Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வரிகள் “நாகரிக சமுதாயத்திற்காக” செலுத்தும் விலை?

வரிகள் “நாகரிக சமுதாயத்திற்காக” செலுத்தும் விலை?

வரிகள்—“நாகரிக சமுதாயத்திற்காக” செலுத்தும் விலை?

“நாகரிக சமுதாயத்திற்காக நாம் செலுத்துவதே வரிகள்.”​—⁠வாஷிங்டன், டி.சி.-யில் உள்நாட்டு வருவாய் துறை கட்டிடத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ள வாசகம்.

வரிகள் என்பது அவசியமான ஆனால் விரும்பத்தகாத ஒன்று​—⁠“நாகரிக சமுதாயத்திற்காக” செலுத்தும் விலை​—⁠என அரசாங்கங்கள் வலியுறுத்திக் கூறுகின்றன. இந்தக் கருத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும்சரி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்சரி, இந்த விலை பெரும் விலையே என்பதை மறுக்க முடியாது.

நேர்முக வரி, மறைமுக வரி என வரிகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். நேர்முக வரிகளுக்கு உதாரணங்கள்: வருமான வரி, வணிக வரி, சொத்து வரி. இவற்றில் வருமான வரியே ஒருவேளை மிகவும் கசப்பானதாக கருதப்படுகிறது. முக்கியமாக, வருமான வரி படிப்படியாக உயர்ந்துகொண்டே போகிற நாடுகளில் இவ்வாறு கருதப்படுகிறது​—⁠நீங்கள் எந்தளவுக்கு சம்பாதிக்கிறீர்களோ அந்தளவுக்கு அதிக வரியை நீங்கள் செலுத்துகிறீர்கள். உயர்ந்துகொண்டே போகும் வரி விகிதம் கடின உழைப்பிற்கும் வெற்றிக்கும் அபராதம் விதிப்பது போல் இருப்பதாக விமர்சகர்கள் வாதிடுகிறார்கள்.

“சம்பளம் வாங்குகிறவர்கள் மத்திய அரசாங்கத்திற்கு வருமான வரி செலுத்துவதோடு, உள்ளூர், மண்டல, மாகாண அல்லது மாநில வருமான வரிகளையும் கட்ட வேண்டியதாயிருக்கலாம்” என பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிகளுக்கான அமைப்பு வெளியிடும் ஒரு பிரசுரமாகிய OECD அப்ஸர்வர் நினைப்பூட்டுகிறது. “இதுவே பெல்ஜியம், கனடா, ஐஸ்லாந்து, ஜப்பான், கொரியா, ஸ்கான்டிநேவியா, ஸ்பெய்ன், ஸ்விட்சர்லாந்து, ஐக்கிய மாகாணங்கள் போன்ற நாடுகளில் நடக்கிறது” என்றும் அது சொல்கிறது.

விற்பனை வரி, மதுபானம், சிகரெட்டுகள் மீதான வரி, ஏற்றுமதி இறக்குமதி பொருட்கள் மீதான வரி ஆகியவையே மறைமுக வரிகள். நேர்முக வரிகளைப் போல இவை பளிச்சென தெரிவதில்லை, என்றாலும் இவை முக்கியமாக ஏழைகள் மீது பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். இந்தியாவின் வரிகளில் பெரும்பாலானவற்றை நடுத்தர வர்க்கத்தினரும் பணக்காரர்களுமே செலுத்துகிறார்கள் என்பது ஒரு கட்டுக்கதை என ஃப்ரன்ட்லைன் என்ற இந்திய பத்திரிகையில் ஜெயாலி கோஷ் என்ற எழுத்தாளர் வாதிடுகிறார். கோஷ் கூறுகிறார்: “மாநில அரசாங்கங்களுக்கு, மறைமுக வரிகள் என்பது அவர்களுடைய மொத்த வரி வசூலிப்பில் 95 சதவீதத்திற்கும் அதிகமான தொகைக்கு சமம். . . . உண்மையில் பணக்காரர்களைவிட ஏழைகளே தங்களுடைய வருமானத்தில் அதிக பணத்தை வரிகளாக செலுத்துகிறார்கள்.” பொதுமக்கள் பெரும்பாலோர் பயன்படுத்தும் பொருட்களாகிய சோப்பு, உணவுப் பொருட்கள் போன்றவற்றிற்கு அதிக வரிகள் விதிக்கப்படுவதால் இந்த வேற்றுமை உண்டாகிறது.

வசூலிக்கும் எல்லா பணத்தையும் அரசாங்கங்கள் என்னதான் செய்கின்றன?

பணம் எங்கே போகிறது

அரசாங்கங்கள் செயல்படுவதற்கும் தேவையான சேவைகளை வழங்குவதற்கும் ஏராளமான பணம் செலவாகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உதாரணமாக, பிரான்சில் நான்கில் ஒருவர் அரசு நிறுவனங்களில் வேலை பார்க்கிறார். இதில் ஆசிரியர்கள், தபால் ஊழியர்கள், அருங்காட்சியகம் மற்றும் ஆஸ்பத்திரி பணியாளர்கள், போலீஸ், பிற அரசாங்க வேலையாட்கள் ஆகியோர் அடங்குவர். அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு வரிப் பணம் தேவை. சாலைகள் அமைப்பதற்கும், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டுவதற்கும், குப்பைகளை அகற்றுவது, தபால் பட்டுவாடா போன்ற சேவைகளுக்கும் வரிப் பணம் தேவைப்படுகின்றன.

இராணுவ செலவுகளும் வரிகள் விதிக்கப்படுவதற்கு மற்றொரு முக்கியமான காரணமாகும். 1799-⁠ல் பிரான்சுக்கு எதிராக போர் தொடுப்பதற்குத் தேவையான நிதிக்காக செல்வமிக்க பிரிட்டிஷ்காரர்கள் மீது முதலில் வருமான வரி விதிக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது, தொழிலாளர் வர்க்கத்தினரிடமிருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கம் வருமான வரியை வசூலிக்க ஆரம்பித்தது. இன்று, சமாதான காலங்களில்கூட இராணுவ படைகளுக்கு நிதி ஒதுக்குவது செலவுபிடித்த சமாச்சாரமாக தொடர்ந்து இருந்து வருகிறது. 2000-⁠ல் இராணுவத்திற்கு உலகளவில் செய்யப்பட்ட செலவு கிட்டத்தட்ட 79,800 கோடி டாலர் என ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம் கணக்கிட்டது.

சமூக திட்டம்

மக்களுடைய குறிப்பிட்ட சில நடத்தைகளை உற்சாகப்படுத்தும் அல்லது தடுக்கும் ஒரு கருவியாகவும் வரிகள் செயல்படுகின்றன. உதாரணமாக, மதுபானங்களுக்கு வரி விதிப்பது மிதமீறி குடிப்பதை குறைக்கும் என கருதப்படுகிறது. இதனால், பல நாடுகளில் பியர் விலையில் சுமார் 35 சதவீதம் வரிப் பணமாக செலுத்தப்படுகிறது.

புகையிலைப் பொருட்கள் மீதும் நிறைய வரி விதிக்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில், ஒரு சிகரெட் பாக்கெட்டின் விலையில் 45 முதல் 50 சதவீதம் வரிப் பணமாக போகிறது. என்றாலும், அரசாங்கம் குடிமக்களின் நலனில் அக்கறை கொள்வதாலேயே எப்பொழுதும் இத்தகைய வரிகளை விதிப்பதாக சொல்ல முடியாது. “பெரும் பொருளாதார சக்தியாகிய [புகையிலை] விற்பனையால் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி டாலரும், அதற்கு விதிக்கப்படும் வரியால் கூடுதலாக நூற்றுக்கணக்கான கோடி டாலரும் கிடைக்கிறது” என வெளியுறவுக் கொள்கை என்ற ஆங்கில பத்திரிகையில் கென்னத் வார்னர் என்ற எழுத்தாளர் கூறுகிறார்.

சமூக திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க ஓர் உதாரணம் 20-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்தது. ஐ.மா. சட்டம் இயற்றுவோர் செல்வச் செழிப்புமிக்க பரம்பரைகள் உருவாவதை தடுக்க முனைந்தனர். எப்படி? சொத்து வரி விதிப்பதன் மூலமே. பணக்காரர் ஒருவர் சாகும்போது, அவருடைய சொத்திலிருந்து பெரும் தொகையை வரிகள் விழுங்கிவிடுகின்றன. “செல்வச் சீமான்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த பணம் நாட்டு மற்றும் குடிமக்களுடைய நன்மைக்காக பயன்படுத்தப்படுகிறது” என இதை ஆதரிப்போர் வாதிடுகின்றனர். இருக்கலாம் என்றாலும், சொத்து வரியை குறைப்பதற்கு பணக்காரர்கள் பல்வேறு உபாயங்களை கண்டுபிடித்திருக்கின்றனர்.

சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு சமூக வளர்ச்சிகளுக்கு வரிகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சூழியல் பத்திரிகை (ஆங்கிலம்) இவ்வாறு அறிவிக்கிறது: “சமீபத்தில், ஒன்பது மேற்கு ஐரோப்பிய நாடுகள் சுற்றுச்சூழல் வரிகளை அமல்படுத்தியிருக்கின்றன, இவை பெரும்பாலும் காற்று மாசுகளை குறைப்பதற்கு ஒரு வழியாக பயன்படுத்தப்படுகின்றன.” முன்பு குறிப்பிடப்பட்ட படிப்படியாக உயரும் வருமான வரிகள் (Progressive income taxes) சமூக திட்டத்தால் விளைந்த மற்றொரு முயற்சி; இது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள பிளவை குறைப்பதற்கு கொண்டுவரப்பட்ட யோசனை. தர்ம ஸ்தாபனங்களுக்கு நன்கொடை வழங்குகிறவர்களுக்கு அல்லது பிள்ளைகளையுடைய தம்பதிகளுக்கு சில அரசாங்கங்கள் வரி விலக்கு அளிக்கின்றன.

ஏன் அவ்வளவு சிக்கலானவை?

புதிதாக வரி விதிக்கப்படும் போதெல்லாம், சட்டம் இயற்றுபவர்கள் வரிச் சட்டங்களில் எந்தவித ஓட்டைகளும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள முயலுகின்றனர். ஏனென்றால் எக்கச்சக்கமான பணம் நஷ்டமடையும் ஆபத்து இருக்கிறது. விளைவு? வரிச் சட்டங்கள் சிக்கலானவையாகவும் மிகவும் நுட்பமானவையாகவும் ஆகிவிடுகின்றன. ஐ.மா. வரிச் சட்டத்திலுள்ள பல சிக்கல்கள் “வருவாயை வரையறுப்பதில் ஏற்படுகின்றன,” அதாவது எதற்கெல்லாம் வருமான வரி போடுவது என்பதை தீர்மானிப்பதில் ஏற்படுகின்றன என டைம் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை கூறுகிறது. “பல்வேறு கழிவுகளும் விலக்குகளும் அளிப்பது” சம்பந்தமாக ஏகப்பட்ட சட்டங்களைப் போடுவதாலும் கூடுதலான சிக்கல்கள் வருகின்றன. ஆனால் வரிச் சட்டங்களில் இவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்தியிருப்பது ஐக்கிய மாகாணங்கள் மட்டுமல்ல. பிரிட்டனின் வரிச் சட்டத்திற்குரிய ஒரு சமீப பதிப்பு, 9,521 பக்கங்கள் கொண்ட பத்து தொகுப்புகளாக வெளியிடப்பட்டது.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உள்ள வரிக் கொள்கை ஆராய்ச்சி அலுவலகம் இவ்வாறு அறிவிக்கிறது: “ஒவ்வொரு ஆண்டும் ஐ.மா.-வில் வரி செலுத்துபவர்கள் 300 கோடிக்கும் அதிகமான மணிநேரத்தை தங்களுடைய வருமான வரி விவர அறிக்கைகளை நிரப்புவதில் செலவிடுகின்றனர். . . . மொத்தமாக, ஐ.மா.-வில் வரி செலுத்துபவர்கள் ஒவ்வொரு வருடமும் [வரி விவர அறிக்கைகளை நிரப்புவதற்கு] செலவிடும் நேரம் மற்றும் பணம் 10,000 கோடி டாலருக்கு சமமாகும், அல்லது வரி வசூலிக்கப்பட்ட தொகையில் சுமார் 10 சதவீதமாகும். இந்த செலவுகளெல்லாம் தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும் சிக்கலான வருமான வரிச் சட்டத்தின் விளைவாகும்.” இந்தத் தொடரில் வரும் முதல் கட்டுரையின் அறிமுகத்தில் குறிப்பிடப்பட்ட ரூபன் இவ்வாறு கூறுகிறார்: “பொதுவாக நானே என்னுடைய ‘ரிட்டர்ன்ஸை’ நிரப்ப முயற்சி செய்வது என்னுடைய வழக்கம், ஆனால் அது நிறைய நேரத்தை சாப்பிடுவதாக இருந்தது, அதோடு நான் கட்ட வேண்டிய பணத்திற்கும் அதிகமாய் கட்டியதாகவும் உணர்ந்தேன். ஆகவே, என்னுடைய ‘ரிட்டர்ன்ஸை’ தயார் செய்வதற்கு இப்பொழுது ஒரு அக்கௌன்டன்டை வைத்திருக்கிறேன்.”​—⁠பக்கம் 8-⁠ல், “வரிச் சட்டங்களுக்கு இணங்கி நடத்தல்” என்ற பெட்டியைக் காண்க.

செலுத்துபவர்கள், தவிர்ப்பவர்கள், ஏய்ப்பவர்கள்

சமுதாயத்திற்கு வரிகள் நன்மை பயக்குகிறது என்பதை பெரும்பாலோர் வேண்டா வெறுப்புடனாவது ஒத்துக்கொள்வர். பிரிட்டிஷ் உள்நாட்டு வருமான துறை தலைவர் ஒரு சமயம் இவ்வாறு கூறினார்: “வருமான வரி கட்டுவதென்றால் ஒருவருக்கும் பிடிக்காது, ஆனால் அதை கட்டாமல் இருப்பதே நமக்கு நல்லது என ஒருவரும் சொல்ல மாட்டார்கள்.” ஐக்கிய மாகாணங்களில் 90 சதவீதத்தினர் தவறாமல் வரி செலுத்துவதாக சிலர் மதிப்பிடுகின்றனர். “சட்டத்திலும் சட்டமுறைகளிலும் உள்ள சிக்கலால்தான் பெரும்பாலும் வரி செலுத்தப்படுவதில்லை, வேண்டுமென்றே ஏய்ப்பு செய்வதால் அல்ல” என வரிவிதிப்பு அதிகாரி ஒருவர் ஒப்புக்கொள்கிறார்.

அப்படியிருந்தபோதிலும், சில வரிகளை செலுத்தாமலிருக்க அநேகர் வழிமுறைகளை கண்டுபிடிக்கின்றனர். உதாரணமாக, வியாபார வரிகளைப் பற்றி யூ.எஸ்.நியுஸ் & உவர்ல்டு ரிப்போர்ட்டில் வெளிவந்த ஒரு கட்டுரை சொல்வதை கவனியுங்கள். “பல நிறுவனங்கள் வரி செலுத்தாமல் பெரும் தொகையை சட்டப்படி ஏய்த்து விடுகின்றன​—⁠சிலசமயங்களில் கழிவுகள் மூலமும் தந்திரமாக கணக்கு வைப்பதன் மூலமும் முழு தொகையையுமே ஏய்த்து விடுகின்றன.” தந்திரமான திட்டத்திற்கு ஓர் உதாரணம் கொடுத்து, அந்தக் கட்டுரை தொடர்ந்து இவ்வாறு கூறுகிறது: “ஐ.மா. வியாபார நிறுவனம் ஒன்று குறைவாக வரி விதிக்கப்படும் ஒரு நாட்டில் அதன் கம்பெனியை ஸ்தாபித்துவிடுகிறது. பிறகு, ஐ.மா.-வில் இருக்கும் நிறுவனத்தை வெளிநாட்டிலுள்ள அந்தக் கம்பெனி செயற்படுத்துவது போல் செய்துவிடுகிறது.” இதனால் அந்தக் கம்பெனி ஐ.மா.-வில் வரி செலுத்த வேண்டியதில்லை​—⁠அந்த வரி ஒருவேளை 35 சதவீதம் வரை உயர்வாக இருக்கலாம். “வெளிநாட்டில் இருக்கும் தலைமை அலுவலகத்திலோ வெறும் ஒரு ஃபைலிங் கேபினெட்டும் மெயில் பாக்ஸும்தான் இருக்கும்.”

இன்னும் சிலரோ வரியை முழுமையாக ஏய்த்து விடுகிறார்கள். ஓர் ஐரோப்பிய தேசத்தில், வரி ஏய்ப்பு என்பது “தேசிய பொழுதுபோக்காக” கருதப்படுகிறது. ஐக்கிய மாகாணங்களில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின்படி, 25 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்களில் 58 சதவீதத்தினரே எல்லா வருமானத்தையும் காட்டாதிருப்பதை தவறாக கருதினர். சுற்றாய்வு செய்தவர்கள் இவ்வாறு ஒப்புக்கொள்கின்றனர்: “நம் சமுதாயத்தின் நெறிமுறை எந்தளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதையே இந்த அறிக்கை அம்பலப்படுத்துகிறது.” மெக்ஸிகோவில் சுமார் 35 சதவீத வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக கணக்கிடப்படுகிறது.

ஆனால் மொத்தத்தில், வரிகள் அவசியம் என்பதை மக்கள் ஒப்புக்கொள்கின்றனர், தாங்கள் செலுத்த வேண்டிய வரியை செலுத்துவதைக் குறித்து கவலைப்படுவதில்லை. என்றாலும், திபேரியு ராயன் சொன்னதாக கூறப்படும் பின்வரும் பிரபல வார்த்தைகள் உண்மையாய் இருப்பதாக தோன்றுகிறது: “நல்ல மேய்ப்பன் தன் மந்தையிலுள்ள ஆடுகளின் மயிரை கத்தரிக்கிறான், தோலை அல்ல.” பாரமானவையாக, நேர்மையற்றவையாக, மிகவும் சிக்கலானவையாக தோன்றும் இந்த வரி விதிப்பு சட்டங்களுக்கு நீங்கள் பலியானதாக உணர்ந்தால், வரி செலுத்துவதை எப்படி கருத வேண்டும்? (g03 12/08)

[பக்கம் 7-ன் பெட்டி]

வேறொரு இடத்திற்கு குடிபெயரும் முன் யோசியுங்கள்!

வரி விதிப்பு முறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. சொல்லப்போனால், ஒரு நாட்டிற்குள்ளேயே ஊருக்கு ஊர் வருமான வரிகளில் பெரும் வித்தியாசம் இருக்கலாம். வரி விகிதம் குறைவாக இருக்கும் இடத்திற்கு குடிபெயருவதைப் பற்றி சிந்திப்பது தகுந்ததா? தகுந்ததாக இருக்கலாம், ஆனால் அவ்வாறு செல்லும் முன் யோசியுங்கள்.

உதாரணத்திற்கு, OECD அப்ஸர்வர் பிரசுரத்தில் வெளிவந்த ஒரு கட்டுரை வெறுமனே வருமான வரி விகிதத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என வாசகர்களுக்கு நினைப்பூட்டுகிறது. அது இவ்வாறு சொல்கிறது: “பல்வேறு கழிவுத் தொகைகளினால் எந்தளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பது வரி கட்டுபவர்களின் வரிச் சீட்டில் தெரிய வருகிறது.” உதாரணமாக, சில நாடுகளில் வருமான வரியின் விகிதம் குறைவாக உள்ளது. ஆனால் அந்நாடுகள் “சிறிதளவு கழிவுத் தொகையையும் வரி விலக்குகளையுமே அளிக்கின்றன.” அதனால் வரி விகிதம் அதிகமாக உள்ள அதே சமயத்தில் அதிகமான வரி விலக்குகளையும், கழிவு தொகைகளையும் அளிக்கிற நாடுகளில் உள்ளவர்களைவிட பெரும் தொகையை ஒருவர் வரியாக கட்ட வேண்டியிருக்கலாம்.

ஐக்கிய மாகாணங்களில், சிலர் மாநில வருமான வரிக்கு விலக்கு அளிக்கிற மாநிலங்களுக்கு குடிமாறிச் செல்வதைப் பற்றி யோசிக்கிறார்கள். ஆனால் இது ஒருவருடைய பணத்தை மிச்சப்படுத்துகிறதா? கிப்லிங்கர்ஸ் பர்சனல் ஃபினான்ஸ் குறிப்பிடுகிறபடி, இல்லை என்றே சொல்லலாம். அது இவ்வாறு சொல்கிறது: “வருமான வரிக்கு விலக்கு அளிக்கிற மாநிலங்கள் அதனை ஈடுகட்ட அதிகமான சொத்து வரிகளையும் விற்பனை வரிகளையும் இன்னும் பல வரிகளையும் சுமத்துகின்றன.”

[பக்கம் 8-ன் பெட்டி]

வரிச் சட்டங்களுக்கு இணங்கி நடத்தல்

நம்மில் பலருக்கு வரி கட்டுவது என்றாலே ஒரு பெரிய தொல்லைதான், ஆம் அது ஒரு பெரிய சுமைதான். ஆகவே, சில நடைமுறையான ஆலோசனைகளை தரும்படி வரி நிபுணர் ஒருவரிடம் விழித்தெழு! கேட்டது.

“சிறந்த ஆலோசனையை பெறுங்கள். இது மிகவும் முக்கியம், ஏனென்றால் வரிச் சட்டம் சிக்கலானதாக இருக்கலாம்; ஆனால் அந்தச் சட்டத்தைப் பற்றி தெரியாது என்ற சாக்குப்போக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. வரி செலுத்துபவர்கள் வரி விதிக்கும் அதிகாரிகளை எதிரிகளாக நினைத்தாலும், வரி சம்பந்தப்பட்ட காரியங்களை எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தெளிவான, எளிய வழிமுறைகளை அவர்களால் அளிக்க முடியும். உங்களுடைய வரி விவர அறிக்கையை முதல் முறை சமர்ப்பிக்கும் போதே அதை தவறின்றி சரியாக நிரப்பி கொடுக்கும்படி வரி விதிக்கும் அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். சட்டத்திற்கு கீழ்ப்படியாததைக் குறித்து உங்கள் மீது வழக்கு தொடர அவர்கள் விரும்புவதில்லை.

“உங்களுடைய நிதி விவரங்கள் சிக்கலானவையாக இருந்தால், வரி சம்பந்தப்பட்ட விஷயங்களை அறிந்த புரொஃபஷனல் ஒருவரின் ஆலோசனையை நாடலாம். ஆனால் எச்சரிக்கை! உங்களுக்கு உண்மையிலேயே உதவி செய்ய மனமுள்ள நிறைய புரொஃபஷனல்கள் இருக்கிறார்கள், மனமில்லாதவர்களும் அநேகர் இருக்கிறார்கள். நம்பிக்கைக்கு பாத்திரமான அல்லது வியாபாரத்தில் பழக்கப்பட்ட ஒருவருடைய அறிவுரையை நாடி, அந்த புரொஃபஷனலின் தகுதியை விசாரித்து அறியுங்கள்.

“உடனடியாக செயல்படுங்கள். அறிக்கையை தாமதமாக சமர்ப்பித்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.

“பதிவுகளை சீராக வைத்திருங்கள். வியாபார கணக்குகள் எந்த முறையில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவற்றை ‘அப்-டு-டேட்’டாக வைத்துக் கொள்ளுங்கள். அப்படி வைத்திருந்தால் வரி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய சமயம் வரும்போது சிரமமில்லாமல் நிரப்பிக் கொடுக்க முடியும். கணக்குப் பதிவுகளை தணிக்கை செய்ய வேண்டி வந்தாலும் உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

“நேர்மையாக இருங்கள். நீங்கள் ஒருவேளை ஏமாற்றிவிட நினைக்கலாம் அல்லது விதிகளை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கலாம். ஆனால் வரி அலுவலர்கள் தவறுகளை கண்டுபிடிப்பதில் கில்லாடிகள். அதனால் எப்போதும் நேர்மையாக இருப்பதே நல்லது.

“ஆர்வம் காட்டுங்கள். வரி அறிக்கையை தயாரிக்க உங்களுக்கு உதவிய புரொஃபஷனல் தவறான அறிக்கையை சமர்ப்பித்தாலும்கூட பொறுப்பு உங்களுடையதுதான். ஆகவே, நீங்கள் கேட்டிருந்தபடி அவர் தயாரித்திருக்கிறாரா என்பதை கவனமாக சரிபாருங்கள்.”

[பக்கம் 7-ன் படம்]

அநேக நாடுகளில் புகையிலைப் பொருட்கள் மீதும் மதுபானங்கள் மீதும் அதிகமான வரி விதிக்கப்படுகிறது

[பக்கம் 8, 9-ன் படங்கள்]

நாம் பொருட்படுத்தாத பலவித சேவைகளுக்கு வரிகள் பண உதவி அளிக்கின்றன