Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் எவ்வாறு சிறந்த பேச்சாளராக முடியும்?

நான் எவ்வாறு சிறந்த பேச்சாளராக முடியும்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

நான் எவ்வாறு சிறந்த பேச்சாளராக முடியும்?

“நான் செய்கிற ஒவ்வொரு தப்பையும் என் பயத்தையும் மற்றவர்கள் உற்று கவனித்ததாக கற்பனை செய்துகொண்டேன். அதனால் நான் என்ன பேசுகிறேன் என்பதில் கவனம் செலுத்த முடியவில்லை. அவர்கள் மனசுக்குள்ளே சிரிப்பதுபோல எனக்குத் தோன்றியது.”​—⁠சாண்டி. *

பள்ளி ஆடிட்டோரியம் நிரம்பி வழிகிறது. ஒலிபெருக்கியில் உங்கள் பெயர் அறிவிக்கப்படுவதை நீங்கள் கேட்கிறீர்கள், சட்டென்று எல்லாருடைய கண்களும் உங்களையே மொய்க்கின்றன. இரண்டு எட்டு எடுத்து வைத்தால் மேடை, ஆனால் உங்களுக்கோ அது பல கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது போல் தெரிகிறது. உங்கள் கைகள் வியர்க்க ஆரம்பிக்கின்றன, உங்கள் கால்கள் துவண்டுவிட்டதைப் போல் உணர்கிறீர்கள், காரணமே இல்லாமல் திடீரென வாய் வறண்டுவிட்டதைப் போல் தோன்றுகிறது. பிறகு, பெரிய வியர்வைத் துளி ஒன்று, நீங்கள் துடைப்பதற்குள் உங்கள் கன்னத்தில் வழிய ஆரம்பிக்கிறது. எவ்வளவு தர்மசங்கடமான நிலை! படபடவென சுட்டுத் தள்ளும் இராணுவ அணிவகுப்பின் முன் நீங்கள் போய் நிற்கப் போவதில்லை என தெரிந்திருந்தாலும் அதைப் போன்ற உணர்வுதான் உங்களுக்கு ஏற்படுகிறது.

மற்றவர்களுக்கு முன்பாக நின்று பேச்சு கொடுப்பதை நினைத்தாலே போதும் நம்மில் பெரும்பாலோருக்கு குலைநடுங்கும் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். (எரேமியா 1:5, 6) மற்றவர்களுக்கு முன்பாக பேச்சு கொடுப்பதைவிட சாகிறதே மேலென நினைக்குமளவுக்கு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்! ஆனால், நீங்கள் அதைப் பற்றி எப்படி நினைத்தாலும் சரி, மற்றவர்களுக்கு முன்பாக பேசுவதில் ஆர்வம் காட்டுவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இப்போது சிந்தித்து, நீங்களும்கூட எவ்வாறு சிறந்த பேச்சாளராக முடியும் என்பதைக் கண்டறிவோமாக.

பேச்சு கொடுக்க அழைக்கப்படுகையில்

“பேச்சுக் கொடுப்பது ஒரு கலை, இது எல்லாருக்கும் தேவை.” பேச்சாளர் பயிற்சிக்கான ஒரு விளம்பரம் இது. ஆம், என்றாவது ஒருநாள் நீங்கள் மற்றவர்களுக்கு முன்பாக பேசத்தான் வேண்டும். ஏனென்றால் மற்றவர்களுக்கு முன்பாக பேசுவதற்கு அநேக பள்ளிகளிலும் ஊக்கமளிக்கப்படுகிறது. “பள்ளியில் என் வகுப்பிலுள்ளவர்களுக்கு முன்பாக நின்று அநேக முறை பேச வேண்டியிருந்தது” என டாடியானா என்ற இளம் பெண் சொல்கிறாள். அறிக்கைகளை வாசிப்பது, புத்தகத்திலுள்ளதை தொகுத்தளிப்பது முதல் மல்டி மீடியா பிரசன்டேஷன்கள், பட்டிமன்றங்களில் உரையாடுவது வரை பலவித பேச்சுக்களைக் கொடுக்க பெரும்பாலும் மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

படித்து முடித்து வேலைக்கு செல்லும் காலத்தில் உடன் வேலை செய்பவர்களுக்கு ஒரு வகுப்பு நடத்துவதற்கு, ஒரு விஷயத்தை வாடிக்கையாளருக்கு விளக்குவதற்கு, செயற்குழுவினர் முன்பாக நிதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நீங்கள் அழைக்கப்படலாம். இதழியல், நிர்வாகம், மக்கள் தொடர்பு, விற்பனை உட்பட பலதரப்பட்ட வேலைகளுக்கும் பேச்சு கொடுக்கும் திறமை உண்மையில் பயனுள்ளதாக இருக்கிறது.

ஒருவேளை நீங்கள் தொழிலாளியாக அல்லது அலுவலகத்தில் கிளார்க்காக வேலை செய்ய தீர்மானித்தால் அப்போது என்ன? உங்களுக்கு வேலை கிடைப்பதும் கிடைக்காததும் நேர்முக தேர்வில் நீங்கள் நன்கு பேச அறிந்திருக்கிறீர்களா இல்லையா என்பதைப் பொறுத்ததே. வேலை செய்கையிலும்கூட திறமையாக உங்கள் கருத்தை சொல்வது ‘பிளஸ் பாயிண்டாக’ இருக்கும். பள்ளி படிப்பை முடித்த பின்பு கரீன் என்பவள் மூன்று வருடம் வெயிட்ரஸாக வேலை செய்தாள். ““உங்களுக்குப் பேச்சு திறமை இருந்தால் முதிர்ச்சியுள்ளவராக, அதிக பொறுப்புணர்ச்சியுள்ளவராக கருதப்படுவீர்கள். இதனால் நல்ல வேலை, கை நிறைய சம்பளம், அல்லது அதிக மதிப்பு மரியாதையாவது கிடைக்கும்” என சொல்கிறாள்.

அதுமட்டுமல்ல, மற்றவர்களுக்கு முன்பாக இளம் கிறிஸ்தவர்கள் பேசுவது அவர்களுடைய வணக்கத்தின் பாகமான ஒன்று. (எபிரெயர் 10:23) “தெள்ளத் தெளிவாக பேசுவது மிக முக்கியம். நாம் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் சிலாக்கியம் பெற்றிருக்கிறோம்” என்கிறாள் டானிஷா. (மத்தேயு 24:14; 28:19, 20) தாங்கள் “கண்டவைகளையும் கேட்டவைகளையும்” குறித்து சபையிலும், வெளி ஊழியத்திலும் இளம் கிறிஸ்தவர்களால் ‘பேசாமலிருக்க முடியாது.’​—⁠அப்போஸ்தலர் 4:20; எபிரெயர் 13:15.

ஆகவே நன்கு பேசும் திறமைகளை வளர்த்துக்கொள்வது உங்களுக்குப் பல விதங்களில் கைகொடுக்கும். இருப்பினும், மற்றவர்களுக்கு முன்பாக நின்று பேசும் எண்ணமே உங்களுக்கு ஒருவேளை இன்னும் கவலையைத் தரலாம். உங்கள் பயத்தை சமாளிக்க ஏதேனும் வழி இருக்கிறதா? இருக்கிறது.

உங்கள் பயத்தை சமாளித்தல்

“சிறந்த பேச்சாளராவதற்கு நீங்கள் அறிவாளியாகவோ பரிபூரணமானவராகவோ இருக்க அவசியமில்லை. மற்றவர்களுக்கு முன்பாக பேசுவதன் நோக்கம் இதுவே: மதிப்புமிக்க ஒன்றை உங்கள் கூட்டத்தாருக்குக் கொடுப்பது” என்கிறார் மனச்சோர்வுக்கு சிகிச்சை அளிக்கும் நிபுணரும் தேர்ச்சி பெற்ற பேச்சாளருமான டாக்டர் மார்டின் சி. ஆர்மன். வேறு வார்த்தைகளில் சொன்னால், கவனம் முழுவதும் சொல்லும் செய்தியிடம் இருக்க வேண்டும், உங்களிடமோ உங்கள் கவலைகளிடமோ இருக்கக் கூடாது. அப்போஸ்தலன் பவுல் நாவன்மைமிக்க பேச்சாளரல்ல என முதல் நூற்றாண்டிலிருந்த சிலர் நினைத்தார்கள்; ஆனால் எப்போதும் மதிப்புமிக்க ஏதாவதொரு விஷயத்தை அவர் சொல்லிக் கொண்டே இருந்ததால் அவரது பேச்சு திறம்பட்டதாகவே இருந்தது. (2 கொரிந்தியர் 11:6) அதேவிதமாக, உண்மையிலேயே நீங்கள் நம்பும் முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசுகையில் உங்கள் பயம் பஞ்சாய் பறந்துவிடும்.

பிரபல பேச்சாளரும் பயிற்சியாளருமான ரான் சட்ஹாஃப் என்பவர் தரும் ஆலோசனை இதுவே: நீங்கள் பேச்சு கொடுப்பதை ஒரு நிகழ்ச்சியாக கருதாதீர்கள். அதை உரையாடலாக கருதுங்கள். உங்கள் பார்வையாளர்களிடம் பேச முயலுங்கள்; ஆனால் மொத்த ஆட்களையும் பார்த்து பேசாமல் சாதாரணமாக உரையாடுகையில் செய்வதைப் போல் தனிப்பட்ட நபர்களை பார்த்து பேசுங்கள். உங்கள் கூட்டத்தாரிடம் ‘தனிப்பட்ட அக்கறை’ காட்டுங்கள், இயல்பாக பேசுவது போல் அவர்களிடம் பேசுங்கள். (பிலிப்பியர் 2:3, 4, NW) உங்கள் பேச்சு எந்தளவுக்கு உரையாடல் பாணியில் இருக்கிறதோ அந்தளவுக்கு நீங்கள் பதறாமல் இயல்பாக இருப்பீர்கள்.

தவறுதலாக பேசிவிடுவோமோ, பார்வையாளர்கள் குதர்க்கமாக ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்ற பயமே கவலைக்கு மற்றொரு பொதுவான காரணமாகும். பார்வையாளர்கள் ஒவ்வொரு பேச்சையும் நல்ல எண்ணத்தோடுதான் கேட்கிறார்கள் என தேர்ச்சி பெற்ற பேச்சாளரும் பயிற்சியாளருமான லெனி லஸ்காவ்ஸ்கி என்பவர் நமக்கு நினைப்பூட்டுகிறார். “நீங்கள் சிறப்பாக பேச வேண்டும், அதில் நீங்கள் தவறிவிடக் கூடாது என்றே அவர்கள் விரும்புகிறார்கள்” என்கிறார் லஸ்காவ்ஸ்கி. எனவே நல்லதையே நினையுங்கள். முடிந்தால் கூட்டத்தார் வருகையில் அவர்களில் சிலரைப் போய் சந்தித்து பேசுங்கள். பகைவர்களாக அல்ல, ஆனால் நண்பர்களாக அவர்களைப் பார்க்க முயலுங்கள்.

பயப்படுவது தவறென ஒரேயடியாக சொல்லிவிட முடியாது என்பதையும் நினைவில் வையுங்கள். “பொதுவாக நிலவும் கருத்துக்கு மாறாக, பயப்படுவது உங்களுக்கும் உங்கள் பேச்சிற்கும் நல்லதுதான்” என்கிறார் ஒரு நிபுணர். ஏன்? ஏனென்றால் ஓரளவு பயமிருப்பது அடக்கமிருப்பதைக் காட்டுகிறது; இது உங்கள்மீது மட்டுக்குமீறிய தன்னம்பிக்கை வைக்காதிருக்க உதவுகிறது. (நீதிமொழிகள் 11:2) உண்மையில் கொஞ்சம் பயமிருப்பது தங்களை நன்கு செயல்பட வைப்பதாக அநேக விளையாட்டு வீரர்களும், இசைக் கலைஞர்களும், நடிகர்களும் உணருகிறார்கள்; பேச்சு கொடுப்பதைப் பொறுத்ததிலும் இதுவே உண்மை.

சிறப்பாக பேசுவதற்கு டிப்ஸ்

இந்த டிப்ஸையும் மற்ற ஆலோசனைகளையும் கடைப்பிடித்ததால் பள்ளியிலும், வேலை செய்யுமிடத்திலும், சபையிலும் சிறப்பாக பேச்சு கொடுப்பதில் கிறிஸ்தவ இளைஞர்கள் சிலர் ஏற்கெனவே ஓரளவு அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவிய சில டிப்ஸ் உங்களுக்கு உதவுமா என பாருங்களேன்.

ஜேட்: “சொந்த வார்த்தையில் பேச முயலுங்கள். பேசப் போகும் விஷயம் மிகவும் பயனுள்ளது என்பதை நீங்கள் முழுமையாக நம்புங்கள். உங்கள் பேச்சு முக்கியமான ஒன்று என நீங்கள் நினைத்தால் பார்வையாளர்களும் அப்படியே நினைப்பார்கள்.”

ராஷெல்: “நான் பேசுவதை வீடியோ எடுத்துப் பார்ப்பது எனக்கு உதவியாக இருந்திருக்கிறது. அப்போது செய்கிற தவறு தெரிந்துவிடும், ஆனால் அது உபயோகமாக இருக்கும். மேலும் உங்களுக்குப் பிடித்தமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து பேச முயலுங்கள். அது உங்கள் பேச்சில் தானாகவே தெரிந்துவிடும்.”

மார்கரட்: “வார்த்தைக்கு வார்த்தை எழுதி வைத்து பேசாமல் குறிப்புத்தாளை வைத்து பேசுகையில் இயல்பாக, உரையாடல் பாணியில் பேச என்னால் முடிகிறது. அதோடுகூட பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்பாக நன்கு இழுத்து மூச்சுவிடுவது என்னுடைய டென்ஷனை குறைக்கிறது.”

கரீன்: “பேசும்போது தவறுதலாக ஏதாவது சொல்லிவிட்டால் சிரித்துக் கொள்வது நல்லது. யார்தான் தவறு செய்யாமலிருக்கிறார்கள்? முடிந்த மட்டும் நன்றாக பேச முயலுங்கள்.”

போட்டி விளையாட்டானாலும் கலையானாலும் இசையானாலும் எந்த விஷயமானாலும் சரி, அனுபவத்திற்கும் நல்ல பயிற்சிக்கும் வேறெதுவுமே ஈடாகாது. பேசிப் பழகிப் பார்ப்பதற்கு போதுமான நேரம் இருக்கும் விதத்தில் பேச்சை வெகு முன்னதாகவே தயாரிக்கும்படி டாடியானா சிபாரிசு செய்கிறாள். முயற்சியை கைவிட்டு விடாதீர்கள். “மற்றவர்களுக்கு முன்பாக எந்தளவுக்கு அடிக்கடி பேச்சு கொடுக்கிறேனோ அந்தளவுக்கு என் பயம் குறைகிறது” என்கிறாள் அவள். முக்கியமாக மெய் வணக்கம் சம்பந்தமாக பேசும்படி அழைக்கப்படுகையில் இன்னொரு உதவியையும் நீங்கள் பெற முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது.

உரையாடுவதில் தலைசிறந்தவர் அளிக்கும் உதவி

இஸ்ரவேலின் ராஜாவாக ஆகவிருந்த இளம் தாவீது ‘பேச்சுத் திறன் உடையவர்’ என ஏற்கெனவே நற்பெயர் பெற்றிருந்தார். (1 சாமுவேல் 16:18, பொது மொழிபெயர்ப்பு) ஏன்? இளம் வயதில் ஆடுகளை மேய்க்கையில் அதிக நேரத்தை வெட்டவெளியில் கழிக்க நேர்ந்த சமயங்களில், உரையாடுவதில் தலைசிறந்து விளங்கிய யெகோவா தேவனுடன் ஜெபத்தின் மூலம் அவர் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டார். (சங்கீதம் 65:2) எனவே இந்த உறவு கடினமான சூழ்நிலைகளில்கூட தெள்ளத் தெளிவாகவும், திடமாகவும், ஆதாரம் காட்டி இணங்க வைக்கும் விதத்திலும் பேசுவதற்கு அவரை தயார்படுத்தியது.​—⁠1 சாமுவேல் 17:34-37, 45-47.

வணக்க விஷயத்தில், ஆதாரம் காட்டி இணங்க வைக்கும் விதத்தில் பேச தாவீதுக்கு கடவுள் உதவியதைப் போலவே “கல்விமானின் நாவைத் தந்தருளி” உங்களுக்கும் உதவுவார் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். (ஏசாயா 50:4; மத்தேயு 10:18-20) பேச்சு திறமையை வளர்த்துக்கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை இப்போது பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நீங்களும் சிறந்த பேச்சாளராக ஆகலாம்! (g03 12/22)

[அடிக்குறிப்பு]

^ பாரா. 3 சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 18-ன் பெட்டி]

பேச்சாளர்களாக பயிற்றுவிக்கப்படுதல்

உலகெங்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் தேவராஜ்ய ஊழியப் பள்ளி என்ற நிகழ்ச்சியில் வாரா வாரம் பைபிள் அடிப்படையிலான போதனை அளிக்கப்படுகிறது. இந்தப் பள்ளியில், மாணாக்கர்கள் கலந்துகொண்டு, சபையாருக்கு முன்பாக பேச்சுக்களைக் கொடுக்கிறார்கள், அவர்கள் முன்னேற்றம் செய்வதற்கு தனிப்பட்ட உதவியையும் பெறுகிறார்கள். இந்தப் பள்ளி பயனுள்ளதாக இருக்கிறதா? 19 வயது கிறிஸ் தன் அனுபவத்தை சொல்வதை கேளுங்கள்.

“இந்தப் பள்ளியில் பங்குகொள்ள ஆரம்பிப்பதற்கு முன்பு மற்றவர்கள் மத்தியில் இருப்பதற்கு ரொம்ப கூச்சப்படுவேன். அப்படிப்பட்ட நான் கூட்டத்தாருக்கு முன்பாக மேடையில் நின்று பேசுவேன் என கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால், பேச்சு முழுவதும் திக்கி திக்கியே பேசினாலும் ரசித்துக் கேட்போம் என சொல்லி சபையிலிருந்த சிலர் என்னை உற்சாகப்படுத்தினார்கள்; அங்கு வந்து பேச்சு கொடுப்பதற்கு எந்தளவுக்கு நான் முயற்சி எடுத்திருப்பேன் என்பதை புரிந்துகொள்வதாக சொன்னார்கள். பிறகு ஒவ்வொரு தடவை பேச்சு கொடுத்த பிறகும் அவர்கள் என்னைப் பாராட்டினார்கள். அது எனக்குப் பெரும் உதவியாய் இருந்தது” என்கிறார் கிறிஸ்.

இன்று, அந்தப் பள்ளியில் பங்கெடுக்க ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் கழித்து, கிறிஸ் முதன்முதலாக 45 நிமிட பேச்சை கொடுக்கப் போகிறார். இந்த ஏற்பாட்டை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறீர்களா?

[பக்கம் 16, 17-ன் படங்கள்]

சிறந்த பேச்சாளராக இருப்பது வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் உங்களுக்கு உதவும்