Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் அன்பானவர்கள் வேறு மதத்தினராக இருக்கையில்

உங்கள் அன்பானவர்கள் வேறு மதத்தினராக இருக்கையில்

பைபிளின் கருத்து

உங்கள் அன்பானவர்கள் வேறு மதத்தினராக இருக்கையில்

இவ்வுலகில் 10,000-⁠க்கும் அதிகமான மதங்களும் மதப்பிரிவுகளும் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு காட்டுகிறது. ஒரு நாட்டில், வயதுவந்தவர்களில் சுமார் 16 சதவீதத்தினர் ஏதோவொரு காலக்கட்டத்தில் ஒரு மதத்தை விட்டு வேறு மதத்திற்கு மாறியுள்ளனர். அப்படியானால், உறவினர்களுக்குள்ளும் நண்பர்களுக்குள்ளும் மத பேதங்கள் ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. இதனால் சிலசமயங்களில் உறவுகளில் பிணக்கம் ஏற்படுகிறது. ஆகவே கேள்வி என்னவென்றால், வேறு மதத்தினராக இருக்கும் தங்கள் அன்பானவர்களிடம் கிறிஸ்தவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

ஒரு விசேஷித்த உறவு

உதாரணத்திற்கு, பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள விசேஷித்த உறவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக” என்று யாத்திராகமம் 20:12-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள கட்டளையில் எந்த வயது வரம்பும் கொடுக்கப்படவில்லை என்பதை கவனியுங்கள். சொல்லப்போனால், இந்தக் கட்டளையைப் பற்றி மத்தேயு 15:4-6-⁠ல் இயேசு சொன்ன விஷயத்தை வைத்துப் பார்க்கும்போது, வயதுவந்த பிள்ளைகள் பெற்றோருக்கு கொடுக்கும் கனத்தைப் பற்றியே அவர் அங்கு பேசிக்கொண்டிருந்தார் என்பது தெளிவாக தெரிகிறது.

பைபிளில் நீதிமொழிகள் என்ற புத்தகம், பெற்றோரை அவமதிப்பதைக் கண்டித்துப் பேசுகிறது. “உன் தாய் வயதாகிவிட்டதால் அவளை இழிவாக எண்ணாதே” என நீதிமொழிகள் 23:22 (NW) அறிவுரை கூறுகிறது. “தந்தையைக் கொடுமைப்படுத்தித் தாயைத் துரத்திவிடும் மகன், வெட்கக்கேட்டையும் இழிவையும் வருவித்துக்கொள்வான்” என நீதிமொழிகள் 19:26 (பொது மொழிபெயர்ப்பு) நேரடியாக எச்சரிக்கிறது.

நம் பெற்றோரை ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது என்பதையே இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. நம்முடைய மதத்தை நம் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக அவர்களுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவு அத்தோடு துண்டிக்கப்பட்டு விட்டதென்று அர்த்தமாகிவிடாது. இந்த பைபிள் நியமங்கள் நமது உறவினர்களின் விஷயத்திலும், மணத்துணையின் விஷயத்திலும் பொருந்துகின்றன. தார்மீக அடிப்படையிலும் பைபிள் அடிப்படையிலும் கிறிஸ்தவர்கள் தங்கள் உறவினர்களை நேசிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாகிறது.

நியாயத்தன்மை மிக முக்கியம்

கெட்ட சகவாசங்களைக் குறித்து பைபிள் எச்சரிப்பது உண்மைதான். நெருங்கிய சொந்தங்கள்கூட ஒருவேளை கெட்ட சகவாசமாக அமைந்து விடலாம். (1 கொரிந்தியர் 15:33, NW) முற்காலத்தில் கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் பலர், தங்களுடைய பெற்றோர் உடன்படாத போதிலும்கூட சரியான காரியங்களை ஆதரிப்பதில் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருந்தனர். கோராகுவின் குமாரர்களுடைய விஷயத்தில் இது நூற்றுக்கு நூறு உண்மையாக இருந்தது. (எண்ணாகமம் 16:32, 33; 26:10, 11) ஆம், மற்றவர்களை பிரியப்படுத்துவதற்காக, ஏன், உறவினர்களை பிரியப்படுத்துவதற்காகவும்கூட உண்மை கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது.​—அப்போஸ்தலர் 5:29.

சில சூழ்நிலைகளில், பெற்றோரோ அன்பான மற்றவர்களோ ஒரு கிறிஸ்தவரின் நம்பிக்கைகளை எதிர்த்து கடுமையாக சண்டை போடலாம். சிலர் மெய் கிறிஸ்தவத்துக்கு எதிரிகளாகவும் ஆகிவிடலாம். அத்தகைய சூழ்நிலைகளில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய தன்மையைக் காத்துக்கொள்வதற்கு நியாயமான படிகளை எடுக்க வேண்டும். “ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல” என இயேசு சரியாகவே சொன்னார்.​—மத்தேயு 10:36, 37.

என்றாலும், பெரும்பாலான சூழ்நிலைகளில், கிறிஸ்தவர்கள் தங்கள் அன்பானவர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகளை சந்திப்பதில்லை. பைபிள் போதனைகளை அந்த அன்பானவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை, அவ்வளவுதான். அவிசுவாசிகளிடத்தில் ‘சாந்தமாகவும்’ ‘ஆழ்ந்த மரியாதையோடும்’ நடந்துகொள்ள வேண்டுமென பரிசுத்த வேதாகமம் கிறிஸ்துவின் சீஷர்களை ஊக்குவிக்கிறது. (2 தீமோத்தேயு 2:26; 1 பேதுரு 3:15, NW) ‘கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை பண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனாக [“கனிவுள்ளவனாக,” NW] இருக்க வேண்டும்’ என பைபிள் சரியாகவே அறிவுரை கூறுகிறது. (2 தீமோத்தேயு 2:24) “ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும்” கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல்கூட ஆலோசனை வழங்கினார்.​—தீத்து 3:2.

உறவை முறிக்காமல் அன்பு காட்டுங்கள்

கிறிஸ்தவர்களுக்கு 1 பேதுரு 2:12-⁠ல் இந்த ஊக்கமூட்டுதல் கொடுக்கப்படுகிறது: “புறஜாதிகள் [அவிசுவாசிகள்] . . . உங்கள் நற்கிரியைகளைக் கண்டு . . . தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்.” பைபிள் நமது வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது என்பதை நமது நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத அன்பானவர்கள் அநேக சமயங்களில் கண்கூடாகப் பார்க்கிறார்கள். இதனால் பைபிள் சத்தியத்திற்கு அக்கறை காட்டாதவர்கள் அல்லது அதை எதிர்த்தவர்கள் பலர் மனம் மாறியிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தங்கள் மணத்துணையின் அல்லது பிள்ளையின் நன்னடத்தையை பல ஆண்டுகள் கூர்ந்து கவனித்த பிறகே அதற்கு காரணம் என்ன என்பதை ஆராய சிலர் தூண்டப்படலாம். நம்முடைய உறவினர்களை ஒதுக்கித்தள்ளுவது பைபிள் சத்தியங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போவதற்கு காரணமாகி விடாதபடிக்கு பார்த்துக் கொள்வோமாக.

வாஸ்தவம்தான், சூழ்நிலைகள் மாறுபடுவதால் யெகோவாவின் சாட்சிகள் சிலர் தங்கள் பெற்றோரை விட்டு வெகு தொலைவில் வாழ்கிறார்கள். நினைத்தபோதெல்லாம் பெற்றோரை போய் பார்ப்பது அவர்களுக்கு முடியாத காரியமாக இருக்கலாம். ஆனால் கடிதம் எழுதும்போது, போன் செய்யும்போது அல்லது வேறு ஏதாவது வழிகளில் தவறாமல் அவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் மீது நமக்குள்ள பாசத்தை உணர்ந்துகொள்வார்கள். உண்மை கிறிஸ்தவர்களாக இல்லாத அநேகர் தங்களுடைய மத நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத தங்கள் பெற்றோரையும் உறவினர்களையும் நேசித்து, அவர்களோடு தவறாமல் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். அப்படியிருக்கும்போது கிறிஸ்தவ சாட்சிகள் அவ்விஷயத்தில் குறைவுபட்டவர்களாக இருக்க வேண்டுமா என்ன? (g03 11/08)

[பக்கம் 24-ன் படம்]

அன்பானவர்களிடம் எப்போதும் தொடர்பு வைத்துக்கொள்ளும்போது அவர்களை நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதை உணர்ந்துகொள்வார்கள்