எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
ஷூக்கள் “உங்கள் ‘ஷூ’ செளகரியமாக இருக்கிறதா?” (ஏப்ரல் 8, 2003) என்ற கட்டுரைக்கு நன்றி. பாதத்தில் ஏற்பட்ட உபாதைகளால் வருடக்கணக்காக அவதிப்பட்டேன்; என்னுடைய கட்டைவிரலில் நிறைய முறை சின்னச் சின்ன ஆப்பரேஷன்கள் செய்யப்பட்டன. கடைசியாக, என்னுடைய ஒரு பாதம் மற்றொன்றைவிட கொஞ்சம் பெரிதாக இருந்ததை கண்டுபிடித்தேன். பல வருடங்களாக தவறான சைஸ் ஷூவைப் போட்டதுதான் வினையாகிவிட்டது; இப்போது ஆர்த்தோபிடிக் ஷூ போட வேண்டிய நிலை எனக்கு.
ஆர். ஜி., ஐக்கிய மாகாணங்கள் (g03 11/08)
இந்தக் கட்டுரை ரொம்ப நன்றாக இருந்தது. ஆனால், நம் பாதங்கள் பொதுவாக பிற்பகல் வேளைகளில் சற்று வீங்கிப்போகும் என்பதால் ஷூக்களை வாங்குவதற்கு மிகச் சிறந்த சமயம் பிற்பகலே என்பதை நீங்கள் குறிப்பிடத் தவறியிருந்தீர்கள்.
ஏ. டபிள்யு., கனடா (g03 11/08)
“விழித்தெழு!” பதிலளிக்கிறது: உங்கள் குறிப்புக்கு நன்றி. தயவுசெய்து, ஆகஸ்ட் 8, 1999-ம் இதழில், “உலகை கவனித்தல்” கட்டுரையிலுள்ள “காலணி VS கால்வியாதி” என்ற பகுதியை பார்க்கவும்.
ஏமாற்றுதல் “இளைஞர் கேட்கின்றனர் . . . ஏமாற்றுவதில் என்ன தப்பு?” (பிப்ரவரி 8, 2003) என்ற கட்டுரைக்கு மனமார்ந்த நன்றி. நான் ஒரு யூனிவர்சிட்டி மாணவி; ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்திலிருந்தே எனக்கு ஏமாற்றும் பழக்கம் இருந்தது. மற்றவர்களை ஏமாற்றுவது சரியா தவறா என்ற கேள்வி எப்போதும் என் மனதை குடைந்து கொண்டிருந்தது; ஆனால் பதிலை கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆகவே, இந்தக் கட்டுரை என் கைக்கு கிடைத்த விலைமதியா பொக்கிஷம் போல இருந்தது. இப்போது என்னுடைய அடுத்த பரீட்சைக்கு படித்துக் கொண்டிருக்கிறேன், இந்த தடவையிலிருந்து என் வழிகளை மாற்றிக்கொள்ளப் போகிறேன்.
எஸ். ஒய்., உக்ரைன் (g03 11/08)
சிறார் விபசாரம் “சிறார் விபசாரம்—கசப்பான உண்மை” (மார்ச் 8, 2003) என்ற தொடர் கட்டுரைக்கு நன்றி. இந்த விஷயம் வேதனையளிப்பதாக இருந்தாலும், பலியானவர்களுக்கு இக்கட்டுரை நம்பிக்கையளித்ததுதான் முக்கியமாக என் மனதை தொட்டது. இதில் நீங்கள் குறிப்பிட்டிருந்த சிலருடைய வாழ்க்கை அனுபவங்கள் என் சொந்த அனுபவத்தைப் போலவே இருந்தன. இந்த மோசமான உலகில்கூட, யெகோவாவின் உதவியால் கொடூரமான சோக ரணங்களை பெருமளவுக்கு ஆற்ற முடியும் என்று இக்கட்டுரை காட்டுகிறது.
பி. ஆர்., ஜெர்மனி (g03 11/08)
தேங்காய் “உலகிலேயே மிகவும் பயனுள்ள காய்களில் ஒன்று” (ஏப்ரல் 8, 2003) என்ற கட்டுரையை விரும்பிப் படித்தேன். சமீபத்தில் நான் மெக்ஸிகோவுக்கு சென்றிருந்தேன்; தேங்காயின் பற்பல பயன்களை கண்கூடாகவே பார்த்தேன்! இந்தக் கட்டுரையில் பட்டியலிடப்பட்டிருந்த ஏறக்குறைய அத்தனை பயன்களையும் நான் பார்த்தேன். அதற்கு இன்னுமொரு பயனுண்டு: தென்னை மரக்கிளைகளை வெட்டி, அதன் ஓலைகளை உரித்து, காய்ந்துபோன மெல்லிசான அந்த ஈர்க்குச்சிகளில் 10-15-ஐ சேர்த்துக் கட்டி வைத்தால் ஈயடிப்பதற்கு பிரமாதமான ஒரு கருவி ரெடி!
டி. எஸ்., ஐக்கிய மாகாணங்கள் (g03 11/22)
இந்தக் கட்டுரையை படித்ததுமே என்னுடைய பாட்டி நினைவுதான் எனக்கு வந்தது; 1930-களின்போது தேங்காய் ஓடுகளை கிண்ணங்களாக அவர் பயன்படுத்திய பழைய நினைவுகள் என் மனதிற்கு வந்தன. அவருடைய அக்கம்பக்கத்தார் நிறைய பேர் தங்களுடைய குடிசைகளை தென்னை மரத்தை வைத்துதான் கட்டினார்கள், கூரைகளுக்கு காய்ந்த தென்னை ஓலைகளை பயன்படுத்தினார்கள். இப்படிப்பட்ட அருமையான கட்டுரைகளுக்கு நன்றி.
எம். பி., ஐக்கிய மாகாணங்கள் (g03 11/22)
தாய்ப்பாலூட்டுவது “உலகை கவனித்தல்” பகுதியில், “தாய்ப்பாலின் மகத்துவம்” (ஏப்ரல் 8, 2003) என்ற அம்சம் என்னை குழப்பியது. தாய்ப்பால் ஊட்டப்படாதவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. எனக்கு தாய்ப்பால் கொடுக்கப்படவில்லை; அதனால்தானோ என்னவோ அடிக்கொருதரம் ஃப்ளூ காய்ச்சலால் அவதிப்பட்டு வந்திருக்கிறேன். ஆனால், தாய்ப்பால் குடிக்காதவர்களின் அறிவாற்றல் (IQ) தாய்ப்பால் குடித்தவர்களின் அறிவாற்றலைவிட குறைவாய் உள்ளதாக ஓர் ஆராய்ச்சி காண்பித்ததென்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது மனதை புண்படுத்தியது.
சி. பி., இத்தாலி (g03 11/22)
“விழித்தெழு!” பதிலளிக்கிறது: பிறருடைய மனதை புண்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. தாய்ப்பால் கொடுப்பது பற்றி டென்மார்க்கில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சி என்ன காண்பித்ததென்று மட்டுமே நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். குழந்தை பராமரிப்பு வழிமுறைகளைப் பற்றியதில் நன்கு தகவலறிந்த தீர்மானங்களை எடுக்க இத்தகைய விஷயங்கள் இன்றைய பெற்றோர்களுக்கு உதவுகின்றன.