிரி நமக்கு எவ்வளவு உற்சாகமூட்டுவதாக இருக்கிறது! அப்போஸ்தலன் பவுலுக்கு சிலசமயங்களில் ஏற்பட்ட விரக்தியை பின்வரும் அவருடைய வார்த்தைகளிலிருந்து நாம் உணரலாம்: “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” என்று கேட்டார்; அப்படி கேட்டதோடு மட்டும் நிறுத்திவிடாமல், “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்” என்ற பதிலையும் அளித்தார். இவ்வாறு, உதவிக்கு முக்கிய ஊற்றுமூலராக விளங்குபவரிடமும் நம் கவனத்தைத் திருப்புகிறார்.​—ரோமர் 7:24, 25.

மாற்றம் செய்ய உதவும் சக்தி

கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உதவியையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இது, மாற்றம் செய்ய உதவும் வல்லமை வாய்ந்த சக்தியாகும். “பழைய மனுஷனை [“இயல்பை,” பொது மொழிபெயர்ப்பு] . . . களைந்துபோட்டு” “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் [“இயல்பை,” பொ.மொ.] தரித்துக்கொள்”வதற்கு பரிசுத்த ஆவி நமக்கு உதவுகிறது. (எபேசியர் 4:22-24) இந்த மாற்றத்தைச் செய்ய பரிசுத்த ஆவியின் உதவிக்காக நாம் உள்ளப்பூர்வமாய் வேண்டிக்கொள்ளும்போது நமது அன்பான பரலோக தகப்பன் கண்டிப்பாக நமக்கு பதிலளிப்பார். “பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடு”ப்பார் என இயேசு உறுதியளித்தார். (லூக்கா 11:13) ஆனால் ஜெபத்தில் உறுதியாக இருப்பது அவசியம், இதைத்தான் அவருடைய வார்த்தைகள் சுட்டிக் காட்டுகின்றன: “[“தொடர்ந்து,” NW] கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 7:7) பலமான பாலியல் ஆசைகளைக் கட்டுப்படுத்த முயலும் விஷயத்தில் இது மிகவும் உண்மை.

எல்லா பின்னணியினரும் கலந்த மெய் கிறிஸ்தவ சகோதரத்துவம் மூலமாகவும் கடவுள் நமக்கு உதவுகிறார். கொரிந்துவில் முதல் நூற்றாண்டு சபையிலிருந்த கிறிஸ்தவர்கள் சிலர், முன்பு ‘தகாத பாலுறவு கொள்வோராகவும்’ ‘ஆண்புணர்ச்சிக்காரராகவும்’ இருந்தனர். என்றாலும் அவர்கள் மாறினார்கள். கிறிஸ்துவின் இரத்தம் அவர்களை சுத்திகரித்தது, அதனால் அவர்கள் கடவுளுடைய பார்வையில் ஏற்கத் தகுந்தவர்களாக ஆனார்கள். (1 கொரிந்தியர் 6:9-11) இன்று சிலர் இது போன்ற மாற்றங்களைச் செய்ய வேண்டும். இப்படிப்பட்டவர்கள் தகாத ஆசைகளை எதிர்த்துப் போராடுவதற்கான உதவியை கிறிஸ்தவ சபையிலிருந்து பெறலாம்.

ஒருவர் கிறிஸ்தவரானதுமே தானாக எல்லா விதமான கெட்ட ஆசைகளிலிருந்து அல்லது பாலினத்தைப் பற்றிய குழப்ப உணர்ச்சிகளிலிருந்து குணமாகிவிடுவார் என இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. பைபிள் நியமங்களை உறுதியுடன் கடைப்பிடிக்கும்போது சிலர் இயல்பான வாழ்க்கை வாழ முடிந்திருக்கிறது. இருந்தபோதிலும், இந்தக் கிறிஸ்தவர்கள் தவறான ஆசைகளை எதிர்த்து தினம் தினம் போராட வேண்டியிருந்திருக்கிறது. இவ்வாறாக, அடையாள அர்த்தத்தில், “மாம்சத்திலே ஒரு முள்” இருக்கிறபோதிலும் இப்படிப்பட்டவர்கள் கடவுளுக்கு சேவை செய்கிறார்கள். (2 கொரிந்தியர் 12:7) அவர்கள் தவறான ஆசைகளை எதிர்த்துத் தொடர்ந்து போராடிக்கொண்டு நீதியுள்ள நடத்தையைக் காத்துக்கொள்ளும் வரை, அவர்களை கடவுள் தமது பார்வையில் உண்மையுள்ளவர்களாயும் சுத்தமுள்ளவர்களாயும் கருதுகிறார். முழு மனிதவர்க்கமும் “அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்” அந்த நாளை அவர்கள் எதிர்நோக்கியிருக்கலாம்.​—ரோமர் 8:20.

இதற்கிடையில், கடவுளைப் பிரியப்படுத்த விரும்புகிற அனைவரும் அவருடைய நீதியுள்ள தராதரங்களைப் பின்பற்றி நடக்க வேண்டும். மெய் கிறிஸ்தவர்கள் கடவுளையே சேவிக்க விரும்புகிறார்கள், தங்களுடைய சுயநல ஆசைகளைப் பின்பற்ற விரும்புவதில்லை. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கடவுளுடைய சித்தத்திற்கு தாழ்மையுடன் கீழ்ப்படிகிறவர்கள் நித்திய ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் அடைவார்கள்.​—சங்கீதம் 128:1; யோவான் 17:3. (g03 10/08)

[பக்கம் 13-ன் சிறு குறிப்பு]

பாலின சம்பந்தப்பட்ட விஷயத்தில், கடவுள் திட்டவட்டமான அறிவுரைகளைக் கொடுத்தார்

[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]

கொரிந்துவில் முதல் நூற்றாண்டு சபையிலிருந்த கிறிஸ்தவர்கள் சிலர், முன்பு ‘தகாத பாலுறவு கொள்வோராகவும்’ ‘ஆண்புணர்ச்சிக்காரராகவும்’ இருந்தனர். என்றாலும் அவர்கள் மாறினர்

[பக்கம் 15-ன் படம்]

பைபிளைப் படிப்பது உயர்ந்த ஒழுக்கத் தராதரங்களை வளர்த்துக்கொள்ள ஒருவருக்கு உதவுகிறது