உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
கழிவுப் பொருட்களால் ஓடும் கார்
கழிவுகள் சிதைவுறும்போது கிடைக்கும் வாயுவால் ஓடும் கார் பின்லாந்தை சேர்ந்த ஒரு பண்ணையாரிடம் இருக்கிறது. “அந்தக் காரின் சொந்தக்காரருடைய பண்ணையிலுள்ள பயோகேஸ் ரியாக்டரில் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுகின்றன; அப்படி பெறப்படும் பயோகேஸ் இந்தக் காருக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது” என பின்லாந்தில் வெளியாகும் பத்திரிகையான சுயோமென் லூவான்டோ அறிக்கை செய்கிறது. இன்று வாகனங்களில் உபயோகிக்கப்படும் எரிபொருள்களில் பயோகேஸ்தான் மாசு ஏற்படுத்தாத சிறந்த ஒன்று; குப்பைக்கூளங்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் இதை தயாரிக்க முடிவதால் இது சுற்றுச்சூழலுக்கு தீங்கே விளைவிப்பதில்லை. சொல்லப்போனால், பயோகேஸ் தயாரிப்பில் கிடைக்கும் ஓர் உப பொருள் விவசாயத்திற்குப் பெரிதும் பயனுள்ள உரமாகிறது. இயற்கை வாயுவில் ஓடும்படி ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட உலகெங்குமுள்ள சுமார் 20 லட்சம் கார்கள் பயோகேஸிலும் ஓடும். சுவீடனில் அநேக நகர பேருந்துகள் பயோகேஸில் ஓடுகின்றன, அங்குள்ள சில பெட்ரோல் பங்க்குகள் பிற எரிபொருட்களுடன் தற்போது பயோகேஸையும் விநியோகிக்கின்றன. அதன் பயன்களைச் சொல்லுகையில், “பயோகேஸின் விலை கல்லெண்ணெயைவிட அல்லது டீசலைவிட மிகக் குறைவானது” என அக்கட்டுரை இறுதியில் குறிப்பிடுகிறது. (g03 11/08)
பூர்வ எகிப்தியரின் பற்பசை ஃபார்முலா
“உலகிலேயே மிகப் பழமையான பற்பசை ஃபார்முலா வியன்னா நாட்டு அருங்காட்சியகத்தின் அடித்தளத்தில் தூசி படிந்த சிறிய ஒரு நாணல் சுவடியில் கண்டுபிடிக்கப்பட்டது; இது 1873-ல் கோல்கேட் பற்பசை முதன்முதலாக விற்பனைக்கு வருவதற்கு 1,500 வருடங்களுக்கும் முன்பு புழக்கத்தில் இருந்தது” என எலெக்ட்ரானிக் டெலிகிராஃப் அறிக்கை செய்கிறது. பூர்வகால எகிப்திய எழுத்தாளர் ஒருவர், “‘வெள்ளைவெளேர் என்ற ஆரோக்கியமான பற்களுக்கான பொடி’ என தான் குறிப்பிட்ட பற்பசையைப் பற்றி கவனமாக விவரித்திருக்கிறார்; கரிப்பொடியையும் ஒரு வகை மரப்பிசினையும் தண்ணீரில் கலந்து உருவாக்கிய மங்கலான கருப்பு மையை பயன்படுத்தி அதை எழுதியிருக்கிறார். பற்பசையை உமிழ் நீருடன் கலக்குகையில் அது ‘சுத்தமான பற்பசையாக’ மாறுகிறது.” அதில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை பொ.ச. நான்காம் நூற்றாண்டை சேர்ந்த ஆவணம் பட்டியலிடுகையில், பாறை உப்பு, புதினா, உலர்ந்த ஐரிஷ் மலர், மிளகு ஆகியவை பொடிக்கப்பட்டு, கலக்கப்பட்டதாக சொல்கிறது. வியன்னாவில் நடைபெற்ற பல் மருத்துவ மாநாட்டில் இந்தக் கண்டுபிடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “இத்தகைய தரமான பற்பசை ஃபார்முலா பண்டைய காலத்தில் இருந்ததைக் குறித்து பல் மருத்துவர்கள் யாரும் அறியாதிருந்தார்கள்” என்றார் டாக்டர் ஹைன்ட்ஸ் நாய்மன்; இவர் இந்த ஃபார்முலாவைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டு தன் “வாய் புத்துணர்ச்சியுடனும் சுத்தமாகவும் இருப்பதாக” சொன்னார். “ஐரிஷ் மலரின் பயனுள்ள தன்மைகளை சமீபத்தில் பல் மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்; அது ஈறுகளில் வரும் நோயைக் குணப்படுத்த பயனுள்ளதாக இருப்பதை அறிந்திருக்கிறார்கள், அது மீண்டும் புழக்கத்திற்கு வந்துள்ளது” என அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. (g03 11/22)
வீடியோ கேம்ஸால் வரும் உடல்நலக் கேடுகள்
தங்கள் பிள்ளைகளின் உடல்நலத்துக்கு வீடியோ கேம்ஸுகள் எந்தளவுக்குக் கேடுவிளைவிக்கின்றன என்பதை பெற்றோர் உணராதிருக்கலாம் என மெக்சிகோவில் வெளியாகும் எல் யூனிவர்சால் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. சதா வீடியோ கேம்ஸும் கையுமாக இருக்கும் பிள்ளைகளில் 40 சதவீதத்தினருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் என மெக்சிகன் சொஸைட்டி ஆஃப் கார்டியோலஜியின் தலைவரான ஆன்டோன்யோ கான்சால்லஸ் எர்மோசியோ சொன்னார். ஏன்? அப்பிள்ளைகள் உடற்பயிற்சி செய்யாதது ஒரு காரணம்; மற்றொரு காரணம், தாக்குதல்கள், நேரடியான மோதல், மற்ற சண்டைகள் என ஆபத்தானவையாக கருதப்படும் விளையாட்டுகளில் பெருமளவு ஈடுபடுவதால் அவர்கள் அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். “இதனால் மெக்சிகோவில் ஏற்படும் மரணங்களுக்கு முக்கிய காரணமான இருதய நோயின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அந்த நிபுணர் எச்சரித்தார்” என அந்த செய்தித்தாள் சொன்னது. (g03 11/22)
பூமியில் பாதிக்குப் பாதி காடுதான்
“நூறு ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அச்சுறுத்துதல் அதிகம் அதிகமாகிக்கொண்டே வருகிறபோதிலும் பூமியில் 46 சதவீத நிலப்பகுதி மனிதனின் கை படாத காடாகவே உள்ளது” என உவர்ல்ட் வாட்ச் அறிக்கை செய்கிறது. உலகெங்குமுள்ள 200 விஞ்ஞானிகள் நடத்திய ஓர் ஆய்வில், “[6.8 கோடி சதுர கிலோமீட்டர்] நிலப்பகுதி இயற்கை மணம் மாறாத காடாய் இருப்பதாக கருதப்படுகிறது; அதாவது அங்கு இயற்கையாக வளர்ந்த தாவரங்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இன்றுவரை அழியாமல் உள்ளது, புறநகர் பகுதிகளுக்கு வெளியே ஒரு [சதுர கிலோமீட்டருக்கு] [5] பேருக்கும் குறைவானவர்களே வசிக்கிறார்கள்; காட்டுப் பகுதி குறைந்தது [10,000 சதுர கிலோமீட்டர்] பரப்பளவு உள்ள பகுதிகளாகவே பிரிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.” இந்த 37 காட்டுப் பகுதிகளில், மொத்த உலக ஜனத்தொகையில் 2.4 சதவீதத்தினர் மட்டுமே, அதாவது நகர் பகுதிகளைச் சேர்க்காமல் 14.4 கோடி ஜனங்கள் மட்டுமே வசிக்கிறார்கள். எனினும், இந்தக் காடுகள் ஆஸ்திரேலியா, ஐக்கிய மாகாணங்கள், கனடா, சீனா, பிரேசில், ரஷ்யா ஆகிய ஆறு பெரிய தேசங்களின் மொத்த நிலப்பரப்பிற்கு சமமாக இருக்கின்றன. என்றாலும், “இந்தக் காட்டு பகுதிகளில், மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் அண்டார்டிக் ஐஸ் அல்லது ஆர்ட்டிக் தூந்திரப் பிரதேசமாக இருக்கிறது; மேலும், அந்த 37 பகுதிகளில் 5 பகுதிகள் மட்டுமே இயற்கைவளம் கெடாமல் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய இடங்களாக உள்ளன; அதாவது அவை ஒவ்வொன்றிலும் அவ்விடத்திற்குரிய 1,500-க்கும் அதிகமான இயற்கை தாவர வகைகளும் பல்வேறுபட்ட ஏராளமான உயிரினங்களும் உள்ளன” என்று உவர்ல்ட் வாட்ச் குறிப்பிடுகிறது. (g03 11/22)