Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சுற்றுச்சூழலை பாதுகாத்தல் எந்தளவு வெற்றி கிடைத்திருக்கிறது?

சுற்றுச்சூழலை பாதுகாத்தல் எந்தளவு வெற்றி கிடைத்திருக்கிறது?

சுற்றுச்சூழலை பாதுகாத்தல்—எந்தளவு வெற்றி கிடைத்திருக்கிறது?

செர்னோபில், போபால், வால்டெஸ், திரீ மைல் ஐலாண்ட். இத்தகைய பெயர்கள் உலகின் பல பாகங்களில் சம்பவித்த சுற்றுச்சூழல் பேரழிவுகளை உங்களுடைய மனதிற்கு கொண்டு வரலாம். பூமியின் சுற்றுச்சூழல் தாக்கப்பட்டு வருவதை இந்த ஒவ்வொரு பேரழிவும் நமக்கு நினைப்பூட்டியது.

பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் தனிநபர்களும் இதைக் குறித்து எச்சரிப்பு கொடுத்திருக்கின்றனர். சிலர் தங்களுடைய கருத்தை தெரிவிப்பதற்கு பகிரங்கமான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றனர். சுற்றுச்சூழல் எளிதில் பாதிக்கப்படும் ஒரு பகுதி வழியாக சாலை அமைப்பதை எதிர்க்கும் விதத்தில், நூலகராக பணிபுரியும் ஆங்கிலேய பெண்மணி ஒருவர் இரும்புச் சங்கிலியால் தன்னை புல்டோஸரோடு கட்டிக்கொண்டார். ஒரு தேசிய பூங்காவுக்குள் யுரேனியம் தோண்டியெடுப்பதை எதிர்த்து, ஆஸ்திரேலிய பழங்குடி பெண்கள் இருவர் பிரச்சாரம் செய்தனர். இதனால் இந்த வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. நல்நோக்கத்துடன் செய்யப்படுகிறபோதிலும், இத்தகைய முயற்சிகளுக்கு எப்பொழுதும் நல்ல வரவேற்பு கிடைப்பதில்லை. உதாரணமாக, மூழ்கடிக்கப்பட்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் ‘ரியாக்டர்’களிலிருந்து கதிர்வீச்சு கசிவதைப் பற்றி சோவியத் ஆட்சியில் கப்பற்தளபதி ஒருவர் கவலை தெரிவித்தார். இவை இருக்கும் இடத்தைப் பற்றி இவர் பிரசுரித்தபோது கைது செய்யப்பட்டார்.

சுற்றுச்சூழல் அச்சுறுத்தப்படுவதை எதிர்த்து பல்வேறு அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றன. அவற்றில் சில: ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான, மற்றும் கலாச்சார அமைப்பு, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம், கிரீன்பீஸ் ஆகியவையாகும். சில அமைப்புகள் தங்களுடைய வேலை சம்பந்தமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை வெறுமனே அறிக்கை செய்கின்றன. மற்றவையோ சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அம்பலப்படுத்துவதற்கு தங்களையே அர்ப்பணித்திருக்கின்றன. சுற்றுச்சூழல் பற்றிய சச்சரவுகள் நடக்கும் இடங்களுக்கு ஆர்வலர்களை அனுப்பி, புவிச்சூடடைதல், உயிரினங்கள் மறைந்து வருதல், மரபணு ரீதியில் மாற்றியமைக்கப்பட்ட விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றிய ஆபத்துக்கள் சம்பந்தமான விஷயங்களை பொது மக்களுடைய கவனத்திற்கு கொண்டு வருவதில் கிரீன்பீஸ் பெயர்போனது.

ஆர்வலர்கள் சிலர், “பூகோள சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அம்பலப்படுத்துவதற்கு புதுப்புது உத்திகளை” கையாளுவதாக சொல்கின்றனர். இதற்காக, பழங்கால காடுகளை அழிப்பதை எதிர்த்து அறுப்புமில் கதவுகளில் தங்களை சங்கிலியால் கட்டிக்கொள்வது போன்ற உத்திகளைப் பயன்படுத்துகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு திமிங்கலங்களை பிடிக்கக்கூடாது என்ற தடை சட்டத்தை ஒரு நாடு மீறியபோது மற்றொரு தொகுதியைச் சேர்ந்த ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது, பெரிய கண்களை மாட்டிக்கொண்டு அந்நாட்டு தூதரகங்களுக்கு வருவதன் மூலம் அங்கு நடக்கும் செயல்களை தாங்கள் உன்னிப்பாக கவனிப்பதை சுட்டிக் காட்டினர்.

விவாதிப்பதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, தண்ணீர் மாசுபடுவதால் வரும் அபாயங்களைப் பற்றி தனிநபர்களிடமிருந்தும் அமைப்புகளிடமிருந்தும் அடிக்கடி எச்சரிக்கைகள் வந்திருக்கின்றன. என்றாலும், நிலைமை மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கிறது. 100 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. “ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு 34 லட்சம் பேர் பலியாகிறார்கள்” என டைம் பத்திரிகை கூறுகிறது. காற்று தூய்மைக்கேடும் இது போலத்தான். 2001 உலக ஜனத்தொகை நிலவரம் (ஆங்கிலம்) இவ்வாறு அறிக்கையிடுகிறது: “ஒவ்வொரு வருடமும் சுமார் 27 லட்சம் முதல் 30 லட்சம் பேர் வரை காற்று தூய்மைக் கேட்டினால் சாகிறார்கள்.” “110 கோடிக்கும் அதிகமானோரை வெளிப்புற காற்றுத் தூய்மைக் கேடு பாதிக்கிறது” என்றும் அது கூறுகிறது. “நுண் துகள்களால் காற்று மாசுபடுவதே ஐரோப்பாவிலுள்ள குழந்தைகளின் நுரையீரல் சம்பந்தப்பட்ட 10 சதவீத தொற்றுகளுக்கு காரணம்” என்பதை ஓர் உதாரணமாக அது குறிப்பிடுகிறது. ஆம், இதுவரை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான இத்தகைய அடிப்படை அம்சங்கள் சம்பந்தமான பிரச்சினைகள் பூதாகரமாகிக் கொண்டேதான் வருகின்றன.

பெரும்பாலோருக்கு நிலைமை முரண்பாடாக தோன்றுகிறது. சுற்றுச்சூழல் பற்றிய விஷயங்களில் முன்பைவிட இன்றைக்கு அதிக அளவில் தகவல்கள் கிடைக்கின்றன. முன்பைவிட அதிகமதிகமான தனிநபர்களும் அமைப்புகளும் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றன(ர்). பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கங்கள் பல்வேறு துறைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. பிரச்சினைகளை சமாளிப்பதற்கு முன்பைவிட இன்றைக்கு நம்மிடம் அதிக தொழில்நுட்ப வசதி இருக்கிறது. இருந்தாலும், நிலைமை முன்னேறுவதாக தெரியவில்லை. ஏன்?

ஒரு படி ஏறினால் இரண்டு படி சறுக்குகிறது

தொழில் துறை வளர்ச்சி நம்முடைய வாழ்க்கையை இலகுவாக்கும் என நினைத்தோம். ஒரு விதத்தில் அது வாஸ்தவம்தான். ஆனால், இந்த “வளர்ச்சியே” இப்பொழுது சுற்றுச்சூழல் பிரச்சினைகளை இன்னும் மோசமாக்குகிறது. தொழில்துறை நமக்குத் தந்திருக்கிற புதுப்புது கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றங்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம், ஆனால் இவற்றின் உற்பத்தியும் பயன்பாடும் நம்முடைய உலகின் பல பகுதிகளை பெரும்பாலும் நாசமாக்குவதில்தான் விளைவடைந்திருக்கின்றன.

இதற்கு ஓர் உதாரணம்தான் மோட்டார் வாகனங்கள். இவை நமது பயணத்தை விரைவாக்கியிருக்கின்றன, சுலபமாக்கியிருக்கின்றன. குதிரை வண்டியில் பயணம் செய்த காலத்திற்கு இன்று யாருமே திரும்பிப் போக விரும்ப மாட்டார்கள். இருந்தாலும், நவீன போக்குவரத்து எண்ணற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுத்திருக்கிறது. அவற்றில் ஒன்று புவிச்சூடடைதல். கோடிக்கணக்கான டன்களில் வாயுக்களை கக்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதால் வளிமண்டலத்தின் இரசாயன கலவையை மனிதர்கள் மாற்றி வந்திருக்கிறார்கள். இந்த வாயுக்களே பசுங்கூட விளைவு (greenhouse effect) என அழைக்கப்படும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இதனால் தட்பவெப்ப நிலை கடந்த நூற்றாண்டைவிட அதிகரித்துள்ளது. “20-⁠ம் நூற்றாண்டின் 10 மிக வெப்பமான ஆண்டுகள் அனைத்தும் அதன் கடைசி 15 ஆண்டுகளில் ஏற்பட்டன” என ஐ.மா. சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயலாண்மை அறிவிக்கிறது. 21-⁠ம் நூற்றாண்டில், பூகோளத்தின் சராசரி தட்பவெப்பம் 1.4 டிகிரி செல்சியஸிலிருந்து 5.8 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என விஞ்ஞானிகள் சிலர் கருதுகிறார்கள்.

பிரச்சினை அத்தோடு முடிந்துவிடப் போவதில்லை. சூடான வெப்பநிலை மற்ற பிரச்சினைகளையும் உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட கோளத்தை மூடியிருக்கும் பனி குறைந்து வந்திருக்கிறது. 2002-⁠ம் ஆண்டின் ஆரம்பத்தில் அன்டார்க்டிக்காவில் 3,250 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு பனிப் பாறை கரைந்துவிட்டது. அதனால் இந்த நூற்றாண்டில் கடல் மட்டமும் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயரலாம். உலக ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பாகத்தினர் கடலுக்கு அருகில் வாழ்வதால் கடைசியில் வீடுகளும் பண்ணை நிலங்களும் இழக்கப்படலாம். கடற்கரை பட்டணங்களுக்கும் பெரும் கஷ்டங்கள் உண்டாகலாம்.

அதிக வெப்பநிலையால் அதிக மழை பெய்யும், இதனால் வானிலையில் அடிக்கடி திடீர் மாற்றங்கள் ஏற்படும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். 1999-⁠ல் பிரான்சில் 90 பேரை பலிவாங்கி, 27 கோடி மரங்களை நாசமாக்கிய புயலைப் போன்ற கடும் புயல்கள் இனி வரப்போகும் காரியங்களுக்கு முன்நிழலாக இருக்கின்றன என சிலர் நினைக்கிறார்கள். வானிலை மாற்றங்களால் மலேரியா, டெங்கு, காலரா போன்ற வியாதிகள் பரவும் என மற்ற ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

தொழில்நுட்பத்தின் விளைவுகள் எவ்வளவு சிக்கலானவை என்பதை மோட்டார் வாகனங்களைப் பற்றிய உதாரணம் காட்டுகிறது; பொதுவாக மக்களுக்கு உதவும் பயனுள்ள கண்டுபிடிப்புகள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பாதிக்கும் எண்ணற்ற பிரச்சினைகளை உருவாக்கலாம். 2001 மனித மேம்பாட்டு அறிக்கை (ஆங்கிலம்) சொல்வது உண்மையாக இருக்கிறது: “எந்தவொரு தொழில்நுட்ப முன்னேற்றத்தை எடுத்துக்கொண்டாலும் ஒவ்வொன்றிலும் நன்மைகளும் இருக்கின்றன, தீமைகளும் இருக்கின்றன, ஆனால் அந்தத் தீமைகள் சிலவற்றை முன்னறிவது சுலபமல்ல.”

சுற்றுப்புற சூழல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கும் மக்கள் பெரும்பாலும் தொழில்நுட்பத்தையே தஞ்சமாக நாடுகிறார்கள். உதாரணமாக, பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதைக் குறித்து சூழியல் ஆய்வாளர்கள் வெகு காலமாகவே எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான தேவையைக் குறைக்கிற அல்லது அடியோடு நீக்குகிற, மரபணு ரீதியில் மாற்றியமைக்கப்பட்ட தாவரங்கள் உருவாக்கப்பட்டபோது, தொழில்நுட்பம் ஒரு நல்ல தீர்வை கண்டுபிடித்துவிட்டது போல ஆர்ப்பரித்தது. ஆனால், பூச்சிக்கொல்லியை பயன்படுத்தாமலேயே தண்டுகளை துளைக்கும் பூச்சிகளை (stem borers) கட்டுப்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்ட ஒருவகை மக்காச்சோளம் (Bt corn) மோனார்க் என்ற ஒருவகை பட்டாம்பூச்சிகளை அழித்து விடலாம் என்பதை பரிசோதனைகள் காட்டின. இதனால், “தீர்வுகள்” சிலசமயங்களில் நேர்மாறான விளைவுகளையே உண்டாக்குகின்றன, அதுமட்டுமல்ல கூடுதலான வேறு பிரச்சினைகளையும் அவை உண்டாக்கலாம்.

அரசாங்கங்களால் கைகொடுக்க முடியுமா?

சுற்றுச்சூழல் நாசமாக்கப்படுவது ஓர் இமாலய பிரச்சினையாக இருப்பதால், வெற்றிகரமான ஒரு தீர்வு காண உலக அரசாங்கங்களின் ஒத்துழைப்பு தேவை. சில சந்தர்ப்பங்களில், சுற்றுப்புற சூழலுக்கு உதவும் சிறந்த மாற்றங்களை பரிந்துரைப்பதில் அரசாங்க அதிகாரிகள் தைரியத்தை வெளிக்காட்டியிருப்பது பாராட்டத்தக்க விஷயமே. ஆனால் உண்மையான வெற்றி கடலில் கரைத்த பெருங்காயம் மாதிரிதான் இருந்திருக்கிறது.

1997-⁠ல் ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச உச்சிமாநாடு இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. புவிச்சூடடைவதற்கு காரணமாக சொல்லப்படும் வாயுக்களை குறைப்பதற்கு ஓர் ஒப்பந்தம் செய்வது சம்பந்தமாக தேசங்கள் காரசாரமாக வாதிட்டன. கடைசியில், அநேகர் மூக்கில் விரலை வைக்கும் விதத்தில், ஓர் ஒப்பந்தம் முடிவானது. இது கியோட்டோ ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது. அதன்படி, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், ஐக்கிய மாகாணங்கள் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் 2012-⁠க்குள் சராசரியாக 5.2 சதவீதம் புகையை குறைக்க வேண்டும். அது அதிக திருப்திகரமானதாய் பட்டது. ஆனால் 2001-⁠ல், கியோட்டோ ஒப்பந்தத்தை கைவிடுவதாக ஐ.மா. அரசாங்கம் அறிவித்தது. இது அநேகருடைய புருவத்தை உயர்த்தியிருக்கிறது; ஏனென்றால் உலக ஜனத்தொகையில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களே வாழும் ஐக்கிய மாகாணங்கள், நான்கில் சுமார் ஒரு பாகம் புகையை வெளிவிடுகின்றன. அதோடு, மற்ற அரசாங்கங்களும் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதில் சுணக்கம் காண்பித்திருக்கின்றன.

அர்த்தமுள்ள தீர்வுகளை காண்பதில் அரசாங்கங்கள் எவ்வளவு திணறு திணறுகின்றன என்பதை இந்த உதாரணம் காட்டுகிறது. முதலில் எல்லா அரசாங்கங்களையும் ஒன்றுகூட்டுவது கஷ்டம், அடுத்தது சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்பதன் பேரில் அவர்கள் ஒரு முடிவுக்கு வருவது கஷ்டம். அப்படியே ஒப்பந்தங்கள் கையெழுத்தானாலும், பிற்பாடு சில நாடுகள் அவற்றை கடைப்பிடிப்பதில் பின்வாங்கிவிடுகின்றன. வேறுசில நாடுகளோ அந்த ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதை சிக்கலாக காண்கின்றன. இன்னும் சில அரசாங்கங்கள் அல்லது நிறுவனங்கள், சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவதில் உட்பட்டுள்ள செலவுகள் கட்டுப்படியாகாதென நினைக்கின்றன. சில இடங்களில், பேராசை இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. சில இராட்சத வியாபார நிறுவனங்கள் அரசாங்கங்களை தங்களுடைய கைக்குள் போட்டுக்கொண்டு கம்பெனியின் இலாபத்தை விழுங்கிவிடும் நடவடிக்கைகளை அமல்படுத்தாமல் கமுக்கமாக இருந்து விடுகின்றன. எதிர்கால விளைவுகளைக் குறித்து எந்தவித கவலையும்படாமல், எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக நிலத்திலிருந்து சுரண்டுவதே வியாபார நிறுவனங்களின் குறிக்கோள் என்பதை கடந்தகால சரித்திரம் சொல்கிறது.

இன்னும் சிக்கலான விஷயம் என்னவென்றால், பூமியின் தூய்மைக்கேடு எதிர்காலத்தில் எந்தளவு பயங்கரமாக இருக்கும் என்ற விஷயத்தில் எல்லா விஞ்ஞானிகளும் ஒத்துப்போவதில்லை. எனவே, சிலர் நினைக்கிறபடி, ஒரு பிரச்சினை பூதாகரமாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அதைக் கட்டுப்படுத்துவதற்கு பொருளாதார வளர்ச்சியை எந்தளவு முடக்குவது என்பதைக் குறித்ததில் அரசாங்க கொள்கைகளை வகுப்பவர்கள் அநிச்சயமாய் இருக்கலாம்.

மனிதகுலம் உண்மையிலேயே மிகவும் சிக்கலான ஒரு சூழ்நிலையில் இருக்கிறது. பிரச்சினை இருக்கிறது, அதற்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை எல்லாரும் அறிந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அதற்காக சில நாடுகள் முழுமூச்சுடன் முயற்சி செய்கின்றன. என்றாலும், பெரும்பாலான பகுதியில், சுற்றுச்சூழல் பிரச்சினை அதிக மோசமாகிக் கொண்டுதான் வருகிறது. கடைசியில், மனித சஞ்சாரத்திற்கு லாயக்கற்ற ஓர் இடமாக இந்தப் பூமி ஆகிவிடுமா? இந்தக் கேள்வியை நாம் இப்பொழுது ஆராயலாம். (g03 11/22)

[பக்கம் 7-ன் பெட்டி/படம்]

இரைச்சல் தூய்மைக்கேடு

இது காணக்கூடிய தூய்மைக்கேடு அல்ல, கேட்கக்கூடிய தூய்மைக்கேடு. இது காதை செவிடாக்கலாம்; மன இறுக்கம், உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றை உண்டாக்கலாம், அதோடு உற்பத்தியையும் பாதிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இரைச்சல்மிகு சூழலில் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு வாசிப்பதில் பிரச்சினைகள் ஏற்படலாம்.

[பக்கம் 7-ன் பெட்டி/படம்]

காடுகள் அழிக்கப்படுவதால் எலி தொல்லை

பிலிப்பைன்ஸில் சமர் என்ற இடத்திலுள்ள 15 பட்டணங்கள் பயங்கர எலித் தொல்லையால் பாதிக்கப்பட்டபோது, அந்தப் பகுதியிலிருந்த காடுகள் அழிக்கப்பட்டதே காரணமென ஓர் அரசாங்க இதழ் குற்றம் சாட்டியது. காடுகளை அழிப்பதால் எலிகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் குறைந்து விடுகின்றன, எலிகளை தின்றும் பிராணிகளின் எண்ணிக்கையும் குறைகிறது. அதனால் எலிகள் உணவைத் தேடி ஜன நெருக்கடிமிக்க இடங்களுக்கு குடிபெயருகின்றன.

[படத்திற்கான நன்றி]

© Michael Harvey/Panos Pictures

[பக்கம் 7-ன் பெட்டி/படம்]

நச்சுக் கழிவுகளுக்குப் பலியாதல்

மைக்கேல் மூன்றரை மாத குழந்தையாக இருந்தபோது, நியூரோ பிளாஸ்டோமா என்ற ஒருவகை புற்றுநோய்க்கு ஆளானான். இந்த இடத்தில் இவன் மாத்திரமே இந்நோய்க்கு பலியாகியிருந்தால், அது ஒரு சாதாரண விஷயமாக போயிருக்கும். ஆனால் இதே சிறிய பகுதியில் மற்ற சுமார் 100 பிள்ளைகளும் புற்றுநோய்க்கு ஆளானதாக பிற்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. இது பெற்றோர்கள் பலருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. அந்த உயர்ந்த எண்ணிக்கைக்கு, அப்பகுதியிலுள்ள இரசாயன கம்பெனிகள் காரணமாக இருக்கலாம் என சிலர் நினைத்தனர். நச்சுக் கழிவுகளை கொண்டு செல்லும் ஒரு தனியார் வாகனம் இதற்கு முன்பு ஒரு கம்பெனியிலிருந்து டிரம் கணக்கில் நச்சுத் திரவத்தைக் கொண்டு சென்று முன்னாள் கோழிப் பண்ணையில் வைத்ததையும், சிலசமயங்களில் அதை வெளியே ஊற்றியதையும் புலன்விசாரணை காண்பித்தது. அங்கிருந்த கிணறுகளில் நச்சுப்பொருட்கள் சிறிதளவு கலந்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். தங்களுடைய பிள்ளைகளுக்கு ஏற்பட்ட புற்றுநோய்க்கு இது காரணமாக இருக்கும் என பெற்றோர்கள் நினைக்கின்றனர்.

[பக்கம் 8-ன் பெட்டி/படம்]

நச்சுத்தன்மையுள்ள இரசாயனங்கள்

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தபின், நச்சுத்தன்மையுள்ள 1,20,000 டன் பொருட்கள்​—⁠பெரும்பாலும் போஸ்ஜீனும் நச்சுப்புகையும் (mustard gas)​—⁠கப்பல்களில் அடைக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டன. அவற்றில் சில, வட அயர்லாந்தின் வடமேற்கு கடலில் மூழ்கடிக்கப்பட்டன. அந்தப் பொருட்கள் இப்பொழுது கசியும் ஆபத்தில் இருக்கிறது என ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கின்றனர்.

[பக்கம் 8-ன் பெட்டி/படம்]

காற்று தூய்மைக்கேடு பலி வாங்குகிறது

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஏற்படும் 5 முதல் 6 சதவீத மரணங்களுக்கு காற்றுத் தூய்மைக்கேடுதான் காரணம் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. கனடாவில் ஒன்டாரியோவில் வாழும் மக்களை மட்டுமே எடுத்துக்கொண்டாலும், காற்று தூய்மைக்கேட்டினால் உண்டாகும் மருத்துவ செலவுகளுக்கும் வேலைக்கு செல்லாததால் ஏற்படும் செலவுகளுக்கும் ஆண்டொன்றுக்கு 100 கோடி டாலருக்கும் அதிகமான பணத்தை செலவிடுகிறார்கள் என அறிக்கை செய்யப்படுகிறது.

[பக்கம் 8-ன் பெட்டி/படம்]

மடியும் பவளப் பாறைகள்

தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மீனவர்கள் சிலர் மீனுக்கு சையனைடு கரைசலை கொடுத்து, மயக்கமடையச் செய்து சுலபமாக பிடித்துவிடுகிறார்கள். மீனின் உடலிலிருந்து நச்சு வெளியேற்றப்பட்டு, பிறகு அந்த மீன் உணவாக பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும், கடல்நீரில் அந்த நச்சு இருப்பதால், பவளப் பாறைகள் அழிந்து வருகின்றன.

[பக்கம் 8-ன் பெட்டி/படம்]

அறுவை சிகிச்சை முகமூடி அணிய வேண்டுமா?

ஆசிய நாடுகளில் ஏற்படும் பேரளவான தூய்மைக்கேடு வாகனங்கள் வெளிவிடும் புகையினால் உண்டாகிறது என ஏசியாவீக் பத்திரிகை அறிவிக்கிறது. டீஸல் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களே தூய்மைக்கேட்டிற்கு முக்கிய காரணிகள், இவை காற்றில் மிதக்கும் மிக நுண்ணிய துகள்களை பெருமளவில் உற்பத்தி செய்கின்றன. இவை அநேக சுகாதார பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. அதே பத்திரிகை இவ்வாறு அறிக்கை செய்கிறது: “புற்றுநோய்க்கு டீஸல் புகையே காரணம் என தூய்மைக் கேட்டினால் உண்டாகும் விளைவுகளைப் பற்றி ஆராயும் தைவான் முன்னணி நிபுணராகிய டாக்டர் சான் சாங்-சவான் கூறுகிறார்.” ஆசிய நாடுகளில் வாழும் சிலர் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு அறுவை சிகிச்சை முகமூடிகளை அணிகிறார்கள். இந்த முகமூடிகள் பாதுகாப்பு அளிக்கின்றனவா? டாக்டர் சான் கூறுகிறார்: “இந்த முகமூடிகள் பயனற்றவை. வாயுக்கள் மற்றும் நுண்துகள்கள் வடிவில் காணப்படும் பேரளவான தூய்மைக்கேடு மிக நுண்ணியதாக இருப்பதால் சாதாரண முகமூடியால் பெரும்பாலான துகள்களை வடிகட்ட முடியாது. அதோடு, . . . முகமூடிகள் காற்றுப்புகாதவை அல்ல. ஆகவே அவை போலி பாதுகாப்பைத்தான் தருகின்றன.”

[பக்கம் 7-ன் படம்]

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அழிந்த ஒரு காட்டை மறுபடியும் உருவாக்குதல்

[பக்கம் 8-ன் படங்களுக்கான நன்றி]

AFP/Getty Images; மேலே இடது: Published with the permission of The Trustees of the Imperial War Museum, London (IWM H 42208); மேலே வலது: Howard Hall/howardhall.com