Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இன்னாரின் உடன் பிறப்பாக மற்றவர்கள் என்னைப் பார்க்காதிருக்க என்ன செய்வது?

இன்னாரின் உடன் பிறப்பாக மற்றவர்கள் என்னைப் பார்க்காதிருக்க என்ன செய்வது?

இளைஞர் கேட்கின்றனர் . . .

இன்னாரின் உடன் பிறப்பாக மற்றவர்கள் என்னைப் பார்க்காதிருக்க என்ன செய்வது?

“நான் நானாக இருக்க விரும்பினேன், ஆனால் என் அக்காமார்களின் பெயருக்கு ஏற்ற மாதிரி நடந்துகொள்ள வேண்டுமே என்ற நினைப்பு எப்போதும் என் மனசில் இருந்தது. அவர்களைப் போல என்னால் எதையும் சாதிக்க முடியாது என்றே எனக்கு தோன்றியது.”​⁠க்ளார்.

எதிலும் நம்பர் 1-ஆக திகழும் அண்ணனோ அக்காவோ உங்களுக்கு இருக்கிறார்களா? அவர்களைப் போல இருக்கும்படி பெற்றோர் ஓயாமல் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்களா? ஆம் என்றால், இன்னாரின் உடன் பிறப்பாகத்தான் மற்றவர்கள் எப்போதும் உங்களை பார்ப்பார்கள் என நீங்கள் நினைக்கலாம்; அதாவது, உங்கள் அண்ணனின்/அக்காவின் பெயருக்கும் புகழுக்கும் ஏற்ப எந்தளவுக்கு நீங்கள் நடந்துகொள்கிறீர்கள் என்பதை வைத்தே எப்போதும் மற்றவர்கள் உங்களை எடை போடுவார்கள் என நீங்கள் நினைக்கலாம்.

பாரி a என்பவரின் அண்ணன்கள் மதிப்புமிக்க ஊழியப் பயிற்சி பள்ளியின் b பட்டதாரிகள்; பெருமைப்படுமளவுக்கு கிறிஸ்தவர்களாக நல்ல பெயர் எடுத்திருக்கிறார்கள். “என் அண்ணன்களைப் போல என்னால் ஊழியம் செய்யவே முடியாது, அவர்களைப் போல என்னால் அருமையாக பேச்சுக் கொடுக்கவே முடியாது என்று உணர்ந்தபோதெல்லாம் தன்னம்பிக்கையை இழந்து தவித்தேன். என் அண்ணன்கள் போகும் இடமெல்லாம் நானும் வால் மாதிரி அவர்கள் பின்னாலேயே போய் வந்ததால் எனக்கென்று நண்பர்கள் கிடைக்கவில்லை. அவர்களால்தான் மற்றவர்கள் என்னிடம் அன்பாக நடந்துகொள்கிறார்களோ என்றுகூட நினைக்கத் தோன்றியது” என பாரி ஒப்புக்கொள்கிறார்.

எப்போதும் மற்றவர்களின் பாராட்டைப் பெறும் அண்ணன்/அக்கா உங்களுக்கு இருந்தால் அவர்களைப் பார்த்து பொறாமைப்படுவது இயல்புதான். பைபிள் காலங்களில், தன் சகோதரர்கள் எல்லாரையும்விட யோசேப்பு சிறந்து விளங்கினார். இதனால் அவரது சகோதரர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? “அவரை வெறுத்தனர். அவர்களால் அவரோடு பாசத்துடன் பேச இயலவில்லை.” (ஆதியாகமம் 37:1-4, பொது மொழிபெயர்ப்பு) யோசேப்பை பொறுத்தவரை அவர் அடக்கமானவராக இருந்தார். ஆனால் உங்கள் அண்ணனோ அக்காவோ தங்கள் சாதனைகளைப் பற்றியே எப்போதும் உங்களிடம் பேசிப் பேசி பொறாமைப்பட வைக்கலாம், எரிச்சலையும் கிளப்பலாம்.

இப்படியெல்லாம் நடக்கையில் சில இளைஞர்கள், கலகம் செய்து தங்கள் வெறுப்பை வெளிக்காட்டலாம்; அதற்காக அவர்கள் வேண்டுமென்றே பள்ளியில் குறைந்த மார்க் எடுக்கலாம், கிறிஸ்தவ காரியங்களில் ஒழுங்காக பங்குகொள்ளாதிருக்கலாம், அல்லது அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரியங்களில் ஈடுபடலாம். அண்ணனை/அக்காவைப் போல் தங்களால் சிறப்பாக செயல்பட முடியாதபோது அதற்காக முயற்சி செய்வதே வீண் என்றும் நினைக்கலாம். ஆனால் கலகத்தனம், போகப் போக உங்களைப் புண்படுத்துமே தவிர எந்த நன்மையும் செய்யாது என்பதை மனதில் கொள்ளுங்கள். அப்படியானால், உங்களைக் குறித்து நீங்களே பெருமைப்பட்டுக் கொள்ளும் விதத்தில், இன்னாரின் உடன் பிறப்பாக மற்றவர்கள் உங்களைப் பார்க்காதிருக்க நீங்கள் என்ன செய்யலாம்?

அவர்களைப் பற்றி மட்டுக்குமீறி எண்ணாதிருங்கள்

எப்போதும் உங்கள் அண்ணன்/அக்கா மீதே எல்லாருடைய கண்ணும் இருப்பதால் அவர் பரிபூரணமானவர், அவரைப் போல ஒருநாளும் ஆக முடியாது என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையிலேயே அது நிஜமா? “எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களா[னோம்]” என பைபிள் தெள்ளத் தெளிவாக சொல்கிறது.​—ரோமர் 3:⁠23.

ஆம், உங்கள் அண்ணனுக்கு/அக்காவுக்கு எத்தகைய திறமைகள் இருந்தாலும் அவர்களும் நம்மைப் போலவே ‘குறைபாடுள்ள மனிதர்கள்தான்.’ (அப்போஸ்தலர் 14:15, NW) அவர்களைப் பற்றிய மட்டுக்குமீறிய கண்ணோட்டமோ, அவர்களை ‘தெய்வப் பிறவிகளாக’ கருதுவதோ அவசியமில்லை. இயேசு கிறிஸ்துவைத் தவிர தலைசிறந்த உதாரணப் புருஷராக இருந்தவர் வேறு யாருமே இல்லை.​—⁠1 பேதுரு 2:21.

அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்!

அடுத்ததாக, அவர்களிடமிருந்து எதையாவது கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறதா என பாருங்கள். உதாரணத்திற்கு, இயேசு கிறிஸ்துவின் சகோதர சகோதரிகளை எடுத்துக்கொள்ளுங்கள். (மத்தேயு 13:55, 56) தங்கள் பரிபூரண சகோதரரிடமிருந்து அவர்கள் என்னவெல்லாம் கற்றுக்கொண்டிருக்கலாம் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள்! இருப்பினும், ‘அவருடைய சகோதரர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.’ (யோவான் 7:5) அவர்களுடைய பெருமையும் பொறாமையும் அவர்மீது விசுவாசம் வைப்பதற்கு முட்டுக்கட்டையாக இருந்திருக்கலாம். ஆனால், இயேசுவின் ஆவிக்குரிய சகோதரர்களான சீஷர்களோ “என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்” என்ற அவருடைய மனமார்ந்த அழைப்புக்குச் செவிசாய்த்தார்கள். (மத்தேயு 11:29) இறுதியில் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகுதான் அவருடைய சொந்த சகோதரர்கள் அதை புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள். (அப்போஸ்தலர் 1:14) அதற்கு முன்புவரை, தங்கள் அருமை சகோதரரிடமிருந்து கற்றுக்கொள்வதற்குக் கிடைத்த பொன்னான வாய்ப்புகளைத் தவறவிட்டு விட்டிருந்தார்கள்.

அதே போன்ற தவறை காயீனும் செய்தான். அவனுடைய சகோதரனாகிய ஆபேல் கடவுளுடைய சிறந்த ஊழியராக இருந்தார். ‘ஆபேலையும் அவர் காணிக்கையையும் யெகோவா அங்கீகரித்தார்’ என பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 4:4) எனினும் ஏதோ சில காரணங்களால், ‘காயீனையும் அவன் காணிக்கையையும் கடவுள் அங்கீகரிக்கவில்லை.’ காயீன் கொஞ்சம் தாழ்மையை வெளிக்காட்டி, தன் சகோதரனிடமிருந்து கற்றுக் கொண்டிருந்திருக்கலாம். மாறாக, ‘அவனுக்கு மிகவும் எரிச்சல்தான் உண்டானது,’ அந்த எரிச்சல் ஆபேலைக் கொலை செய்வதில் கொண்டுபோய் விட்டது.​—⁠ஆதியாகமம் 4:5-8.

உங்கள் அண்ணனிடம்/அக்காவிடம் நீங்கள் அந்தளவுக்கு ஒருபோதும் கோபப்பட மாட்டீர்கள்தான். ஆனால் பெருமைக்கும் பொறாமைக்கும் இடங்கொடுத்தால் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் அருமையான வாய்ப்புகளை நீங்களும் தவறவிட்டு விடக்கூடும். உங்கள் அண்ணன்/அக்கா கணக்கில் புலியா, சரித்திர பாடத்தில் கரைகண்டவரா, உங்களுக்குப் பிடித்தமான ஒரு விளையாட்டில் கெட்டிக்காரரா, பைபிள் விஷயங்களை கரைத்துக் குடித்தவரா, அல்லது பிரமாதமாக பேச்சு கொடுப்பவரா? அப்படியானால் உங்கள் மனதில் பொறாமை தலைதூக்க அனுமதிக்கவே அனுமதிக்காதீர்கள்! மொத்தத்தில் ‘பொறாமை என்பது ஒரு எலும்புருக்கி,’ அது உங்களுக்குத் தீங்குதான் விளைவிக்கும். (நீதிமொழிகள் 14:30; 27:4) கோபப்படுவதற்கு பதிலாக, உங்கள் அண்ணனிடமிருந்து/அக்காவிடமிருந்து நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள முயலுங்கள். உங்களிடமில்லாத சில திறமைகள் அவரிடமிருப்பதை ஒப்புக்கொள்ளுங்கள். அவர் காரியங்களை செய்யும் விதத்தைக் கவனியுங்கள்; அவரிடம் உதவி கேட்பது இன்னும் நல்லது.

ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பாரி தன் அண்ணன்களின் நல்ல முன்மாதிரியிலிருந்து பயனடைந்தார். “சபையிலும்சரி வெளி ஊழியத்திலும்சரி, என் அண்ணன்கள் மனமுவந்து மற்றவர்களுக்கு உதவுவதால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதை கவனித்தேன். எனவே நானும் அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றத் தீர்மானித்தேன், ராஜ்ய மன்ற கட்டுமான பணியிலும், பெத்தேல் வளாக கட்டுமான பணியிலும் பங்குகொண்டேன். அந்த அனுபவம் எனக்குத் தன்னம்பிக்கை அளித்திருக்கிறது, அதுமட்டுமல்ல, யெகோவாவுடன் உள்ள உறவில் வளருவதற்கும் உதவியிருக்கிறது” என்கிறார் அவர்.

உங்கள் பலத்தை கண்டுகொள்ளுங்கள்

அண்ணனின்/அக்காவின் நல்ல குணங்களைப் பின்பற்றுகையில், உங்களுடைய தனித்தன்மையை இழந்துவிட நேரிடுமோ என ஒருவேளை நீங்கள் பயப்படலாம். ஆனால் அப்படி நேரிட வேண்டிய அவசியம் இல்லை. ‘என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்’ என அப்போஸ்தலன் பவுல் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். (1 கொரிந்தியர் 4:16) அவர்கள் தங்கள் தனித்தன்மையை இழந்துவிட வேண்டுமென பவுல் விரும்பினார் என்று இது அர்த்தப்படுத்துமா? இல்லவே இல்லை. தனித்தன்மையுடன் திகழ ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் அண்ணனை/அக்காவைப் போல் நீங்கள் கணிதத்தில் புலியாக இல்லை என்பதற்காக உங்களிடம் ஏதோ குறை இருக்கிறது என்று அர்த்தமல்ல. நீங்கள் வித்தியாசமானவர், அவ்வளவுதான்.

“அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப் பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்” என்ற நடைமுறையான ஆலோசனையை பவுல் கொடுக்கிறார். (கலாத்தியர் 6:4) உங்களிடமுள்ள பிரத்தியேக திறமைகளை முன்னேற்றுவிக்க நீங்கள் ஏன் உழைக்கக்கூடாது? வேறொரு மொழியைப் பேச, ஒரு இசைக் கருவியை இசைக்க, அல்லது கம்ப்யூட்டரைப் பயன்படுத்த கற்றுக்கொள்வது உங்கள் சுயமரியாதையை அதிகரிக்கும், அத்துடன் மதிப்புமிக்க திறமைகளைப் பெற்றுக்கொள்ளவும் உதவும். நூறு சதம் கரெக்டாக செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைத்து கவலைப்படாதீர்கள்! எதையும் முற்றும் முழுமையாகவும், மனசாட்சிக்குக் கட்டுப்பட்டும், முறையாகவும் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். (நீதிமொழிகள் 22:29) இயல்பாகவே சில காரியங்களை செய்ய உங்களுக்கு திறமையில்லாமல் இருக்கலாம், ஆனால் ‘ஊக்கமுடையோரின் கை ஆட்சி செய்யும்’ என நீதிமொழிகள் 12:24 (பொ.மொ.) சொல்கிறது.

எனினும், ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு உதவும் திறமைகளை வளர்த்துக்கொள்ளவே முக்கியமாக நீங்கள் விரும்பலாம். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் எந்த திறமையையும்விட ஆவிக்குரிய திறமைகள் நித்தியத்திற்கும் மதிப்புள்ளவை. உதாரணத்துக்கு, ஏசா, யாக்கோபு என்ற இரட்டையரை எடுத்துக்கொள்ளுங்கள். “ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்த”தால் அவருடைய அப்பா அவரை பெரிதும் பாராட்டினார். ஆரம்பத்தில் அவருடைய சகோதரனாகிய யாக்கோபு “குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்த”தால் அவரை அந்தளவுக்கு பொருட்படுத்தாமல் இருந்திருக்கலாம். (ஆதியாகமம் 25:27) ஏசா ஆவிக்குரிய தன்மையை வளர்த்துக்கொள்ள தவறியதால் ஆசீர்வாதங்களை இழந்தார். ஆனால், யாக்கோபு ஆவிக்குரிய காரியங்களை அதிகமாக விரும்பியதால் அவரை யெகோவா அபரிமிதமாக ஆசீர்வதித்தார். (ஆதியாகமம் 27:28, 29; எபிரெயர் 12:16, 17) இதில் நமக்கென்ன பாடமுள்ளது? உங்கள் ஆவிக்குரிய தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள், ‘உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்,’ அப்போது ‘நீங்கள் அடைந்துள்ள வளர்ச்சி எல்லாருக்கும் தெளிவாகத் தெரியும்.’​—⁠மத்தேயு 5:16; 1 தீமோத்தேயு 4:15, பொ.மொ.

“இன்னாரின் தங்கையென மற்றவர்கள் என்னைப் பார்த்தால் பார்க்கட்டும் என சும்மா இருந்தேன். ஆனால் அன்பு காட்டுவதில் ‘விரிவடையுங்கள்’ என்ற பைபிள் புத்திமதியை பின்பற்ற பிற்பாடு தீர்மானித்தேன். சபையிலுள்ள வெவ்வேறு நபர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்தேன், சபையில் தேவையிலுள்ளவர்களுக்கு நடைமுறை உதவி அளிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடினேன். பல்வேறு வயதிலிருந்த சகோதர சகோதரிகளை எங்கள் வீட்டிற்கு வரவழைத்து, அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தேன். இப்போது எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். முன்பைவிட இப்போது அதிக தன்னம்பிக்கையோடு இருக்கிறேன்” என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட க்ளார் சொல்கிறாள்.​—⁠2 கொரிந்தியர் 6:13, NW.

உங்கள் அண்ணனைப் போலவே அல்லது உங்கள் அக்காவைப் போலவே இருக்கும்படி உங்கள் பெற்றோர் மறந்துபோய் அவ்வப்போது உங்களுக்கு புத்தி சொல்லலாம். ஆனால் அவர்கள் உங்கள் நன்மைக்குத்தான் அப்படி சொல்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டால் அந்தளவுக்கு மனம் புண்பட மாட்டீர்கள். (நீதிமொழிகள் 19:11) அப்படி அவர்கள் ஒப்பிட்டுப் பேசுவது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் அதை அவர்களிடம் கண்ணியமாக எடுத்துச் சொல்லுங்கள். ஒருவேளை அப்போது அவர்கள் உங்கள் மீதுள்ள அக்கறையை வேறு விதத்தில் வெளிக்காட்ட முயற்சிப்பார்கள்.

யெகோவா தேவனை நீங்கள் சேவிக்கையில் அவர் உங்களைக் கவனிக்கிறார் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். (1 கொரிந்தியர் 8:3) “யெகோவாவை எவ்வளவு அதிகமாக சேவிக்கிறேனோ அவ்வளவு அதிகமாக சந்தோஷமாய் இருக்க முடியுமென்பதை ருசித்திருக்கிறேன். இப்போதெல்லாம் என்னை தனிநபராகத்தான் மற்றவர்கள் பார்க்கிறார்கள், என் அண்ணன்களைப் பாராட்டுவதைப் போலவே என்னையும் பாராட்டுகிறார்கள்” என சொல்லி முடிக்கிறார் பாரி. (g03 11/22)

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b யெகோவாவின் சாட்சிகள் தங்களுக்கென்று நடத்தும் பள்ளி.

[பக்கம் 27-ன் படம்]

எல்லாருடைய கண்ணும் எப்போதும் உங்கள் உடன் பிறந்தார் மீதே உள்ளதா?

[பக்கம் 28-ன் படம்]

உங்களுக்குள் இருக்கும் திறமைகளையும் ஆர்வங்களையும் அறியுங்கள்

[பக்கம் 28-ன் படம்]

ஆவிக்குரிய திறமைகளை வளர்த்துக்கொள்வதன் மூலம் ‘உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்’