Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ப்ராக் எங்கள் பழம்பெரும் மணிக்கல்லை வந்து பாருங்கள்

ப்ராக் எங்கள் பழம்பெரும் மணிக்கல்லை வந்து பாருங்கள்

ப்ராக்—எங்கள் பழம்பெரும் மணிக்கல்லை வந்து பாருங்கள்

செக் குடியரசிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

ஆயிரமாண்டு வரலாற்று சிறப்புமிக்க ஒரு நகரை​—⁠10-⁠ம் நூற்றாண்டு ரோமனெஸ்க் முதல் காதிக், ரெனஸான்ஸ், பரோக், ரொககோ, க்ளாசிக்கல், நியோக்ளாசிக், மற்றும் 20-⁠ம் நூற்றாண்டு ஆர்ட்னூவோ வரையிலான பல கட்டடக் கலைகளை தன்னகத்தே கொண்ட ஒரு பழம்பெரும் நகரை​—⁠உங்கள் விழிகளில் படம்பிடிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் மத்திய ஐரோப்பாவில் மணிக்கல்லாக ஜொலிக்கும் ப்ராக்கிற்கு எங்களுடன் வருகை தாருங்கள். ஆனால் ஒரு விஷயம்: செக் பாஷையை அவ்வளவு எளிதாக உங்கள் வாய்க்குள் வசப்படுத்த முடியாது. அதனால், உச்சரிப்புக்கு உதவும் கையேடு ஒன்றை உங்கள் கையோடு எடுத்து வந்தால் ரொம்ப உபயோகமாக இருக்கும். அது சரி, ப்ராக் எங்கே இருக்கிறது தெரியுமா?

ஐரோப்பாவின் வரைபடத்திற்கு உங்கள் பார்வையை செலுத்துங்கள். ஜெர்மனியின் கிழக்கே அமைந்துள்ள அதன் தலைநகரான பெர்லினை கண்டுபிடியுங்கள். அதற்கு நேராக தெற்கே சுமார் 300 கிலோமீட்டர் கீழே வந்தால் உங்கள் கண்ணில் முதலில் தட்டுப்படும் பெரிய நகரம்தான் செக் குடியரசின் தலைநகர் ப்ராக். அதையும் தாண்டி தெற்கிலும் கிழக்கிலுமாக ஆஸ்திரியாவிலுள்ள வியன்னா மற்றும் ஹங்கேரியிலுள்ள புடாபெஸ்ட் அமைந்திருப்பதைக் காண்பீர்கள். காரில் சில மணிநேரத்திற்குள் சென்றெட்டும் தூரத்தில்தான் இவை ஒவ்வொன்றும் அமைந்துள்ளன.

ப்ராக்கின் மத்தியில் வல்டவா ஆறு ஒயிலாக ஓடிவருகிறாள். நாம் சுற்றிப் பார்ப்பதற்கு வசதியாக மத்திய ப்ராக்கை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம் (21-⁠ம் பக்கத்திலுள்ள வரைபடத்தைக் காண்க.) ஆற்றின் மேற்குக் கரையில் ஒரு குன்றின்மீது உயர்ந்து நிற்பது முதல் பகுதி. இங்கே ப்ராக் கோட்டையையும், ஹிராட்சானி டவுனையும் நீங்கள் காணலாம். சுமார் 1320-⁠ல், அந்தக் கோட்டையின் எல்லைப் புற பகுதியில் இந்த டவுன் உருவாக்கப்பட்டது. கோட்டைப் பகுதிக்கு உள்ளே காதிக் பாணியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான செ. வைட்டஸ் கத்தீட்ரல் இருக்கிறது. இதன் கட்டுமான வேலை 1344-⁠ல் ஆரம்பிக்கப்பட்டது, என்றாலும் 1929 வரையிலும் கட்டி முடிக்கப்படாமலேயே இருந்தது. இங்குதான் அரசருக்குரிய அணிகலன்கள் வைக்கப்பட்டிருக்கின்றன, இளவரசன் வென்சஸ்லாஸின் கல்லறையும் உள்ளது. கோட்டைப் பகுதிக்கு பொது வாகனத்தில் போகலாம் அல்லது நடந்து செல்லலாம். செங்குத்தாக ஏற வேண்டியிருப்பதால், நடப்பதற்கு வசதியான ஷூவை போட்டுக்கொள்ளுங்கள். கோட்டைப் பகுதியை சுற்றிப்பார்க்கையில் அங்குள்ள விசித்திரமான குட்டிக் குட்டி வீடுகளையும், கோல்டன் லேனில் (செக் மொழியில், ஸால்டா யூலிக்கா) கிஃப்ட் ஐட்டங்கள் விற்கும் கடைகளையும் காண தவறாதீர்கள். இவை 1500-களின் பிற்பகுதியில் அரண்மனை காவலர்களுக்காக கட்டப்பட்டவை. பிற்பாடு, 17-⁠ம் நூற்றாண்டில் பொற்கொல்லர்கள் இங்கு குடியேறினர். அதனால்தான் கோல்டன் லேன், அதாவது பொன் வீதி என்ற பெயர் வந்தது.

கோட்டைப் பகுதியின் தெற்கே மாலா ஸ்ட்ரானா என்ற லிட்டில் க்வாட்டர் டவுன் உள்ளது. “இந்தக் க்வாட்டரில் பரோக் பாணியில் கட்டப்பட்ட பிரமாதமான அரண்மனைகளும் கண்கவர் அடையாளச் சின்னங்களையுடைய பழங்கால வீடுகளும் ஏராளமாக உள்ளன” என ஒரு வழிகாட்டி புத்தகம் குறிப்பிடுகிறது. நூறு சர்ச் கோபுரங்களின் நகரம் என ப்ராக் அழைக்கப்படுகிறது; உண்மையில் நூறுக்கும் மேலான சர்ச் கோபுரங்கள் இங்கு இருக்கின்றன. பெரும்பாலான செக் மக்கள் மதப்பற்று உள்ளவர்களாய் இருந்த காலத்தை அவை நமக்கு நினைப்பூட்டுகின்றன. அவற்றில் சில சர்ச்சுகள் இந்த லிட்டில் க்வாட்டரில் இருக்கின்றன; ஆனால் இப்போது கம்யூனிஸம் கவிழ்ந்த பிறகும் சிலர் மட்டுமே அங்கு செல்கிறார்கள். சர்ச்சுகளிலேயே மிகப் பிரசித்திப் பெற்றது செ. நிக்கோலஸ் சர்ச். அதன் கட்டுமான வேலை 1703-⁠ல் ஆரம்பிக்கப்பட்டு 1761-⁠ல் முடிக்கப்பட்டது. இந்த சர்ச்சை ஒரு கட்டடக் கலைஞர் கட்ட ஆரம்பித்தார், அவர் மரித்த பிறகு அவரது மகன்​—⁠அவரும் கட்டடக் கலைஞர்​—⁠கட்டுமான வேலையை தொடர்ந்தார், ஆனால் அது கட்டி முடிக்கப்படுவதற்குள் அவரும் சமாதியானார். அவ்வளவு காலம் எடுத்திருக்கிறது!

வல்டவா ஆற்றைக் கடத்தல்

ப்ராக்கின் கிழக்குப் பகுதிக்கு செல்ல வல்டவா ஆற்றுக்கு குறுக்கே குறைந்த பட்சம் ஏழு பாலங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் பிரசித்திப் பெற்றது சார்ல்ஸ் பாலம் (கார்லுஃப் மோஸ்ட்), அது பாதசாரிகளுக்கான பாலம். சுமார் 520 மீட்டர் நீளமுடைய இந்தப் பாலத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை காலார நடந்து செல்லும்போதுதான் ப்ராக்கை உங்களால் முழுமையாக ரசிக்க முடியும். அதிகாலையிலும் சாயங்காலமும் அந்தப் பாலத்தின் மீது நீங்கள் கொஞ்சம் நடந்து பார்க்கலாமே. பளிச் பளிச்சென்று மின்னும் வித்தியாசமான லைட்டுகளுக்கு இடையே அந்தப் பாலத்தையும் அதன் சுற்று வட்டாரத்தையும் பார்ப்பது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

இந்தப் பாலம் இடது கரையிலுள்ள லிட்டில் க்வாட்டரையும் கிழக்கே வலது கரையிலுள்ள ஓல்ட் டவுனையும் இணைக்கிறது. இந்த சார்ல்ஸ் பாலத்தில் சுற்றுலா பயணிகளும், பாதை ஓரங்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்துவோரும், வியாபாரிகளும் எப்போதுமே கூட்டமாக மொய்த்துக் கொண்டிருப்பார்கள். மிகச் சிறந்த செக் ஜாஸ் இசை குழுவினர், நியூ ஆர்லியன்ஸின் புகழ்பெற்ற பாடல்களை இசைப்பதை ஒருவேளை நீங்கள் கேட்கலாம். தங்கள் உற்சாகமிக்க பாடல்களின் சிடி-க்களையும் கேஸட்டுகளையும்கூட அவர்கள் அங்கு விற்பனை செய்கிறார்கள். மற்ற இடங்களிலோ, பீங்கானில் ஓல்ட் டவுன் ஸ்கொயரில் உள்ள மிகப் பிரசித்திப் பெற்ற கட்டடங்களின் சிறிய சிறிய மாடல்களை விற்று மாணவர்கள் பணம் சம்பாதிப்பதை நீங்கள் காணலாம். புகழ்பெற்ற வானசாஸ்திர கடிகாரத்தின் மாடல் உட்பட, ஓல்ட் டவுன் ஸ்கொயரிலுள்ள கிட்டத்தட்ட அத்தனை கட்டடங்களின் மாடல்களையும் வாங்கி, அவற்றை உங்கள் வீட்டு அலமாரியில் கொண்டு வந்து வைத்தால், ஒரு குட்டி ஓல்ட் டவுன் ஸ்கொயரையே நீங்கள் உருவாக்கிடலாம்!

சரி, இப்போது பாலத்தின் இரு பக்கத்திலும் வரிசையாக நாட்டப்பட்டிருக்கும் கத்தோலிக்க “புனிதர்களின்” உருவச் சிலைகளைப் பாருங்கள். செக் குடியரசின் மத சரித்திரத்தைப் பற்றி தெரிந்துகொள்ள இந்தச் சிலைகள் பெரிதும் உதவுகின்றன. அவை ஜான் நிபாமுக் (1683) காலத்தில்தான் முதன்முதலில் நிறுவப்பட்டன, அந்தக் காலப்பகுதியிலிருந்து சிரல் மற்றும் மித்தோடியஸ் (1938) காலப் பகுதி வரை அவை நிறுவப்பட்டன. ஆனால், கிறிஸ்துவின் உருவச் சிலையே பைபிள் மாணாக்கர் பலரின் மனதைக் கவருகிறது; அது 1629-⁠ம் வருடத்தில் நிறுவப்பட்டது. அதன் தனிச்சிறப்பு என்ன?

இந்த உருவச் சிலையை சுற்றி வட்டமாக பொன்னிற எபிரெய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன; அவற்றில் டெட்ராக்ரமாட்டன் என அழைக்கப்படும் நான்கு எபிரெய எழுத்துக்கள் உள்ளன. யெகோவா என்ற கடவுளுடைய பெயரை இவை குறிக்கின்றன. இப்பெயர் சுமார் 7,000 தடவை எபிரெய வேதாகமத்தில் காணப்படுகிறது.

உங்களை வியப்பில் ஆழ்த்தும் ஓல்ட் டவுன்

சார்ல்ஸ் பாலத்தைக் கடந்து ஓல்ட் டவுன் பிரிட்ஜ் டவருக்கு கீழாக வந்துவிட்டால்போதும், (கிழக்கு நுழைவாயிலில் அமைந்திருக்கும் மீன்கொத்திப் பறவையின் சிற்பம் எங்குள்ளது என தேடிக் கண்டுபிடியுங்கள், அது வென்சஸ்லாஸ் அரசனுக்கு பிடித்த சின்னம்) ஓல்ட் டவுனை அடைந்துவிடுவீர்கள். அங்கே உங்கள் கேமராவில் எத்தனை முறை ‘க்ளிக்’ செய்தாலும் மனசு அடங்காது! கலையழகுமிக்க விதவிதமான கட்டடங்களை பார்க்கப் பார்க்க கண்களுக்கு விருந்தளிப்பது போல இருக்கும். பாலத்திலிருந்து நேராக வந்தால் சார்ல்ஸ் வீதியை (கார்லோவா) அடைவீர்கள்; குறுகலாக வளைந்து நெழிந்து செல்லும் ஏகப்பட்ட தெருக்களை இது ஒன்றாக இணைக்கிறது. இந்தத் தெருக்கள் எல்லாமே சின்னச் சின்ன கடைகளும் வாடிக்கையாளர்களுமாக ஒரே சந்தடியாக இருக்கும். ஆனால், அங்கு சுற்றுமுற்றிலுமுள்ள அந்தக் காலத்து ரெனஸான்ஸ், பரோக் பாணியிலான கட்டடங்களையும் காண தவறாதீர்கள்.

சுற்றுமுற்றும் ஆச்சரியமாக பார்த்தவாறே ஆற அமர நடந்து வருகையில் சட்டென ஓல்ட் டவுன் ஸ்கொயர் உங்கள் கண்ணில் படும்; அங்கு முதலாவது உங்களுக்கு தெரிவது ஆட்கள் கூட்டமாக நின்று ஒரு கடிகாரத்தை உற்று பார்ப்பதுதான்; அதுவும் மணியடிக்கப் போகும் நேரமாக இருந்தால் சொல்லவே வேண்டாம். இதுதான் டவுன் ஹால் கடிகாரம், இது அனைவரின் கவனத்தையும் சுண்டியிழுக்கும் ஒரு வானசாஸ்திர கடிகாரம். ஆனால் வானசாஸ்திரத்தின்படி அவ்வளவு துல்லியமாக இருக்குமென எதிர்பார்க்காதீர்கள். இப்பிரபஞ்சத்தின் மையம் பூமி என்பதாகவும் சூரியனும் பிற நட்சத்திரங்களும் பூமியை சுற்றி வருவதாகவும் மக்கள் நம்பிக்கொண்டிருந்த காலத்தில் வடிவமைக்கப்பட்டதே இக்கடிகாரம். இருந்தாலும், இதுவரை உருவாக்கப்பட்ட கடிகாரங்களில் இதுவே தலைச்சிறந்த படைப்பு. a—⁠இப்பக்கத்திலுள்ள பெட்டியைக் காண்க.

இப்போது நாம் ஓல்ட் டவுன் ஸ்கொயருக்குள் போய்க் கொண்டிருக்கிறோம். இங்குள்ள அழகான கட்டடங்களும் பலதரப்பட்ட கட்டடக்கலைகளும் உண்மையிலேயே ஸ்தம்பிக்க வைக்கின்றன. ஓல்ட் டவுன் ஸ்கொயர் அவ்வளவு பெரிய இடமாக இருப்பதால் அங்கு எவ்வளவு ஜனக்கூட்டம் இருந்தாலும் அது ஒரு மூலைக்குத்தான். கண்டு மகிழ்வதற்கு இங்கு எக்கச்சக்கமான காரியங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் நிதானமாக பாருங்கள், நீங்கள் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய வழிகாட்டி புத்தகத்தைப் புரட்டுங்கள். அதோ, இரட்டை கோபுரத்தையும் அநேக கூர்மையான நுனிகளையும் உடைய அந்தப் பெரிய சர்ச்சை பாருங்கள்; அதை டீன் சர்ச் என்று சொல்வார்கள், 1365-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மலைக்க வைக்கும் இந்த ஸ்கொயரில் ரொககோ பாணியிலான கோஸ்-கின்ஸ்கி மாளிகையைப் போன்ற கம்பீரமான கட்டடங்கள் ஏராளம் ஏராளம். இவற்றைப் பற்றி விவரமாக எழுத வேண்டுமானால் இடமே கொள்ளாது.

ஸ்கொயரின் மையப் பகுதியில் சமய சீர்திருத்தவாதி ஜான் ஹஸ் (1372-1415) என்பவருக்காக நிறுவப்பட்ட ஒரு பிரமாண்டமான நினைவுச் சின்னம் உள்ளது. அவர் ஒரு கத்தோலிக்க பாதிரியாக இருந்தபோதிலும், தலைமை குருக்களின் கோபத்திற்கு ஆளானவர். காரணம், குருவர்க்கத்தினரின் ஒழுக்கங்கெட்ட நடத்தையை அவர் அம்பலப்படுத்தினார், பாவமன்னிப்பு சீட்டுகளை விற்பதையும் கடுமையாக கண்டித்தார். கவுன்சில் ஆஃப் கான்ஸ்டன்ஸ்-⁠க்கு சென்று ஹஸ் தன் கருத்துக்களை சொன்னால் பாதுகாப்பு அளிக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டபோதிலும், அவர் ஒரு மதபேதவாதியாக முத்திரை குத்தப்பட்டு கழு மரத்தில் கட்டப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டார்.

ப்ராக்கின் யூத வரலாறு

ப்ராக்கின் நான்காவது பகுதியான ஜூயிஷ் க்வாட்டர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். செக் மொழியில் அது யோஸஃபோவ் என அழைக்கப்படுகிறது. 1784-⁠ல் யூதர்களைப் பற்றிய தப்பெண்ணம் சற்று அடங்கிவிட்ட சமயத்தில் இரண்டாம் ஜோஸஃப் நினைவாக அப்பெயர் அதற்கு சூட்டப்பட்டது. இந்தக் க்வாட்டரின் சிறப்பு அம்சங்களில் ஒன்றானது ஓல்ட்-நியூ ஸின்னகாக். இது சுமார் 1270-⁠ல் கட்டப்பட்டது. இதுதான் ஐரோப்பாவிலேயே மிகப் பழமையான யூத ஜெபாலயம், இன்றும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ப்ராக்கில் காணப்படும் காதிக் பாணியிலான பழங்கால கட்டடங்களில் இதுவும் ஒன்று. இந்த ஜெபாலயத்திற்குள்ளே நீங்கள் தாராளமாக போகலாம்; உள்ளே சென்று நன்கு கவனித்து பார்த்தால் எபிரெயுவில் கடவுளுடைய பெயர் எழுதப்பட்டிருப்பதை காணலாம். ஆனால் ஒரு விஷயம், எதையுமே போட்டோ எடுத்து விடாதீர்கள். மீறினால், காவலர் வந்து உங்களை சரசரவென்று வெளியே இழுத்து கொண்டுபோய் விடுவார்.

அப்பகுதிக்கு அருகிலேயே யூதர்களின் ஒரு பழைய கல்லறைத் தோட்டம் உள்ளது. அதன் கதவு வழியாக பார்த்தால் எபிரெய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கல்லறைகளை காணலாம். அதற்கு பக்கத்திலேயே ஜூயிஷ் டவுன் ஹால் உள்ளது. அங்கே இரண்டு கடிகாரங்கள் உள்ளன​—⁠ஒன்றில் ரோம எண்கள் உள்ளன, மற்றொன்றில் எபிரெய எழுத்துக்கள் உள்ளன.

அருகில் அமைந்திருப்பது பின்காஸ் ஜெபாலயம். “அது நாசிக்களின் காஸ் சேம்பர்களில் பலியான 77,297 பொஹிமிய மற்றும் மொராவிய யூதர்களின் நினைவாலயமாக உள்ளது.” அவர்களுடைய பெயர்களும் ப்ராக்கைச் சேர்ந்த 36,000 யூதர்களின் பெயர்களும் அதன் உட்சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன.​—⁠ப்ராக் ஆர்ட் அண்ட் ஹிஸ்டரி.

பண்டைய “நியூ டவுன்”

நாம் பார்க்கப் போகிற கடைசி பகுதி நியூ டவுன் (நோவெ மிஸ்டோ). இது நியூ டவுன் அதாவது புதிய நகரம் என அழைக்கப்பட்டாலும், உண்மையில் நான்காம் சார்ல்ஸ் என்பவரால் ஒரு குதிரை சந்தையாக 1348-ஆம் ஆண்டிலேயே நிறுவப்பட்டது. இங்குள்ள மிகவும் பெயர்பெற்ற இடம்தான் வென்சஸ்லாஸ் ஸ்கொயர். “தற்கால ப்ராக்கின் வாடிக்கையாளர் மையம்” என இது விவரிக்கப்படுகிறது. ஆர்ட்னூவோ பாணியில் அமைந்த முகப்புகளை உடைய சில கட்டடங்கள் இங்கு உள்ளன; உதாரணத்திற்கு அழகான இவ்ரோபா ஹோட்டலின் முகப்பு இப்பாணியில் அமைந்துள்ளது. ஆனால் இங்கு அதைவிட முக்கியமான ஒன்று உள்ளது. அதுதான் குதிரை மீது வென்சஸ்லாஸ் சவாரி செய்வது போன்ற வடிவில் 1912-⁠ல் நிறுவப்பட்ட சிலை.

ப்ராக்கின் பாரம்பரிய கலைகளை, முக்கியமாக இசைக் கலையை ரசிக்காமல் நம் விஜயத்தை முடிக்க முடியாது. ஆகவே, நேஷனல் தியேட்டருக்கும் ஸ்டேட் ஓப்ராவுக்கும் போகத் தவறாதீர்கள். அன்டானின் ட்வார்ஸாக் என்பவரின் “நியூ உவர்ல்ட் சிம்ஃபோனியை” லட்சக்கணக்கான கிளாஸிக்கல் இசை விரும்பிகள் கேட்டிருக்கிறார்கள். சிகப்பு மற்றும் மஞ்சள் வர்ணம் பூசப்பட்ட பரோக் பாணியிலான மாளிகையில் ட்வார்ஸாக் மியூசியம் அமைந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். “செக் இசையின் தந்தை” என அறியப்பட்ட பெடர்ஷிக் ஸ்மெட்டானா, “செக் மக்களின் இதயத்தை பிரதிபலிக்கும் இசையமைப்பாளர்” என ஃபிரான்ஸ் லிஸ்ட் எழுதினார். மா வ்லாஸ்ட் (எனது தாயகம்) என அழைக்கப்படும் ஒரே தலைப்புடைய பாடல்களின் தொகுப்பை இயற்றியவர் என்ற தனிப் பெயர் ஸ்மெட்டானாவுக்கு உண்டு; வல்டவா என அழைக்கப்படும் அதன் ஒரு பகுதி ப்ராக்கில் ஓடும் ஆற்றைப் பற்றி வருணிக்கிறது. ஸ்மெட்டானா மியூசியம் ஓல்ட் டவுனிலுள்ள ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது.

ப்ராக்கில் பார்த்து மகிழ்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. அவற்றை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். ஆம், ஆயிரமாண்டு சரித்திரத்தையும் கலாச்சாரத்தையும் வந்து பாருங்கள்! (g03 11/08)

[அடிக்குறிப்பு]

[பக்கம் 21-ன் பெட்டி/படம்]

வானசாஸ்திர கடிகாரம்

இந்தக் கடிகாரத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. சரியாக ஒரு மணிநேரம் ஆனதும் மேற்பகுதியில் உள்ள இரு ஜன்னல்கள் திறக்கின்றன; அப்போது, 12 அப்போஸ்தலர்கள் பவனி செல்வதை காண முடிகிறது. ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், யூதாஸ் காரியோத்துக்கும் அல்பேயுவின் மகன் யாக்கோபுக்கும் பதிலாக பவுலும் பர்னபாவும் அதில் காணப்படுகிறார்கள்; பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள 12 அப்போஸ்தலர்களில் இவர்கள் இருவரும் இடம்பெறுவதில்லை. அந்த அப்போஸ்தலர்களின் உருவங்களுக்கு சற்று கீழே சாவின் சின்னமான ஓர் எலும்புக்கூடு காணப்படுகிறது. அந்தக் கடிகாரத்தில் முதலாவதாக அசைவது அந்த எலும்புக்கூடுதான். அதற்கு பின்னரே அப்போஸ்தலர்களின் உருவங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. அந்த எலும்புக்கூடு தன் இடது கையிலுள்ள மணல் கடிகாரத்தை உயர்த்துகிறது, பிறகு அதை கவிழ்க்கிறது. இப்போது வேறு உருவங்களும் அசைகின்றன: கூவும் கோழி, தலையாட்டும் துருக்கியன், கண்ணாடியில் தன்னையே பார்த்துக்கொள்ளும் மாயை, பேராசையுடன் வட்டிக்கு பணம் கொடுப்பவருடைய வடிவில் பேராசை ஆகியவை சித்தரித்துக் காட்டப்படுகின்றன.

இது போக, மூன்று வித்தியாசமான நேரங்களையும் இந்தக் கடிகாரம் காட்டுகிறது​—⁠அரபிக் எண்களில் பழங்கால பொஹிமிய நேரத்தையும், ரோம எண்களில் நவீன நேரத்தையும், பாபிலோனிய முறைப்படி பகல் நேரத்தின் 12 பாக பிரிவையும் காட்டுகிறது. இந்த ஆடம்பரமான கடிகாரத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஏன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்!

[பக்கம் 21-ன் தேசப்படம்]

மத்திய ப்ராக்

ப்ராக் கோட்டை மற்றும் ஹிராட்சானி

லிட்டில் க்வாட்டர்

வல்டவா ஆறு

ஜூயிஷ் க்வாட்டர்

ஓல்ட் டவுன்

நியூ டவுன்

[பக்கம் 20-ன் படம்]

எபிரெய எழுத்துக்களில் டெட்ராக்ரமாட்டன் உள்ளது

[பக்கம் 22-ன் படம்]

பரோக் பாணியிலான ஆர்ட்னூவோ அரண்மனை

[பக்கம் 22, 23-ன் படம்]

சார்ல்ஸ் பாலம்

[பக்கம் 23-ன் படம்]

ஓல்ட் டவுன் ஹால் க்ளாக் டவரும் செ. நிக்கோலஸ் சர்ச்சும்

[பக்கம் 23-ன் படம்]

செ. வைட்டஸ் சர்ச்சின் உட்புறக் காட்சி

[பக்கம் 23-ன் படம்]

வென்சஸ்லாஸ் ஸ்கொயர்