Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மொசைக்குகள் கல் ஓவியங்கள்

மொசைக்குகள் கல் ஓவியங்கள்

மொசைக்குகள்—கல் ஓவியங்கள்

இத்தாலியிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

மொசைக்குகள், “புதுமையான கலைப் படைப்புகள்,” “கண்கவர்” கலை நுட்பம், “காலாகாலமாக நிலைத்திருக்கும் கலைப் பொருட்கள்” என்றெல்லாம் விவரிக்கப்படுகின்றன. பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலிய கலைஞர் டோமேனிக்கோ கிர்லன்டாயோ அவற்றை “நித்தியத்திற்கும் அழியாத சித்திரங்கள்” என அழைத்தார். மொசைக் ஓவியங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும் சரி, மனதைக் கவரும் வரலாறு அவற்றிற்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.

சின்னச் சின்ன கற்களையோ கண்ணாடிகளையோ ஓடுகளையோ இணைத்து டிசைன்களை உருவாக்கி தரையை, சுவரை, அல்லது கூரையை அழகுபடுத்துவதே மொசைக் என்ற கலையாகும். தரைகளையும் சுவர்களையும் அழகுபடுத்த மொசைக் ஓவியங்கள் தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. குளியல் கூடங்கள், குளங்கள், நீரூற்றுகள் போன்ற இடங்களிலும் அவை பயன்படுத்தப்பட்டன; அவற்றிற்குப் பதிலாக இவ்விடங்களில் வெகு நுட்பமான வேறு கலைப்பொருட்கள் இருந்திருந்தால் ஈரப்பதம் அவற்றை சேதப்படுத்தியிருக்கும்.

மொசைக்குகள் பற்பல வகைகளில் கிடைக்கின்றன; மிக எளிமையான ஒரே வண்ண தரைகள் முதல் கறுப்பு வெள்ளை டிசைன்கள் வரையும், சிக்கலான பல-வண்ண மலர் வடிவங்கள் முதல் பகட்டான ஓவியங்கள் வரையும் பல வடிவங்களில் கிடைக்கின்றன.

கண்டுபிடிப்பும் வளர்ச்சியும்

மொசைக் கலையைக் கண்டுபிடித்தது யார் என்பது தெளிவாக தெரியவில்லை. பூர்வ எகிப்தியர்களும் சுமேரியர்களும் தங்கள் கட்டடங்களை வண்ண டிசைன்களால் அழகுபடுத்தினர். ஆனால் ஏனோ அந்தக் கலை வளர்ச்சியடையாமல் அழிந்துவிட்டது. ஆசியா மைனர், கார்தேஜ், கிரீட், கிரீஸ், சிசிலி, சிரியா, ஸ்பெயின் ஆகிய அனைத்து இடங்களுமே மொசைக்கின் பிறப்பிடமாக சொல்லப்படுகின்றன. ஆகவேதான், இந்தக் கலை “மத்தியதரைக் கடல் பகுதியிலுள்ள அநேக இடங்களில் வெவ்வேறு காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டு, மறக்கப்பட்டு, பின்பு மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டது” என ஒரு எழுத்தாளர் எழுதினார்.

ஆரம்ப கால மொசைக் ஓவியங்கள்​—⁠அவற்றில் சில பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தவை​—⁠மொழுமொழு கூழாங்கற்களால் எளிய வடிவங்களைப் பெற்றிருந்தன. அந்தந்த ஊர்களில் கிடைத்த கற்களின் வண்ணங்களைப் பொறுத்து மொசைக் ஓவியங்களின் வண்ணங்களும் அமைந்தன. கற்களின் விட்டம் பொதுவாக 10 முதல் 20 மில்லிமீட்டர் வரை இருந்தது; ஆனால் சில நுணுக்கமான வடிவங்களுக்கு 5 மில்லிமீட்டரே உள்ள சின்னஞ்சிறிய கூழாங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டிற்குள், கலைஞர்கள் கூழாங்கற்களை சிறிய அளவுகளில் செதுக்க ஆரம்பித்தார்கள்; இதனால் மிக நுட்பமான வடிவங்களை உருவாக்க முடிந்தது. காலப்போக்கில் கூழாங்கற்களுக்குப் பதிலாக டெஸரா என்ற செதுக்கப்பட்ட கற்கள் பயன்படுத்தப்பட்டன. டெஸரா கற்கள் பற்பல நிறங்களில் கிடைத்தன, பதிப்பதற்கு எளிதாக இருந்தன, தேவையான டிசைன்களைப் பெறவும் ஏற்றதாக இருந்தன. அவற்றின் பரப்புகள் சமமாக இருந்ததால் அவற்றை தேய்த்து மெழுகு பூச முடிந்தது; இதனால் அவற்றின் வண்ணங்கள் இன்னுமதிகமாக பளிச்சிட்டன. பொ.ச. இரண்டாம் நூற்றாண்டிற்குள், வண்ணக் கண்ணாடித் துண்டுகள் பெருமளவு பயன்படுத்தப்பட்டன; இதனால் இன்னுமதிக வண்ணங்கள் மொசைக் கலைஞரின் கைவசம் வந்தன.

குறிப்பாக கிரேக்கரின் காலப்பகுதியில் (சுமார் பொ.ச.மு. 300 முதல் பொ.ச.மு. 30 வரை) நுணுக்கமான, நேர்த்தியான வடிவங்களில் மொசைக் ஓவியங்கள் உருவாக்கப்பட்டன. “முடிந்தளவு அதிக வண்ணங்களையும் ஒரு கனசதுர மில்லிமீட்டர் அளவுள்ள டெஸரா கற்களையும் பயன்படுத்துவதன் மூலம் . . . கிரேக்க மொசைக் கலைஞர்களின் படைப்புகள் சுவரோவியங்களோடு போட்டா போட்டிபோட ஆரம்பித்தன” என க்ளோசார்யோ டாக்னிக்கோ-⁠ஸ்டோரிக்கோ டெல் மோசாயிக்கோ (மொசைக் கலையின் தொழில்நுட்ப-சரித்திர சொல்லகராதி) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. வெளிச்சம், இருள், தூரம், பருமன், கோணம் ஆகிய அம்சங்களில் நுட்பமான தோற்றங்களை உருவாக்க வண்ணம் திறம்பட பயன்படுத்தப்பட்டது.

கிரேக்க மொசைக் ஓவியங்களுக்கு சிறந்த உதாரணம், ஓவியங்களின் மத்தியில் அதிக வேலைப்பாடுடன் காணப்படும் உள்படம் (emblema) ஆகும்; இது பெரும்பாலும், புகழ்பெற்ற ஓவியத்தின் உயர்தரமிக்க நகலாக இருந்தது; அதைச் சுற்றி அழகிய பார்டர்கள் அமைக்கப்பட்டன. உள்படங்கள் சிலவற்றிலுள்ள டெஸரா கற்கள் மிக மிக சின்னதாகவும் ஒன்றுக்கொன்று நன்கு பொருந்துவதாகவும் இருப்பதால் பார்ப்பதற்கு பிரஷ்ஷால் பெயின்ட் செய்தது போல் இருக்கின்றன, தனித் தனி கற்களாகவே தெரிவதில்லை.

ரோம மொசைக்குகள்

இத்தாலியிலும் ரோம சாம்ராஜ்யத்தின் பிற பகுதிகளிலும் ஏராளமான மொசைக் ஓவியங்கள் காணப்படுவதால் இக்கலை ரோமரின் கலையாகவே பெரும்பாலும் கருதப்படுகிறது. “ரோமர்கள் காலத்து கட்டடங்களில் கணக்குவழக்கில்லாத மொசைக் தளங்கள் காணப்படுகின்றன; பிரிட்டனின் வடபகுதியிலிருந்து லிபியா வரையும் அட்லாண்டிக் கரையிலிருந்து சிரியாவின் வனாந்தரம் வரையும் அவை காணப்படுகின்றன” என ஒரு புத்தகம் சொல்கிறது. “இந்தத் தனித்தன்மை வாய்ந்த தொழில்நுட்பத்திற்கும் ரோம கலாச்சாரம் பரவுவதற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்ததால், ரோமர்கள் அங்கு வாழ்ந்ததற்கு ஓர் அத்தாட்சியாக அந்த மொசைக் தளங்கள் சிலசமயங்களில் கருதப்படுகின்றன.”

இருந்தாலும் பல வர்ண மொசைக் ஓவியங்கள் ஆரம்ப கால ரோம சாம்ராஜ்யத்தின் தேவைகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. பொ.ச. முதல் நூற்றாண்டின்போது நகரங்களில் ஏற்பட்ட வேகமான வளர்ச்சியால் அதிவிரைவாகவும் மலிவாகவும் கிடைத்த மொசைக் ஓவியங்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டது. இதனால் கறுப்பு வெள்ளை டெஸரா கற்களை மட்டுமே வைத்து மொசைக் ஓவியங்கள் தயாரிக்கப்பட்டன. தயாரிப்பு அந்தளவுக்கு சூடுபிடித்ததால், “சாம்ராஜ்யத்தின் எந்த நகரத்திலும், மொசைக்குகள் இல்லாத ஆடம்பரமான வீடுகளே இருக்கவில்லை” என என்க்கிக்ளோப்பேட்யா டெலார்ட்டி ஆன்ட்டிக்கா (பூர்வ கலைகளுக்கான என்ஸைக்ளோப்பீடியா) என்ற பிரசுரம் குறிப்பிடுகிறது.

அசப்பில் ஒரே மாதிரியான மொசைக் ஓவியங்களை தொலைதூர இடங்களில்கூட காணலாம். இதிலிருந்து, கலைஞர்களின் குழுக்கள்​—⁠அல்லது ஒருவேளை மொசைக் வடிவங்கள் உள்ள புத்தகங்கள்​—⁠ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்றிருக்க வேண்டுமென தெரிகிறது. தேவைப்பட்டபோது கலைக்கூடத்தில் உள்படம் தயாரிக்க முன்கூட்டியே ஆர்டர் கொடுக்கப்பட்டது; அப்படி தயாரிக்கப்பட்ட உள்படம் பளிங்கிலோ டெர்ராகோட்டாவிலோ செய்யப்பட்ட தட்டில் வைத்து கட்டுமான இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு பொருத்தப்பட்டது. மற்ற எல்லா மொசைக் ஓவியங்களும் கட்டுமான இடத்திலேயே தயாராயின.

டிசைன்களையும் பார்டர்களையும் சரியாக அமைப்பதற்கு கவனமாக திட்டமிட வேண்டியிருந்தது. மொசைக் ஓவியங்கள் வழுவழுப்பாகவும் சமமாகவும் இருப்பதற்கு, முதலில் அடித்தளத்திற்கும் அதன் பரப்பிற்கும் கவனம் செலுத்தப்பட்டது. பின்பு மிருதுவான காரை (mortar) மெல்லியதாக பரப்பப்பட்டது (இது “பதிக்கும் தளம்” என அழைக்கப்பட்டது); ஒரு சிறிய பகுதியில், ஒருவேளை ஒரு சதுர மீட்டருக்கும் குறைவான பகுதியில் மட்டும் பரப்பப்பட்டது, ஏனென்றால் அது காய்வதற்குள் எல்லா வேலையையும் முடிக்க வேண்டியிருந்தது. அதன்மீது ஒரு அவுட்லைன் வரையப்பட்டது. பிறகு தேவையான அளவுக்கு செதுக்கப்பட்ட டெஸரா கற்கள் அதன் மீது பதிக்கப்பட்டன.

டெஸரா கற்கள் ஒவ்வொன்றாக காரை மீது பதிக்கப்பட்டபோது அந்தக் காரை கற்களுக்கு மத்தியில் சற்று பிதுங்கிக்கொண்டு வந்தது. ஒரு பகுதி முடிந்தவுடன், அதன் அடுத்த பகுதியில் “பதிக்கும் தளம்” செய்யப்பட்டு வேலை ஆரம்பமாகும். இப்படியே பகுதி பகுதியாக முடிக்கப்படும். கைதேர்ந்த மொசைக் கலைஞர், அதிக சிக்கலான பகுதிகளை தானே செய்கையில், எளிதானவற்றை தன் உதவியாளர்கள் செய்யும்படி ஒப்படைத்துவிடுவார்.

கிறிஸ்தவமண்டல மொசைக்குகள்

பொ.ச. நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளில் மொசைக் ஓவியங்கள் இடம்பெற ஆரம்பித்தன. அவை பெரும்பாலும் பைபிள் கதைகளை சித்தரித்ததால் வணக்கத்தாருக்கு அறிவு புகட்டின. அங்கே விட்டுவிட்டுப் பிரகாசித்த சுடர்கள், தங்க மற்றும் வண்ணக் கண்ணாடி டெஸராக்கள்மீது பட்டு பிரதிபலித்ததால் ஒருவித பக்தியான சூழலை ஏற்படுத்தின. “நியோப்ளேட்டோநிஸ தத்துவத்தால் . . . பெருமளவு செல்வாக்கு செலுத்தப்பட்ட அக்கால கருத்தோடு மொசைக் கலை முழுக்க முழுக்க ஒத்துப்போனது. மொசைக் கலையில் ஒருவித செயல்முறையின் விளைவாக சடப்பொருளானது அதன் மங்கிய தன்மையை இழந்து, தூய ஆன்மீகமாக, தூய ஒளியாக, தூய வடிவாக உருமாறுகிறது” என்று ஸ்டோர்யா டெலார்ட்டி எட்டாலியானா (இத்தாலிய கலையின் சரித்திரம்) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. a கிறிஸ்தவத்தை ஸ்தாபித்தவரான இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்த எளிய வணக்கமுறைக்கும் இதற்கும் எப்பேர்ப்பட்ட வித்தியாசம்!​—யோவான் 4:21-24.

பைசாண்டிய சர்ச்சுகளில் மிகச் சிறந்த மொசைக் ஓவியங்கள் காணப்படுகின்றன. வணக்கத்திற்குரிய சில கட்டடங்களின் உட்புற சுவர்களிலும் கூரைகளிலும் சென்டிமீட்டருக்கு சென்டிமீட்டர் மொசைக் ஓவியங்கள்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. இத்தாலியில் ரவென்னாவில் உள்ள ஓவியங்கள், “கிறிஸ்தவ மொசைக் ஓவியங்களின் தலைசிறந்த படைப்புகள்” என விவரிக்கப்பட்டிருக்கின்றன; அவற்றில் தங்க நிறத்தில் பளிச்சிடும் பின்னணி, தெய்வீக ஒளியையும் தேவ இரகசியத்தையும் சித்தரிக்கிறது.

இடைக்காலம் முழுவதும் மேற்கு ஐரோப்பிய சர்ச்சுகளில் மொசைக் ஓவியங்கள் தொடர்ந்து பெருமளவு பயன்படுத்தப்பட்டன; இஸ்லாமிய நாடுகளிலும் அவை கலைத்திறனோடு பயன்படுத்தப்பட்டன. இத்தாலியில் மறுமலர்ச்சி காலத்தின்போது, வெனிஸின் செ. மார்க்ஸ் மற்றும் ரோமின் செ. பீட்டர்ஸ் கத்தீட்ரல்களோடு தொடர்புடைய பட்டறைகள் மொசைக் ஓவியங்களின் உற்பத்தி மையங்களாயின. சுமார் 1775-⁠ல் ரோம கலைஞர்கள், ஏகப்பட்ட நிறங்களில் கிடைத்த, உருக்கிய கண்ணாடி இழைகளை சின்னச் சின்ன டெஸராக்களாக செதுக்குவதற்கு கற்றுக்கொண்டார்கள். ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ஓவியங்களை சிறியளவு (miniature) மொசைக் ஓவியங்களாக தயாரிக்க இது உதவியது.

நவீன செயல்முறைகளும் பயனும்

நவீன மொசைக் கலைஞர்கள் பயன்படுத்தும் முறை, மறைமுக செயல்முறை என அழைக்கப்படுகிறது. அவர்கள் டிசைன் வரையப்பட்ட ஒரு பேப்பர் மீது டெஸராக்களை பின்புறம் தெரியும் விதத்தில் திருப்பி ஒட்டுவார்கள். பிறகு பகுதி பகுதியாக அந்த மொசைக் ஓவியத்தை அது பொருத்தப்பட வேண்டிய இடத்திற்கு எடுத்துச் செல்வார்கள். அங்கே டெஸராக்களின் பின்புறத்தை காரை பூசிய “பதிக்கும் தளத்தில்” அழுத்தி வைப்பார்கள். காரை காய்ந்தவுடன், முன்புறத்திலுள்ள பேப்பரையும் பசையையும் கழுவி எடுத்துவிடுவார்கள். இந்த முறையில் நேரமும் வேலையும் மிச்சம். ஆனால் இடைக்கால மொசைக் ஓவியங்களைப் போல் அவை பளபளக்காமல் மங்கலாக இருக்கின்றன.

இருந்தாலும் 19-வது நூற்றாண்டில் கணக்குவழக்கில்லாத சிட்டி ஹால்களும், கலையரங்கங்களும், சர்ச்சுகளும், அதுபோன்ற கட்டடங்களும் இந்த முறைப்படிதான் அலங்கரிக்கப்பட்டன. கூடுதலாக, மெக்சிகோ முதல் மாஸ்கோ வரையும் இஸ்ரேல் முதல் ஜப்பான் வரையும் உள்ள அருங்காட்சியகங்கள், சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள், ஷாப்பிங் சென்டர்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகிய இடங்களிலும் மொசைக் ஓவியங்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டன. வழுவழுப்பான, ஆனால் பல பரிமாணங்களை உடைய மொசைக் ஓவியங்கள் நவீன கட்டடங்களின் பிரமாண்டமான முகப்புகளை அலங்கரிக்கவும் ஏற்றதாக கருதப்படுகின்றன.

“மொசைக் ஓவியங்கள்தான் மிக அதிக காலம் நிலைத்திருக்கும் சித்திரங்கள். மற்ற சித்திரங்கள் காலத்தால் களையிழந்துவிடுகின்றன, ஆனால் மொசைக் ஓவியங்களோ மேன்மேலும் பொலிவடைகின்றன” என பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலிய கலைஞரும் கலை சரித்திராசிரியருமான ஜோர்ஜோ வசாரி எழுதினார். ஆம், அநேக மொசைக் ஓவியங்களில் பளிச்சிடும் கலைத்திறன் நம் கவனத்தை கவர்கிறது. மொசைக் ஓவியங்கள் உண்மையில் கண்கவர் கல் ஓவியங்கள்! (g03 10/08)

[அடிக்குறிப்பு]

a வேதப்பூர்வமற்ற நியோப்ளேட்டோநிஸ தத்துவங்கள், ஆத்துமா அழியாது போன்ற நம்பிக்கைகளை முன்னேற்றுவித்தன.

[பக்கம் 16-ன் படம்]

எருசலேமின் வரைபடம் (பொ.ச. ஆறாம் நூற்றாண்டு)

[படத்திற்கான நன்றி]

Garo Nalbandian

[பக்கம் 16-ன் படம்]

மகா அலெக்ஸாந்தர் (பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டு)

[படத்திற்கான நன்றி]

Erich Lessing/Art Resource, NY

[பக்கம் 17-ன் படங்கள்]

டூம் ஆஃப் த ராக், எருசலேம் (பொ.ச. 685-691-⁠ல் கட்டப்பட்டது)

[பக்கம் 17-ன் படம்]

“டையோனிஸஸ்,” ஆன்ட்டியோக் (சுமார் பொ.ச. 325)

[படத்திற்கான நன்றி]

Museum of Art, Rhode Island School of Design, by exchange with the Worcester Art Museum, photography by Del Bogart

[பக்கம் 18-ன் படம்]

டெஸராக்கள், வண்ணக் கண்ணாடித் துண்டுகள், கூழாங்கற்கள் ஆகியவை மொசைக் ஓவியங்களில் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன

[பக்கம் 18-ன் படம்]

மாஸசூஸெட்ஸின் லின் ஹெரிட்டேஜ் ஸ்டேட் பார்க்கில் உள்ள மொசைக்

[படத்திற்கான நன்றி]

Kindra Clineff/Index Stock Photography

[பக்கம் 18-ன் படங்கள்]

அன்ட்டானி கௌடி என்பவர் வடிவமைத்த மொசைக்குகள், பார்சிலோனா (1852-1926)

[படத்திற்கான நன்றி]

படம்: Por cortesía de la Fundació Caixa Catalunya