Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆப்பிரிக்க குள்ளர்கள் அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டவை

ஆப்பிரிக்க குள்ளர்கள் அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டவை

ஆப்பிரிக்க குள்ளர்கள் அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டவை

மத்திய ஆப்பிரிக்க குடியரசிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“உங்க ஷூவையெல்லாம் கழட்டி வைச்சுக்குங்க. நாம இப்போ தண்ணீல நடக்கப் போறோம், அதற்குப் பிறகு யானைத் தடத்தை கடப்போம். நான் சொல்றத அப்படியே செய்யுங்க. ஏதாவது கொரில்லா குரங்கை பார்த்தா, குனிஞ்சு போங்க, அதன் கண்ணை உத்துப் பாக்காதீங்க. யானையைப் பார்த்தால், ஆடாம அசையாம அப்படியே நின்னுக்கங்க.”

ரெஸ்டாரன்ட் வரான்டாவில் சொகுசாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறபோது, இதுவரை எங்கள் கண்கள் படம் பிடித்ததையெல்லாம் அப்படியே மனத்திரையில் ‘ஃப்ளாஷ்-பேக்’ செய்து ரசித்துக் கொண்டிருக்கிறோம். சாங்கா நதி எங்களைப் பார்க்க ஓடோடி வருகிறது. அதோ, அக்கரையில் அடர்ந்த காடு! ஆ, எங்கள் விழிகளுக்கு எவ்வளவு அழகாக விருந்து படைக்கிறது. நாங்கள் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தென்முனையில் பயங்கா என்ற இடத்தில் இருக்கிறோம்; இது காமரூனுக்கும் காங்கோ குடியரசுக்கும் இடையே அமைந்துள்ளது.​—⁠பக்கம் 17-⁠ல் உள்ள வரைபடத்தைக் காண்க.

நாங்கள் ட்ஸங்கா-இன்டோக்கி தேசிய பூங்காவின் வரவேற்பறைக்கு வந்து சேர்ந்ததும், எங்களுடைய பயணக் களைப்பெல்லாம் பஞ்சாக பறந்துவிடுகிறது. இந்தப் பூங்கா மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரமாகிய பங்குயிலிருந்து 480 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. குறுகிய பாதையில் பயணம் செய்து இங்கு வந்துசேர கிட்டத்தட்ட 11 மணிநேரம் எடுக்கிறது. சில இடங்களில், ரோட்டுக்குப் பக்கத்திலேயே மூங்கில் மரங்கள் புதற்போல் அடர்ந்து நிற்கின்றன. இன்கோட்டோவில், ஆற்றைக் கடப்பதற்கு நாங்கள் ஒரு படகில் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் படகு ஓர் அசாதாரணமான படகு, ஏனெனில் அதில் எந்த மோட்டார் என்ஜினும் கிடையாது; நீரோட்டத்தின் வேகத்திலேயே இது எங்களை ஆற்றின் மறுகரைக்கு கொண்டுவந்து சேர்க்கிறது. இந்தப் படகு அங்குமிங்கும் அசையாமல் இருப்பதற்கு பெரிய இரும்பு வடக்கயிற்றில் நகரும் ஒரு கப்பியோடு பிணைக்கப்பட்டிருக்கிறது; அதிலுள்ள சில வாலிபர்கள், படகு சரியான நிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

இன்னும் கொஞ்ச தூரம் சென்ற பிறகு பாம்பியோ ஆறு வருகிறது, அங்கே தொங்கு பாலம் ஒன்று இருக்கிறது; இது ரொம்ப வசதியான பாலம். ஏனென்றால் வறட்சி காலங்களிலும் மழைக் காலங்களிலும் ஆற்றின் நீர் மட்டத்திற்கேற்ப மேலே உயர்த்திக் கொள்ளவோ கீழே இறக்கிக் கொள்ளவோ முடியும். இது ஓர் அற்புதமான இடம், வனவிலங்குகளை இயற்கை வாழிடத்திலேயே பார்த்து பரவசமடையலாம். ‘அக்கா’ என்ற ஆப்பிரிக்க குள்ளர்களையும் a சந்திக்கலாம், இவர்கள் இன்னும் பாரம்பரிய வாழ்க்கையே நடத்துகிறார்கள்.

இவர்களை சந்திப்பதற்கு நீங்களும் எங்களோடு வர விருப்பமா? நீங்களும் தாராளமாக எங்களோடு வரலாம். ஆனால் கற்பனையில் மட்டுமே! நமது வழிகாட்டி ஓர் ஆப்பிரிக்க குள்ளர்; அவருடைய பெயர் பன்வா. முதலில் ஆப்பிரிக்க குள்ளர்களில், மூலிகை வைத்தியம் பார்க்கும் ஸெர்மென், வாலேரீ என்ற இரண்டு பெண்மணிகளை சந்திக்க அவர்களுடைய கிராமத்திற்கு நாம் போகலாம். அவர்களும் நம்முடன் வருவார்கள். அவர்கள் மருந்து தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் தாவரங்களை ஒவ்வொன்றாக காட்டும்போது ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாக இருக்கிறது.

குணப்படுத்தும் தாவரங்கள்

காட்டுப் பாதையில் காரில் கொஞ்ச நேரம் பயணம் செய்த பிறகு, வண்டியிலிருந்து இறங்கி காட்டுக்குள் தங்களுடன் நடந்து வரும்படி நமது புதிய தோழர்கள் நம்மை கேட்டுக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பட்டாக் கத்தியால் வெட்டிக்கொண்டு பாதை அமைத்துக்கொண்டே போகிறார்கள், நாமும் முடிந்தளவு அவர்களுடைய வேகத்திற்கு ஈடுகொடுத்துப் போய்க் கொண்டிருக்கிறோம். இப்பொழுது நமக்கு முதலில் ஆச்சரியம் தருவது மோ இன்ஷாம்பூ இன்ஷாம்பூ என்ற தாவரம், இது நீரில் படரக்கூடிய ஒரு தாவரம். வழிகாட்டிகள் 50 சென்டிமீட்டர் நீளத்திற்கு டக்கென்று ஒரு வெட்டு வெட்டி அதை நம்மிடம் தருகிறார்கள், அதிலிருந்து வடியும் நீரை நாம் பருகுகிறோம். அது சுத்தமான நல்ல தண்ணீர், உடனே தாகம் அடங்குகிறது.

இன்னும் கொஞ்சதூரம் தள்ளி போன பிறகு, கொய்யா மர இலையை நமக்கு காட்டுகிறார்கள். இருமலை போக்க ஆப்பிரிக்க குள்ளர்கள் இந்த இலைகளை கொதிக்க வைத்து கஷாயம் தயாரிக்கிறார்கள். ஓஃபூரூமா என்ற மற்றொரு மரத்திலிருந்து வெள்ளை நிறத்தில் பால் வடிகிறது; இமையிணைப் படல அழற்சியை (conjunctivitis) போக்குவதற்கு கண்ணுக்குள் போடும் மிகச் சிறந்த களிம்பாக இதை பயன்படுத்துகிறார்கள். “பாம்புக் கடிக்கு ஏதாவது மருந்து இருக்கிறதா?” என கேட்கிறோம். “ஆமாம், இருக்குது. போலோ இலைகளை [வெப்ப மண்டல கொடியான ஒரு வகை லியானாவுக்கு ‘அக்கா’ குள்ளர்கள் கொடுத்துள்ள பெயர்] இடித்து, பாம்பு கடித்த இடத்தில் போடுவோம்” என வழிகாட்டிகள் சொல்கிறார்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், ஒரு தாவரத்தை பார்க்கிறோம், அவையெல்லாமே மூலிகைகள்தான் என வழிகாட்டிகள் சொல்கிறார்கள். காயங்களை குணப்படுத்தக்கூடிய மருந்துகள் இருக்கின்றன; குடல் ஒட்டுண்ணிகளுக்கு, காது தொற்றுகளுக்கு, பல் சொத்தைகளுக்கு, ஏன் மலட்டுத்தன்மைக்கும்கூட மருந்து இருக்கிறதாம்.

பழங்கால மனிதர் என கருதப்படும் இவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. காட்டுக்குள் அப்படியே போய்க்கொண்டிருக்கும்போது, எங்களுடைய மூலிகை வைத்தியர்கள் இரண்டு பேரும் “ஷாப்பிங்” செய்கிறார்கள்​—⁠காளான்கள், காட்டுக் கீரைகள், வெள்ளைப் பூண்டுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் வேர்கள் இவற்றையெல்லாம் உணவுக்காக சேகரிக்கிறார்கள். சில இலைதழைகள் ரொம்ப டேஸ்டாக இருக்கும் போல தெரிகிறது, ஏனென்றால் அவற்றை பறித்து அப்படியே பச்சையாக சாப்பிடுகிறார்கள்! கடவுளுடைய புதிய உலகில் இயற்கையைப் பற்றி தொடர்ந்து கற்றுக்கொண்டேயிருப்பது எவ்வளவு அற்புதமாக இருக்கும்!​—ஏசாயா 65:17; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1-4.

உப்பை நக்கும் இடத்தில் யானைகள் குழுமுகின்றன

பிற்பகலில், விலங்குகள் உப்பை நக்கும் இடத்தில் காட்டு யானைகளைப் பார்க்க போகிறோம். அங்கு போகும் வழியில்தான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அறிவுரைகளை நமக்கு தருகிறார் வழிகாட்டி. ஆனால் உப்பை நக்கும் இடமென்றால் என்ன? அந்த திறந்தவெளி இடம் பூராவும் தாது உப்புக்கள் காணப்படுவதால் அது சில விலங்குகளுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது. அதனால்தான் காட்டு யானைகளும் எருமைகளும் மான்களும் இராட்சத காட்டுப் பன்றிகளும் மற்ற காட்டு மிருகங்களும் அன்றாடம் சந்திக்கும் ஓர் இடமாக இது இருக்கிறது.

அடர்ந்த காடாக இருப்பதால் இங்கே விலங்குகளைப் பார்ப்பது மகா கஷ்டம். அதனால் உப்பை நக்கும் அந்த இடத்தின் ஒரு ஓரத்தில் பால்கனி போல ஒரு மேடையை பூங்காக்காரர்கள் கட்டியிருக்கிறார்கள். ஆனால் அந்த மேடையின் மீது ஏறிப் பார்க்க வேண்டுமென்றால், நம்முடைய தொடை வரையாக தண்ணீர் நிற்கும் சதுப்பு நிலத்தைக் கடக்க வேண்டும். நாலாபுறத்திலுமிருந்து வரும் சத்தத்தை நமது வழிகாட்டி கூர்ந்து கேட்கிறார், அதோடு நாமெல்லாரும் அவருடன் இருக்கிறோமா என்பதையும் அடிக்கடி ‘செக்’ பண்ணிக் கொள்கிறார். ஏன்? ஏனென்றால் நாம் போய்க்கொண்டிருக்கிற பாதையில் சிலசமயங்களில் யானைகளும் போகுமாம்!

அந்த மேடைக்குப் போனதும், 80-⁠க்கும் அதிகமான யானைகளையும், சில காட்டு எருமைகளையும், மான்களையும் ஆற அமர இருந்து நாம் பார்க்கிறோம். 11 ஆண்டுகளாக யானைகளைப் பற்றி ஆராயும் பெண் விஞ்ஞானி ஒருவரும் அங்கே இருக்கிறார். அவர் சொல்கிறார்: “அந்த யானைகள் ஒவ்வொன்னுக்கும் ஒரு தனி சுபாவம் இருக்குது. அப்படி மூவாயிரம் யானைகளை நான் பட்டியல் போட்டு வெச்சிருக்கேன், அவற்றில் 700-⁠ன் பெயர்கள் எனக்குத் தெரியும்.” வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், முத்திரைகள் தயாரிப்பதற்கு காட்டு யானைகளின் தந்தத்தை மக்கள் அதிகமதிகமாய் விரும்புகிறார்கள். கீழை நாடுகள் சிலவற்றில், ஆவணங்கள் மற்றும் ஓவியங்களின் ஆசிரியரை அடையாளம் காட்டுவதற்கு இம்முத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. b

வலைகளைப் பயன்படுத்தி வேட்டையாடுதல்

அடுத்த நாள் விடியற்காலையில், நாம் பத்து வேட்டைக்காரர்களுடன் சேர்ந்து, வலையைப் பயன்படுத்தி எப்படி வேட்டையாடுகிறார்கள் என்பதை கண்ணாரக் காண்பதற்கு செல்கிறோம். மர வேர்களால் பின்னப்பட்ட வலைகளுடன் ஆண்களும் பெண்களும் வருகிறார்கள். ஒவ்வொரு வலையும் சுமார் 20 மீட்டர் நீளமும் 120 சென்டிமீட்டர் அகலமும் உடையது. காட்டுக்குள் நாம் போய்க்கொண்டே இருக்கும்போது, அந்த வேட்டைக்காரர்கள் வலைகளை விரித்து, அவற்றை ஒன்றோடொன்று பிணைத்து இறுக்கமாக இழுத்துக் கட்டுகிறார்கள். சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு வலை விரிக்கப்படுகிறது. பிறகு நமது வேட்டைக்காரர்கள் இந்த வலைகளைச் சுற்றி ஒரு பெரிய வட்டமாக நின்றுகொண்டு, கிளைகளை உலுக்கிக்கொண்டே முன்னோக்கி வருகிறார்கள்; ஏதாவது விலங்குகள் இருந்தால் அவற்றை வலைக்குள் ஓட்டுவதற்கு சத்தமாக கத்துகிறார்கள். ஆனால் இந்த தடவை ஒரு விலங்கும் இல்லை. இப்பொழுது, வேட்டைக்காரர்கள் வலைகளை அவிழ்த்து, இன்னும் தூரமாக காட்டுக்குள் சென்று மீண்டும் இதே போல செய்கிறார்கள். ஒரு தடவை, இரண்டு தடவை என பத்து தடவை செய்கிறார்கள்.

மத்தியானத்திற்குள் நமக்கு களைப்புதட்டி விடுகிறது. மூன்று நீலநிற டியூக்கர்களை, அதாவது சிறிய மான்களை அவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் இவை எப்படியோ வலைகளுக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு தப்பிவிடுகின்றன. எந்தவொரு விலங்கும் வலையில் மாட்டுவதை பார்த்து ரசிக்க வேண்டுமென்பது நமது விருப்பமல்ல. ஆனால் நவீன கருவிகள் எதுவுமில்லாமல் இந்த மாதிரியான சிறுசிறு கருவிகளைப் பயன்படுத்தி இந்த மக்கள் உயிர் வாழும் நூதனமான வழிகளைப் பற்றி அறிந்துகொள்ளவே நாம் விரும்புகிறோம். ஆகவே, நாம் கொஞ்சம்கூட ஏமாற்றமடையவில்லை, ஏனென்றால் நாம் இப்போது பார்த்தது உண்மையிலேயே அசாதாரணமான ஒன்று.

சாங்கா ஆற்றில் படகுப் பயணம்

சலசலப்பில்லாத தண்ணீரில் ‘ஹாயாக’ மிதந்து செல்வதை யார்தான் விரும்ப மாட்டார்கள்? அதுவும் கிட்டத்தட்ட நீர் மட்டத்திலிருக்கும் ஒரு சிறு படகில் பயணம் செய்வது இன்னும் அதிக ஆனந்தமான ஓர் அனுபவம். பிற்பகலில் நாம் செல்கிற இந்தப் படகுப் பயணம், சாம்பல் நாரைகளையும் பலவர்ண நிறமுடைய பறவைகள் பலவற்றையும் பார்ப்பதற்கு நம்மை அழைத்துப் போகிறது. ஒவ்வொரு பறவையையும் பார்க்க பார்க்க அழகுக்கு மேல் அழகாக இருக்கிறது. சில பறவைகள் ஆற்றங்கரையில் கிளைக்கு கிளை பறந்து திரிகின்றன; இதுவும் நம் கூடவே பயணம் செய்து வருவது போன்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்துகிறது.

சில இடங்களில், மனிதக் குரங்குகள் ஒரு கொடியிலிருந்து மற்றொன்றுக்கு குஷியில் தாவிக்கொண்டிருப்பதை​—⁠ஒருவேளை நம்மை குஷிப்படுத்துவதற்கு தாவிக்கொண்டிருப்பதை​—⁠நாம் பார்க்கிறோம்! அலான் பாட்ரிக் என்ற படகுக்காரர் நேற்று சில நீர்யானைகளைப் பார்த்திருக்கிறார். அதனால் கஷ்டப்பட்டு தண்டு வலித்து இன்னும் நூற்றுக்கணக்கான மீட்டர் தூரம் நம்மை அழைத்துச் செல்கிறார். இன்றைக்கு அவை நம்முடைய கண்ணில் படுமா? நம் கண்ணில் படாமல் போனது வருத்தமே. அவை இடம் மாறிச் சென்றுவிட்டன. ஆனால் நாம் கூடுதலான தூரம் பயணம் செய்து வருவது ஒருவகையில் நல்லதுதான், அதனால்தான் ஆற்றங்கரையில் இருக்கும் அநேக குக்கிராமங்களைப் பார்க்க முடிகிறது. அதோடு, சின்னஞ்சிறுசுகள் பலர் தங்களுடைய படகுகளை திறமையுடன் வலித்து வருவதை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. உண்மையிலேயே, சாங்கா ஆற்று படகுப் பயணத்தை நாம் மறக்கவே மாட்டோம்.

வீடு திரும்புகையில் எங்களுடைய மனதில் பதிந்தவை

பங்குய்க்குத் நாங்கள் திரும்பி வரும்போது, நூற்றுக்கணக்கான காட்சிகளும் நினைவுகளும் எங்கள் மனதில் மீண்டும் ஓடுகின்றன. அநேக விஷயங்கள் எங்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றன, மற்றவையோ மலைக்க வைத்திருக்கின்றன. முக்கியமாக, ஆப்பிரிக்க குள்ளர்களுக்கும் காட்டிற்கும் இடையேயுள்ள ஒற்றுமையை அல்லது ஆப்பிரிக்க குள்ளர்கள் தங்கள் இயற்கை வாழிடத்தில் கிடைக்கக்கூடிய அனைத்திலிருந்தும் பயனடைகிற ஞானத்தை ஒருபோதும் மறக்க மாட்டோம்.

அதோடு, எல்லாவற்றையும் காண போதிய நேரமில்லாத போதிலும், இவ்வுலகிலுள்ள தனித்தன்மைமிக்க ஓர் இடத்தை​—⁠காட்டு யானைகளும் கொரில்லாக்களும், மனிதக் குரங்குகளும் நீர்யானைகளும், மான்களும் சிறுத்தைகளும், பலவர்ண பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் சுற்றித்திரியும் ஓர் இடத்தை​—⁠சுற்றிப் பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. ட்ஸங்கா-சாங்கா சரணாலயம் மற்றும் ட்ஸங்கா-இன்டோக்கி தேசிய பூங்காவின் அடர்ந்த காடுகள் சுமார் 7,000 தாவர வகைகளுக்கும் 55 பாலூட்டி வகைகளுக்கும் புகலிடமாக திகழ்கின்றன என்பதை அறிந்துகொண்டோம்.

ஒப்பற்ற இந்த அனைத்து ஜீவராசிகளும் பைபிளின் இந்த வரிகளை நமக்கு நினைப்பூட்டுகின்றன: ‘யெகோவாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.’ (சங்கீதம் 104:24) மறக்கமுடியாத இந்த அனுபவம் அதே சங்கீதத்தில் காணப்படும் பின்வரும் வார்த்தைகளைப் பின்பற்ற வேண்டுமென்ற நமது தீர்மானத்தை பலப்படுத்தியிருக்கிறது: “நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன். நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்.”​—சங்கீதம் 104:33, 34. (g03 11/08)

[அடிக்குறிப்புகள்]

a பூமத்தியரேகையில் அமைந்துள்ள ஆப்பிரிக்காவில் வாழும் இந்தக் குள்ளர்களின் (Pygmies) சராசரி உயரம் ஐந்தடிக்கும் குறைவே.

b ‘ச்சாப்’ என அழைக்கப்படும் இந்த முத்திரைகள் மற்ற பொருட்களிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன. கூடுதலான தகவலுக்கு, விழித்தெழு! மே 22, 1994, பக்கங்கள் 22-4-ஐக் காண்க.

[பக்கம் 17-ன் தேசப்படங்கள்]

காமரூன்

காங்கோ குடியரசு

மத்திய ஆப்பிரிக்க குடியரசு

பங்குய்

பயங்கா

ட்ஸங்கா-இன்டோக்கி தேசிய பூங்கா

[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]

© Jerry Callow/Panos Pictures