Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நமது கோளம் எந்தளவு நோய்வாய்ப்பட்டுள்ளது?

நமது கோளம் எந்தளவு நோய்வாய்ப்பட்டுள்ளது?

நமது கோளம் எந்தளவு நோய்வாய்ப்பட்டுள்ளது?

பிலிப்பைன்ஸிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

இந்த நோயாளியின் நிலைமை ‘சீரியஸாக’ இருக்கிறது. நிறைய நோய் அறிகுறிகள் வேறு! அவர் மூச்சு விட்டால் ஒரே துர்நாற்றம். என்றைக்கும் இல்லாத அளவுக்கு அதிக ஜுரம் அடிக்கிறது. பார்க்காத வைத்தியமில்லை, எல்லாம் தோல்விதான். உடல் நீர்மங்களில் விஷம் கலந்திருக்கிறது. ஒரு வியாதிக்கு வைத்தியம் பார்த்தால், உடம்பில் இன்னொரு இடத்தில் மற்றொரு வியாதி படையெடுக்கிறது. சாதாரண ஒரு நோயாளியாக இருந்தால், அவருக்கு தீராத வியாதி, கொடிய வியாதி என்றெல்லாம் டாக்டர்கள் ‘சர்டிஃபிகேட்’ கொடுப்பார்கள். ஆனால் இந்த நோயாளியைப் பொறுத்தவரை, வேறென்ன செய்வதென்றே டாக்டர்களுக்கு தெரியாததால், அவர் தனது இறுதி மூச்சை விடும்வரை அவரை முடிந்தளவு நன்றாக கவனிப்பதற்கு ஏதாவதொரு சிகிச்சை கொடுப்பார்கள்.

இந்த நோயாளி யார் என்று தெரியுமா? அவர் ஒரு மனிதரல்ல, நம்முடைய வீடாகிய பூமியே அந்த நோயாளி. நமது கிரகத்திற்கு என்ன ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இந்த வர்ணனை நன்றாக சித்தரித்துக் காட்டுகிறது. அசுத்தமான காற்று, புவிச்சூடடைதல் (global warming), மாசுபட்ட தண்ணீர், நச்சுக் கழிவுகள் ஆகியவை நோய்வாய்ப்பட்டுள்ள நமது பூமிக்கு வந்திருக்கும் சில கோளாறுகள். மேலே குறிப்பிடப்பட்ட டாக்டர்களைப் போல, நிபுணர்கள் இதற்கு என்ன செய்வதென தெரியாமல் திண்டாடுகிறார்கள்.

பூமியின் மோசமான உடல்நிலையைப் பற்றி மீடியா தவறாமல் சுட்டிக் காட்டுகிறது. உதாரணமாக: “டைனமைட் வைத்து மீன்பிடித்தல்​—⁠கொலைக் களங்களாக மாறும் கடற்பரப்புகள்.” “24 வருடங்களுக்குள் 100 கோடி ஆசிய மக்கள் தண்ணீரின்றி தவிப்பர்.” “ஓர் ஆண்டில் நாலு கோடி டன் நச்சுக் கழிவு ஏற்றுமதி.” “ஜப்பானில் 1,800 கிணறுகளில் மூன்றில் இரண்டு சதவீதம் மாசு.” “அன்டார்க்டிக்கில் பெரிய ஓசோன் துளை மறுபிரவேசம்.” போன்ற தலைப்புகளும் முகப்புரைகளும் பத்திரிகைகளில் வந்தவண்ணம் இருக்கின்றன.

சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படும் ஆபத்தைக் குறித்து சிலர் அடிக்கடி செய்திகளில் கேள்விப்படுவதால் அது அவர்களுக்கு சர்வசகஜமான ஒன்றாகிவிடுகிறது; ‘அது என்னை பாதிக்காதவரை எதற்கு வீணாக கவலைப்பட வேண்டும்’ என்றுகூட நினைக்கிறார்கள். ஆனாலும், இதை நாம் உணர்ந்தாலும் சரி உணராவிட்டாலும் சரி, இந்தப் பூமியின் சுற்றுச்சூழல் ஒட்டுமொத்தமாக நாசமாக்கப்படுவது பெரும்பாலான மக்களை பாதிக்கிறது. நமது கிரகத்தின் மூலை முடுக்கெல்லாம் அந்தளவு அசுத்தமாக்கப்படுவதால், அது ஏற்கெனவே நம்முடைய வாழ்க்கையில் பல அம்சங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வந்திருக்கலாம். ஆகவே, நமது வீட்டின் ஆரோக்கியத்திலும் பாதுகாப்பிலும் அனைவரும் அக்கறை காட்ட வேண்டும். இல்லையென்றால், நாம் எங்கே போய் வாழ்வோம்?

இந்தப் பிரச்சினை எந்தளவுக்கு பரவியுள்ளது? இந்தப் பூமி எந்தளவுக்கு நோய்வாய்ப்பட்டுள்ளது? இது மக்களின் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது? நமது பூமிக்கு வெறுமனே சாதாரண காய்ச்சல் அல்ல, ஆனால் ‘சீரியஸான’ காய்ச்சல்; இதற்கு காரணம் என்னவென்று புரிந்துகொள்ள உதவும் காரணிகள் சிலவற்றை இப்பொழுது நாம் அலசலாம்.

◼ கடல்கள்: கடலில் பெரும்பாலான பகுதிகளில் மிதமிஞ்சிய அளவில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் வெளியிட்ட ஓர் அறிக்கை இவ்வாறு கூறுகிறது: “இனப்பெருக்கமே நடைபெற முடியாத அளவுக்கு கடல் மீன்களில் 70 சதவீதம் அரித்தெடுக்கப்படுகின்றன, அல்லது ஏதோ தாக்குப்பிடிக்கும் அளவுக்குத்தான் எஞ்சியிருக்கின்றன.” உதாரணமாக, 1989-⁠க்கும் 1994-⁠க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், வட அட்லாண்டிக் பெருங்கடலில் காட், ஹேக், ஹேடாக், தட்டைமீன் போன்ற மீன்களின் எண்ணிக்கை 95 சதவீதம் வரை குறைந்துவிட்டது. இது இப்படியே போனால், உணவுக்கு கடலையே முக்கிய மூலாதாரமாக சார்ந்திருக்கும் லட்சோப லட்சம் மக்களுடைய பாடு என்னவாகும்?

அதோடு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு கோடி டன் முதல் நான்கு கோடி டன் வரை கடல் உயிரினங்கள் பிடிக்கப்பட்டு மீண்டும் கடலுக்குள்ளே தூக்கி வீசப்படுகின்றன​—⁠இவை பொதுவாக காயமடைந்தவை அல்லது செத்தவை. ஏன்? எந்த மீன்களுக்காக வலை போடப்படுகிறதோ அவற்றோடு வேண்டாத மீன்களும் வந்துவிடுவதால் தூக்கியெறியப்படுகின்றன.

◼ காடுகள்: காடுகள் அழிக்கப்படுவதால் அநேக பாதிப்புகள் ஏற்படுகின்றன. மரங்கள் வெட்டப்படுவதால் கரியமில வாயுவை உறிஞ்சும் பூமியின் திறன் குறைந்துவிடுகிறது, இதுவே புவிச்சூடடைவதற்கு காரணமென சொல்லப்படுகிறது. இதனால் தாவரங்களில் சில வகைகள், அதாவது உயிர் காக்கும் மருத்துவ குணமுடைய சில வகைகள் அழிந்துபோய்விடுகின்றன. என்னதான் பாதிப்பு ஏற்பட்டாலும், காடுகள் அழிக்கப்படுவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. சொல்லப்போனால், காடுகள் அழிக்கப்படும் விகிதம் சமீப வருடங்களில் உயர்ந்திருக்கிறது. இது இப்படியே தொடர்ந்தால், இன்னும் சுமார் 20 ஆண்டுகளில் வெப்பமண்டல காடுகள் மறைந்தேவிடும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

◼ நச்சுக் கழிவுகள்: தீங்கு விளைவிக்கும் பொருட்களை நிலத்திலும் கடலிலும் கொட்டுவது கவலைதரும் பிரச்சினை; அது கோடிக்கணக்கானோருக்கு பெரும் தீங்குண்டாக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. கதிரியக்கப் பொருட்களின் கழிவுகள், கன உலோகங்கள், பிளாஸ்டிக்குகளின் உப தயாரிப்புகள் ஆகியவை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பலவீனத்தையோ, வியாதியையோ, மரணத்தையோகூட உண்டாக்க வல்ல பொருட்களாகும்.

◼ இரசாயனங்கள்: கடந்த 100 ஆண்டுகளில், சுமார் 1,00,000 புதிய இரசாயனங்கள் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. கடைசியில், இவை நம்முடைய காற்று, நிலம், நீர், உணவு ஆகியவற்றிற்குள் கலந்துவிடுகின்றன. இவை மனிதருக்கு உடலில் என்ன பாதிப்பை உண்டாக்கலாம் என்பதை கண்டறிவதற்கு சில பரிசோதனைகள் மாத்திரமே செய்யப்பட்டுள்ளன. என்றாலும், பரிசோதிக்கப்பட்டவற்றில் பெரும்பாலானவை புற்றுநோயை அல்லது மற்ற நோய்களை உண்டாக்குகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நமது சுற்றுச்சூழலுக்கு இன்னும் அநேக அச்சுறுத்தல்கள் இருக்கின்றன: காற்று தூய்மைக்கேடு, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், அமில மழை, சுத்தமான தண்ணீர் இல்லாமை போன்ற பல அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. இந்தப் பூமி உண்மையில் நோய்வாய்ப்பட்டிருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு இதுவரை நாம் பார்த்த உதாரணங்களே போதுமானவை. இந்த நோயாளியை காப்பாற்ற முடியுமா, அல்லது இவருக்கு சாவு நெருங்கிவிட்டதா? (g03 11/22)